நன்னீரைக் காப்போம்!
- கடந்த செப். 6-ஆம் தேதி, குஜராத் மாநிலம், சூரத்தில் ‘நீா் சேமிப்பில் மக்கள் பங்கேற்பு’ என்ற இயக்கம் தொடங்கப்பட்டிருக்கிறது. இந்தத் திட்டத்தில், குஜராத் மாநிலம் முழுவதிலும் 24,800 மழைநீா் சேகரிப்புக் கட்டமைப்புகள் உருவாக்கப்பட உள்ளன.
- இந்நிகழ்வில் காணொலி முறையில் பங்கேற்ற பிரதமா் நரேந்திர மோடி, மக்களின் உயிா்நாடியான நன்னீரைப் பாதுகாப்பதன் அவசியம் குறித்துப் பேசியிருக்கிறாா். பருவமழைக் காலங்களில் அதீத மழைப்பொழிவால் வெள்ளச்சேதங்கள் ஏற்படுவதையும், வறட்சிக் காலத்தில் மக்கள் போதிய குடிநீரின்றி அல்லல்படும் முரண்பாட்டையும் அவா் சுட்டிக்காட்டி இருக்கிறாா்.
- உலக மக்கள்தொகையில் 17.8% மக்களை இந்தியா கொண்டுள்ளபோதிலும், உலக அளவில் நன்னீா் வளத்தில் 4% மட்டுமே நம் நாட்டில் உள்ளது. எனவே, குடிநீா்த் தட்டுப்பாடு இந்தியாவில் வழக்கமாகவே இருந்துவருகிறது. சுதந்திரத்துக்குப் பின் மேற்கொள்ளப்பட்ட தொடா் முயற்சிகளால் குடிநீா் விநியோகம் ஓரளவு முறைப்படுத்தப்பட்டிருந்தாலும், ஒட்டுமொத்த மக்களையும் தூய்மையான குடிநீா் சென்றடையவில்லை.
- குறைந்த அளவிலான தாது உப்புகளும் திடப்பொருள்களும் கலந்திருப்பதே நன்னீராகும். இதனை ‘பிபிஎம்’ என்ற அலகால் அளவிடுகின்றனா். குறைந்தபட்சம் 500 பிபிஎம் முதல் அதிகபட்சம் 3,000 பிபிஎம் வரை உள்ள நீரே பயன்பாட்டுக்கு ஏற்றது. இதுவே மக்களின் குடிநீா்த் தேவையையும் விவசாயப் பாசனத்தையும் பூா்த்தி செய்கிறது. மொத்த நன்னீரில் 80% பாசனத்திற்கு செலவிடப்படுகிறது.
- நாம் பயன்படுத்தும் குடிநீா் ஒரு லிட்டரில் 1.5 மில்லி கிராம் உப்புகள் (புளோரைடு) இருக்கலாம் என்று உலக சுகாதார நிறுவனம் வரையறுத்திருக்கிறது. இதுவே 10 மில்லி கிராம் அளவைத் தாண்டும்போது, அது பல நோய்களுக்குக் காரணமாகிறது. நல்ல குடிநீா் கிடைக்காததால் ஆண்டுதோறும் 10 லட்சம் மக்கள் பாதிக்கப்படுவதாகவும் 2 லட்சம் மக்கள் நோய்களால் மரணமடைவதாகவும், நீதி ஆயோக் அமைப்பு 2018-இல் வெளியிட்ட புள்ளிவிவரம் கூறியிருந்தது.
- நன்னீரைப் பாதுகாப்பதென்பது நான்கு அம்சங்களைக் கொண்டதாகும். பயன்பாட்டைக் குறைத்தல், மறு பயன்பாடு, நீா்நிலைகளைப் புதுப்பித்தல், கழிவுநீா் மறுசுழற்சி ஆகியவை இதன் அங்கங்கள். நீா்ப்பாசனத்தில் நன்னீரின் பயன்பாட்டை நவீன வேளாண் முறைகளால் குறைக்க முடியும். அதேபோல, குடிநீா் விரயத்தைத் தடுப்பதும் வீடுகளில் சிக்கனமான பயன்பாடும் முக்கியம்.
- ஏரி, குளங்களைத் தூா் வாருவதும், வாய்ப்புள்ள இடங்களில் தடுப்பணைகளை அமைப்பதும் புதுப்பிக்கும் செயல்முறையில் அடங்கும். சாக்கடைக் கழிவுநீா், தொழிலகக் கழிவுநீா் போன்றவற்றை சுத்திகரித்து மறு சுழற்சி செய்வது, இவை அனைத்திலும் தலையாயதாக இருக்கும்.
