நகரமயமாக்கலின் சவால்கள்
- உலக மக்கள்தொகையில் 57.8% பேர் நகரப் பகுதியில் வசிப்பதாகவும் இந்த எண்ணிக்கை 2050ஆம் ஆண்டுக்குள் இரட்டிப்பாகும் என்றும் ‘யூத் கிளைமேட் சேஞ்ச்மேக்கர்ஸ்’ (Youth Climate Changemakers) அமைப்பு கணித்துள்ளது. இந்த நிலையில், நகரப் பகுதிகளில் தொடர்ந்து அதிகரிக்கும் மக்கள்தொகைப் பெருக்கத்தினால் பல்வேறு சவால்கள் உருவாகிவருகின்றன. இந்தப் போக்கு தொடர்ந்தால் வாழ்வதற்கான தகுதியைப் பெரும்பாலான நகரப் பகுதிகள் இழக்கும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
அதிகரிக்கும் நகரமயமாக்கல்:
- காலநிலை மாற்றத்தினால் நகரங்கள் முன்னெப்போதும் இல்லாத கடுமையான சவால்களை எதிர்கொண்டுள்ளன என ஐக்கிய நாடுகள் அவை சுட்டிக்காட்டியுள்ளது. உலகின் தெற்கு நாடுகளில் நகரமயமாக்கல் தீவிரமாகிவருகிறது. அதேநேரத்தில், அந்நாடுகளில் போதிய உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாததாலும், வளங்கள் பற்றாக்குறையினாலும் அங்குள்ள நகரங்கள் நெருக்கடிகளைக் கடுமையாக எதிர்கொண்டு வருகின்றன. குறிப்பாக, நகரங்களில் நிலவும் இடப்பற்றாக்குறை முக்கியப் பிரச்சினையாக மாறியுள்ளது.
- காலநிலை மாற்ற விளைவினால் தீவிர மழை, பெருவெள்ளம், வெப்ப அலை போன்றவற்றால் மக்கள் பாதிக்கப்படுகின்றனர். வரும் ஆண்டுகளில் இந்தியா, சீனா, நைஜீரியா போன்ற நாடுகளின் நகரங்களில் மக்கள்தொகை அதிகரிக்கும் எனத் தரவுகள் குறிப்பிடுவதால், அதை எதிர்கொள்வதற்கான திட்டங்கள் அவசியமாகின்றன.
இந்திய நகரமயமாக்கல்:
- இந்திய நகரமயமாக்கல் பாதையானது, வட பகுதி நாடுகளின் நகரமயமாக்கலிலிருந்து முற்றிலுமாக வேறுபட்டது. மேற்கத்திய நாடுகளில் தொழில் புரட்சியைத் தொடர்ந்து நகரமயமாக்கல் ஏற்பட்டது. அப்போது கிராமப்புறத் தொழிலாளர்களின் உழைப்பை உறிஞ்சும் வகையிலான வேலைவாய்ப்புகள் அதிக அளவில் உருவாகின.
- காலனித்துவ நாடுகளிலிருந்து சுரண்டப்பட்ட பொருளாதார வளத்தால் மேற்கத்திய நாடுகளின் நகரமயமாக்கல் நீடித்தது. காலனித்துவ ஆட்சியின்போது பிரிட்டனின் பொருளாதாரத்துக்கு இந்தியா 45 டிரில்லியன் டாலர் பங்களிப்பு செய்ததாக இந்தியப் பொருளாதார நிபுணர் உத்சா பட்நாயக் குறிப்பிடுகிறார்.
- ஆனால், இந்திய நகரமயமாக்கலின் பின்னணியில் பொருளாதாரப் பிரச்சினைகளும் இருக்கின்றன. இதன் விளைவாக, நகரமயமாக்கலின் வளர்ச்சியில் வறுமையும் ஒன்றுசேர்ந்தே பயணித்து வருகின்றன. உதாரணத்துக்கு, கோவிட் காலத்தில் அறிவிக்கப்பட்ட பொதுமுடக்கத்தினால், நகரங்களில் வேலை இல்லாமல் மீண்டும் கிராமங்களை நோக்கி மக்கள் இடம்பெயரத் தொடங்கினர். இது இந்தியாவின் நகர்ப்புறத் திட்டமிடலில் உள்ள இடைவெளிகளைத் தெளிவாக எடுத்துக்காட்டியது.
தீர்வு கோரும் பிரச்சினைகள்:
- இந்திய மக்கள்தொகையில் சுமார் 40% பேர் நகர்ப்புறங்களில் வசிப்பதாக உலக வங்கித் தரவு கூறுகிறது. மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி, இந்தியாவின் நகர்ப்புற மக்கள்தொகை 2001இல் 27.6 சதவீதமாக இருந்தது. இது 2011இல் 31.16 சதவீதமாக உயர்ந்தது.
