TNPSC Thervupettagam

நட்சத்திரம் உதிர்ந்தது! | மாரடோனாவின் மறைவு

November 27 , 2020 1515 days 742 0
  • சர்வதேச கால்பந்து விளையாட்டின் ஒப்பாரும் மிக்காரும் இல்லாத நட்சத்திரம் உதிர்ந்து விட்டது.
  • டியகோ மாரடோனாவின் மறைவு உலகிலுள்ள அத்தனை விளையாட்டு ரசிகர்களையும் வருத்தத்தில் ஆழ்த்தியிருக்கிறது.
  • தனது 60- ஆவது வயதில் உலகுக்கும் கால்பந்துக்கும் விடைகொடுத்து மறைந்திருக்கும் டியகோ மாரடோனா வரலாறாகி விட்டார்.
  • கால்பந்தாட்டத்தில் மாரடோனா வெறும் விளையாட்டு வீரர் மட்டுமல்ல. பந்தின் மூலம் நாடுகளுக்கிடையேயான எல்லைகளைத் தகர்த்தெறிந்து, கால்பந்தாட்டத்தை சர்வதேச விளையாட்டாக மாற்றியதில் அவருக்கு பெரும் பங்குண்டு.
  • ஆர்ஜெண்டீனாவுக்கு கால்பந்தாட்டத்தில் முகவரி ஏற்படுத்திக் கொடுத்தவர் என்பது மட்டுமல்லாமல், சர்வதேச கால்பந்தாட்ட அரங்கில் மாரடோனாவின் ரசிகர்கள், மாரடோனா ரசிகர்கள் அல்லாதவர்கள் என்று இரண்டு பிரிவினைரை உருவாக்கிய ஆளுமை அவர்.
  • வெறும் 60 ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்து மறைந்தாலும்கூட வருங்கால சந்ததியினர் "யார் அந்த மாரடோனா?' என்று கேள்வி கேட்க இடமில்லாமல், தனக்கென நிரந்தரமான புகழை அவரால் நிலைநாட்ட முடிந்தது. கால்பந்தாட்டம் உள்ள காலம் வரை மாரடோனா என்கிற பெயர் அழிக்க முடியாததாக ஒன்றிவிட்டது.
  • "கால்பந்தாட்ட சக்கரவர்த்தி' என்று அழைக்கப்பட்ட பீலே- க்கு பிறகு ரசிகர்களை மாரடோனாவைபோல வசீகரித்த இன்னொரு நட்சத்திரம் இல்லை.
  • மைதானத்தில் மாரடோனா நுழைந்தது முதல் கால்பந்தாட்ட உலகம், பீலே என்றும் மாரடோனா என்றும் இரண்டு பிரிவாகப் பிரிந்து விளையாட்டின் உன்னதத்தை எட்டியது.
  • மைதானத்தில் மாரடோனா எந்த அளவுக்குக் கட்டுப்பாடுகளுக்கு உள்பட்டு இருந்தாரோ அதற்கு எதிர்மாறாக மைதானத்துக்கு வெளியே தனது வாழ்க்கையை அமைத்துக் கொண்டார்.
  • கட்டுப்பாடுகளுக்கிடையே மைதானத்தில் பந்தை எட்டி உதைத்து கோல்களைத் தட்டியவர், மைதானத்துக்கு வெளியே சட்ட திட்டங்களை தூக்கி எறிந்து ஒரு கலகக்காரராக திகழ்ந்தாலும், அந்த நட்சத்திர வீரரை ரசிகர்கள் ஏற்றுக்கொண்டனர்.
  • 1960- இல் பியூனஸ் அயர்ஸில் மாரடோனா பிறந்தது சாதாரணமாகத்தான் இருந்தது. ஆனால் டாக்டர் அப்துல் கலாம் கூறுவதுபோல, அவரது மறைவின்போது அவர் ஒரு சரித்திரமாக மாறிவிட்டிருக்கிறார்.
  • அர்ஜெண்டீனாவின் ஜூனியர் அணியில் மாரடோனா இடம் பிடித்தது முதல் அவரை கால்பந்தாட்ட உலகம் வியந்து பார்க்கத் தொடங்கியது.
  • தனது 16- ஆவது வயதில் ஆர்ஜெண்டீனாவின் ஜூனியர் அணியில் ஹங்கேரிக்கு எதிரான போட்டியில் பங்கு பெற்றபோது, மாரடோனாவின் சர்வதேச அரங்கேற்றம் நிகழ்ந்தது.