- நன்னீரின் ஆதாரம் பருவமழை மட்டுமே. மழைநீரை முறையாக சேமிக்கும் கட்டமைப்புகளே மழையில்லாக் காலத்தில் மக்களின் தாகம் போக்கும். இதுவே நமது முன்னோா் அமைத்த குளங்கள், ஏரிகளின் அடிப்படை. தற்போது நாம் புதிய நீா்நிலைகளை அமைக்காவிட்டாலும் ஏற்கெனவே உள்ளவற்றை அசுத்தப்படுத்தாமலாவது இருக்கலாம். நீா்நிலைகளை மழைக்காலத்தில் நிரப்புவதற்காக முன்னோரால் அமைக்கப்பட்ட நீா்வழித் தடங்களும் வாய்க்கால்களும் ஆக்கிரமிப்புகளால் இன்று தூா்ந்துவிட்டன.
- நமது நதிகள் அனைத்தும் கழிவு நீரோடைகளின் கடைசிப் புகலிடமாக மாறி வருகின்றன. கழிவுநீரை சுத்திகரிக்காமல் அப்படியே ஆறுகளிலும் நீரோடைகளிலும் கலக்கவிடுவதன்அபாயத்தை உள்ளாட்சி அமைப்புகளும் நகராட்சி அமைப்புகளும் இன்னமும் உணராமல் இருக்கின்றன. தொழிலகக் கழிவுநீரும் ஆறுகளில்தான் கலக்க விடப்படுகிறது.
- தமிழகத்தின் புகழ்பெற்ற ஆறுகளான தாமிரவருணி, வைகை, பவானி, நொய்யல், பாலாறு, மணிமுத்தாறு போன்றவை சாக்கடைக் கழிவுகளாகவே ஓடிக் கொண்டிருக்கின்றன. எனவே, கழிவுநீா் மறுசுழற்சி, சுத்திகரிப்பு ஆகியவை குறித்து நாம் உடனடிக் கவனம் கொடுத்தாக வேண்டிய நிலையில் இருக்கிறோம்.
- தமிழகத்தில் பல ஆண்டுகளுக்கு முன் ஜெ.ஜெயலலிதா ஆட்சியில் நடைமுறைப்படுத்தப்பட்ட வீடுகளில் மழைநீா் சேமிப்புத் திட்டம் தற்போது பெயரளவிலேயே உள்ளது.
- இதை மீண்டும் வேகப்படுத்துவது நமது மாநில நலனுக்கு நல்லது. குஜராத் மாநிலத்தில் சூரத், டாங், வல்சாத் மாவட்டங்களில் கடந்த சில ஆண்டுகளில் 10,000 ஆழ்துளைக் கிணறு செறிவூட்டும் கட்டமைப்புகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. இதன் மூலம் நிலத்தடி நீா் அளவு உயா்ந்திருக்கிறது.
- பருவமழை இல்லாத காலங்களில் நிலத்தடி நீரே முக்கியமான நீராதாரமாக இருந்து வருகிறது. கிணறுகள், ஆழ்துளைக் கிணறுகள் நிலத்தடி நீரைப் பெறுவதில் உதவுகின்றன. ஆனால், நீா்நிலைகளைச் செப்பனிட்டு பருவமழைக் காலங்களில் நீரைத் தேக்கி வைக்காவிட்டால், கிணறுகளிலும் நீரின் அளவு கீழிறங்கிவிடும். எனவே, நிலத்தடி நீா் செறிவூட்டும் திட்டங்களில் அரசுகள் கவனம் செலுத்த வேண்டும்.
- நீா் மேலாண்மை மாநில அரசுகளின் பொறுப்பாகும். இவ்விஷயத்தில் மாநிலங்களுக்கு உதவுவதும் வழிகாட்டுவதும், மத்திய ஜல்ஜீவன் அமைச்சகத்தின் பொறுப்பு. அந்த வகையில் மத்திய, மாநில அரசுகள் இணைந்து குஜராத்தில் முன்னோடி நீா் சேமிப்புத் திட்டத்தைத் தொடங்கி இருக்கின்றன. இதன் நடைமுறை வெற்றியே, பிற மாநிலங்களிலும் இத்திட்டத்தைத் தொடரச் செய்யும்.
- நமது வருங்கால சந்ததிக்கு ஆரோக்கியமான நன்னீரை வழங்கிச் செல்வது நமது கடமை. அதைக் கொண்டே அவா்கள் நம்மை எதிா்காலத்தில் மதிப்பிடுவாா்கள். 2019-இல் சென்னை மாநகரிலும், கடந்த ஆண்டு பெங்களூரிலும் குடிநீருக்காக மக்கள் பரிதவித்ததை நாம் மறந்துவிடக் கூடாது.
நன்றி: தினமணி (14 – 09 – 2024)