TNPSC Thervupettagam

தோட்டாக்களும்.. நெல்மணிகளும்

December 27 , 2023 360 days 226 0
  • பிப்.24, 2023 உக்ரைன் மீது ரஷியா போர் தொடங்கி ஓராண்டான நாள்.
  • அக்.7, 2023 இஸ்ரேல் நாட்டில்  ஹமாஸ் அத்துமீறி நுழைந்து தாக்குதலை நிகழ்த்திய நாள்.
  • 2023 ஆம் ஆண்டைப் பின்நோக்கி பார்க்கும்போது போரில் தொடங்கி போரில் முடிகிற ஆண்டாக இது அமைந்துள்ளதை  உணரலாம். இந்தப் போர் என்பது தொடர்புடைய நாடுகளுக்கு நேரடியான பாதிப்பை ஏற்படுத்துவது மட்டுமின்றி உலகளவில் மிகப்பெரிய தாக்கத்தை உண்டாக்கியுள்ளன.
  • உக்ரைனில் போர் நடந்தால் தென்னாபிரிக்காவின் உணவு சந்தையில் பாதிப்பு ஏற்படுகிறது.
  • நேரடியாகத் தாக்குதலில் இறங்கும் இரண்டு நாடுகள் சார்ந்தது மட்டும் போர் கிடையாது என இவ்விரு போர்களும் உறுதி செய்துள்ளன.
  • போரை, அரசியல் வன்முறையின் வடிவம் என மார்க்ஸியம் விவரிக்கிறது. போர் குறித்து எழுதும்போது, சலிப்பு தரும் தொழில்துறை நாட்டத்தில் இருந்து விடுபடும் சுதந்திரத்தையும் உற்சாகத்தையும் போர் தருவதாக ஏங்கல்ஸ் குறிப்பிடுகிறார்.
  • தொழில்துறையில் இருந்து விடுபடும் தேசத்தின் இலக்கு, உலக பொருளாதாரத்தையே நடுங்க செய்கிறது.

உக்ரைன் - ரஷியா போர்

  • பெரும் உணவு உற்பத்தியாளர்களான ரஷியா மற்றும் உக்ரைன்  நாடுகள் போரில் ஈடுபடும்போது அந்த நாடுகளை உணவின் தேவைக்காக சார்ந்திருந்த நாடுகள் தவிர்க்க முடியாமல் விலையேற்றத்தை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.
  • தங்களின் எரிபொருள் நுகர்வில் பகுதிக்கும் மேல் இயற்கை எரிவாயுக்கும் மூன்றில் ஒரு பங்கு எண்ணெய் நுகர்வுக்கும் ஐரோப்பிய யூனியன் நாடுகள், ரஷியாவைச் சார்ந்திருந்தன.
  • ரஷியா, உக்ரைன் மீது போர் தொடங்கிய நிலையில் இந்த ஏற்றுமதி தடைப்பட்டது. பெருந்தொற்றில் இருந்து மீண்டு வந்த உலகப் பொருளாதாரம் பெரும்போரால் மீண்டும் நிலைகுலைந்தது.
  • வளர்ந்த நாடுகள் கடுமையான விலையேற்றத்தையும் பின்தங்கிய நாடுகள் பசி மற்றும் உணவுப் பற்றாக்குறையையும் எதிர்கொள்ள வேண்டிய நிலை உண்டானது.

உக்ரைன் - விவசாய நாடு

  • உக்ரைனில் 55 சதவிகித நிலம் விவசாயத்துக்குரியது. அந்நாட்டின் ஏற்றுமதி வருவாயில் 45 சதவிகிதம் விவசாய பொருள்களின் பங்கு உள்ளது.
  • பார்லி, கோதுமை, சோளம் மற்றும் சூரியகாந்தி எண்ணெய் ஆகியவற்றை நாடு முழுவதும் உற்பத்தி செய்கிற உக்ரைன் மீது நடத்தப்பட்ட போர், விவசாய நிலங்களை அழித்ததோடு விவசாயிகளை இடம்பெயரவும் செய்துள்ளது.
  • கருங்கடல் தானிய முன்னெடுப்பு ரஷியா, உக்ரைன் இடையில் ஏற்பட்டதால் ஏற்றமதிக்குச் சாதகமான சூழல் நிலவிய போதும் நீண்ட நாள்களுக்கு அது நீடிக்கவில்லை. மேலும் தானிய பகிர்வில் முன்னுரிமை என்பது வளர்ந்த நாடுகளின் தேவைகளை நிறைவேற்றவே அளிக்கப்பட்டது. இதனால் எகிப்து மற்றும் ஆப்பிரிக்க நாடுகள் உணவுப் பொருள்கள் பற்றாக்குறைக்கு ஆளாகின.

