- செப்டம்பர் 30ஆம் தேதியுடன் முடிவுற்ற இரண்டாவது காலாண்டுக்கான மொத்த உள்நாட்டு உற்பத்தியின் (ஜிடிபி) தற்காலிக மதிப்பீடுகளை வெளியிட்டிருக்கிறது தேசியப் புள்ளிவிவர அலுவலகம். இதன்படி, நாட்டின் உண்மையான பொருளாதார வளர்ச்சி 7.6%ஆக இருக்கும் எனக் கணிக்கப்பட்டிருக்கிறது. கடந்த காலாண்டில் இது 7.8%ஆக இருந்த நிலையில், இந்த முறை சற்றே பின்னடைவுதான். என்றாலும், ரிசர்வ் வங்கி கணித்ததைவிடவும் இது அதிகம் என்பது நம்பிக்கையளிக்கிறது.
- இந்தியப் பொருளாதாரத்தின் முக்கியமான எட்டு துறைகளின் மொத்த மதிப்புச் சேர்ப்பானது (ஜிவிஏ), இரண்டாவது காலாண்டுக்கான மதிப்பீட்டின்படி 7.4%ஆகக் கணிக்கப்பட்டிருக்கிறது. ஏப்ரல்-ஜூன் வரையிலான முதல் காலாண்டை (7.8%) ஒப்பிட இது குறைவுதான். உற்பத்தித் துறை, சுரங்கத் தொழில், கட்டுமானம் ஆகிய துறையில் ஏற்பட்டிருக்கும் சாதகமான வளர்ச்சி, பிற துறைகளில் ஏற்பட்டிருக்கும் சரிவைச் சற்றே ஈடு செய்திருக்கிறது.
- அத்துடன், இரண்டாவது காலாண்டில் மொத்த மதிப்புச் சேர்ப்பானது, தொடர்ந்து 7%க்கும் அதிகமாக இருப்பதையும், இந்த வளர்ச்சி உறுதிசெய்திருக்கிறது. ஆண்டின் ஆரம்பகட்டத்தில் சுணக்கம் கண்டிருந்த உற்பத்தித் துறை, 13.9%ஆக அதிகரித்திருக்கிறது. அதேபோல், கட்டுமானத்துறை கடந்த ஐந்து காலாண்டுகளில் அதிக வளர்ச்சி (13.3%) கண்டிருக்கிறது.
- விவசாயத் துறை, வர்த்தகம், உணவகத் தொழில், போக்குவரத்து, தொலைத்தொடர்பு உள்ளிட்டவற்றின் வளர்ச்சி முதலாம் காலாண்டை ஒப்பிட பாதியாகக் குறைந்திருக்கிறது. விவசாயம், கால்நடை வளர்ப்பு, மீன்பிடித் தொழில் போன்றவற்றில், 1.2% சரிவு ஏற்பட்டிருக்கிறது. சேவைத் துறையைப் பொறுத்தவரை, வர்த்தகம், உணவகத் தொழில், போக்குவரத்து, தொலைத்தொடர்பு ஆகியவற்றின் வளர்ச்சி, முதல் காலாண்டில் இருந்த 9.2% என்பதிலிருந்து 4.3%ஆகக் குறைந்திருக்கிறது.
- பெருந்தொற்றுக் காலத்துக்குப் பிறகான மீட்சியில் ஏற்பட்டிருக்கும் சரிவு இது. உணவு தொடங்கி கல்வி, சுகாதாரம் உள்ளிட்டவற்றுக்கான நுகர்வோரின் வாங்கும் சக்தி போதுமான அளவுக்கு வலுவடையவில்லை.
- அதேவேளையில், கடந்த ஆண்டின் இரண்டாம் காலாண்டில் ஜிடிபி 6.2%ஆக இருந்த நிலையில், தற்போதைய நிலை நம்பிக்கையளிக்கிறது. அத்துடன், இந்தக் காலாண்டில் ஜிடிபி வளர்ச்சி 6.5%ஆக இருக்கும் என ரிசர்வ் வங்கி கணித்திருந்ததைவிடவும் கூடுதல் வளர்ச்சி கிடைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
- மேலும், பொருளாதாரரீதியாக வேகமாக வளர்ந்துவரும் நாடு எனும் நிலையையும் இந்தியா தக்கவைத்துக்கொண்டிருப்பதாகப் பொருளாதார நிபுணர்கள் நம்பிக்கை தெரிவிக்கிறார்கள். மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஏற்பட்டிருக்கும் இந்த வளர்ச்சி, உலக அளவில் நிலவும் சோதனையான காலகட்டத்தில் இந்தியாவின் வலிமையைக் காட்டுவதாகப் பிரதமர் மோடி மகிழ்ச்சி தெரிவித்திருக்கிறார்.
- நம்பிக்கையை அதிகரிக்கும் இந்தப் புள்ளிவிவரங்கள் ஒருபுறம் இருக்க, இன்னும் ஏற்றம் காண வேண்டிய நிலையில் இருக்கும் பல்வேறு பிரிவினர் குறித்தும் அரசு அக்கறை காட்ட வேண்டியது அவசியம். பொதுவாகவே உள்நாட்டு உற்பத்தி மதிப்புதான் பொருளாதார வளர்ச்சியின் அடையாளம் எனக் கருதப்படுகிறது.
- ஆனால், அதையும் தாண்டி சாமானிய மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவது முக்கியம். அதிக மக்கள்தொகை கொண்ட நாடு எனும் நிலைக்கு இந்தியா வந்திருக்கும் நிலையில், இன்னமும் வேலைவாய்ப்பின்மை ஒரு முக்கியப் பிரச்சினையாக நீடிக்கிறது. இதுபோன்ற பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கான ஆக்கபூர்வ நடவடிக்கைகளை அரசு தொடங்க வேண்டும்.
நன்றி: தி இந்து (05 – 12 – 2023)