- நகர்ப்புற விரிவாக்கம் காலநிலைப் பிறழ்வைத் தீவிரப்படுத்துகிறது; பதிலுக்கு, காலநிலைப் போக்குகள் நகர்ப்புறங்களை மேலும் நரகமாக்குகின்றன.
- இப்போதைய கணக்குப்படி, உலகின் 50% மக்கள் நகர்ப்புற வாசிகள். இது இன்னும் கூடிக்கொண்டே போக வாய்ப்புண்டு. உலகப் பொருளாதாரம் 75% நகரங்களையே சார்ந்திருக்கிறது. அதே வேளையில், நகர்ப்புறங்கள் விரிவடையும்தோறும் காட்டுப் பகுதிகளும் ஈரநிலங்களும் கட்டுமானப் பகுதிகளாக உருமாறுகின்றன என்பதும், அப்படி மாறுவது சூழலியல், பொருளாதார வீழ்ச்சியைத் துரிதப்படுத்தும் என்பதும் மற்றொரு கசப்பான எதார்த்தம்.
- வறட்சிக் காலத்தில் மக்களின் தண்ணீர்த் தேவையை நிறைவேற்றும் நீர்த்தேக்கங்களும், புயல் வெள்ளத்தை எளிதில் மேலாண்மை செய்யும் திறந்தவெளிகளும் நன்னீர்ப் பரப்புகளும் காணாமல் போகின்றன.
தண்ணீருக்குத் திண்டாட்டம்:
- குறிப்பிட்ட நிலப்பகுதி, அதன் தாங்குதிறனை மீறிக் குடியிருப்புப் பகுதியாக மாற்றப்பட்டால் என்ன ஆகும் என்பதற்கு பெங்களூரு நம் அருகிலுள்ள நிகழ்கால உதாரணம். நாற்பது ஆண்டுகளுக்கு முன்னால் சில மாதங்கள் அந்நகரில் வாழ்ந்திருக்கிறேன்.
- பூங்காக்களின் நகரம், மின்விசிறி தேவையற்ற நகரம்- இப்படிப் பல அடைமொழிகள் அந்நகரத்துக்கு உண்டு; அவையெல்லாம் அன்றைக்குக் கச்சிதமாகப் பொருந்தின. காற்றில் ஏறியுள்ள மாசுச் சுமை இன்றுபோல் நம்மை மிரட்டாது. நன்னீர் ஒரு சிக்கலாக இருந்ததே இல்லை. நகரத்தின் பசுமை வனப்பை ரசிப்பதற்காகவே மாலைப் பொழுதுகளில் மிதிவண்டியில் சில கிலோமீட்டர் தொலைவு சென்றுவருவேன்.
- இன்றைக்கோ பெங்களூரு நகரம் தண்ணீருக்குத் திண்டாடிக் கொண்டிருக்கிறது. அடுக்கக வாசிகள் அன்றாடத் தேவைக்குப் பணம் கொடுத்துத் தண்ணீர் பெறுவது பழைய செய்தி. கடந்த ஆண்டு வறட்சி உச்சத்துக்குப் போனபோது, இயன்றவர்கள் அடுக்ககங்களைத் துறந்துவிட்டு ஊருக்குப் போய்விட்டனர். புறநகர்க் கட்டுமானங்களின் பகாசுர வளர்ச்சி நிலத்தடி நீர்மட்டத்தை மிகவும் கீழே கொண்டுபோய்விட்டது.
சிறு குடியிருப்புகள்:
- ஏறத்தாழ, உலகின் எல்லாப் பெருநகரங்களும் தண்ணீர்ப் பற்றாக்குறையை அனுபவிக்கத் தொடங்கிவிட்டன. இங்கு இயல்பாக சில கேள்விகள் எழுகின்றன: நன்னீர்ப் பற்றாக்குறை எப்படி ஏற்பட்டது? நகரத்தின் நன்னீர்த் தேவை எதனால் அதிகரிக்கிறது? இதற்கு எளிமையான பதில், நகரம் விரிவடைகிறது என்போம்.
- அமெரிக்கா போன்ற மேலைநாடுகளில் நகரக் குடியிருப்பின் பரப்பை கவுண்ட்டிகளாக வரையறுத்திருக்கிறார்கள். ஒரு கவுண்ட்டி நிரம்பிவிட்டால் மற்றொரு கவுண்ட்டியை உருவாக்குகிறார்கள். இதனால் கழிவு மேலாண்மை, தண்ணீர்த் தேவை இரண்டையும் வரம்பு மீறாமல் கையாள முடிகிறது.
