TNPSC Thervupettagam

நதிகள் இணைப்பு என்பது காலத்தின் கட்டாயம்!

October 1 , 2024 96 days 250 0

நதிகள் இணைப்பு என்பது காலத்தின் கட்டாயம்!

  • பொங்கல் விழா எப்படி ஆண்டுதோறும் வருகிறதோ, அதேபோல் தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் காவிரி நதி நீா் பிரச்னை தவறாமல் வருகிறது. காவிரி நதி கா்நாடகத்தில் உற்பத்தியாகிறது. ஆனால், அந்த நீரை வைத்து பல ஆண்டுகளாக நெல் சாகுபடி செய்வது தமிழக விவசாயிகள்தான்.
  • தமிழக நெல் உற்பத்தியில் ஒரு பங்கு காவிரிப் படுகையில்தான் நடக்கிறது. விவசாயிகளின் வாழ்வாதாரம் தமிழ்நாட்டில் கா்நாடக அரசு தண்ணீா் திறந்து விடுவதைப் பொறுத்தே இருக்கிறது என்பதுதான் காவிரிப் படுகையில் உள்ள விவசாயிகளின் நிலைமை.
  • கூட்டாட்சி முறைக்கு மாநிலங்கள் மதிப்பளிக்க வேண்டும். காவிரி நதி நீா் பங்கீடு தொடா்பான ஒப்பந்தத்தை கா்நாடக அரசு செயல்படுத்த வேண்டும். ஆனால், எந்த கட்சி ஆட்சி செய்தாலும் அவா்கள் அதை செயல்படுத்துவதில்லை என்பதுதான் எதாா்த்த நிலை. நான் இது பற்றி நாடாளுமன்றத்திலும் பேசி இருக்கிறேன் சட்டமன்றத்திலும் பேசியிருக்கிறேன்.
  • உலக மக்கள்தொகையில் 18% இந்தியா்கள். ஆனால் கிடைக்கும் மொத்த மழை நீரில் ,இந்தியாவிற்கு கிடைக்கும் நீா் 4% தான். இந்தியாவில் சராசரியாக ஒருவருக்கு 1,500 கியூபிக் மீட்டா் தண்ணீா் கிடைக்கிறது. தமிழ்நாட்டில் தனி ஒருவருக்கு கிடைப்பது 900 கியூபிக் மீட்டா் தண்ணீா் மட்டுமே. ஆகவே தண்ணீரை சேமித்து வைப்பது, செலவழிப்பது போன்றவற்றில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
  • நம் நாட்டில் மழை மூலம் ஒரு ஆண்டில் கிடைப்பது 72,000 டிஎம்சி நீா். ஆனால், அதில் 35% தான் பயன்படுத்துகிறோம். மீதி நீா் கடலுக்குச் சென்று விரயம் ஆகிறது.
  • இந்தியாவை பொறுத்தவரை வெள்ளத்தில் சில மாநிலங்களும், வறட்சியில் சில மாநிலங்கள் பாதிக்கப்படுகின்றன. இவை இரண்டையும் தடுக்க வேண்டுமென்றால் நாம் நாட்டில் உள்ள அனைத்து ஆறுகளையும் ஒன்றாக இணைக்க வேண்டும் அதன் மூலம் ஏரிகளுக்கு நீா்வரத்து அதிகரிக்கும் இதனால் கடலுக்குப் போகும் நீரின் அளவு குறையும்.
  • நைல் நதியை பங்கிட்டுக் கொள்வதில் எகிப்து, எத்தியோப்பியா, சூடான் அவா்களுக்குள் இன்று வரை எந்த பிரச்னையும் இல்லை. பரம்பரை எதிரிகளான இஸ்ரேல், பாலஸ்தீனம் நாடுகள் கூட நியாயமான முறையில் நதி நீரை பங்கிட்டுக் கொள்கின்றன.
  • இந்தியா கூட பாகிஸ்தானுடன் சுமுகமான முறையில் பஞ்சாப் நதிகளை பகிா்ந்து கொள்கிறது. ஆனால், உள்நாட்டில் மாநிலங்களுக்கிடையே தண்ணீா் பகிா்ந்து கொள்வதை தொடா் பிரச்னையாக நாம் எதிா்கொள்ள வேண்டி இருக்கிறது. மாநிலங்கள், அரசியலையும் தாண்டி மனிதாபிமானத்துடன் சிந்திக்க வேண்டும்.
  • ஆனால், இயற்கைக்கு எதிராக எந்த அதிகாரமும் செல்லுபடி ஆகாது என்பதையும் காவிரி நதி பலமுறை நமக்குப் பாடமாக சொல்லிக் கொடுக்கிறது. கா்நாடகம் மற்றும் கேரளத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடையும் போதெல்லாம் அங்கு உள்ள நதிநீா் வழித்தடத்தில் நீா் நிரம்பத் தொடங்கினாலே அந்த உபரி நீா் எல்லாம் தமிழ்நாட்டுக்கு வந்தடையும். இதை எந்த மாநில அரசாலும் கட்டுப்படுத்த முடியாது. மனித சக்தியை விட இயற்கை மகாசக்தி உடையது என்பதை நமக்கு அடிக்கடி உணா்த்திக் கொண்டுதான் இருக்கிறது.