- இந்திய நகரங்கள், நிலையான வளர்ச்சி என்கிற இலக்கை நோக்கி முன்னேறிச் செல்கின்றன; அதேவேளையில், வறுமை, வேலையின்மை, சுற்றுச்சூழல் பாதிப்பு, சமூகப் பிளவுகள், சமத்துவமின்மை போன்றவற்றாலும் அவை பாதிக்கப்படுகின்றன. இந்தியாவில் கட்டிட விதிமுறைகள் முறையாக அமல்படுத்தப்படாததால் பெருநகரங்களில் இடநெருக்கடியும் அதிகரித்திருக்கிறது.
காலாவதியான திட்டங்கள்:
- இந்திய நகர்ப்புறத் திட்டமிடலில் இரண்டு முக்கியப் பிரச்சினைகள் நீடிக்கின்றன. முதலாவது, நகரமயமாக்கலுக்கான தற்காலிகத் திட்டங்கள் பெருமளவு காலாவதியாகிவிட்டதால், அதிகரிக்கும் மக்கள்தொகையை ஈடுசெய்ய அத்திட்டங்கள் தவறுகின்றன.
- 1980களில் டெல்லி, சூரத், மும்பை போன்ற நகரங்களில் தொழில் துறைச் செயல்பாடுகள் குறைக்கப்பட்டன. இது தொழிலாளர்களின் வேலை இழப்புக்கு வழிவகுத்தது. இதனால், வேலை இழந்த தொழிலாளர்கள் புறநகர்ப் பகுதிகளுக்கு இடம்பெயர்ந்தனர். நெரிசல்மிக்க பகுதிகளில் அவர்கள் குடியேறும் சூழல் ஏற்பட்டது. இந்திய மக்கள்தொகையில் 41% பேர் குடிசைப் பகுதிகளில் வசித்துவருவது குறிப்பிடத்தக்கது.
- அத்துடன் பெரும்பாலான நகர்ப்புற வேலைகள் 90% அமைப்புசாராத் தொழில் சார்ந்தவையாக இருப்பதால், தொழிலாளர்களுக்குப் போதிய பாதுகாப்பு இல்லை எனவும் பொருளாதார அறிஞர்கள் தெரிவிக்கின்றனர். இரண்டாவது சுற்றுச்சூழல் பாதிப்பு. அதிகரிக்கும் மக்கள்தொகையினால் நகரங்களில் குடிநீர், காற்று மாசுபாடு போன்ற சுகாதாரப் பிரச்சினைகள் ஏற்படுகின்றன.
- 2023இல் உலகில் மிக மோசமான காற்று மாசுபாடு நிலவும் நாடுகளின் பட்டியலில் இந்தியா 3ஆவது இடத்தில் உள்ளது எனக் காற்றின் தரத்தை மதிப்பீடு செய்யும் ஸ்விட்சர்லாந்தின் ‘ஐக்யூஏர்’ அமைப்பு தெரிவிக்கிறது. மிக மோசமாகக் காற்று மாசு நிலவும் உலகின் முதல் 50 நகரங்களில் இந்தியாவில் 42 நகரங்கள் இடம்பிடித்துள்ளது கவனிக்கத்தக்கது.
தீர்வுகள்:
- 2050இல், இந்திய நகரப் பகுதிகளில் 80 கோடி மக்கள் வசிப்பார்கள் எனத் தரவுகள் கூறுகின்றன. அப்போது காற்று மாசு போன்ற சுகாதார நெருக்கடிகள் மக்களின் ஆயுள்காலத்தைக் குறைக்கக்கூடும். இதில், காற்று மாசு உருவாவதற்குக் காரணமாக இருக்காத ஏழை மக்களே அதிகம் பாதிக்கப்படுவர். இதைக் கட்டுப்படுத்த ரயில், பேருந்து போன்ற பொதுப் போக்குவரத்து வசதிகளை அதிகரித்து, விரைவில் மக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டுவர வேண்டும். தீவிர வானிலை நிகழ்வுகளால் ஏற்படும் பெருவெள்ளத்தை எதிர்கொள்ள மேம்பட்ட கழிவுநீர் மேலாண்மைத் திட்டங்கள் செயல்படுத்தப்பட வேண்டும்.
- நகரங்களில் இட நெருக்கடியைத் தவிர்ப்பதற்குக் குடிநீர், சாலை, மின்விளக்கு, போக்குவரத்து, வேலைவாய்ப்பு முதலிய அனைத்து அடிப்படை வசதிகளையும் கிராமப்புறங்களில் உருவாக்குவதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். சீர்குலைந்துள்ள நகரமயமாக்கல் திட்டங்களுக்குப் புத்துயிர் அளித்து, வளர்ச்சி சார்ந்து நிரந்தரத் திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட வேண்டும். மிக முக்கியமாக, திட்டமிடப்படாத வளர்ச்சி என்பது மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதிப்பதுடன், பொருளாதாரத்தையும் பாதிக்கும் என்பதை மத்திய, மாநில அரசுகள் நினைவில் கொள்ள வேண்டும்.
நன்றி: இந்து தமிழ் திசை (04 – 12 – 2024)