ரஷியா - எரிபொருள்

  • ரஷியாவை படிம எரிபொருள் மற்றும் இயற்கை எரிவாயு தேவைக்காகச் சார்ந்திருந்த ஐரோப்பிய யூனியன் நாடுகள் அதற்கான பதிலீட்டைத் தேடுவதில் பெரிய சவாலை எதிர்கொண்டன
  • சில வேளைகளில் அதிக விலை கொடுக்க வேண்டியிருந்த நீர்மமாக்கப்பட்ட பெட்ரோலியம் வாயுவை அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்ய நேர்ந்தது. 
  • போர் தொடங்கிய முதல் இரண்டு வாரங்களில் ஐரோப்பாவில் படிம எரிபொருளுக்கான விலை 25 சதவிகிதமளவுக்கு உயர்ந்தது. இயற்கை எரிவாயு விலை வரலாறு காணாதளவுக்கு 580 சதவிகிதம் உயர்ந்தது.
  • பிரிட்டன் நேரடியாக ரஷியாவிடமிருந்து கொள்முதல் செய்யவில்லை எனினும் ஐரோப்பிய யூனியன் சந்தையையேச் சார்ந்திருந்தது. இது சங்கிலித்தொடர் விளைவாக எல்லாவற்றிலும் விலையேற்றத்தை உண்டாக்கியது.
  • ஆற்றல் வளங்களின் விலையேற்றத்தால் பொருளாதார பின்னடைவு உண்டானது. இதற்கு மாற்றாக புதுப்பிக்கத்தக்க ஆற்றல் வளங்களை மேம்படுத்தும் பணியில் பிரிட்டன், ஐரோப்பிய யூனியன் நாடுகள் இறங்கியிருப்பது ஒரு வகையில் நேர்மறையான விளைவு.

 அணிச் சேர்ப்பு

  • போர், உலக நாடுகளைத் தாங்கள் யார் பக்கம் என்பதைத் தீர்மானிக்க வேண்டிய இடத்திற்குக் கொண்டுவருகிறது.
  • ஐரோப்பிய யூனியன் நாடுகள் பில்லியன் மதிப்பில் ஆயுதங்களை உக்ரைனுக்கு அனுப்பின. அமெரிக்கா தனது பண்டகசாலையில் உள்ள ஆயுதங்கள் அளிப்பிற்கு பிறகு புதிய ஆயுதங்களை உற்பத்தி செய்து நிரப்ப தொடங்கியது. (அது இஸ்ரேல் போருக்கு பின்னர் உதவியது!)
  • ஐரோப்பிய யூனியனில் உள்ள 27 நாடுகள் கடுமையான எதிர்ப்பை ரஷியாவுக்கு அளித்தன. அதுவரை அளிக்கப்பட்டு வந்த மானியங்கள் ரத்து செய்யப்பட்டன.
  • ரஷியா உக்ரைன் அருகில் உள்ள போலந்து மற்றும் பால்டிக் நாடுகள் அதற்கு முன்பு வரை ஐரோப்பிய யூனியன் உடனான உறவைத் தள்ளிபோட்டு வந்தன. ரஷியாவின் அதிரடி போர் நடவடிக்கைக்குப் பிறகு ஐரோப்பாவின் கிழக்கு அதிகார மையமாக அந்த நாடுகள் மாறின.
  • அதே யூனியனில் உள்ள ஹங்கேரி தனது ஆதரவை ரஷியாவுக்குத் தெரிவித்தது. ஆயுதங்களை அளிக்க மறுத்ததும் உக்ரைன் செல்லும் வாழ்வாதார பொருள்களைத் தடுத்து நிறுத்தியதுமான நடவடிக்கைகளை ஹங்கேரி மேற்கொண்டது. 
  • இந்த ஆட்டத்தில் இந்தியா, தனது முடிவைத் தெளிவுபடுத்தியாக வேண்டிய நிலைக்கு வந்தது. அணிச் சார்புமில்லாத நிலையை இந்தியா கடைப்பிடித்தது. (இது இஸ்ரேல் விஷயத்தில் தலைகீழான நிலையாக மாறியது!)
  • ரஷியா போரைத் தொடங்கிய நாளில் மெக்டோனல்ட்ஸ் தொடங்கி உலகம் முழுவதும் தொடர்சங்கிலி உணவகங்களை நடத்தும் பல நிறுவனங்கள் ரஷியாவின் வீதிகளில் இருந்து வெளியேறியது. 