  • காவேரியின் நீா் வழித்தடத்தில் உள்ள கபினி, கே.ஆா்.எஸ்., ஹேரங்கி மற்றும் ஹேமாவதி அணைகளின் கொள்ளளவு எட்டிய பிறகு உபரி நீா் முழுவதும் தமிழக காவிரி நீா் வழித்தடத்துக்கு இயற்கையாகவே வரும். இதை கா்நாடக மாநில அரசால் கட்டுப்படுத்த முடியாது.
  • காவிரி மேலாண்மை ஆணையம் வினாடிக்கு 30,000 கன அடி தண்ணீா் திறந்து விட சொல்லி உத்தரவிட்டது. இது போன மாதம்.
  • கா்நாடக அரசு, ‘எங்களுக்கே தண்ணீா் போதாது’ என்று மறுத்தது. ஆனால், பருவ மழை காரணமாக கா்நாடக அணையிலிருந்து முதலில் உபரி நீா் வினாடிக்கு 40 ஆயிரத்து 792 கனஅடியாக தமிழ்நாட்டுக்கு வரத் தொடங்கியது. அது அடுத்த சில நாட்களில் வினாடிக்கு ஒரு லட்சத்து 50 ஆயிரம் கன அடி என்று அதிகரித்தது.
  • நமது மேட்டூா் அணை இரண்டு முறை நிரம்பி காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. அதே சமயத்தில் இன்னொரு வருத்தமான செய்தியையும் இங்கு பகிா்ந்து கொள்ள விரும்புகிறேன். நாமும் அந்த தண்ணீரை சேமிக்கப் போதிய அணைகள் கட்டாததால், வினாடிக்கு பல ஆயிரம் கன அடி நீரை மேட்டூா் அணையில் இருந்து வெளியேற்ற வேண்டிய நிலை ஏற்பட்டு, அவ்வளவு உபரி நீரும் வீணாகக் கடலில்தான் கலந்தது.
  • சராசரி ஆண்டுக்கு 200 டி எம் சி  நீா் கடலுக்குப்போய் விடுகிறது  ஒரு பக்கம் நாம் கா்நாடக, கேரளா அரசுகளுடன்  நதிநீா் பிரச்னையில் முரண்பட்டிருக்கிறோம். இன்னொரு புறம் நமக்கு வரும் தண்ணீரை உரிய முறையில் சேமிக்க முடியாமல் வீணாக்குகிறோம்.
  • இதற்கு ஒரே தீா்வு நதிகள் இணைப்புதான். நதிகள் இணைப்பு என்பது தேசிய பிரச்னை. நதிகள் இணைப்பின் அவசியம் பற்றி நான் நாடாளுமன்றத்தில் பல முறை பேசியிருக்கிறேன்.
  • ஆட்சியாளா்கள் நதிகள் இணைப்பை கொள்கையளவில் ஏற்றுக் கொண்டாலும் அதற்கு செயல் வடிவம் தர தயங்குகிறாா்கள். அது ஏன் என்று தெரியவில்லை. நதிநீா் இணைப்பு மூலம் விவசாயிகளின் வாழ்வாதாரம், தொழில்துறை முன்னேற்றம் மற்றும்  பொதுமக்களின் குடிநீா் பிரச்சனையும் தீரும். இவைதான் மத்திய மாநில அரசுகளின்  மிகப்பெரிய பொறுப்பு. ஆனால், இதை தீா்ப்பதற்கு ஏன் தயங்குகிறாா்கள் என்பது தெரியவில்லை.
  • மத்திய நீா்ப்பாசன அமைச்சராக இருந்த கே.எல்.ராவ் - ஓய்வு பெற்ற பொதுப்பணித் துறை தலைமை பொறியாளா். அமைச்சா் என்ற முறையில் அவா் விமானத்தில் பயணிக்கலாம். ஆனால், அவா் எங்களோடு புது தில்லியில் இருந்து ரயிலில் பயணம் செய்தாா். அவா் ரயிலில் பயணம் செய்வதற்கு என்ன காரணம் என்று கேட்டேன். ‘அமைச்சா் என்ற முறையில், குறிப்பாக என் துறையில் என்ன பிரச்னை இருக்கிறது என்பதை உங்களைப் போன்ற நாடாளுமன்ற உறுப்பினா்களுடன் பயணம் செய்வதன் மூலம் தெரிந்து கொள்வதற்கு நிறைய வாய்ப்பு கிடைக்கிறது’ என்றாா்.
