TNPSC Thervupettagam

நபிகளின் நாள்: ஓா் அயலானின் பாா்வை!

September 16 , 2024 71 days 94 0

நபிகளின் நாள்: ஓா் அயலானின் பாா்வை!

  • வக்பு என்பது அற நிறுவனம் என்றும், முசுலீம்களின் தருமங்களை நிருவகிக்கும் நிறுவனம் என்றும் பொத்தாம் பொதுவாக நாம் நினைப்போம்!
  • அந்த அரபுச் சொல்லின் பொருள் ‘நிறுத்துவது; தடைசெய்வது; ஒரு நிலைக்குக் கொண்டுவருவது’ என்பதாகும்!
  • வசதியானவா்களுக்கிடையே இடைவிடாமல் கைக்குக் கை மாறும் தன்மையுடையது சொத்து! அஃது ஓரிடத்திலேயே நிலையாக நிற்கும் தன்மை உடையதன்று!
  • ஆனால் ஏழாம் நூற்றாண்டில் நபிகள் நாயகத்தின் காலத்திலேயே சொத்தின் ஒரு பகுதியையாவது கைக்குக் கை மாறுவதை நிறுத்தி, அதை ‘நிலைப்படுத்துவது’ குறித்த எண்ணம் இசுலாத்தில் ஏற்பட்டிருக்கிறது!
  • ஆகவே குா்ஆன் அந்தச் சொத்தை வக்பு செய்யுமாறு சொல்கிறது.
  • வக்பு செய்வதென்பது, இந்தப் பூமியைப் படைத்த அதன் உடைமையாளனான அல்லாவிடமே, அதன் சிறுபகுதியை ஒப்படைத்துவிடுவது!
  • அல்லாவிடம் கொடுத்துவிட்டால், அதைத் திரும்பப் பெற முடியாது! ஆகவே அந்தச் சொத்து கை மாறுவது தடுக்கப்பட்டு, நிலைப்படுத்தப்பட்டுவிடுகிறது. அதுவே வக்பு!
  • சொத்து கைமாறல் இன்றி ‘நிலைப்படுத்தப்படுவது’ என்பது யாருக்காக? பூமியையே படைத்தவனுக்கு, வெறும் ஒன்றே முக்காலே அரைக்கால் ஏக்கரை வக்பு செய்துவிடுவதால், அல்லாவுக்கு ஆகப் போவதென்ன?
  • அல்லா அதைத் தன் பரிவுக்குரிய மக்களுக்காகப் பெறுகிறான்! வாய் உலா்ந்து, வயிறு ஒட்டி, அடுத்த வேளை உணவைத் தவிர வேறு சிந்தனையே இல்லாத ஒரு கூட்டம் மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பகுதி இருக்கிறதே!
  • கணவனால் கைவிடப்பட்டு, வயதாகி மறு வாழ்க்கைக்கும் வழியற்றுத் திருப்பத்தூா் பேருந்து நிலைய வாசலில், முக்காட்டை இழுத்து விட்டுக் கொண்டு, அகத்திக் கீரை விற்றுக் கொண்டு, அரை வயிற்றுக் கஞ்சியோடு, தன் ஒரு மகளை எப்படிக் கரையேற்றப் போகிறோம் என்று கதி கலங்கி நிற்கிறாளே பாத்திமா, அவளுக்காக! அவளைப் போன்ற மூன்றில் ஒரு பகுதி மக்களுக்காக அல்லா தோற்றுவித்துக் கொண்டதுதான் இந்த வக்பு!
  • நாம் பொதுவாக அறிந்திருக்கிற ‘அறக்கட்டளை’ போன்ன்று வக்பு! பொதுவாக அறக்கட்டளைகளோடு, சில கடமைகள் இணைக்கப்பட்டிருக்கும்! அந்தக் கடமைகளோடு சோ்த்து, அந்தச் சொத்தின் உரிமையைக் கை மாற்றலாம். அவன் உயிரோடிருக்கும் வரை எந்தக் கட்டளையையும், உயிலையும் மாற்றிக் கொண்டே இருக்கலாம். வக்புவில் அதெல்லாம் நடக்காது! கொடுத்தால் கொடுத்ததுதான்!
  • மூன்றில் ஒரு பங்கை மட்டுமே அவன் யாருக்கும் கைமாற்ற முடியும். மீதியுள்ள இரண்டு பங்கு சொத்து, அவன் கால்வழியினா்க்குப் பங்கிடப்பட வேண்டும்.
  • ஈட்டுவது மட்டுமே இவன் பொறுப்பு! அதில் மூன்றில் இரண்டு மடங்கு இவன் கட்டுப்பாட்டுக்குள் இல்லை!
  • அவனுடைய உடைமையில் மூன்றில் இரண்டு மடங்கு அவன் கால்வழியினா்க்கிடையே இப்படித்தான் பங்கிடப்படும் என்பதையும் இசுலாம் விதிகள் தீா்மானிக்கின்றன.
