TNPSC Thervupettagam

நமக்காக நாம்தான் பேச வேண்டும்!

November 10 , 2024 14 days 47 0

நமக்காக நாம்தான் பேச வேண்டும்!

  • ஷிசெல் பெலிகோ 71 வயதான பிரெஞ்சு மூதாட்டி. ஒரு பெரிய நிறுவனத்தில் மேலாளராக இருந்து ஓய்வு பெற்றவர். மூவருக்குத் தாய், ஏழு குழந்தைகளுக்குப் பாட்டி. இந்த விவரங்கள் இங்கே எதற்கு? அதன் அவசியம் என்ன? ஒவ்வொரு நாளும் குறைந்தபட்சம் ஒரு வன்புணர்வு நிகழ்வாவது ஊடகங்களின் மூலம் வெளிப்படும் இந்தியாவுக்கு, பாதுகாப்பற்ற நிலையில் இருக்கும் இந்தியப் பெண்களுக்கு இது மிக அவசியமான தகவல்.

முதிய பெண்ணின் துணிவு

  • ஷிசெல் பெலிகோ தனது 50 வருடக் காதல் கணவரால் கடந்த பத்து வருடங்களாக உணவிலும் பானங்களிலும் போதை மருந்து கலக்கப்பட்டு சுய நினைவற்றவராக ஆக்கப்பட்டார். அந்த நேரத்தில் எல்லாம் அவருடைய கணவர் வேறு ஆண்களை வரவழைத்து, சுய நினைவற்ற ஷிசெல்லுடன் உடலுறவு கொள்ளச் செய்துள்ளார். அவை அனைத்தையும் வீடியோவாகப் பதிவு செய்திருக்கிறார். ஷிசெல்லின் கணவர் ஒரு வணிக வளாகத்தில் பேனா கேமராவால் மூன்று பெண்களைத் தவறாக படமெடுக்க முயன்றபோது பிடிபட்டு அதன் அடிப்படையில் அவரது வீடு சோதிக்கப்பட்டது. அப்போதுதான் தனக்கு நடந்த கொடுமை மற்றவர் களுக்கு மட்டுமல்ல, ஷிசெல்லுக்கே தெரிந்தது.
  • இந்தியப் பெண்களுக்கும் பிரான்ஸ் பெண்களுக்கும் வேறுபாடு எதுவுமில்லை. வல்லுறவால் பாதிக்கப் படும் பெண்களில் பலரும் இத்தகைய கொடுமைகளைத் திரையின் பின்னே போட்டுவிட்டு மனதுக்குள் குமைந்து சாவார்கள். ஆனால், ஷிசெல் நீதிமன்றத் திற்குச் சென்றார். அந்த விசாரணை முழுவதையும் மக்கள் அறியும்படி நீதிமன்ற வளாகத்தில் ஒலிபரப்பவும், ஊடகங்களின் மூலம் பொதுமக்களைச் சென்றடைவதற்கும் வழிவகுத்தார். அதன் மூலம் ஏராளமான பெண்களின் மனசாட்சியைத் தட்டி எழுப்பினார்.

