TNPSC Thervupettagam

தொழில்நுட்பப் படிப்புகளை அவரவர் தாய்மொழியில் கற்றுக் கொடுக்க முடியுமா என்பது குறித்த தலையங்கம்

March 18 , 2022 872 days 404 0
  • தில்லியில் கடந்த வாரம் நடைபெற்ற மத்திய அரசின் மலிவு விலை மருந்தகம் தொடர்பான நிகழ்ச்சியில் பேசுகையில், மருத்துவப் படிப்பையும், தொழில்நுட்பப் படிப்புகளையும் அவரவர் தாய்மொழியில் கற்றுக் கொடுக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார்.
  • மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட தொழில்நுட்பப் படிப்புகளை அவரவர் தாய்மொழியில் கற்றுக் கொடுத்தால், பள்ளிகளில் ஆங்கில வழியில் படிக்காத ஏழை மாணவர்களுக்கு அது பெரிதும் பயனளிக்கும் என்றும் அப்போது பிரதமர் குறிப்பிட்டார்.

இப்போதைக்கு வேண்டாம்!

  • சுமார் 138 கோடி மக்கள்தொகை கொண்ட, பல மொழிகள் புழக்கத்தில் உள்ள இந்தியாவில், மருத்துவ, தொழில்நுட்பப் படிப்புகளை அவரவர் தாய்மொழியில் கற்றுக் கொடுக்க முடியுமா என்பது குறித்து விரிவாக ஆய்வு செய்ய வேண்டியது அவசியம்.
  • உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் ஏற்கெனவே மருத்துவப் படிப்பை ஹிந்தியில் கற்றுக் கொடுக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது.
  • இதுகுறித்து ஆய்வு செய்ய குழுக்களும் நியமிக்கபட்டன. ஆனால், தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) இந்த முயற்சிக்கு ஆரம்ப நிலையிலேயே கடும் எதிர்ப்புத் தெரிவித்து முட்டுக்கட்டை போட்டுவிட்டது.
  • தாய்மொழியில் மருத்துவக் கல்வி வழங்குவது குறித்து எந்த மாநிலத்திலிருந்தும் அதிகாரபூர்வ கோரிக்கை வரவில்லை என்றும், ஏதாவது ஒரு மாநிலத்திலிருந்து இத்தகைய முன்மொழிவு வந்தாலும் அதற்கு அங்கீகாரம் அளிக்கப்படமாட்டாது என்றும் என்எம்சி திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டது.
  • இந்த நிலையில், "தாய்மொழியில் மருத்துவப் படிப்பு' என்ற பிரதமரின் கருத்து, என்எம்சியின் நிலைப்பாட்டுக்கு முரணாக உள்ளது. பிரதமரின் இந்தக் கருத்துக்கு அகில இந்திய மருத்துவர்கள் கூட்டமைப்பும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.
  • இந்தியாவில் அதிகாரபூர்வ அலுவல் மொழிகளாக ஹிந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், மராத்தி, குஜராத்தி, சம்ஸ்கிருதம், உருது உள்பட 22 மொழிகள் உள்ளன.
  • இவை தவிர, சுமார் 450 வட்டார மொழிகளும் புழக்கத்தில் உள்ளன. பல மொழிகள் பேசும் பன்முகத்தன்மை கொண்ட இந்தியாவில், மருத்துவ, தொழில்நுட்பப் படிப்புகளை அவரவர் தாய்மொழியில் கற்றுக் கொடுப்பது என்பது எளிதானதல்ல.
  • தொழில்நுட்ப வளர்ச்சி மிகுந்துள்ள இன்றைய காலகட்டத்தில், மருத்துவம் என்பது உலகளாவிய தொடர்பு கொண்டதாகத் திகழ்கிறது.
  • இதை அவரவர் தங்கள் தாய்மொழியில் கற்றால், பிற மாநிலங்களிலோ வெளிநாடுகளிலோ உள்ள மருத்துவ நிபுணர்களுடன் தொடர்பு கொள்வதிலும், பிற பகுதிகளில் மருத்துவப் பணி செய்வதிலும் சிக்கல் எழும்.