  • அடுத்த இரண்டாண்டுகளில் ஆர்ஜெண்டீனா அணியில் இடம் பெறும் வாய்ப்பை அவரது விளையாட்டுத் திறன் ஏற்படுத்திக் கொடுத்தது.
  • 1986 உலகக் கோப்பை கால்பந்து போட்டி, மாரடோனாவை வரலாற்று நாயகனாக்கியது. இங்கிலாந்துக்கு எதிரான சர்வதேச போட்டியில் அவர் அடித்த கோல்கள், சிறந்த கால்பந்தாட்ட வீரர் என்ற பட்டத்தை வழங்கி அவரது புகழை மேலும் உயர்த்தியது.
  • டியகோ மாரடோனா ஆர்ஜெண்டீனாவுக்காக 91 சர்வதேச கால்பந்துப் போட்டிகளில் கலந்து கொண்டிருக்கிறார். அவற்றில் நான்கு உலகக் கோப்பை போட்டிகளும் அடக்கம். உலகக் கோப்பை போட்டிகளில் ஆர்ஜெண்டீனா அணியின் கேப்டனாக மிக அதிகமான போட்டிகளில் கலந்துகொண்டவர் மாரடோனா.
  • ஆர்ஜெண்டீனா அணி 16 முறை அவரது தலைமையில் சர்வதேச போட்டிகளில் கலந்து கொண்டது.
  • 1986- இல் மெக்ஸிகோவில் நடந்த உலகக் கோப்பையில் அவரது தலைமையில் மேற்கு ஜெர்மனியைத் தோற்கடித்து ஆர்ஜெண்டீனா அணி வென்றபோது ஐந்து கோல்கள் அடித்த மாரடோனா அந்த போட்டியின் நட்சத்திரமாக தேர்வு செய்யப்பட்டார்.
  •  நான்கு உலகக் கோப்பை போட்டிகளில் ஆர்ஜெண்டீனா பங்கேற்ற 21 போட்டிகளில் மாரடோனா 8 கோல்களை அடித்து சாதனை புரிந்திருக்கிறார்.
  • 1994 உலகக் கோப்பை போட்டி மாரடோனா என்கிற சந்திரனில் களங்கத்தை ஏற்படுத்தியது. போதை மருந்து பரிசோதனையில் அவர் பிடிபட்டார். அதன் பிறகு சர்வதேச போட்டிகளில் ஆர்ஜெண்டீனாவுக்காக அவர் விளையாடவில்லை. 
  • அவர் மீண்டும் உலகக் கோப்பை போட்டி மைதானத்தில் நுழைந்தது ஆர்ஜெண்டீனா அணியின் பயிற்சியாளராகத்தானே தவிர, விளையாட்டு வீரராக இடம்பெற முடியவில்லை.
  • ஒருபுறம் கால்பந்தாட்ட விளையாட்டில் வரலாற்று நாயகனாக மாறிவிட்டிருந்த மாரடோனா, போதை மருந்து பயன்பாட்டு விவாதம் எழுந்தபோதும் அதில் இடம்பெற நேர்ந்தது மிகப் பெரிய சோகம்.
  • மாரடோனாவை பற்றி கூறும்போது அவரது எதிர்வினைச் சாதனையையும் குறிப்பிட்டாக வேண்டும். உலகக் கோப்பை போட்டியில் மிக அதிகமாக தப்பாட்டம் (ஃபௌல்) ஆடிய நட்சத்திரமும் மாரடோனாதான்.
  • 186 மெக்ஸிகோ உலகக் கோப்பை போட்டியில் 53 முறை தப்பாட்டம் ஆடியவர் அவர். மாரடோனாவின் காலத்தில் இருந்தது போலல்லாமல், இன்றைய கால்பந்தாட்ட மைதானமும் விளையாட்டும் தொழில்நுட்பத்தால் மாறிவிட்டன. தப்பாட்டம் ஆட முடியாது.
  • 60 ஆண்டுகள் வாழ்ந்த மாரடோனாவின் வாழ்க்கையில் 21 ஆண்டுகள் சர்வதேச கால்பந்தாட்ட வீரராக கழிந்தது. வாழ்க்கையில் மட்டும்தான் மாரடோனாவுக்கு ஆட்டம் முடிந்ததன் அடையாளமாக விசில் அடிக்கப்பட்டிருக்கிறது.
  • கால்பந்தாட்ட மைதானங்களில் பந்து உருளும் காலம் வரை மாரடோனா நினைவுகூரப்படுவார்.

நன்றி :தினமணி (27-11-2020)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்