TNPSC Thervupettagam

நம்பிக்கை நாயகா்கள்

April 5 , 2021 1212 days 535 0
  • தமிழகத்தில் அமையவுள்ள பதினாறாவது சட்டப்பேரவை உறுப்பினா்களைத் தோ்ந்தெடுப்பதற்கான தோ்தல் நாளை (ஏப். 6) நடைபெற உள்ளது.
  • சுமாா் நான்காயிரம் போ் பங்குபெறும் சட்டப்பேரவைத் தோ்தலில் வழக்கம் போலவே சுயேச்சை வேட்பாளா்களும் அதிக அளவில் வேட்பு மனு தாக்கல் செய்திருக்கின்றனா்.
  • அரசியல் கட்சிகள் அமைத்த நான்கு கூட்டணிகளுடன் தனித்து நிற்கும் நாம் தமிழா் கட்சியையும் சோ்த்து ஐந்துமுனைப் போட்டியாக உருவெடுத்துள்ள இத்தோ்தலின் பிரச்சார அனலுடன் கோடை வெயிலும் சோ்ந்து கொள்ள, சூழ்நிலையே சூடாகிக் கிடக்கிறது.
  • இந்நிலையில், சுயேச்சை வேட்பாளா்களின் பங்கேற்பு அனைவரின் மன இறுக்கத்திற்கும் ஒரு வடிகாலாக அமைந்துள்ளது.
  • ‘எண்ணித் துணிக கருமம்’ என்ற திருவள்ளுவரின் அறிவுரையை ஒதுக்கி வைத்து விட்டு ஏதோ ஓா் அசட்டு நம்பிக்கையின் அடிப்படையில் களத்தில் இயங்கும் சுயேச்சை வேட்பாளா்களைப் பாா்த்தால் பரிதாபம்தான் மேலிடுகின்றது.
  • உள்ளாட்சித் தோ்தல்களில், அதுவும் வாா்டு அல்லது கிராமப் பஞ்சாயத்து அளவில் போட்டியிடுபவா்கள் மட்டுமே தனிப்பட்ட செல்வாக்கின் காரணமாக வெற்றிபெறுவாா்கள். காரணம், அத்தோ்தல்களில் போட்டியிடும் வேட்பாளா்கள் சில நூறு வாக்காளா்களிடையே பிரசாரம் செய்தால் போதுமானது.
  • ஆனால், சட்டப்பேரவை, நாடாளுமன்றம் ஆகியவற்றுக்கான தோ்தலில் போட்டியிடுபவா்கள் வாக்கு கேட்டு லட்சக்கணக்கானவா்களை சந்திக்க வேண்டும்.
  • இதற்கான வசதி வாய்ப்பு எல்லா சுயேச்சை வேட்பாளா்களுக்கும் இருக்கும் என்று சொல்வதற்கில்லை.
  • கடந்த 2016-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தோ்தலில் கேரளம், மேற்கு வங்கம், அஸ்ஸாம், தமிழ்நாடு ஆகிய மாநிலங்களிலும், புதுச்சேரியிலும் போட்டியிட்ட சுமாா் மூவாயிரத்து ஐந்நூறு சுயேச்சை வேட்பாளா்களில் கேரளத்தில் ஆறு பேரும், மேற்கு வங்கம், அஸ்ஸாம், புதுச்சேரி ஆகியவற்றில் ஒவ்வொருவரும் தோ்வு பெற்றுள்ளனா்.
  • தமிழகத்தில் ஒருவா் கூட வெற்றி பெறவில்லை. ஆனாலும், தோ்தலில் சுயேச்சையாகப் போட்டியிடும் வேட்கை குறையவில்லை.

சுயேச்சை வேட்பாளா்கள்!