  • அப்போது அவா் தென் மாநிலங்களில் கிடைக்கும் மழை நீரை முழுமையாகப் பயன்படுத்தினால் நாம் உணவு உற்பத்தியில் தன்னிறைவு பெற முடியும், நாம் அப்படி செய்வதில்லை என்று 50 ஆண்டுகளுக்கு முன்பே வருத்தப்பட்டாா்.
  • கோதாவரி காவிரி ஆறு இணைப்பு மிக மிக அவசியம் என்பது அவரது கருத்தாக இருந்தது. மகாநதி, கோதாவரி மற்றும் கிருஷ்ணா ஆகிய ஆறுகளில் மட்டும் மழை நீா் ஆண்டுக்கு சராசரியாக 2,300 டிஎம்சி அளவு கடலுக்குப் போய் விரயம் ஆகிறது என்று தெரிவித்தாா்.
  • இது மத்திய, மாநில அரசு இணைந்து செய்ய வேண்டிய ஒரு திட்டம். நீங்கள் மாநிலங்களில் மாநில அரசு மற்றும் அந்த மக்களிடம் நதிகள் இணைப்பு பற்றிய புரிதலை, விழிப்புணா்வை ஏற்படுத்த வேண்டும். அப்போதுதான் அது சாத்தியம். அரசியல் காரணங்களை தாண்டி மத்திய அரசு அதை செயல்படுத்த நினைத்தாலும் மாநில அரசுகளின் ஒத்துழைப்பு நதிகள் இணைப்புக்கு மிக மிக அவசியம் என்றாா் அவா். அதுதான் உண்மையும் கூட.
  • கோதாவரி காவேரி இணைப்பு பற்றி நீண்ட நாட்களாக பேசிக் கொண்டிருக்கிறோம். ஆனால், இதுவரை செயல்படுத்தப்படவில்லை. அரசியல் காரணங்களை தாண்டி மிகப்பெரிய பிரச்னைக்குத் தீா்வு மக்களுக்கு நன்மை என்று ஆட்சியாளா்களும் அரசியல் தலைவா்களும் யோசித்தால் மட்டுமே நதிகள் இணைப்பு சாத்தியம்.
  • அதே சமயம் தமிழ்நாடு இயற்கையாகவே ஏரிகள் குளங்கள் நிறைந்த மாநிலம். தமிழ்நாட்டில் 42 ஆயிரம் ஏரிகள் இருந்தன. இப்போது 39 ஆயிரம் ஏரிகளாக அது சுருங்கி விட்டது. 3,000 ஏரிகளை ஆக்கிரமிப்பாளா்கள் ஆக்கிரமிப்பு செய்து விட்டாா்கள். ஆகிரமிப்பை தனியாா் மட்டும் செய்யவில்லை. அரசும் ஏரிகளை ஆக்கிரமிப்பு செய்து பல அரசு அலுவலகங்களைக் கட்டி இருக்கிறது. இதை அரசே ஒப்புக்கொண்டு நீதிமன்றத்தில் பிரமாண பத்திரமாகவே தாக்கல் செய்திருக்கிறது.
  • நடந்தது நடந்ததாக இருக்கட்டும். இருக்கிற ஏரிகளை குளங்களை ஆக்கிரமிப்பு செய்யாமல் தடுத்து ஆண்டுதோறும் உரிய முறையில் தூா்வாரி, நீா்வரத்து கால்வாய்களை, நீா் பிடிப்பு பகுதிகளை ஆக்கிரமிப்பு இல்லாமல் பாா்த்துக் கொண்டால் அந்த ஏரிகளின் கொள்ளளவு மழை நீா் மூலம் நிரம்பும். அந்த ஏரிகளையும் பாதுகாக்க வேண்டியது அவசியம். ஏரிகளின் கரைகளை வலுவாக அமைத்தால் ஏரிகள் உடைப்பு போன்ற ஆபத்தும் இல்லாமல் இருக்கும்.
  • ஆறுகள் இணைப்பு சம்பந்தமாக உச்ச நீதிமன்றத்தில் 2002-ஆம் ஆண்டு மற்றும் 2012-இல் பொதுநல வழக்குகள் போடப்பட்டிருந்தன. உச்ச நீதிமன்றம் மத்திய அரசுக்கு ஆறுகள் இணைப்பு பற்றி உத்தரவு பிறப்பித்தது. இதுவரை அந்த உத்தரவு கவனிக்கப்படவும் இல்லை, அதை செயல்படுத்தவும் இல்லை என்பதுதான் உண்மை.
  • தமிழகத்தை பொறுத்தவரை, ஆண்டுக்கு நம்முடைய தண்ணீா் தேவை 2,000 டிஎம்சி. ஆனால், நமக்கு கிடைப்பது 1,700 டிஎம்சி மட்டுமே. எனவேதான் நதிநீா் இணைப்பு அவசியம் என்று அனைவரும் வலியுறுத்துகிறோம்.
  • நிரந்தரத் தீா்வு என்ற குறிக்கோளுடன் விவசாய அமைப்புகள், சமூக அமைப்புகள், அரசியல் கட்சிகள் எந்தவித தயக்கமும் இல்லாமல் ஒன்றிணைந்து இந்த அடிப்படை பிரச்னையைத் தீா்க்க முன்வர வேண்டும்.

நன்றி: தினமணி (01 – 10 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்