விரிவாக்கத்தின் பிரம்மாக்கள்:
- நகரங்களின் விரிவாக்கத்தைக் கட்டுப்படுத்துவது யார்? நகரம் எந்தத் திசையில், என்ன வேகத்தில் விரிவடைய வேண்டும் என்பதைத் தீர்மானிப்பவர்கள் கட்டுமானத் தொழில் முதலாளிகள்தாம் (builders). பெருந்தொற்றுக் கால வீடு அடங்கலின்போது கட்டுமானமும் வீட்டுமனை வணிகமும் சரிந்துவிட்டது. பணியாளர்களை வீட்டில் தங்கி இணையவழிப் பணி செய்யவைக்கத் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் தீர்மானித்தன.
- அலுவலகக் கட்டிடங்கள் நிறைய காலியாகின. இதனால் நிறுவனங்களுக்கு நிர்வாகச் செலவுகள் கணிசமாகக் குறைந்தன. ‘அட, இது லாபகரமான ஏற்பாடாக இருக்கிறதே! இப்படியே தொடர்ந்தால் என்ன?’ என்று நிறுவனங்கள் யோசித்துக் கொண்டிருந்தன. கட்டுமான முதலாளிகள் நெருக்கடி கொடுக்கத் தொடங்கினர்.
- வீடு அடங்கல் முடிவுக்கு வந்தபோது, பெரும்பான்மையான நிறுவனங்கள் பணியாளர்களைப் பணியிடத்துக்கு வந்தே தீரவேண்டும் என்று வற்புறுத்தித்தின. நகரம் விரிவாவது மனை, அடுக்கக வணிக முதலாளிகளின், பெருவணிக மையங்களின் தேவையாகியிருக்கிறது. இவையே நகர விரிவாக்கத்தைத் தீர்மானிக்கும் முதன்மைக் காரணிகளாக மாறியிருக்கின்றன.
- காலநிலையின் கோணத்தில் பார்க்கும்போது, நகர்மயமாக்கல் என்பது, இருபுறமும் கூர்தீட்டப்பட்ட வாள். அதன் ஒரு விளிம்பு, காடு, புறம்போக்கு நில, நீர்நிலை அழிப்பு; மறு விளிம்பு, நகரத்தின் மிகையான நீர் நுகர்வு. நகரம், தணியாப் பெருந்தாகத்தோடு ஊர்ப்புறங்களுக்கு உரிமையுள்ள பங்கையும் சேர்த்து விழுங்கிவிடுகிறது.
உலர்காலப் பெருவெள்ளம்:
- புவிவெப்பம் உயர்வதால் கடல் மட்டம் உயர்வதும் அதன் விளைவாகக் கரை நிலங்கள் மூழ்குவதும் தவிர, புதிய சிக்கல்கள் முளைத்துக் கொண்டிருக்கின்றன. மயிலாடுதுறை மாவட்டக் கடற்கரை போன்ற தாழ்ந்த கரைநிலப் பகுதிகளில் கடல்நீர் உள்ளேற்றத்தினால் உலர்கால வெள்ளப் பெருக்கு (dry flood) நிகழத் தொடங்கியுள்ளது.
- இவ்வாறு நிலத்தடி உவர்நீர்க் கசிவு நிகழ்ந்த இடங்களில் நன்னீர் ஆதாரங்கள் நிரந்தர அழிவுக்கு உள்ளாகும். உவர்ப்பு மிகுந்த நீரை அருந்தும் கடற்கரைப் பெண்களுக்குக் கர்ப்பப்பைப் புற்றுநோய் ஏற்படும் சாத்தியம் மிகுதியாக உள்ளதாகச் சில வருடங்களுக்கு முன்னால் வங்கதேசத்தில் நிகழ்த்தப்பட்ட ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன.
எகிறும் வெப்ப உச்சங்கள்:
- காலநிலைப் பிறழ்வு, இனிவரும் ஆண்டுகளில் வெப்ப உச்சங்களின் கால அளவையும் எண்ணிக்கையையும் அதிகரிக்கும். வெப்பநிலை உயர்வினால் பெருந்தொகையினர் மரணமடைவர். வெப்ப மயக்கத்தின் (heat strokes) அபாயம் பெருகும்; சில இடங்களில் காற்றின் ஈரப்பதம் உயரும்; அதனால் பெருந்தொற்றுகள் எளிதாகப் பரவும்; நன்னீர்ப் பற்றாக்குறை ஏற்படும்.
