TNPSC Thervupettagam

நம் வாக்குகள் பத்திரமா

April 13 , 2021 1381 days 588 0
  • நாம் பதிவுசெய்த வாக்குகள் பத்திரமாகத்தான் இருக்கின்றனவா? வாக்குப் பதிவுக்கும் வாக்கு எண்ணிக்கைக்கும் இடையே கிட்டத்தட்ட ஒரு மாத காலம் இடைவெளி இருக்கும் இந்தத் தேர்தலில் இந்த சந்தேகத்தைப் பலரும் எழுப்புவதைக் கேட்க முடிகிறது.
  • வாக்குகளைப் பாதுகாக்கும் பாதுகாப்பு அறை (ஸ்ட்ராங்க் ரூம்) நடைமுறைகளை அறிந்தவர்கள் இப்படி ஒரு கேள்வியை அவ்வளவு சீக்கிரம் எழுப்ப மாட்டார்கள்.
  • தற்போது வாக்கு இயந்திரங்கள் அனைத்தும் வாக்கு எண்ணும் மையங்களில் மூன்று கட்டப் பாதுகாப்பில் வைக்கப்பட்டிருக்கின்றன.
  • பாதுகாப்பு அறைக்கு வெளியே துணை ராணுவப் படை வீரர்கள், அதற்கும் அடுத்தபடியாகக் கட்டிடம் முழுவதும் ஆயுதப்படைக் காவலர்கள், கட்டிடத்துக்கு வெளியே காவல் துறையினர் என்று மூன்றடுக்குப் பாதுகாப்பில் நமது வாக்குகள் பத்திரமாக இருக்கின்றன.
  • இப்படிப் பாதுகாப்பதற்கான தேர்தல் ஆணையத்தின் முக்கியமான நடவடிக்கைகளில் ஒன்று, வாக்கு இயந்திரங்களுக்கான பாதுகாப்பு அறை.

ஸ்ட்ராங்க் ரூம்

  • பொதுவாக, ‘ஸ்ட்ராங்க் ரூம்’ என்பது மதிப்பு மிகுந்த பொருட்களைப் பாதுகாப்பதற்காக வலுவான சுவர்களையும் கதவுகளையும் கொண்ட சிறப்பு அறைகளைக் குறிக்கும்.
  • உதாரணமாக வங்கியின் லாக்கர் அறையைச் சொல்லலாம். உண்மையிலேயே, அப்படித்தான் நமது வாக்குகள் பாதுகாக்கப்படுகின்றனவா என்று பார்ப்போம்.
  • வாக்கு எண்ணிக்கை மையமாக அறிவிக்கப்பட்டுள்ள அருகில் உள்ள கல்லூரிகளில், வழக்கமான வகுப்பறையில்தான் அந்த இயந்திரங்கள் வைக்கப்பட்டிருக்கின்றன. (தண்ணீர், தீ போன்றவை நுழைய வாய்ப்புள்ள இடங்கள் தவிர்க்கப்படுகின்றன.)
  • கதவுகளும் கூட ஓடிவந்து உதைத்தால் திறந்துகொள்ளும் வழக்கமான வகுப்பறைக் கதவுகள்தான். அதைப் பாதுகாப்பு அறையாக்குவது, சட்டபூர்வப் பாதுகாப்புதான்.
  • இரண்டு சாவிகளைப் பயன்படுத்தித் திறக்கும் விசேஷப் பூட்டால் அறையைப் பூட்டி, அந்தப் பூட்டுக்கு சீல் வைக்கப்படுகிறது. ஒரு சாவி தேர்தல் அலுவலரிடமும், மற்றொரு சாவி அந்தந்தத் தொகுதிக்குரிய  உதவி தேர்தல் அலுவலரின் பொறுப்பிலும் இருக்கும்.
  • கதவு சாத்தப்பட்டுள்ள இடத்தில் வேட்பாளர்கள் அல்லது அவர்களது தலைமை முகவரின் (பவர் ஏஜென்ட்) கையெழுத்திட்ட படிவம் ஒட்டப்பட்டிருக்கும். சீல் உடைக்கப்பட்டாலும் சிக்கல், பூட்டைத் திறந்தாலும் சிக்கல், அந்தத் தாள் கிழிந்தாலும் சிக்கல்.
  • எனவே, அந்தச் சாதாரணக் கதவைத் திறந்து உள்ளே நுழைவது அசாத்தியமானது.
  • இந்த அறைக்குப் பக்கத்திலேயே இன்னொரு அறையில் பாதுகாப்பு அறைகளில் வாக்கு இயந்திரங்களுடன் தேர்தல் தொடர்பான அனைத்து ஆவணங்களும் பாதுகாக்கப்படும்.
  • அதாவது, தேர்தலின்போது ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் தேர்தல் அலுவலர்கள் பயன்படுத்திய வாக்காளர் பட்டியல், வாக்களித்தோர் பட்டியல் உள்ளிட்ட அனைத்து விவரங்களும் இங்கே இருக்கும்.
  • எப்படி வாக்குப் பதிவு இயந்திரங்கள் பாதுகாக்கப்படுகின்றனவோ, அதே பாதுகாப்பு இதற்கும் உண்டு. வாக்கு எண்ணிக்கையின்போது, எங்கள் வாக்குச்சாவடியில் பதிவான வாக்குகள் 342; ஆனால், இந்த இயந்திரத்தில் 300 வாக்குகள்தான் இருப்பதாகக் காட்டுகிறது என்று ஒரு முகவர் புகார் கூறினால், ஒப்பிட்டுப் பார்த்து எது உண்மை என்று கண்டறிய இந்த ஆவணங்களே உதவும் என்பதால்தான் இவ்வளவு பாதுகாப்பு.
  • பாதுகாப்பு அறையிலிருந்து அதன் அருகிலுள்ள வாக்கு எண்ணும் மையங்களுக்கு வாக்கு இயந்திரங்களை எடுத்துச்செல்லும்போதும் கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள் உண்டு.
  • ஒருவேளை, வாக்கு எண்ணும் மையங்கள் தொலைவில் இருந்தாலும், அதே விதமான பாதுகாப்பு நடைமுறைகள் பின்பற்றப்படும். பாதுகாப்பு அறையிலிருந்து வாக்கு எண்ணும் மையங்கள் வரை, வாக்கு இயந்திரங்கள் எடுத்துச்செல்லப்படும் வழியெங்கும் கூடுதல் சிசிடிவி கேமராக்கள் நிறுவப்பட்டு, தொடர் கண்காணிப்பு உறுதிசெய்யப்படுகிறது.

