TNPSC Thervupettagam

நந்தலாலா எனும் நல்ல தண்ணீர் ஊற்று!

March 9 , 2025 3 days 29 0

நந்தலாலா எனும் நல்ல தண்ணீர் ஊற்று!

  • நாடறிந்த நல்ல பேச்சாளராக, நற்றமிழ் நாவலராக அறியப்படும் நந்தலாலா தன்னுடைய இலக்கியப் பயணத்தை கவிதையில் இருந்தே தொடங்கினார். பல நூறு கவியரங்கங்களைத் தலைமை ஏற்று நடத்தியுள்ளார். தலைமைக் கவிதையில் ஒரு முறை “என்னைவிட நல்ல கவிஞர்கள் இங்கே கவிதை பாட இருக்கிறார்கள். ஆனால், என்னைக் கவியரங்கத்தலைவர் என்றார்கள். இது சிட்டுக்குருவியின் தலையில் பட்டு முண்டாசைக் கட்டியது போல் இருக்கிறது” என்றார்.
  • நந்தலாலாவின் இயற்பெயர் நெடுஞ்செழியன். அவருடைய தந்தை சிங்காரவேலு, ஒரு ரயில்வே துறை ஊழியர். திராவிட இயக்கப் பற்றாளர். இளம் அறிவியல் பட்டப்படிப்பை முடித்துவிட்டு திருச்சி பெல் ஆலையில் பணியில் சேர்ந்த நந்தலாலா, பின்னர் இந்தியன் வங்கியில் பணியாற்றத் தொடங்கினார். தொழிற்சங்கப் பணிகளில் ஈடுபட்டதால் பழிவாங்கும் நடவடிக்கையாக அவர் பல ஊர்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். ஆனால், செல்லுமிடமெல்லாம் இலக்கியப் பணியாற்றுவதற்கான வாய்ப்பாகவே அவர் எடுத்துக் கொண்டார்.
  • அவர் திருச்சியில் பணியாற்றிய காலத்தில் தோழர்களோடு இணைந்து ‘சோலைக் குயில்கள்’ என்ற அமைப்பை நடத்தி வந்தார். ஒவ்வொரு மாதமும் ஒரு பூங்காவில் கூடி இளம் கவிஞர்கள் கவிதை வாசிப்பார்கள். பின்னர் ‘சோலைக் குயில்கள்’ என்ற பெயரில் அது ஒரு இதழாகவும் வெளிவரும். கவிஞர் மனுஷ்யபுத்திரன் உள்ளிட்ட பலரும் பங்கேற்று கவிதை வாசித்துள்ளனர்.
  • புதுக்கோட்டை மாவட்டத்தில் குடவரை கோயில்கள் நிறைந்த குன்றாண்டார் கோவிலில் பிறந்த அவர், மிக நுட்பமான கலை விமர்சகராகவும் விளங்கினார். நுண் கலைகள் குறித்துச் செறிவான தகவல்களை அறிந்திருந்த அவர், அதைப் பல்லாயிரக்கணக்கான மக்கள் கூடியுள்ள மேடைகளில்கூடச் சுவைபட விவரிப்பார். மகாகவி பாரதியாரின் மீது அவருக்கு அலாதியான பற்று. இதனால்தான் தன்னுடைய பெயரை நந்தலாலா என்றும், தன்னுடைய இரு மகள்களுக்கு பாரதி, நிவேதிதா என்றும், தன்னுடைய இல்லத்திற்குக் காணி நிலம் என்றும் பெயரிட்டிருந்தார்.
  • தந்தை பெரியாரின் மீதும் அவரது கொள்கைகள் மீதும் கடைசி வரை அழுத்தமான பிடிப்பு கொண்டிருந்தார். எவ்வளவு சுருக்கமான உரையாக இருந்தாலும் பெரியாரை மேற்கோள் காட்டாமல் அவர் தனது உரையை நிறைவு செய்ததில்லை. அது
  • மட்டுமின்றித் தமிழ்ச்சமூகத்தில் எதிர்மறை பிம்பமாகவே கட்டமைக்கப்பட்டிருந்த நடிகவேள் எம்.ஆர்.ராதா குறித்து தமிழ்ச்சமூகத்தில் புதிய மதிப்பீடுகளை முன்வைத்தார். தன்னுடைய நாடகங்களின் வழியாகவும், திரைப்படங்களின் வழியாகவும், பேச்சுகளின் வழியாகவும் பழமைவாதச் சிந்தனைகளுக்கு எதிரான கலகக்காரராக நடிகவேள் திகழ்ந்தார் என்பதை நந்தலாலா அடுக்கடுக்காக எடுத்து வைக்கும்போது நடிகவேள் மக்கள் மனதில் வேறு வகையாக உருக்கொள்ளத் தொடங்குவார். அதேபோல என்.எஸ்.கிருஷ்ணன் குறித்தும் விரிவாக மக்களிடம் எடுத்துச் சென்றுள்ளார்.
  • பட்டிமன்ற மேடைகளில் பெண்களை இழிவுபடுத்திப் பேசுவது என்பது சாதாரணமாக நடக்கிறது. ஆனால், தான் பங்கேற்கும் மேடைகளில் நந்தலாலா அதை ஒருபோதும் அனுமதிக்கமாட்டார். ஒரு பட்டிமன்றத்தில் பேசும்போது, ‘சீறும் பாம்பை நம்பலாம், சிரிக்கும் பெண்ணை நம்பாதே!’ என்று ஒரு ஆட்டோவில் எழுதியிருந்ததைச் சொல்லி, “இனி அந்த ஆட்டோக்காரர் பெண்களிடம் வாடகை கேட்கக் கூடாது. சீறும் பாம்பிடமே சில்லரை வாங்கிக் கொள்ளட்டும்” என்று சொன்னபோது மக்கள் கைதட்டி ரசித்தனர்.
