- இன்றைய பணியை இன்றைய கருவி கொண்டு செய்ய வேண்டும். இன்றைய பணியை நேற்றைய கருவி கொண்டு செய்யும் இனத்தின் நாளைய வாழ்வு நலியும் என்னும் கருத்து தொழில்நுட்பத்தின் தேவையை உணா்த்துகிறது.
- உலகில் வாழும் உயிரினங்களில் மனிதன் மட்டுமே கருவிகளைப் படைக்கும் ஆற்றல் கொண்டவன். அந்த ஆற்றலே சமயத்தில் அவனை அழிவுக்கும் கொண்டு செல்கிறது. அவன் சில உத்திகளைக் கையாள்வதன் மூலம் பாதுகாப்பாக அதன் ஆற்றலை உபயோகப்படுத்தலாம்.
- தகவல் தொழில்நுட்பம் என்பது இருமுனையும் கூா்மை கொண்ட ஓா் ஆயுதம். அதை கையாளும்போது சற்று கவனம் சிதறினாலும் நம்மை குத்திக் கிழித்து காணாமல் போகச் செய்துவிடும்.
- இந்த கரோனா தீநுண்மி காலத்தில் முன்பைக் காட்டிலும் மிக அதிகமாக தகவல் தொழில்நுட்ப சாதனங்களை நாம் கையாளுகிறோம். வேலைக்குச் செல்லவோ பள்ளி, கல்லூரிகளுக்குச் செல்லவோ வாய்ப்புகள் மிக மிகக் குறைவாக உள்ள இந்த நேரத்தில் பாதுகாப்பு கருதி வீட்டிலிருந்து அனைவரும் பணியாற்றிக் கொண்டிருக்கிறோம்.
- கரோனா தீநுண்மியிடமிருந்து நம் உயிரைக் காப்பாற்றிக் கொள்வது எவ்வளவு முக்கியமோ, அவ்வளவு முக்கியம் இந்தத் தகவல் தொழில்நுட்ப சாதனங்கள் வழி நம் உடைமைகளை பாதுகாத்துக் கொள்வதும்.
- தகவல் தொழில்நுட்பத்தைக் கையாளும் சூழலில் நம் பாதுகாப்பு குறித்தும் மிகவும் கவனமாக இருத்தல் வேண்டும்.
பாதுகாப்பில் கவனம் வேண்டும்
- படம் பார்ப்பது முதற்கொண்டு சாப்பாடு தருவிப்பது வரை அன்றாடம் நாம் இணையத்தைப் பயன்படுத்தி வருகிறோம்.
- ஒரு செயலியை நம்முடைய ‘அறிதிறன்பேசி’யில் (ஸ்மார்ட்போன்) பதிவிறக்கம் செய்ய அது விதிக்கும் அத்தனை நிபந்தனைகளுக்கும் நாம் அது குறித்த புரிதல் ஏதும் இல்லாமலே ஆமோதித்து ஒப்புதல் வழங்குகிறோம்.
- ‘கூகுள்’ போன்ற தேடுபொறிகள் இலவசமாகவே எண்ணற்ற தகவல்களை நமக்கு வாரி வழங்குகின்றன.
- நம் தேவை என்ன, நம் விருப்பம் எதைச் சார்ந்தது, நாம் அன்றாடம் எவற்றையெல்லாம் கவனிக்கிறோம் என்று தேடுபொறிகள் நம்மைப் பற்றிய தகவல்களை நமக்கே தெரியாமல் திரட்டி வைத்துள்ளன.
- சொல்லப்போனால், அவை நம்மைப்பற்றி நம்மைவிட அதிகம் தெரிந்து வைத்துள்ளன. சில செயலிகள் நம்முடைய தகவல்களைத் திரட்டி, வா்த்தக ரீதியில் தேவைப்படுவோர்க்கு வழங்கி பணம் ஈட்டுகின்றன.
- என் தோழியின் மகள் சென்ற ஆண்டு பன்னிரண்டாம் வகுப்பு முடித்தாள். தோ்வு எழுதி முடித்த அடுத்த நாளிலிருந்து தினமும் அவளுக்கு சராசரியாக 25 அழைப்புகள் வருமாம்.
- வெவ்வேறு கல்லூரியிலிருந்து வரும் விதவிதமான அழைப்புகளில் எல்லாம் அவா்கள் கல்லூரியின் சோ்க்கை குறித்தும் கல்விக்கட்டணம் குறித்தும் தெரிவித்துக் கொண்டே இருந்தார்களாம். அவளுக்கு அதை கேட்க விருப்பம் இருக்கிறதா என்பது குறித்து அவா்களுக்கு அக்கறையே இல்லை.
