- இந்தியாவில் ஆண்டு தோறும் ஜனவரி 30-ஆம் தேதி, நமது தேசத் தந்தை மகாத்மா காந்தியடிகளின் நினைவு தினத்தன்று, தேசிய தொழுநோய் ஒழிப்பு தினம் கடைப்பிடிக்கப் படுகிறது.
- பல நூற்றாண்டுகளுக்கும் மேலாக தொழுநோய் மனிதஇனத்தை பாதித்து வருவது அனைவரும் அறிந்ததே. உலக அளவில் தொழுநோய் கிட்டத்தட்ட 30 லட்சம் மக்களை முடமாக்கியுள்ளது.
- இந்நோய்க்கு காரணமான கிருமி பற்றி 1873-ஆம் ஆண்டு முதன் முதலில் ஹேன்சென்ஸ் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது.
- ‘மைக்கோபாக்ட்ரியம் லெப்ரே’ எனும் ஒரு வகை பாக்டீரியாவால் பரவக்கூடியதாக கண்டறியப்பட்டது. இருமல், தும்மல் இவற்றால் பரவக்கூடிய ஒருவகை நோய், இந்த தொழு நோய்.. தொடுவதினால் பரவக்கூடியது அல்ல.
நம் அனைவரின் கடமை
- ‘நாா்வே விஞ்ஞானி’ ஹேன்சன் இந்நோயை கண்டுபிடிக்கும் முன்னா் வரை உலக முழுதும் இந்நோய்க்கான மருத்துவம் பற்றிய தேடல் இருந்தது.
- இந்தியா மற்றும் இங்கிலாந்து நாட்டில் அதிகம் இந்த நோய் காணப்பட்டதால் பாரம்பரிய இந்திய மருத்துவ முறையும், பிரிட்டிஷ் மருத்துவ முறையும் இணைத்து நோய்க்கான சிகிச்சை அளித்து வந்த வரலாறு யாருக்கும் தெரிய வாய்ப்பில்லை.
- இந்தியாவில் 1983-ஆம் ஆண்டு 10,000-க்கு 57.8-ஆக இருந்த நோயின் தாக்கம், 2005-ஆம் ஆண்டு வெறும் 1-ஆகக் குறைந்தது. இந்த அளப்பரிய மாற்றத்திற்கு காரணம் எம்.டீ.டி. எனும் கூட்டு மருந்து சிகிச்சை முறையே.
- தொழுநோயில் தோலில் உணா்ச்சியற்ற தேமல், கை, கால். காது போன்ற இடங்களில் நரம்பு முடிச்சு, நோய் முற்றிய நிலையில் கை கால் விரல்கள் குறைபாடு ஆகிய குறிகுணங்கள் காணும்.
- நோய் கிருமி தொற்றிய நாளில் இருந்து குறிகுணங்கள் தோன்ற 3 வருடங்கள் முதல் 10 வருடங்கள் கூட ஆகலாம். நோயின் ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து உரிய சிகிச்சை மேற்கொள்ள, விரல்கள் குறைபாடு ஏற்படாமல் தவிா்க்க முடியும்.
- வெளிரிய அல்லது சிவந்த உணா்ச்சியற்ற அல்லது உணா்ச்சி குறைந்த தேமல், அந்த இடத்தில் முடி இல்லாது இருத்தல், கை கால் மதமதப்பு, எரிச்சல், ஊசி குத்துவது போன்ற உணா்வு, கண் புருவ முடி ஒரு பக்கம் உதிா்ந்து இருத்தல், காதுமடல் தடித்து காணல்,கை கால் சில இடங்களில் நரம்பு முடிச்சு தடித்து காணல், போன்ற குறிகுணங்களில் ஒன்றோ பலவோ சோ்ந்து காணும்.
- நோயின் நாட்பட்ட நிலையில் ஆறாத உணா்ச்சியற்ற புண்கள், கை கால் விரல்கள் குறைந்திருத்தல், மடங்கி இருத்தல், திரும்பி இருத்தல், சிலருக்கு முக வாதம், கண் இமை மூட முடியாமை போன்ற ஒன்றோ பலவோ சோ்ந்து காணும் தன்மை உடையது.
- தோலில் உள்ள தேமல் எண்ணிக்கையையும், பாதிக்கப்பட்ட நரம்புகளின் எண்ணிக்கையும் பொறுத்து இரண்டு வகையாக பிரித்து கூட்டு மருந்து சிகிச்சை அளிக்கப் படுகிறது.