வாசலில் விழி வைத்து

  • என்னதான் பாதுகாப்புப் படையினர் கண்கொத்திப் பாம்பாகக் கண்காணித்தாலும், வேட்பாளர்களின் முகவர்களுக்கும் இந்தக் கண்காணிப்பில் பங்குண்டு. இதற்கென ஒவ்வொரு வேட்பாளரும் மூன்று முகவர்களை நியமிக்கிறார்கள்.
  • அந்த மூவரும் சுழற்சி முறையில் சென்று கண்காணிப்பார்கள். பாதுகாப்பு அறையைப் பார்க்கும் தொலைவில் அவர்கள் அனுமதிக்கப்படுவார்கள். அவ்வாறு அவர்கள் கண்காணிக்கும் இடத்தில் அவர்களுக்குத் தேவையான மேற்கூரை அமைப்பும் குடிநீர் வசதியும் செய்துதரப்படுகிறது.
  • ஒருவேளை, பாதுகாப்பு அறையின் வாசலை நேரடியாகப் பார்க்க முடியாத நிலை இருந்தால், அவர்களுக்கு சிசிடிவி கேமராக்கள் வழியாகக் கண்காணிக்கும் வாய்ப்பு செய்துதரப்படுகிறது.
  • அனைத்து அறைகளின் வாசலிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு, கண்காணிப்பு அறையில் இருந்தபடி அனைத்து முகவர்களும் பார்ப்பதற்கு வசதி செய்யப்பட்டிருக்கிறது.
  • தவிர்க்க முடியாத காரணத்தால், பாதுகாப்பு அறையின் அருகில் யாரேனும் செல்ல வேண்டியிருந்தால் அவர்களது பெயர், நாள், நேரம் உள்ளிட்ட தகவல்களைப் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளவர்களிடம் உள்ள பதிவேட்டில் பதிவுசெய்துவிட்டே போக முடியும். வேட்பாளர்கள், அவர்களது முகவர்களுக்கு ஒரு நாளைக்கு ஒரு முறை அப்படிச் சென்று பார்வையிட அனுமதியுண்டு. தேர்தல் அதிகாரிகளும் போகலாம். ஆனால், இந்தப் பதிவேட்டில் பதிவுசெய்ய வேண்டியது கட்டாயம்.
  • பாதுகாப்பு அறையின் அருகில் கட்டுப்பாட்டு அறையொன்றும் அமைக்கப்பட்டிருக்கும். இந்தக் கட்டுப்பாட்டு அறையில், அரசிதழ் பதிவுபெற்ற அலுவலர் நிலையில் ஒருவரும் காவல் துறை அதிகாரி ஒருவரும் சுழற்சி முறையில் பொறுப்பில் இருப்பார்கள். பாதுகாப்பு அறையைச் சுற்றியுள்ள கண்காணிப்பு ஏற்பாடுகளை இவர்கள் தொடர்ந்து கவனித்துவருவார்கள்.