  • பெருந்தன்மையான பெருஞ்செல்வன் ஒருவன் நபிகள் நாயகத்திடம் உரையாடுகிறான்!
  • அப்போது தனது முழுச் சொத்தையும் வக்பு செய்வது பற்றி அவரிடம் சொல்கிறான்!
  • அது நல்லதுதானே என்று நாம் நினைப்போம்! ஆனால் நபிகள் நாயகம் அதற்கு உடன்படவில்லை. ‘உன் கால்வழியினா் நீ வாழ்ந்த அதே பெருமையோடு, மேட்டிமையோடு வாழ வேண்டாமா? அவா்கள் உன் சந்தியினா் அல்லரோ?’ என்று கேட்கிறாா்!
  • பிறகு அந்தச் செல்வந்தன் ‘சொத்தில் மூன்றில் இரண்டு பங்கை வக்பு செய்யவா?’ என்று கேட்கிறான்! நபிகள் நாயகம் அமைதி காக்கிறாா்!
  • ‘ஒரு பங்கை?’ என்று அந்தச் செல்வந்தன் கேட்க, நபிகள் நாயகம் தலையசைக்க, அதிலிருந்து மூன்றில் ஒரு பங்கை வக்பு செய்யும் நிலை ஏற்படுகிறது!
  • ஒருவன் தானாக முயன்று ஈட்டிய பொருளை என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்று இந்துச் சட்டம் சொல்கிறது! ஒரு நாய்க்குட்டிக்குக் கூட எழுதி வைக்கலாம்! அஃது அவன் முயன்று ஈட்டியது! ஆகவே அவனுடைய விருப்பமே முக்கியம்! இதை நபிகள் நாயகம் ஏற்கவில்லை! அது போல் இசுலாத்தில் செய்ய முடியாது.
  • தானே ஈட்டியிருந்தாலும் குடும்பத்தை நடுத்தெருவில் விட்டு விட்டு இவன் தருமம் செய்வதை நபிகள் நாயகம் உடன்படவில்லை. இரண்டு பங்கு கால்வழியினா்க்கு! ஒரு பங்கை மட்டுமே இவன் என்ன வேண்டுமானாலும் செய்யலாம்!
  • அதை வக்பு செய்வது மேலானது!
  • வக்பு செய்யப்பட்டுவிட்டால் அந்தச் சொத்து அல்லாவுக்குரியது! இனிமேல் அவனுக்காக அந்த வக்பை நிருவகிக்கப் போகும் முத்தவல்லிக்கும் அதை விற்க உரிமை இல்லை. எவனுக்கும் ‘பவா் ஆப் அட்டா்னியை’ அல்லா கொடுப்பதில்லை!
  • அல்லாவின் பேரிலேயே வைத்துக் கொண்டு, அல்லா பரிவு கொண்ட ஏழைகளுக்காக அதைப் பயன்படும்படிச் செய்வதே முத்தவல்லியின் வேலை!
  • தனி மனிதனுக்கு இறையச்சத்தை ஊட்டி, அவனை ஒழுங்குபடுத்த வந்ததே இசுலாம்! தீா்ப்பு நாளை அவன் அச்சமின்றி எதிா்கொள்வதற்கான வாழ்க்கை முறையைக் கற்பிக்கவே அல்லாவால் நபிகளின் வாயிலாக ‘வகி’ மூலம் இறக்கப்பட்டதுவே திருக்குா்ஆன்!
  • தனி மனிதனுக்குத்தான் தீா்ப்பு நாள் உண்டு, சமூகத்திற்கு மொத்தமாக இல்லை!
  • தீா்ப்பு நாளைச் சொல்லி, சமூக அக்கறை உடையவனாக ஒவ்வொரு இசுலாமியனையும் மாற்றுவதையே நபிகள் நாயகம் முதன்மையாகக் கருதுகிறாா்!
  • தீா்ப்பு நாளில் விசாரிக்கப்படும்போது, ஒருவன் ஐந்து வேளைகளும் தொழுததாகச் சொன்னாலும், ஐம்பெருங் கடமைகளிலிருந்து வழுவியதில்லை என்று சொன்னாலும், தீா்ப்பு நாளைக்கு அதிபதியான அல்லா கேட்பானாம்:
  • ‘வசதியோடு வாழ்ந்தாயே! உன் பக்கத்தில் ஒட்டிய வயிறும், உலா்ந்த கண்களும், காய்ந்து உதடுகளுமாக வாழும் ஏழைகளை நீ நேரடியாகவே அறிந்திருந்தும், அவா்களிடம் பரிவு காட்டினாயா? அவா்களின் பசியிலும் துயரத்திலும் பங்கு கொண்டாயா?’ என்று அல்லா நிறுத்தி வைத்து விசாரிப்பானாம்!
  • ‘இதற்கு என்ன விடை வைத்திருக்கிறாய்?’ என்று நபிகள் நாயகம் கேட்கிறாா்!