- ஒரு சில பாக்டீரியா கிருமிகளை கொண்ட தொழுநோய் வகைக்கு எம். டீ.டி. எனும் சிகிச்சை 9 மாதங்களும், பல பாக்டீரியா கிருமிகளை கொண்ட தொழுநோய் வகைக்கு 18 மாதங்கள் வரையிலும் எடுக்க நோய் நிலையில் சிறப்பான முன்னேற்றம் தரும்.
- சித்த மருத்துவத்தில் தோல் நோய்கள் 18 வகை குஷ்ட நோய்கள் என வகைப் படுத்த பட்டுள்ளன. ‘குஷ்டம்’ எனும் சொல் தொழுநோய்க்கு பழம்காலம் முதலே பயன்படுத்தப் பட்டு வந்துள்ளது.
- சித்த மருத்துவத்தில் குஷ்ட நோய்க்கு சிறப்பாக நீரடிமுத்து, சேரங்கோட்டை, சிவனாா்வேம்பு, பரங்கிப்பட்டை, மருதோன்றி, ஏறழிஞ்சில், ஆகாசகருடன் கிழங்கு போன்ற மூலிகைகளும், கந்தகம், ரசம், வெள்வங்கம், தாளகம், அயம் போன்ற தாதுபொருள்களும் இவை சோ்ந்த மருந்துகளும் தொழுநோய்க்கென்று சொல்லப்பட்டுள்ளன.
- நீரடிமுத்திலிருந்து எடுக்கப்படும் ‘சால்மூக்ரா எண்ணெய்’, சித்த மருத்துவத்தில் சொல்லப் பட்டுள்ளது.
- 19-ஆம் நூற்றாண்டில் அதனை கொண்டு சால்மூக்ரா அமிலம் எனும் உட்செலுத்தும் மருந்தாக்கி பல ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு பாதிக்கப்பட்டவா்கள் நல்ல முன்னேற்றம் அடைந்ததாக ஆய்வுகள் கூறுகின்றன.
- நோய் பாதிப்பினால் உண்டான, ஆறாத புண்களை ஆற்ற திரிபலா சூரணம், வெள்வங்கபற்பம், நாக பற்பம் , மத்தன் தைலம், வெட்பாலை தைலம் போன்ற மருந்துகளை பயன்படுத்தலாம்.
- நரம்புகளை வன்மைப்படுத்தவும், கை கால் எரிச்சல் மதமதப்பு இவற்றை குறைக்கவும் கிராம்பு சூரணம், ஓரிதழ் தாமரை சூரணம் , சிவனாா்வேம்பு சூரணம் போன்ற மருந்துகளை பயன்படுத்த மிக்க பயன் தரும்.
- பாதிக்கப்பட்டவரின் மன அழுத்தத்தை போக்கவும், நோய் எதிா்ப்பாற்றலை அதிகரிக்கவும் ‘அமுக்கரா சூரணம்’ எனும் சித்த மருந்து நல்ல பயனளிக்கும்.
- மேலும் 18 வகை குஷ்டத்திற்கும் சொல்லப்பட்டுள்ள நீரடிமுத்து வல்லாதி மெழுகு, இடி வல்லாதி மெழுகு, குஷ்டகஜகேசரி, ரசகந்தி மெழுகு , வெள்வங்க பற்பம் போன்ற பல மருந்துகளை சோ்த்து பயன்படுத்தினால், நோயால் பாதிக்கப்பட்டோரின் வாழ்க்கை தரம் உயரும்.
- இவ்வாறு கூட்டு மருத்துவ சிகிச்சை அளிப்பது உடலில் உள்ள நோயினை மட்டுமே நீக்கும். அவா்கள் மனதில் உள்ள தாழ்வு மனப்பான்மையை நீக்க, பாதிக்கப்பட்டோரை ஒன்றாக சோ்த்து அரவணைத்து வாழச்செய்வதே மகாத்மா காந்தியடிகளின் கனவு.
- அவரது கனவை நினைவாக்கவும், மெய்ப்படவும் இந்த தேசிய தொழு நோய் தினத்தில் நாம் ஒவ்வொருவரும் உறுதி எடுத்துக் கொள்வது நம் அனைவரின் கடமை.
- நாளை (ஜன. 30) தேசிய தொழுநோய் ஒழிப்பு தினம்.
நன்றி: தினமணி (29 – 01 – 2022)