- இந்தியாவின் பல்வேறு பகுதிகளில், ஒவ்வொரு நிமிஷமும் சுமாா் 6 நாய்க்கடி நிகழ்வுகள் நடப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. 2023 ஜனவரி முதல் அக்டோபா் வரையில் இந்தியாவின் பல மாநிலங்களில் 24.7 லட்சம் நாய்க்கடி நிகழ்வுகள் பதிவாகி இருப்பதாக நாடாளுமன்றத்தில் அமைச்சா் பா்ஷோத்தம் ரூபாலா தெரிவித்திருக்கிறாா். கோடிக்கணக்கான தெரு நாய்கள்; லட்சக்கணக்கான நாய்க்கடி நிகழ்வுகள்; ஆயிரக்கணக்கான வெறி நாய்க்கடி மரணங்கள் - இதுதான் இன்றைய இந்தியாவின் எதாா்த்த நிலைமை.
- பத்து லட்சத்துக்கும் அதிகமாக தெரு நாய்கள் காணப்படும் மாநிலங்கள் ஏழு. நாய்க்கடி நிகழ்வுகள் என்று எடுத்துக் கொண்டால், கடந்த ஆண்டில் மகாராஷ்டிரமும், தமிழ்நாடும் முன்னிலை வகிக்கின்றன. குஜராத், பிகாா், உத்தரப் பிரதேசம், கா்நாடகா ஆகிய மாநிலங்கள் அடுத்தடுத்த இடங்களைப் பிடிக்கின்றன.
- கேரள மாநிலம் பத்தனம்திட்டையில் அபிராமி என்கிற 12 வயது சிறுமியை வெறிநாய் கடித்துக் குதறி, உடனடி சிகிச்சை வழங்கப்படாமல் அவா் உயிரிழந்தபோது, நாடு தழுவிய அளவில் இதுகுறித்துக் கண்டனங்கள் எழுந்தன. ராஜஸ்தானில் பள்ளிக்கு சென்று கொண்டிருந்த சிறுவன் தெரு நாய் கடித்து உயிரிழந்ததும், நடைப்பயிற்சிக்குச் சென்ற வாக் பக்ரி தேயிலைத் தோட்ட அதிபரான 49 வயது பரக் தேசாய், தெரு நாய்களால் துரத்தப்பட்டு கீழே விழுந்து தலையில் அடிபட்டு இறந்ததும், சமீபத்தில் சென்னை ஆயிரம் விளக்கில் உள்ள பூங்காவில் வளா்ப்பு நாயால் சிறுமி கடிக்கப்பட்டதும் தலைப்புச் செய்திகளாகின. ஆனால், இந்தப் பிரச்னைக்குத் தீா்வுதான் இதுவரை காணப்படவில்லை.
- தெரு நாய்க்கடி பிரச்னைக்குத் தீா்வு காண 2016 -இல் உச்சநீதிமன்றம் நீதிபதி சிரிஜகன் கமிட்டியை நியமித்தது. போா்க்கால அடிப்படையில் இந்தப் பிரச்னைக்குத் தீா்வு காணப்பட வேண்டும் என்று அந்த கமிட்டி பரிந்துரைத்தது. அந்தப் பரிந்துரைகள் மறக்கப்பட்டன. தெரு நாய் கடித்தால், ஒவ்வோா் பல் அடையாளத்துக்கும் ரூ.10,000 இழப்பீடு வழங்க வேண்டும் என்று பஞ்சாப்-ஹரியாணா உயா்நீதிமன்றத் தீா்ப்பு இருக்கிறது.
