- இரண்டு நாள் அரசுமுறைப் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி நாளை வங்கதேசம் செல்ல இருக்கிறார்.
- 1971-இல் அன்றைய கிழக்கு பாகிஸ்தானில் தனி நாடு கோரி விடுதலைப் போராட்டம் தொடங்கிய நாளை நினைவுபடுத்தும் ஆண்டு விழா கொண்டாட்டத்தில் கலந்துகொள்ள இருக்கிறார்.
- பிரதமர் மோடி வங்கதேசத்துக்கு அரசு முறையாகப் பயணம் மேற்கொள்வது இது இரண்டாவது முறை.
- இது வங்கதேசம் உருவான பொன்விழா ஆண்டு. அதுமட்டுமல்லாமல் வங்கதேசத்தின் "தேசப்பிதா' என்று கருதப்படும் "வங்கபந்து' ஷேக் முஜிபுர் ரஹ்மானின் பிறந்த நூற்றாண்டும்கூட.
- இந்த நேரத்தில், 2020-ஆம் ஆண்டுக்கான "காந்தி அமைதி விருது' வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனாவின் தந்தை மறைந்த ஷேக் முஜிபுர் ரஹ்மானுக்கு வழங்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்திருப்பது வரவேற்புக்குரியது.
- பாகிஸ்தானிலிருந்து பிரிந்து வங்கதேசம் உருவாவதற்கு வழிகோலிய "வங்கபந்து' முஜிபுர் ரஹ்மானுக்கு அன்றைய பிரதமர் இந்திரா காந்தியின் தலைமையிலான இந்திய அரசு தனது முழு ஆதரவையும் வழங்கியது வரலாற்று உண்மை.
- முஜிபுர் ரஹ்மானுக்கும் அவரது "முக்தி வாஹினி' விடுதலைப் படையினருக்கும் அனைத்துவித உதவிகளையும் இந்தியா வழங்கியது.
- இந்தியாவின் அண்டை நாடுகளில் மிக நெருக்கமான உறவை வைத்துக் கொண்டிருக்கும் நாடுகளாக பூடானும், வங்கதேசமும் இருந்து வருகின்றன. இந்தியாவின் அண்டை நாட்டுக் கொள்கையில் மட்டுமல்லாமல் கிழக்கு நோக்கிய பார்வை கொள்கையிலும் வங்கதேசம் முக்கியத்துவம் பெறுகிறது.
- இரு நாடுகளுக்குமிடையே சில நீண்ட நாள் பிரச்னைகள் தொடர்கின்றன. அதில் மிக முக்கியமான பிரச்னை தீஸ்தா நதிநீர் பங்கீடு. வங்கதேசத்திலிருந்து இந்தியாவுக்கு ஊடுருவும் அகதிகள் பிரச்னையும், வங்கதேசத்தில் முகாம் அமைத்துக்கொண்டு இந்திய ரூபாயின் போலிச் செலாவணிகளை விநியோகம் செய்து, இந்தியப் பொருளாதாரத்தை தடம்புரள முனையும் தீவிரவாதிகள் பிரச்னையும் ஏனைய இரண்டு பிரச்னைகள்.
- அகதிகள் ஊடுருவல் பிரச்னையைத் தடுக்கும் விதத்தில் கொண்டுவரப்பட்டதுதான் குடியுரிமைத் திருத்தச் சட்டம்.
- தேசிய குடிமக்கள் பதிவேடும்கூட சட்ட விரோதமாக அனுமதியின்றி நுழையும் பாகிஸ்தானிய, வங்கதேச ஊடுருவல்களை களையெடுக்கும் முயற்சிதான்.
- இவை குறித்து வங்கதேசத்துக்கு இந்திய அரசின்மீது அதிருப்தி உண்டு. ஆனால், பிரதமர் மோடியின் விஜயத்தில் இந்தப் பிரச்னைகள் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படாது என்றுதான் தோன்றுகிறது.
- ஒருபுறம் பிரச்னைகள் இருந்தாலும்கூட, இன்னொரு புறம் இரு நாடுகளுக்குமிடையேயான வர்த்தக உறவும், ஏனைய பிரச்னைகளில் கூட்டுறவும் எந்தவிதத் தடங்கலும் இல்லாமல் சுமுகமாகத் தொடர்கின்றன.
- கொவைட்-19 கொள்ளை நோய்த்தொற்று தடுப்பில் வங்கதேசத்துக்கு அனைத்து உதவிகளையும் இந்தியா வழங்கி வருகிறது.
