TNPSC Thervupettagam

நம்பிக்கையளிக்கும் மின் துறை: கொள்முதல் விலையிலும் கவனம் வேண்டும்

April 12 , 2024 276 days 205 0
  • தமிழ்நாட்டின் ஒருநாள் மின்சாரப் பயன்பாடு 430.13 மில்லியன் யூனிட் என்கிற அளவை ஏப்ரல் 2 இல் எட்டியிருக்கிறது. இதுவரை இல்லாத வகையில் அதிக அளவிலான இந்தப் பயன்பாடு, மின்தடை இல்லாத நிலையைத் தமிழ்நாடு எட்டியிருப்பதற்கான அடையாளம் என அரசு பெருமிதம் தெரிவிக்கிறது.
  • இன்னும் கூடுதலான மின்சாரத் தேவையும் நுகர்வும் ஏற்பட்டால்கூட அவற்றை வெற்றிகரமாக எதிர்கொள்ள முடியும் என்றும் நிதி - மின்சாரத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியிருக்கிறார். கோடைக்காலத் தேவைகளைக் கருத்தில்கொண்டு முன்கூட்டியே திட்டமிட்டுச் செயல்பட்டிருக்கும் மின்சாரத் துறை பாராட்டுக்கு உரியது.
  • மின்சாரத் துறையின் முழுமையான செயல்பாட்டை மக்கள் எதிர்நோக்கும் தருணம் இது. கோடைக்காலத்தில் வெயிலின் தாக்கம் காரணமாக நகரங்களில் மட்டுமல்லாமல், சிற்றூர்களிலும் குளிரூட்டிகளின் பயன்பாடு அதிகரிக்கக்கூடிய சூழலில் மின்சாரப் பயன்பாடும் அதிகரிக்கிறது.
  • மின்சாரம் போதுமான இருப்பு இல்லை எனில், மின் தடை ஏற்படுவதற்கான சாத்தியம் அதிகம். வழக்கமான பள்ளி, கல்லூரித் தேர்வுகளுடன், இந்தக் கோடையில் மக்களவைத் தேர்தலும் நடக்க இருக்கிறது. இந்தச் சூழலில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் (டான்ஜெட்கோ) செயல்பாடு நம்பிக்கை அளிக்கிறது.
  • தென் மாநிலங்களில் தமிழ்நாட்டில்தான் மின் தேவை அதிகமாக உள்ளது. ஏப்ரலில் தமிழ்நாட்டின் மின் தேவை 21,000 மெகாவாட் எனக் கணிக்கப்பட்டுள்ளது. 2023 ஏப்ரல் 20இல் மின்சாரத் தேவை 19,387 மெகாவாட் ஆக இருந்தது; இந்த ஆண்டு மார்ச் 22இலேயே 19,409 மெகாவாட் என்ற அளவை எட்டியுள்ளது.
  • மொத்த மின்சாரத்தில் ஏறக்குறைய 30% தமிழக அரசுக்குச் சொந்தமான மின் உற்பத்தித் திட்டங்கள் வழியாகவும் 30% மத்திய அரசுக்குச் சொந்தமான மின் உற்பத்தி நிலையங்கள் வழியாகவும் கிடைக்கிறது. மீதமுள்ள 40% தனியார் நிறுவனங்களிடமிருந்து தமிழக அரசால் விலைக்கு வாங்கப்படுகிறது.
  • இது அதிக விலை நிர்ணயிக்கப்பட்டுக் கொள்முதல் செய்யப்படுவதே வாடிக்கையான நிகழ்வு. பல ஆண்டுகளாகத் தொடரும் இந்த நடைமுறை, தமிழ்நாடு மின்னுற்பத்திக் கழகத்தை நஷ்டத்தில் தள்ளுவதாகவே இருக்கிறது. இந்த அணுகுமுறை மாற்றப்பட வேண்டும்.
  • 2022-2023இல் மின் உற்பத்திக் கழகத்தின் வருவாய் இழப்பு ரூ.7,825 கோடி. இது கடந்த ஐந்து ஆண்டுகளில் குறைவான தொகை என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். மின் கட்டணம் மாற்றியமைக்கப்பட்டதாலும் தமிழக அரசு, இந்நிறுவனத்தின் நஷ்டத்தைக் குறைக்க மானியம் அளித்ததாலும் வருவாய் இழப்பு குறைக்கப்பட்டது.
  • தமிழக மின் உற்பத்திக் கழகத்தில் 1,500 பொறியாளர்களுக்கான பணியிடங்கள் காலியாக இருக்கின்றன. இந்நிறுவனம், தற்போது பணியில் இருக்கும் ஊழியர்களைக் கொண்டே இயங்க முயல்கிறது. மின்மாற்றிகள் (டிரான்ஸ்பார்மர்), மின்னிழைகள், சிங்கிள் பேஸ் மீட்டர் போன்றவற்றுக்குப் பற்றாக்குறை உள்ளது.
  • மின் உற்பத்திக்குத் தேவையான பாகங்கள் பெரும்பாலும் நாட்டின் வட பகுதியிலிருந்துதான் கொள்முதல் செய்யப்படுகின்றன. இந்தச் சூழல், சுயமான மின் உற்பத்தியின் அளவைக் குறைக்கிறது.
  • ஜூன் வரைக்கும் இந்தியாவில் மிக அதிகமான வெப்பம் நிலவும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. தமிழகமும் இதனால் பாதிக்கப்படலாம். வழக்கத்தைவிட நீள்வதற்கு வாய்ப்புள்ள கோடையை எதிர்கொள்ள மின் உற்பத்திக் கழகம், மேற்கண்ட இடர்ப்பாடுகளையும் களையத் தயாராக வேண்டும்.

நன்றி: இந்து தமிழ் திசை (12 – 04 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்