குறையாத வன்முறை

  • 2018இல் காஷ்மீரின் கதுவாவில் எட்டு வயதுச் சிறுமி பாலியல் வன் கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுக் கொல்லப்பட்டாள். இந்த குற்றத்தில் இளவயதுச் சிறுவன் ஒருவனும் ஒரு காவல் அதிகாரியும் வேறு இருவரும் ஈடுபட்டனர். இதற்கு உடந்தையாக இருந்தவர்களிடம் சில அதிகாரிகள் லஞ்சம் பெற்றுக்கொண்டு அந்தச் சிறுமியைத் தேடுவதையும் காப்பாற்று வதையும் தடுத்துவிட்டார்கள். இதற்குஅரசியல் காரணங்களும் சொல்லப் பட்டன; ஏராளமான போராட்டங்களும் ஊர்வலங்களும் நடைபெற்றன.
  • 2020இல் 19 வயது இளம்பெண் ஒருவர் உத்தரப்பிரதேசத்தின் ஹாத்ரஸில் கூட்டு வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டார். இந்தக் கொடுமை நடந்து பத்து நாள்கள் எந்தக் குற்றவாளி யும் கைது செய்யப்படவில்லை. ஆனால், குற்றம் நடந்த இரண்டு வாரங்களில் அந்தப் பெண் இறந்ததும் குடும்பத்தினரின் கருத்தை மதிக்காமல் அவசர அவசரமாக போலீசார் தகனம் செய்தனர். இது ஊடகங் களில் பரவலாகப் பேசப்பட்டது. சமூகச் செயல் பாட்டாளர்களும் எதிர்க்கட்சியினரும் தீவிரமான போராட்டங் களை நடத்தினர்.
  • 2024இல் தேனி மாவட்டத்தில் ஒரு கிராமத்துக் கோயிலின் 70 வயதுஅர்ச்சகரால் சிறுமி ஒருவர் வல்லுற வுக்கு உள்ளாக்கப்பட்டார். மாநில அரசாங்கமே ஏற்று நடத்தும் கொல்கத்தாவின் ஆர்.ஜி.கர் மருத்துவமனையில் பணியாற்றிய பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை யால் கொடூரமாக இறந்ததும் அதை மறைக்க அரசாங்கம் மேற்கொண்ட முயற்சிகளும் பலரும் அறிந்ததே.
  • 2024 செப்டம்பரில் தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாட்டுக்கு அருகில் உள்ள பாப்பநாடு கிராமத்தில் பட்டப் பகலில் 23 வயது இளம்பெண் ஒருவர் ஆறு பேரால் கூட்டு வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டார். இந்தக் கொடு மையை வெளிப்படுத்தத் துணிந்த அவரும் அவரது குடும்பத்தினரும் காவல் நிலையத்துக்கும் மகளிர் காவல் நிலையத்துக்கும் மருத்துவமனைக்கும் அலைக்கழிக்கப்பட்டனர். 2012இல் டெல்லியின் முனிர்கா பகுதியில் ஓடும் பேருந்தில் கூட்டு வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டு இறந்த 23 வயதான நிர்பயாவால் பெண்களுக்கு எதிரான இத்தகைய குற்றங்களுக்குக் கடு மையான தண்டனைகள் சட்டபூர்வ மாக்கப்பட்டன. என்றாலும், இந்த தஞ்சைப் பெண்ணும் அவரது குடும்பத்தினரும் தேவையின்றி அலைக்கழிக்கப்பட்டனர்.

நீதியை வழங்குவதில் தாமதம்

  • பெண்களுக்கு எதிரான இத்தகைய குற்றங்கள் ஒவ்வோர் ஆண்டும் பெருகிக்கொண்டே இருக்கின்றன. இவற்றிலிருந்து பெண்களைக் காக்கும் சட்டங்கள் வலிமையானவையாக இருந்தாலும் அவை நடைமுறைப் படுத்தப்படுவதில் உள்ள பிரச்சினை களை, தாமதத்தை இதுபோன்ற சம்பவங்கள் உணர்த்துகின்றன. குற்றவாளிகளுக்கு ஆதரவாகப் பல சந்தர்ப்பங்களில் காவல்துறை இருப்பதும் அரசியல்வாதிகளின் செல்வாக்கும் நாம் அறியாதவையல்ல.
  • பெண்களுக்கு எதிரான இத்தகைய வல்லுறவுக் கொடுமையால் பாதிக்கப்படுபவர்களில் வயது பேதமே கிடையாது. சின்னஞ்சிறு குழந்தை யிலிருந்து மரணத்தின் வாயிலில் நிற்கும் மூதாட்டி வரை அவர்களுக்கு ஒன்றுதான். குற்றவாளிகளிலும் வயது பேதத்தைக் காண முடியவில்லை. ஆறு வயதுச் சிறுவனிலிருந்து 80 வயதுக்கு மேற்பட்ட கிழவர்கள் வரை இந்தக் கொடுமையைச் செய்யத் தயங்குவதில்லை. அவர்களைப் பொறுத்தவரை பெண் என்பவள் அவர்களது இச்சைக்கு உள்பட்ட பொருள் அவ்வளவே.

இயல்பாக்கப்படும் கொடுமைகள்

  • அதிகரித்துக் கொண்டிருக்கும் இத்தகைய கொடுமைகள் மக்க ளுடைய நினைவில் சில நாள்கள் இருக்கின்றன; பிறகு தேய்பிறையைப்போல மெதுவாக மறைந்துவிடுகின்றன. ஏனென்றால் இதைப் போன்ற ஏராளமான சம்பவங்கள் தினமும் செய்தித்தாள்களில் வந்துகொண்டே இருக்கின்றன. சாப்பிடுவதைப்போல, தூங்குவதைப் போல இத்தகைய கொடுமைகளும் இயல்பாகிவிடுமோ என்கிற அச்சம் ஏற்படுகிறது. பட்டப் பகலில் மக்கள் நடமாட்டம் உள்ள சாலையில் ஒரு பெண் இத்தகைய கொடுமைக்கு ஆளாகும்போது வீடியோ எடுப்பதும் ஃபேஸ்புக்கிலும் இன்ஸ்டகிராமிலும் பகிர்வதுடன் நமது மனசாட்சி உறைந்துவிடுமோ என்னும் அச்சம் நெஞ்சின் மேல் பனிப்பாளத்தை வைத்ததுபோல் நடுக்கத்தை ஏற்படுத்து கிறது. நாம் மட்டும் இத்தகைய கொடுமைகளிலிருந்து தப்பிக்க உறுதியான வழி உள்ளதா என்ன?