- நிலத்திலும் கடலிலும் உயிர்ச்சத்துகள் பற்றாக்குறையாகும், பசுந்தாவரங்களின் முதல்நிலை உற்பத்தி சரிவடையும்; உணவு உற்பத்தி 50% வீழ்ச்சியடையும். உள்நாட்டு மோதல்கள் பெருகும், பேரினவாதம் தலைதூக்கும், பொருளாதார வலுவற்ற பெருந்தொகையினர் அதனால் அதிக பாதிப்புக்கு உள்ளாவர்.
- புவியின் வெதுவெதுப்பு கூடிக்கொண்டே போகும் நிலையில் வெப்ப மண்டலங்களில் வறட்சியும் பெருவெள்ளப் பேரிடர்களும் அடிக்கடி நிகழும்; அதன் முதல் பலி உணவு உத்தரவாதம். குறிப்பிட்ட பகுதிகளில் மண்ணிலும் வளி மண்டலத்திலும் ஈரப்பதம் குறையும்; அது பயிர்களைத் தின்றழிக்கும் பூச்சிகளுக்குச் சாதகமான சூழலை உருவாக்கும்.
- பயிர்களின் வளர்ச்சியும் ஈவும் சரியும்; அறுவடைகள் வீழ்ச்சியடையும்; கால்நடைகள் உட்கொள்ளும் தீவனம் குறையும், அவற்றின் இறைச்சி, பால் தரும் விகிதம் குறையும்; தெற்காசியாவிலும், சகாராவைச் சூழ்ந்துள்ள பகுதிகளிலும் பல கோடி ஏக்கர் பயிர் நிலங்கள் வறண்டுபோகும்; பயிர்ச் சாகுபடிக்கான கால அவகாசம் 20% குறையும்.
வறட்சி அகதிகள்:
- காலநிலை மாற்றம் ஏற்படுத்தும் வறட்சி எம்மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தும்? சிரியாவில் நேர்ந்த வறட்சியின் கதையை நாம் அவசியம் தெரிந்துகொள்ள வேண்டும்.
- 2007-10 காலகட்டத்தில் சிரியா வரலாறு காணாத வறட்சியை எதிர்கொண்டது. 15 லட்சம் விவசாயிகள் பயிர்த் தொழிலைக் கைவிட்டனர். உணவுப் பஞ்சத்தின் நீட்சியாக 2011இல் நாட்டில் ஆயுத வன்முறை நிகழ்ந்தது. 2018இல் 1.3 கோடி மக்கள் சிரியாவிலிருந்து இடம்பெயர்ந்தனர்.
மானுட யுகம் முடிவை நெருங்குகிறதா?
- காலநிலைப் பிறழ்வுக்கும் மனித குலத்தின் எதிர்காலத்துக்கும் என்ன தொடர்பு? இயற்கை என்பதே உறவுகளின் கட்டுமானம்தான். மனிதச் செயல்பாடுகள் அதில் தலையீடு செய்ததன் கெடுவிளைவுகளையே காலநிலைப் பிறழ்வாக நாம் அனுபவித்துக் கொண்டிருக்றோம்.
- காட்டையும், நிலத்தையும், கடலையும் கடந்த சில நூற்றாண்டுகளாகத் தவறாகக் கையாண்டு வந்திருக்கிறோம் என்பதே மனித வரலாற்றின் ஆகப்பெரிய திருப்பம்! ஆந்த்ரப்போசீன் என்கிற மனிதர்கள் ஆதிக்கம் செலுத்தும் யுகத்தை காலநிலைப் பிறழ்வு முடிவுக்குக் கொண்டுவந்துவிடும் எனப்படுகிறது.
- காலநிலைப் பிறழ்வு நிகழ்காலப் பேரிடர் மட்டுமல்ல, தொடர் பேரிடர். பூமியின் வெப்பநிலை உயர்வு, துருவப் பனிப்பாறைகளின் அழிவு, கடல்மட்ட உயர்வு, கடற்கரை நிலங்களின் அழிவு, கடல் நீரோட்டங்களின் சீர்மைக் குலைவு, எல் நினோக்கள், இயற்கைச் சீற்றங்களின் பெருக்கம், வறட்சியாலும் பெருவெள்ளத்தாலும் உணவு உற்பத்தியில் வீழ்ச்சி, திணைநில அகதிகளின் பெருக்கம்… இந்த வரிசை காலநிலைப் பிறழ்வின் தொடர்ச்சிதான் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.
நன்றி: இந்து தமிழ் திசை (25 – 05 – 2024)