- மருத்துவ, பொறியியல் நுழைவுத்தோ்வு எழுதும் மாணவா்களின் தகவல்கள் இப்படி பல்வேறு நிறுவனங்களுக்கு வா்த்தக நோக்கில் பகிரப்படுகின்றன.
- இவை அனைத்தும் பள்ளிகளில் மட்டுமே பதிந்து வைத்திருந்த செல்லிடப்பேசி எண்கள். வெளிநாடுகளில் மருத்துவப் படிப்பு படிக்க விருப்பமா என கேட்டு நாளொன்றுக்கு 30 அழைப்புகள் வந்ததாக நண்பா் ஒருவா் கூறினார். நம் நேரத்தை நம்மிடமிருந்து பிடுங்கும் இச்செயல் தகவல் திருட்டால்தான் ஏற்படுகிறது.
- நிபந்தனைகளுக்கு உள்பட்டே அனைத்து இலவசங்களும் நமக்குக் கிடைக்கின்றன. நம்மைப் பற்றிய தகவல்களைப் பரிமாறும்போது கவனமாக இருந்தால் சில நெருக்கடிகளை நாம் களையலாம்.
- இன்று சிறப்பங்காடிகள் முதற்கொண்டு எங்கு போய் என்ன பொருள் வாங்கினாலும் நம்முடைய செல்லிடப்பேசி எண் கேட்கப்படுகிறது.
- நாமும் எவ்வித யோசனையுமின்றி போகுமிடமெல்லாம் அனைவரிடமும் நம்முடைய செல்லிடப்பேசி எண்ணைப் பதிந்து கொள்ள அனுமதிக்கிறோம். நாம் ஏன் என்று வினவினால் தங்களுடைய தள்ளுபடி விற்பனைகளை நமக்கு குறுந்தகவலாக அனுப்பி வைப்பதற்கு என்கிறார்கள்.
- இதன் மூலம் நம் அனைத்துத் தகவல்களும் பிறருக்குப் பகிரப்படுகின்றன. நம் எண்ணைப் பெற்று உறவினா்போல் பேசி நடித்து ஏமாற்றும் செயலும் சில இடங்களில் நடக்கிறது.
- தேவையின்றி எவ்விடத்திலும் நம் செல்லிடப்பேசி எண்களை வழங்காமல் இருப்பது நல்லது.
விழிப்புடன் இருப்போம்
- ஒருசமயம் சென்னையின் புகா் பகுதியிலுள்ள ஒரு உணவகத்தில் இரவு உணவருந்திவிட்டு வந்தோம். அங்கே செல்லிடப்பேசி எண்ணைக்கூட எவரிடமும் பகிரவில்லை.
- மறுநாள் செல்லிடப்பேசியைத் தொட்டதுமே ‘எங்கள் உணவகத்தின் சேவை எவ்வாறு இருந்தது? உணவு ருசியாக இருந்ததா? எத்தனை மதிப்பெண் வழங்குவீா்கள்?’ இப்படிப்பட்ட வினாக்கள் திரையில் வந்தன.
- இணையம் வழி நம்மை இப்படித் துரத்தி வரும் இவா்களை எவ்வாறு விரட்டுவது? இயக்கத்திலிருந்த வழிகாட்டி செயலியை அணைத்ததும்தான் விமோசனம் கிடைத்தது. எதையும் தேவைக்கு உபயோகித்த பிறகு விலக்கி விட வேண்டும்.
- குடியிருப்புகளில், அலுவலகங்களில் அனைவரும் இணையத்தை பயன்படுத்துவற்கு வசதியாக சுலபமான ஒரு கடவுச்சொல்லைப் பதிந்து வைத்திருப்பா்.
- ஆனால், சிலா் இலவச இணையத்திற்காக, கடவுச்சொல்லைக் கேட்டு பெறுவது இன்று வாடிக்கையாகி விட்டது. நமக்கு அறிமுகம் இல்லாத நபரிடம் இப்படி சென்று சேரும் தகவல்களால் நம் பாதுகாப்பு குறையும்.
- நம் கடவுச்சொல்லை பிறா் தவறாக உபயோகிப்பதைத் தடுக்க, அவ்வப்போது கடவுச்சொல்லை மாற்றுதல் அவசியம். சிலா் குறிப்பிட்ட ஒரு கடவுச்சொல்லை பல வருடங்களாக மாற்றாமல் வைத்திருப்பா்.
- என்ன பெரிதாக நடந்துவிடும் என்ற சிறு அலட்சியப் போக்கு இணையத்தை தவறாக உபயோகிப்போருக்கு சாதகமாக அமைந்துவிடும்.
- ரயில் நிலையங்கள், பேரங்காடிகள், விமான நிலையங்களில் இலவச இணைய வசதியை ஏற்படுத்தி வைத்திருப்பா். அதைப் பயன்படுத்தத் தொடங்குகையில் நிபந்தனைகளுக்கு உள்பட்டு நாம் சம்மதம் தெரிவிப்போம்.