  • சர்வதேச வழிகாட்டு நெறிமுறைகளுக்கு மாறாக, சீனா, ரஷியா, உக்ரைன் போன்ற நாடுகளில் எம்பிபிஎஸ் படிப்பு உள்ளூர் மொழிகளில் கற்றுக் கொடுக்கப்படுகிறது என்பது உண்மைதான்.
  • ஆனால், அந்த நாடுகளில் எம்பிபிஎஸ் படித்து முடிக்கும் மாணவர்களுக்கு சர்வதேச அங்கீகாரம் கிடைப்பதில்லை என்பதை நமது அரசு கவனத்தில் கொள்ள வேண்டும்.
  • உலகளாவிய தொடர்பு மொழியாக உள்ள ஆங்கிலத்தில் மருத்துவக் கல்வி பயின்று தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு மட்டுமே அமெரிக்கா, கனடா, பிரிட்டன், ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் பணி வாய்ப்பு கிடைக்கிறது.
  • இந்தியாவில் தற்போது ஆங்கில வழியில் கற்றுத் தரப்படுவதால்தான், நமது மருத்துவப் படிப்புகளுக்கு சர்வதேச அளவில் அங்கீகாரம் கிடைக்கிறது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
  • இந்தியாவில் அங்கீகரிக்கப்பட்டுள்ள 22 அலுவல் மொழிகளிலும் மருத்துவக் கலைச் சொற்களை ஒரே மாதிரியாக உருவாக்குவது என்பது சாத்தியமில்லாதது.
  • மேலும், எல்லா மொழிகளிலும் மருத்துவ, தொழில்நுட்பப் படிப்புகளுக்குத் தேவையான புத்தகங்களும் இதுவரை உருவாக்கப்படவில்லை.
  • மருத்துவம், ஆராய்ச்சி தொடர்பான நூல்கள் பெரும்பாலும் ஆங்கிலத்தில்தான் உள்ளன. மருத்துவ இதழ்களும் ஆங்கிலத்தில்தான் அதிக அளவில் வெளியாகின்றன. சர்வதேச அறிவியல் தொடர்பு மொழியாக ஆங்கிலம்தான் கோலோச்சுகிறது.
  • இந்தியாவைப் பொறுத்தவரையில், எந்தவொரு மொழியையும் தேசிய மொழியாக அறிவிக்கக் கூடிய சூழல் இல்லை. உலகிலேயே அதிக மக்கள்தொகை கொண்ட சீனாவில் 300}க்கும் மேற்பட்ட மொழிகள் வழக்கில் இருந்தாலும், அந்த நாட்டின் தேசிய மொழியாக மாண்டரின் மொழி உள்ளது.
  • ஆனால், சீனாவைப் போல இந்தியாவில், ஹிந்தி உள்பட எந்தவொரு மொழியையும் தேசிய மொழியாக அறிவிக்க முடியாத சூழல்தான் நிலவுகிறது.
  • தாய்மொழியில் மருத்துவக் கல்வி வழங்குவதால் அரசுப் பள்ளிகளில் படிக்கும் ஏழை, நடுத்தரப் பிரிவு மாணவர்களின் மருத்துவர் கனவு எளிதில் நனவாகும் என்றும் பிரதமர் கூறுகிறார்.
  • "தாய்மொழியில் மருத்துவம்' என்ற நடைமுறை சாத்தியமற்ற திட்டத்தில் கவனம் செலுத்துவதை விடுத்து, அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்த அரசு நடவடிக்கை எடுப்பதுதான் சரியானதாக இருக்கும்.
  • இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் ஆரம்பக் கல்வியை அவரவர் தாய் மொழியில் கற்றுக் கொடுப்பதை முதலில் கட்டாயமாக்க வேண்டும்.
  • அஸ்திவாரம் வலிமையாக இருந்தால்தான் அதன் மீது எழுப்பப்படும் கட்டடம் உறுதித் தன்மையுடன் நிலைத்திருக்கும்.
  • அஸ்திவாரத்தை பலப்படுத்திய பிறகு, மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட தொழில்நுட்பப் படிப்புகளை தாய்மொழியில் கற்றுக் கொடுப்பது குறித்து சிந்திப்பதுதான் சரியானதாக இருக்கும்!

நன்றி: தினமணி (18 – 03 – 2022)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்