TNPSC Thervupettagam

நகர்ப்புறத் திட்டமிடலில் நோய்ப் பரவல் தடுப்பும் உள்ளடங்க வேண்டும்

December 2 , 2020 1510 days 652 0
  • கரோனாவுக்குப் பிறகு சுகாதாரமானதாகவும் வாழ்வதற்கு உகந்த வகையிலும் நகர்ப்புறத் திட்டமிடலும் மேம்பாடும் அமைய வேண்டும் என்ற பிரதமர் நரேந்திர மோடியின் கருத்து, நோய்ப் பரவலுக்கு வாய்ப்பளிக்கும் பலவீனமான உள்கட்டமைப்பின் உண்மை நிலையைப் பிரதிபலிக்கிறது.
  • ப்ளூம்பெர்க் புதிய பொருளாதார மன்றத்தில் அவர் பேசியபோது, பாதுகாப்பான நகர்ப்புற வாழ்வுக்காக மாற்றங்கள் வேண்டும் என்று வலியுறுத்தியிருக்கிறார்.
  • அதே நேரத்தில், பல்லாயிரக்கணக்கான உழைக்கும் மக்களுக்காக அரசாங்கம் உண்மையில் மிகவும் சிறிய அளவுக்குத்தான் செய்திருக்கிறது என்பதையும் அவர் ஏற்றுக்கொண்டுள்ளார்.
  • மும்பை, டெல்லி, பெங்களூரு, சென்னை ஆகிய நகரங்களின் மிக வேகமான தொற்றுப் பரவலானது மக்கள் அடர்த்தி, தனிநபர் இடைவெளியைக் கடைப்பிடிக்க இயலாமை ஆகியவற்றின் தவிர்க்க முடியாத விளைவுகளாகும். உலகிலேயே மிகவும் நெருக்கமான குடிசைப் பகுதிகளில் ஒன்றான தாராவியில், ஒப்பீட்டளவில் குறைவாக வைரஸ் தொற்று காணப்பட்டதற்கு அதிக அளவில் பரிசோதனைகள் செய்யப்பட்டதும் பெருந்திரள் நோய் எதிர்ப்பு சக்தி ஏற்பட்டதும் காரணம் என்று தொற்றுநோயியலாளர்கள் கூறுகிறார்கள்.
  • மேலும், பெருந்தொற்றின் முழுமையான சமூகத் தாக்கம், குறிப்பாக ஏழைகளிடம் அது ஏற்படுத்திய தாக்கும் குறித்துப் போதுமான வகையில் அளவிடப்படவில்லை. பிரதமர் கூறியிருப்பதுபோல ஒன்று மட்டும் தெளிவானது: இந்த நகரங்கள் ‘முன்பிருந்ததுபோல் இல்லை’!
  • நிலைத்த வளர்ச்சியும் சுகாதாரமும் கொண்ட நகரங்களுக்கு நல்ல, விலை குறைவான வீடுகளே அடிப்படை.
  • ஆனால், இந்தியாவில் இந்தத் தொடர்பு மிகவும் பலவீனமாகவே இருக்கிறது. 1961-2000 காலகட்டத்தில் மும்பையில் கட்டப்பட்ட புதிய குடியிருப்புகளால் வாடகைக் குடியிருப்புகளின் எண்ணிக்கை வெறும் 5% மட்டுமே உயர்ந்துள்ளது. அதுவும்கூட, தனிநபர் முதலீடுகளால் ஆனது.
  • எனவே, கரோனாவுக்குப் பிந்தைய காலகட்டமானது விலை குறைவான வாடகை வீடுகள் அடங்கிய வளாகங்களை மிகப் பெரிய அளவில் தொடங்குவது போன்ற ஒன்றிய அரசின் திட்டங்களுக்கான ஒரு வாய்ப்பை வழங்கும்.
  • ஐரோப்பா, ஜப்பான், தென்கொரியா ஆகியவற்றில் உலகப் போருக்குப் பின்பு மேற்கொள்ளப்பட்ட மறுகட்டமைப்புப் பணிகளைப் பின்பற்றி அரசாங்கமே புதிய நல்ல வீடுகள் கட்டுவதைக் குறித்துக் கவனம் செலுத்தலாம்.
  • மத்திய வீட்டுவசதித் துறை அமைச்சகமானது இதுவரை குறைந்த எண்ணிக்கையில் அதிக செலவு பிடிக்கும் ஸ்மார்ட் சிட்டி திட்டங்களிலேயே கவனம் செலுத்திவந்திருக்கிறது. இனிமேலாவது, ஆக்கபூர்வமான முறையில் அரசாங்கங்களுடன் இணைந்து செயல்பட வேண்டும்.
  • ஒவ்வொரு நகரத்தின் வீட்டுத் தேவைகள் பற்றிய விவரங்களை டிஜிட்டல் முறையில் தொகுத்து வெளிப்படையாக அறிவிக்கலாம். காற்று மாசு, நகரின் திடக்கழிவு மேலாண்மை, நீர்த் தரக் கட்டுப்பாடு ஆகியவை குறித்த சட்டங்கள் எவ்வாறு நடைமுறைப்படுத்தப்படுகின்றன என்பதையும் இதே முறையில் வெளிப்படையாகத் தெரிவிக்கலாம். பிரதிநிதித்துவமற்ற சிறுபான்மையினரையும் நகரத்தில் சேர்ந்தியங்கச் செய்யலாம்.
  • நூறு ஆண்டுகளுக்கு முந்தைய காலரா, பிளேக், ஃப்ளூ போன்ற பெருந்தொற்றுகளெல்லாம் கழிவுகளைக் கையாளும் முறை, வீட்டுவசதிகள், பொது சுகாதாரம் ஆகியவற்றில் மாற்றங்களை உண்டாக்கி நோய்ப் பரவலைக் குறைத்தன.
  • அரசாங்கங்கள் பெருந்தொற்றின் காரணமாக அப்படியொரு சவாலைத் தற்போது எதிர்கொண்டிருக்கின்றன. நகர்ப்புறங்களை மறுகட்டமைப்பதற்கான அரசியல் விருப்பங்கள் அந்த மாற்றத்தையே எடுத்துக்காட்டுகின்றன.

நன்றி : இந்து தமிழ் திசை (02-12-2020)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்