வாகனங்களுக்கு அனுமதியில்லை

  • பாதுகாப்பு அறைகள் அமைந்துள்ள வளாகங்களின் உள்ளே எந்தவொரு வாகனமும் செல்வதற்கு அனுமதியில்லை.
  • அதிகாரிகள், அமைச்சர்கள், அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் என யாருடைய வாகனமும் வாக்குப் பதிவு இயந்திரங்கள் பாதுகாக்கப்படும் வளாகத்தின் உள்ளே செல்வதற்கு அனுமதிக்கப்படக் கூடாது.
  • பாதுகாப்பு வளையத்தின் அடுத்தடுத்த அடுக்குகளில் வாகனங்கள் அனுமதிக்கப்படுவதற்கான எல்லை தெளிவாக வரையறுக்கப்பட்டிருக்கும். 2019 மக்களவைத் தேர்தல் முடிந்த பிறகு மதுரையில் வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டிருந்த அறைக்குள் அரசு அதிகாரி ஒருவர் அத்துமீறி நுழைந்தது அரசியல் கட்சிகளின் கடுமையான கண்டனங்களுக்கு ஆளானது நினைவிருக்கலாம்.
  • பதற்றமான சூழல் ஏற்பட்டதை அடுத்து, அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்குப் பாதுகாப்பு அறையின் ஏற்பாடுகளை உறுதிசெய்துகொள்ளும் வாய்ப்பு அளிக்கப்பட்ட பிறகே அந்தப் பிரச்சினை முடிவுக்கு வந்தது.

தேர்தல் பணி முடியவில்லை

  • வாக்குப் பெட்டிகள் பயன்படுத்தப்பட்ட காலத்திலும் சரி, தற்போது வாக்கு இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகிற காலத்திலும் சரி, அரசியல் கட்சிகள் தேர்தல் நடைமுறையின் ஒவ்வொரு கட்டத்திலும் மிகுந்த விழிப்புணர்வோடு இருக்கின்றன.
  • தேர்தல் நாளில் வாக்குப் பதிவு இயந்திரங்கள் சரியாக இயங்குகின்றனவா என்று சரிபார்ப்பதில் தொடங்குகிறது இந்தப் பணி. வாக்குப் பதிவு முடிந்து முத்திரையிடப்பட்ட வாக்கு இயந்திரங்கள் பாதுகாப்பு வாகனத்தில் ஏற்றப்படும் வரை வாக்குச்சாவடியின் வாசலிலேயே வேட்பாளர்களின் முகவர்கள் காத்துக்கிடக்கிறார்கள்.
  • வாக்கு எண்ணும் வரை பாதுகாப்பு அறைகளின் வாசலைப் பார்த்தபடி. பின்பு, வாக்கு எண்ணும் மையங்களில். பாதுகாப்பு அறைகளுக்குச் செய்யப்படுகிற ஏற்பாடும் கண்காணிப்புகளும் ஜனநாயகத்தில் ஒவ்வொரு வாக்கின் மதிப்பையும் உணர்த்துபவை.
  • பாதுகாப்பு அறைகளை அமைப்பதற்கும் அவற்றைக் கண்காணிப்பதற்கும் இவ்வாறு விரிவான வழிகாட்டும் நெறிமுறைகள் இருக்கின்றன என்றாலும், தற்போது பெரும்பாலும் அரசுக் கல்லூரிகளில் தற்காலிக அடிப்படையிலேயே பாதுகாப்பு அறைகள் நிர்மாணிக்கப்படுகின்றன.
  • ‘இனிமேல்தான் நமக்கு முக்கியமான தேர்தல் பணி இருக்கிறது’ என்றும், ‘இரட்டிப்புப் பொறுப்பு தலைக்கு மேல் இருக்கிறது’ என்றும் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் தங்கள் தொண்டர்களுக்கு விடுக்கும் எச்சரிக்கைகள் பாதுகாப்பு அறைகளின் முக்கியத்துவத்தை விளக்குவதற்குப் போதுமானவை.

நன்றி: இந்து தமிழ் திசை (13 - 04 - 2021)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்