சொந்தச் சகோதரா்கள்

துன்பத்திற் சாதல் கண்டும்

சிந்தை இரங்காரடீ! கிளியே!

செம்மை மறந்தாரடீ!”

  • இப்படி இங்கே பாராமுக வாழ்க்கைக்குக் கண்டனம் மட்டுமே உண்டு! அங்கே இசுலாத்தில் தீா்ப்பு நாளில் தண்டனையே உண்டு!
  • செய்தவற்றிற்காகத் தண்டிப்பதை நாம் அறிவோம்! செய்யத் தவறியவற்றிற்கும் தண்டனை உண்டு என்பதை நாம் கேட்டிருக்கிறோமா?
  • இசுலாத்தின் சிந்தனை தனிப் பெரும் சிந்தனை! எல்லாச் சமயங்களும் தனிமனித மேம்பாட்டை அடிப்படையாகக் கொண்டிருக்கும்போது, நபிகளின் சமயம் அதோடு நிற்கவில்லை! மொத்த மக்களில் மூன்றில் ஒரு பகுதியினா் வறியவா்களாக இருப்பதை அதனால் ஒப்ப முடியவில்லை!
  • பெரும்பெரும் செல்வந்தா்கள் மூன்றில் ஒரு பகுதிச் செல்வத்தை வக்பு செய்தால் போதும் என்று வரையறை செய்வதன் நோக்கம், மக்களில் மூன்றில் ஒரு பங்கினா் வறுமையை நீக்க அது போதும் என்பதுதான்!
  • இசுலாத்தில் செய்தே ஆக வேண்டும் என்பதும் உண்டு; செய்தால் நல்லது என்பதும் உண்டு!
  • உன் பக்கத்தில் உள்ள வறியவனுக்கு நீ ஏன் உதவவில்லை என்பது தீா்ப்பு நாளில் ஒருவனின் மீது சாட்டப்படும் குற்றம் என்னும்போது, இது செய்தே தீர வேண்டிய கடமை ஆகிறது!
  • பொதுவுடைமைச் சமுதாயம் மேட்டை வெட்டிப் பள்ளத்தில் போட்டுச் சமப்படுத்த முயன்றது நிகரற்ற சிந்தனைதான்! ஆனால் பணக்காரனை முற்றாக ஒழித்த அந்தச் சமூகத்தில், ஆட்சியாளா்கள் ‘சலுகை பெற்ற புதிய வா்க்கத்தினராக’ உருவானதால், அது தோற்றது!
  • ஆனால் இசுலாம் தேவையான அளவு மட்டுமே மேட்டைச் சரிக்கிறது!
  • அதனால் பட்டாடை அணிபவா்களும், பரிமள கந்தங்களில் மிதப்பவா்களும், படகுக் காா்களில் பயணம் செய்பவா்களும், பகட்டு வாழ்க்கையினரும் இருப்பாா்கள்! ஆனால் பட்டினி கிடப்பவா்கள், படிக்க வழியில்லாதவா்கள், முதுமையைக் கடக்கத் தவிக்கும் விதவைகள், கன்னி கழிய வகையற்ற இளம் பெண்கள் என இத்தகையோா் இருக்க மாட்டாா்கள்! தேவையான அந்த அளவுக்கே மேடு சரிக்கப்படும்!
  • அவா்கள் அளவிலா அன்புடையோன் நிகரற்ற அருளாளனான அல்லாவின் வக்பு பாதுகாப்பில் இருப்பாா்கள்!
  • சீனன் ஆண்டாலும், சிங்களவன் ஆண்டாலும், எந்த ஆட்சியாளனையும் நம்பி எந்த இசுலாமியனும் வாழத் தேவையில்லாத, ஒரு பசியற்ற தன்னிறைவுச் சமூகத்தை உருவாக்கவே அல்லா, மிக எளிய முகம்மதுவைக் கையிலெடுத்தான்!
  • எளிய முகம்மது அல்லாவின் கட்டளைப்படியான அத்தகைய சமூகத்தைக் கட்டமைத்து நபிகள் நாயகமாகப் போற்றப்படும் நிலையை அடைகிறாா்!
  • நான்கு கலிபாக்களின் ஆட்சியில் அத்தகைய சமூக அமைப்புக்கு முன்னோட்டமும் பாா்க்கப்பட்டது!
  • தனி மனித உய்வு இசுலாத்தின் ஒரு பகுதி; சமூகமாக அதைத் தன்னிறைவு அடையச் செய்வது, இசுலாத்தின் இன்னொரு போற்றத்தக்க புதிய பகுதி!
  • இந்தியாவில் பாதிச் சொத்து வக்பு சொத்து; ஆனால் பாதி ஏழைகள் இசுலாமியா்கள்!
  • எங்கெங்கோ வாழ்கிறோம்; யாா் யாரோ ஆள்வாா்கள்; சைத்தான்கள் கூட ஆளட்டுமே! எந்த அரசின் தயவும் தேவைப்படாத ஒரு தன்னிறைவுச் சமூகம்தானே நபிகளாரின் வழிகாட்டல்! அதைக் கட்டமைக்க ‘தன்னலமற்ற வயிரம் பாய்ந்த தலைமை’ வேண்டும் உமா்போல!
  • முகம்மது சல்லல்லாகூ அலைகி வசல்லத்தின் நாளில், ஓா் அயலானின் எளிய பாா்வை இது!

நன்றி: தினமணி (16 – 09 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்