- "தடுப்பூசி நட்புறவு' கொள்கையின் அடிப்படையில் வங்கதேசத்துக்கு தடுப்பூசிகள் வழங்கியதை அவர்கள் நன்றியுடன் அங்கீகரிக்கிறார்கள்.
- இரு நாடுகளுக்குமிடையேயான நெருக்கத்தை உறுதிப்படுத்தும் வகையில் சில நடவடிக்கைகளை இந்தியா சமீபத்தில் முன்னெடுத்திருக்கிறது.
- அதில் மிக முக்கியமானதாக இரண்டு நாடுகளுக்குமிடையேயான போக்குவரத்துத் தொடர்பை வலுப்படுத்தும் சாலைக் கட்டமைப்பைக் குறிப்பிட வேண்டும்.
நட்புறவுப் பாலம்
- சமீபத்தில் "ஃபெனி' ஆற்றுக்குக் குறுக்கே 1.9 கி.மீ. நீளமுள்ள "மைத்ரி சேது' (நட்புறவுப் பாலம்) என்கிற பாலம் ஒன்று திறக்கப்பட்டிருக்கிறது.
- திரிபுரா மாநிலத்திலுள்ள சப்ரூம் என்கிற இடத்திலிருந்து வங்கதேசத்திலுள்ள ராம்கர் நகரை இணைக்கும் இந்த நட்புறவுப் பாலம் வடகிழக்கு மாநிலங்கள் கடல் வணிகத்தை மேற்கொள்வதற்கு மிகவும் உதவியாக இருக்கும்.
- சுற்றிலும் நிலப்பகுதியால் சூழப்பட்ட வடகிழக்கு மாநிலங்கள் இறக்குமதிக்கும், ஏற்றுமதிக்கும் இப்போது கொல்கத்தா துறைமுகத்தை மட்டுமே நம்பியிருக்கும் நிலைமையை இந்தப் பாலம் அகற்றும்.
- திரிபுரா மாநில தலைநகர் அகர்தலாவிலிருந்து கொல்கத்தா துறைமுகம் 1,600 கி.மீ. தூரத்தில் இருக்கிறது.
- இனிமேல் நட்புறவு பாலத்தின் மூலம் சரக்குகளை ராம்கருக்கு எடுத்துச் சென்று அங்கிருந்து சாலை வழியாகவோ, படகுகளிலோ 82 கி.மீ.தூரத்திலுள்ள சிட்டகாங் துறைமுகத்தை அடைந்துவிட முடியும்.
- இதனால் வங்கதேசத்துடன் மட்டுமல்லாமல், வடகிழக்கு மாநிலங்கள் சர்வதேச வர்த்தகத்திலும் ஈடுபட முடியும் என்பதால் அந்தப் பகுதியின் வளர்ச்சி விரைவுபடுத்தப்படும்.
- நரேந்திர மோடி ஆட்சிக்கு வந்தது முதல் இந்திய, வங்கதேச அரசுகள் இரண்டு நாடுகளையும் இணைக்கும் பாலங்கள், சாலைகள், ரயில் பாதைகள் ஆகியவற்றில் கூடுதல் கவனம் செலுத்துகின்றன.
- இரண்டு மாதத்துக்கு முன்பு மேற்கு வங்கத்திலுள்ள ஹல்திபாரியையும், வங்கதேசத்திலுள்ள சிலாஹாட்டியையும் இணைக்கும் ரயில் தடம் மீண்டும் செயல்படத் தொடங்கியது.
- 1965 இந்திய - பாகிஸ்தான் போரின்போது அதுவரை செயல்பட்டு வந்த இதுபோன்ற பல ரயில் பாதைகள் முடக்கப்பட்டன, அகற்றப்பட்டன. அவையெல்லாம் மீண்டும் செயல்படுத்தப்பட்டு, இரு நாடுகளுக்குமிடையேயான வர்த்தகமும், போக்குவரத்தும் மீட்டெடுக்கப்பட்டிருக்கின்றன.
- வங்கதேசத்தைத் தனது நட்பு வளையத்துக்குள் இழுத்துக்கொள்ள பெருமளவில் முதலீடு செய்ய சீனா காத்திருக்கும் நிலையில், கருத்து வேறுபாடுகளுக்கு இடையிலும் இந்தியாவும், வங்கதேசமும் இணைந்து செயல்படுவதை பிரதமரின் வங்கதேச விஜயம் உறுதிப்படுத்தும் என்று எதிர்பார்க்கலாம்.
நன்றி: தினமணி (24 – 03 - 2021)