சிறந்த முன்னுதாரணம்

  • பெண்களுக்கு எதிரான வல்லுறவுக் கொடுமைகளுக்கு மொழி, இனம், தேசம் என்று எந்த எல்லையும் இல்லை. ஷிசெலின் நிலை இதைத்தான் உணர்த்துகிறது. 71 வயதான அவர் தனது முதுமை, பலவீனம், சமூகப் புறக்கணிப்பு எனஅனைத்தையும் புறந்தள்ளி அனைத்துப் பெண் களுக்குமான மிகச் சிறந்த உதாரணமாக நீதிமன்றப் படியேறி னார். அவரது வழக்கு விசாரணை நடந்த ஒவ்வொரு நாளும் அவரை வாழ்த்த,கரவொலி எழுப்பிப் பாராட்ட ஏராளமான பெண்கள் காத்துக் கொண்டிருந்தனர். ஷிசெல் தனதுகணவரையும் கணவரால் வரவழைக்கப் பட்டுத் தன்னை வல்லுறவு செய்த அனை வரையும் குற்றவாளிக் கூண்டில் ஏற்றியதை அவரது சுயமரியாதையின் அடையாளமாகவே பலரும் போற்று கிறார்கள்.
  • நீதிமன்றத்தில் குற்றவாளிகளின் மத்தியில்தான் ஷிசெல் அமர வைக்கப்பட்டார். குற்றவாளிகளின் வழக்கறிஞர்களால் ஷிசெல்லே அவர்களை இந்தச் செயலுக்குத் தூண்டியதாகக் குற்றம்சாட்டப்பட்டார். அருவருக்கத்தக்க அனைத்துவிதமான கேள்விகளும் அவர் முகத்தில் வீசப்பட்டன. “இத்தகைய பாதிப்புக் குள்ளான பெண்கள் ஏன் நீதிக்காகப் போராட முன்வருவதில்லை என்று இப்போது புரிகிறது” எனச் சொன்னார் ஷிசெல். இவரது போராட்டத்தின் வலிமை, உறுதி, சமூக ஊடகங்களின் தொடர் பரப்புரை போன்றவற்றால் வேறு வழியின்றி பிரான்சில் இங்கு போலவே கடுமையான சட்டங்கள் உருவாக்கப்படலாம். இந்த வழக்கு பிரான்ஸில் ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையிலான உறவு பற்றிய வெளிப்படையான விவாதத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

நமக்கு நாமே

  • நம் நாட்டிலும் பெண்கள் மீது நடத்தப்படும் இத்தகைய குற்றங்கள் நாள்தோறும் பெருகிக் கொண்டே இருக்கின்றன. நாமும் கண்டன ஆர்ப்பாட்டங்கள், மெழுகுவத்தி ஊர்வலங்கள் நடத்துகிறோம். அது போதவில்லை என்பதை அதிகரித்துக் கொண்டிருக்கும் இந்தக் குற்றங்கள் நமக்கு உணர்த்தவில்லையா? நமக்குப் பசித்தால் நாம்தானே சாப்பிடுகிறோம்? அதுபோல் நமது பிரச்சினைகளுக்கு வலிமையான தீர்வு காணப் பெண்களாகிய நாம்தானே முதலில் களம் இறங்க வேண்டும். பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நமது உறுதியான ஆதரவை நம்முடைய இடைவிடாத போராட்டங்கள் மூலம் உணர்த்த வேண்டும். பாதிக்கப்பட்ட பெண்ணைக் குற்றவாளி ஆக்காமல் பாதிப்பு ஏற்படுத்தியவரை உண்மை யான குற்றவாளியாக விசாரணைக்கு உட்படுத்த வேண்டும். பாதிக்கப்பட்ட பெண்ணுக்கான நிவாரணங்களில் திருப்தி அடையாமல், அவரது வாழ்க்கைத் தரம் உயரக் குரல் கொடுக்க வேண்டும். பெண்ணை இச்சைப் பொருளாக மட்டுமே பார்க்கும் ஆண் களின் மீது நாம் தொடர்ந்து தொடுக்கும் கேள்விகளும் விசாரணைகளும் அவர்களுக்கானவை மட்டுமல்ல; இந்தச் சமூகத்தின் அனைத்து ஆண் களுக்குமானவை என்பது தொடர்ந்து உறுதிப்படுத்தப்பட வேண்டும்.

நன்றி: இந்து தமிழ் திசை (10 – 11 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்