  • அவர் ஒரு பேச்சாளர் மட்டுமல்ல, மிகச்சிறந்த அமைப்பாளரும்கூட! தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் தொடக்க காலம் முதல் தன்னை இணைத்துக் கொண்டு பணியாற்றிய அவர் தமுஎகசவின் திருச்சி மாவட்டச் செயலாளராக நெடுங்காலம் பணியாற்றினார். தற்போது மாநிலத் துணைத் தலைவராகச் செயல்பட்டு வந்தார். அதுமட்டுமின்றி வயல், களம், வானம் எனப் பல்வேறு இலக்கிய அமைப்புகளில் மைய அச்சாக விளங்கினார். தமிழ்நாடு அரசு இயல், இசை, நாடக மன்றத்தின் பொதுக்குழு உறுப்பினராகவும் இருந்தார்.
  • அவர் வாழ்ந்த திருச்சியில் ஓடும் அகண்ட காவிரியில் எல்லோருக்கும் இடமிருப்பதுபோல அவருடைய இதயத்திலும் எல்லா இலக்கியவாதிகளுக்கும், இலக்கிய அமைப்புகளுக்கும் இடமிருந்தது. அவர் கருத்தியல்ரீதியாக முரண்பட்ட அமைப்புகளைத் தவிர அனைத்து மார்க்சிய, பெரியாரிய, அம்பேத்கரிய மேடைகளும் அவரை விரும்பி அழைத்தன. ‘‘எனக்குத் தனிப்பட்ட முறையில் யாரும் எதிரிகளில்லை. சொந்தத்தில் எதிரி வைத்துக் கொள்கிற அளவுக்கு எனக்கு வசதி இல்லை’’ என்று ஒரு மேடையில் சுவையாகக் குறிப்பிட்டார். படைப்பாளிகளையும், இளம் பேச்சாளர்களையும் தனது தோள் மீது வைத்துக் கொண்டாடித் தீர்ப்பார்.
  • பல நூறு பக்கங்கள் கொண்ட தி.ஜானகிராமனின் நாவல்களை ஒரு சில நிமிடங்களில் மக்களுக்குச் சுவையாகச் சொல்லிவிடுகிற அபூர்வ ஆற்றல் அவருக்கு
  • இருந்தது. கு.அழகிரிசாமி, புதுமைப்பித்தன், ஜெயகாந்தன் போன்றவர்களது சிறுகதைகளை எளிய கிராம மக்களிடமும் சுவைபட அவர் சொல்வார். தன்னுடைய உரைகளில் மக்களுக்கு நேர்மையாக அவர் இருந்தார்.
  • அவருடைய முன்முயற்சியில் தொகுக்கப்பட்ட ‘நடந்தாய் வாழி திருச்சிராப்பள்ளி’ என்ற தொகுப்பு திருச்சி மாவட்ட வரலாற்று ஆவணத் தொகுப்பாக விளங்குகிறது. விகடன் மின்னிதழில் அவர் எழுதிய ‘ஊறும் வரலாறு’ என்ற தொடரில் திருச்சியைச் சேர்ந்த பல்வேறு ஆளுமைகள் குறித்து அரிய தகவல்களைத் தொகுத்து எழுதியிருந்தார். இது நூலாகவும் வெளிவந்து பல ஆயிரம் பிரதிகள் விற்பனையாகி உள்ளது.
  • பேச்சுக் கலையைப் பொழுது போக்குவதற்காக அல்லாமல் சமூகத்தைப் பழுது பார்ப்பதற்கான ஒன்றாகவே அவர் கருதினார். கவிஞர் தஞ்சை இனியவன் தனது இரங்கல் குறிப்பில், ‘பேச்சாளன் என்பவன் நல்ல தண்ணீர் கிணறு போன்றவர். இரைக்கிற பாத்திரத்தையோ, இரைக்கிற மனிதர்களையோ பார்க்காமல் எல்லோருக்கும் நல்ல தண்ணீரைச் சுரந்து தந்து கொண்டே இருக்க வேண்டும். நந்தலாலா அப்படி ஒரு நல்ல தண்ணீர் கிணறு போலவே இருந்தார்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
  • நந்தலாலா தன்னுடைய பேச்சில் அடிக்கடிக் குறிப்பிடும் வாசகம், ‘‘நான் ஒன்றை மட்டும் கூறிவிட்டுப் போக விரும்புகிறேன்’’ என்பதாகும். அவர் கூறிவிட்டுப் போய் இருப்பது ஒன்றுதான்: ‘‘ஒருவர் நல்ல பேச்சாளனாக இருக்க வேண்டுமென்றால் அவர் முதலில் நல்ல வாசகனாக இருக்க வேண்டும்’’ என்பதுதான் அது!

நன்றி: இந்து தமிழ் திசை (09 – 03 – 2025)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்