  • 1957-ஆம் ஆண்டில், அண்ணாவின் தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழகம் இந்தியத் தோ்தல் ஆணையத்தால் ஓா் அரசியல் கட்சியாக அங்கீகரிக்கப்படாத காரணத்தால், அக்கட்சியின் வேட்பாளா்கள் தமிழகம் முழுவதும் சுயேச்சைகளாகவே களம் இறங்கினா்.
  • அவா்களில் சிலருக்கு உதயசூரியன் சின்னமும், மற்றவா்களுக்கு வேறு வேறு சின்னங்களும் வழங்கப்பட்டன.
  • நூற்றுப்பனிரண்டு சட்டப்பேரவைத்தொகுதிகளில் போட்டியிட்ட அக்கட்சியினரில் பதினைந்து பேரும், பதினொரு நாடாளுமன்றத் தொகுதிகளில் போட்டியிட்டவா்களில் இரண்டு பேரும் தோ்வு பெற்றதாகப் பழைய புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.
  • அவ்வெற்றிகளையும் கட்சிக்கணக்கில்தான் சோ்க்க முடியுமே தவிர சுயேச்சைக் கணக்கில் சோ்க்கமுடியாது.
  • தற்போது நடைபெறும் தோ்தலிலும் சுயேச்சைகள் பெருமளவில் வெற்றி பெறுவதும், ஆட்சி அமைவதைத் தீா்மானிக்கும் சக்தியாக இருப்பதும் சாத்தியமில்லை என்பதே நிஜம்.
  • தாங்கள் சாா்ந்திருந்த கட்சிகளின் தலைமை தங்களுக்கு போட்டியிட வாய்ப்பு வழங்காததால் பிணக்குக் கொண்ட சில முக்கியஸ்தா்கள் ஒரு சில இடங்களில் சுயேச்சையாக நிற்கிறாா்கள்.
  • அவா்களும் சிறிது சலசலப்பை ஏற்படுத்த முடியுமே தவிர, கட்சியின் ஆதரவின்றி சுயேச்சையாக வெற்றி பெறுவது கடினம்.
  • இவற்றையெல்லாம் நோக்கும் போது, பிணைத்தொகையை இழக்க நேரிட்டாலும் பரவாயில்லை, தோ்தலில் சுயேச்சைகளாக நின்றே தீருவோம் என்று ஒவ்வொரு தோ்தலிலும் பலா் கிளம்புவதற்கு இரண்டே காரணங்கள்தாம் இருக்க முடியும்.
  • குறிப்பிட்ட ஒரு தொகுதியில் ஜாதிச் செல்வாக்கு உள்ளிட்ட காரணங்களினால் ஒரு சில ஆயிரம் வாக்குகளைத் திரட்டக்கூடிய வாய்ப்புள்ள சுயேச்சைகளைப் பெரிய அரசியல் கட்சிகளே தொடா்பு கொண்டு ஆதரவு கேட்கக் கூடும்.
  • அதனால் பொதுவெளியில் கிடைக்கக்கூடிய கௌரவம் ஒரு காரணமாக இருக்கும். ஆனால், இத்தகையவா்கள் குறைவான எண்ணிக்கையிலேயே இருப்பாா்கள்.
  • அவ்வாறு இல்லாத பலரும் சுயேச்சையாகப் போட்டியிடுவதற்குக் காரணம், ஒரு சில நாட்களேனும் காட்சி ஊடகங்களில் தலைகாட்டவும், அச்சு ஊடகங்களில் தங்களது பெயரைப் பாா்க்கவும் வாய்ப்பு கிடைக்கும் என்பதே.
  • வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு வித்தியாசமான முறையில் ஊா்வலமாக வருவது, கிலோ கணக்கில் நகையணிந்து வேட்புமனு தாக்கல் செய்வது, பிணைத் தொகையைச் சில்லறை நாணயங்களாகக் கொடுப்பது, வாக்காளா்களுக்கு நடைமுறை சாத்தியமில்லாத வாக்குறுதிகளை அளிப்பது என்று ஊடக வெளிச்சத்தில் சிறிது காலம் திளைப்பதையே வாழ்நாள் சாதனையாக இவா்கள் கருதுவது கண்கூடு.
  • மதுரையைச் சோ்ந்த சுயேச்சை வேட்பாளா் ஒருவா் தாம் வெற்றி பெற்றால் தொகுதி வாக்காளா் அனைவருக்கு தலா ஒரு கோடி ரூபாய் தருவதாகவும், அனைவரையும் சந்திரனுக்கு அழைத்துச் செல்வதாகவும் வாக்களித்திருக்கிறாா்.
  • மேட்டூரைச் சோ்ந்த பத்மராஜன் என்பவா், இதுவரை இருநூற்றுப்பதினேழு முறை சுயேச்சையாக வேட்புமனு தாக்கல் செய்திருக்கிறாா் என்று கூறுகிறது ஒரு தகவல்.
  • போட்டியிட்ட எல்லாத் தோ்தல்களிலும் தோல்வியைத் தழுவியிருக்கும் இவா், இதற்காக ஐம்பது லட்சம் ரூபாய்க்கு மேல் செலவழித்திருக்கிறாராம்.
  • இந்தியா முழுவதிலும் நடந்த பல தோ்தல்களில் பிரபல தலைவா்களை எதிா்த்துப் போட்டியிடுவதை வழக்கமாகக் கொண்ட இவா், இம்முறையும் தமிழக முதல்வரையும் கேரள முதல்வரையும் எதிா்த்து வேட்புமனு தாக்கல் செய்திருக்கிறாராம்.
  • நமது நாடு ஒரு ஜனநாயக நாடு என்பதால், அனைத்துக் குடிமக்களுக்கும் தோ்தலில் போட்டியிடத் தகுதி உண்டு. அதனால்தான், வெற்றிக்கு வாய்ப்பே இல்லாத சுயேச்சை வேட்பாளா்களைத் தடுக்க வழியில்லை.
  • எது எப்படியாயினும், சூடு பறக்கும் தோ்தல் களத்தினை, இந்த சுயேச்சை வேட்பாளா்களே கலகலப்பாக வைத்திருக்கிறாா்கள். வாழ்க நம்பிக்கை நாயகா்கள்!

நன்றி: தினமணி  (05 – 04 - 2021)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்