இஸ்ரேல் - ஹமாஸ் போர்

  • அக்.7 அன்று ஹமாஸ் இஸ்ரேல் வீதிகளில் கட்டுக்கடங்காத வெறியோடு தாக்குதல் நடத்தியது, உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
  • அதற்கு பதில் தரும் வகையில் இஸ்ரேல் ஹமாஸை வேரோடு அழிக்கும் முடிவோடு களத்தில் இறங்கி, பத்து வாரங்களுக்கும் மேலாக கடுமையான தாக்குதலை மேற்கொண்டது.
  • இஸ்ரேலின் பெருமளவிலான தொழில்கள் முடங்கியுள்ளன. 2014 போருக்குப் பிறகு இஸ்ரேலின் பொருளாதாரம் முன்னேறி வந்தாலும் தற்போதைய போர் கஜானாவையே ஆட்டம் காண வைக்கக் கூடியது.
  • காஸா, லெபனான் உள்ளிட்ட எல்லைப் பகுதிகளில் உள்ள இஸ்ரேல் மக்கள் பெருமளவில் நாட்டிற்குள்ளாகவே இடம்பெயர்ந்துள்ளனர்.
  • இஸ்ரேல் ராணுவம் 3,60,000 பேரை ராணுவத்துக்கு அழைத்திருக்கிறது. 20 சதவிகிதம் உழைக்கும் மக்களின் பங்கு தொழில்துறையில் காணாமல் போவது என்பது 20 சதவிகித உள்நாட்டு உற்பத்தி மதிப்பு இல்லாமல் ஆவதற்கான சாத்தியம் என ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.
  • இந்தப் போர், 260 மில்லியன் அமெரிக்க டாலர்களை இஸ்ரேலுக்குச் செலவு வைக்கும் என ப்ளூம்பெர்க் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இது மிகக் குறைவான கணக்கீடு. தொழில்துறை இழப்பு உள்ளிட்டவற்றைச் சேர்க்கும் போது 400 மில்லியன் அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் 3 ஆயிரம் கோடி) அளவுக்கு இழப்பு நேரலாம் என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
  • ஈரானிய ஆதரவு ஹிஸ்புல்லா இயக்கத்துடன் ஆங்காங்கு மோதல் நேர்ந்தாலும் நேரடியாக ஈரான் பங்கேற்கவில்லை. ஒருவேளை லெபனான், ஈரான் நாடுகளுடன் இந்த போர் விரிவடையுமானால் மூன்றாவது உலகப் போர் உருவாவதற்கான சாத்தியத்தையும் துயரையும் யாராலும் தடுக்க இயலாது.

காஸாவின் நிலை

  • காஸாவில் 5 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் பசியில் வாடுவதாக ஐ.நா தெரிவித்துள்ளது. மொத்த மக்கள் தொகையில் 80 சதவிகிதம் ஏறத்தாழ 19 லட்சம் பேர் தங்கள் வீடுகளை விட்டு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர்.
  • இன்னும் உயிரிழப்புகளுக்கு முடிவு இல்லை. கட்டடங்கள் பெருமளவில் தகர்க்கப்பட்டுள்ளன.
  • காஸா- இஸ்ரேல் பிரச்னையில் உலக நாடுகள் போர் நிறுத்தத்துக்கு தொடர் குரல் கொடுத்து வந்தாலும் அமெரிக்காவின் வலுவான ஆதரவு இஸ்ரேலுக்கு இருப்பதால் போர் தொடர்ந்து வருகிறது.
  • 36 மருத்துவமனைகளில் 9 மருத்துவமனைகள் மட்டுமே செயல்பாட்டில் உள்ளன.
  • மனித பேரழிவைக் காஸா சந்திப்பதாக ஐ.நா எச்சரிக்கிறது.

எதற்கு முக்கியத்துவம்?

  • இந்தப் போர்களில் உணவு மற்றும் எரிபொருள் உள்ளிட்ட மனிதர்கள் வாழ்வதற்கான அத்தியாவசிய துறைகள் வலுவிழந்து போகும்போது, ஒரு துறை மட்டும் பளபளப்போடு பட்டியலில் முன்னேறி வருகிறது. ஆயுதங்கள் மற்றும் தளவாடங்கள் உற்பத்தி செய்யும் நிறுவனங்கள், நாடுகள் பெருமளவில் உயர்வைச் சந்தித்துள்ளன.
  • இது போன்ற போர்கள், மற்ற உலக நாடுகளையும் தங்களைத் தயார்படுத்திக் கொள்ள அதிக நிதியை ஆயுதங்களுக்குச் செலவிடும் சூழலுக்குத் தள்ளுகின்றன.
  • ஆனால், இதே காலக்கட்டத்தில் போர்களால் உயிரிழப்புகள், பசி, பட்டினி, நாடு துரத்தல்கள், உணவு விலையேற்றம்… இவையெல்லாம் சமகாலத்தில் நாம் எதிர்கொள்ளும் பிரச்னைகள். இதற்காக எத்தனை நாடுகள் நிதி ஒதுக்கப்போகின்றன?
  • வன்முறையால் அடையப்படும் வெற்றி என்பது தோல்விக்குச் சமம். ஏனெனில் அது அந்த நேரத்துக்குரியது. உலகில் உண்மையான அமைதி அடைய வேண்டுமெனில் அது வன்முறைக்கு எதிரான போராகத்தான் இருக்க வேண்டும்” என்கிற காந்தியின் வார்த்தைகளே இந்தச் சூழலின் கனத்தில் இருந்து வெளியேறுவதற்கான ஒரே நம்பிக்கை!

நன்றி: தினமணி (27 – 12 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்