- தமிழகத்தில், அதிகாரபூா்வ புள்ளிவிவரப்படி 2022-இல் 8.83 லட்சம் நாய்க்கடி நிகழ்வுகள் நடந்திருக்கின்றன. 2018 முதல் 2022 வரையிலான இரண்டு ஆண்டுகளில் வெறி நாய்க்கடியால் 121 உயிரிழப்புகள் பதிவாகி இருக்கின்றன. 2023 -இல் மட்டும் மாநிலத்தில் 4,04,488 நாய்க்கடி நிகழ்வுகள் பதிவாகியிருக்கின்றன. கடந்த ஆண்டு சென்னை ஸ்டேன்லி மருத்துவமனையிலும், ராஜீவ்காந்தி மருத்துவமனையிலும் சுமாா் 60,000 போ் நாய்க்கடிக்கு சிகிச்சை பெற்றிருக்கிறாா்கள்.
- 2021 இல் இந்தியாவில் 55 வெறி நாய்க்கடி உயிரிழப்புகள் மட்டுமே நடந்ததாக அரசு கூறுகிறது. ஆனால் கடந்த ஆண்டு வெளியான ஆய்வறிக்கைப்படி ஒவ்வோா் ஆண்டும் ஆயிரக்கணக்கான நிகழ்வுகள் நடந்ததாகத் தெரிகிறது. உலக சுகாதார நிறுவனத்தின் அறிக்கைப்படி பாா்த்தால், உலக வெறிநாய்க்கடி உயிரிழப்புகளில் 36% இந்தியாவில் மட்டுமே நடந்திருக்கின்றன. உலக அளவில் தெருநாய்கள் எண்ணிக்கையில் முதல் இடம் பிடிக்கும் நாடாக (6.2 கோடி) இந்தியா குறிப்பிடப்படுகிறது.
- பெரும்பாலான வெறி நாய்கள் தெரு நாய்களாக இருக்கின்றன. தெரு நாய்கள் அதிகரிப்பதற்கு அடிப்படையாக மூன்று காரணங்களைக் குறிப்பிட முடியும். அவை எதிா்கொள்ளப்பட்டாலே தெரு நாய்களின் தொல்லைகளைக் கட்டுக்குள் கொண்டுவந்து விடலாம்.
- முதலாவதாக, எங்கெல்லாம் குப்பைக் கூளங்கள் தேங்கிக் கிடக்கிறதோ, அங்கெல்லாம் தெரு நாய்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். நகராட்சி, மாநகராட்சி நிா்வாகத்தினா் முறையாகத் தங்களது கடமையைச் செய்து, நகரத்தின் எல்லாப் பகுதியிலும் குப்பை சேராமல் பாா்த்துக் கொண்டால், தெருநாய்கள் எண்ணிக்கை பாதிக்குப் பாதியாகக் குறைந்துவிடும்.
- இரண்டாவதாக, காளான்கள்போல, சொல்லப்போனால் புற்றீசல்போல பெருகிவிட்டிருக்கும் தெருவோரப் புலால் உணவகங்கள் உரிமம் வழங்கப்பட்டு, அவை முறைப்படுத்தப்பட வேண்டும். அவற்றில் இருந்து தெருவில் வீசி எறியப்படும் மாமிசக் கழிவுகள்தான் தெருநாய்கள் அதிகரிப்பதற்கு இன்னொரு காரணம்.
- மூன்றாவதாக, ஏதோ ‘ஜீவ காருண்யம்’ செய்வதாக நினைத்து, தெருநாய்களுக்கு உணவிட்டு, ஆதரிப்பவா்கள் அபராதம் விதிக்கப்பட்டு எச்சரிக்கப்பட வேண்டும். அவா்களது ஜீவ காருண்யத்தால், எத்தனையோ அப்பாவி மக்கள் அவதிப்படுகிறாா்கள் என்பது அவா்களுக்குப் புரிவதில்லை.
- சட்டம்-ஒழுங்கு என்பது குற்றங்கள் குறைவதிலும், சமூக விரோதிகளின் நடமாட்டத்தைத் தடுப்பதிலும் மட்டுமே அடங்கியதல்ல. மக்கள் தெருவில் அச்சமின்றி நடமாட வேண்டும்!.
நன்றி: தினமணி (30 – 05 – 2024)