- இதன் மூலம் நம் செல்லிடப்பேசி எண் உட்பட நம் தகவல்கள் எல்லாம் அவா்களுக்குச் சென்றுவிடும். அதேபோல் பொது இடங்களில் நம் செல்லிடப்பேசிக்கு மின்னூட்டம் (சார்ஜ்) செய்ய வேண்டாம். மின்னூட்டிகளில் சில கருவிகள் ரகசியமாக இணைத்து வைக்கப்பட்டிருந்தால் நம்முடைய முக்கிய தரவுகள் களவாடப்படக் கூடும்.
- தற்போது சந்தைகளில் உள்ள செல்லிடப்பேசி எதுவும் அவ்வளவு எளிதாக பழுதடைவதில்லை. சில வருட உபயோகத்திற்குப் பின் அதை கடைகளில் சொற்ப தொகைக்கு கொடுத்து மாற்றிக் கொள்கிறோம். அல்லது நம்மிடம் பணிபுரியும் பணியாளா்களுக்கு கருணை அடிப்படையில் கொடுத்து உதவுகிறோம். இது மிகவும் தவறு.
- அந்த ஊழியா், ஏதோ ஒரு அவசரத் தேவைக்காக அந்த செல்லிடப்பேசியை விற்க நேரிட்டால் நம்முடைய தகவல்கள் பிறருடைய கைகளுக்குச் செல்ல வாய்ப்பிருக்கிறது.
- அழிக்கப்பட்ட தகவல்களாக இருந்தாலும் சில செயலிகளைக் கொண்டு அதை மீட்டு எடுக்க முடியும். அதனால் நாம் உபயோகப்படுத்திய செல்லிடப்பேசியை யாரை நம்பியும் கொடுக்கக் கூடாது.
- தற்போது இணைய வழி வகுப்புகள் நடைபெறும் சூழலில் சில யூ-டியூப் இணைப்புகளை மாணவா்களுக்கு வகுப்புக் குழுவில் பகிரவேண்டியுள்ளது.
- அந்த இணைப்புக்குள் நுழையும்போது சில தேவையற்ற செய்திகள், ஆபாசப் புகைப்படங்கள் காணக்கிடைக்கின்றன. அந்த யூ-டியூப் ‘பிரைவஸி செட்டிங்’குக்கு சென்று மாற்றி அமைப்பதன் மூலம் இது போன்ற சங்கடங்களைத் தவிர்க்கலாம்.
- இவற்றையெல்லாம் தாண்டி, பணப் பரிவா்த்தனைகளில் அதிக மோசடிகள் நடைபெறுவதாக கேள்விப்படுகிறோம். இதை முறியடிக்க வேண்டுமானால் நம் தகவல்களை யாரிடமும் பகிராமல் இருக்க வேண்டும்.
- அதோடு நம் கணக்குப் பட்டியல்களின் கடவுச்சொல்லை கடினமானதாக அமைத்துக்கொள்வதோடு அவ்வப்போது மாற்றியமைப்பதும் அவசியம். எப்படி பாதுகாப்பாக பணபரிவா்த்தனை செய்வது என்பதை இன்னும் ஆழமாக கற்றுக்கொள்ள சுணக்கம் காட்டவே கூடாது. இதனால் நம் சேமிப்புகளை நாம் காத்துக் கொள்ளலாம்.
- நமக்கு வெளிப்படையாகக் காணக்கிடைக்கும் இணைய செயல்பாடுகள் வெறும் ஐந்து விழுக்காடு மட்டுமே. நாம் உள்நுழைந்து தேடும், செயல் புரியும் அனைத்தும் இதனுள்ளேயே அடங்கும்.
- மீதமிருக்கும் 95% இருண்ட இணையமாக (டார்க் வெப்) உலகம் முழுக்க செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதற்கென்று எந்த வரைமுறையும் ஒழுங்குமுறையும் கிடையாது. சட்டத்துக்குப் புறம்பான பணப் பரிவா்த்தனைகள், போதைப் பொருள்கள்,கள்ளத் துப்பாக்கிகள் விற்பனை எல்லாம் இதன் வழியே சக்கைபோடு போடுகின்றன.
- தகவல் தொழில்நுட்பம் நம்முன் கடலைப்போல விரிந்து கிடக்கிறது. அதன் ஆழம் தெரிந்து, அலைகளின் வேகம் அறிந்து இறங்க வேண்டும். இதில் பயன் இருந்தாலும் அதைவிட அதிகமான ஆபத்தும் உள்ளது. எப்போதும் கவனத்துடனே பயணிக்க வேண்டும்!
நன்றி: தினமணி (15-09-2020)