TNPSC Thervupettagam

நம்பிக்கையை விதைப்போம்

August 18 , 2022 721 days 451 0
  • கடந்த மாதம் கனியாமூரில் தனியார் பள்ளி மாணவி ஒருவர் உயிரிழந்திருக்கிறார். அந்த இறப்பு தற்கொலையா அல்லது வேறு முறையில் ஏற்பட்டதா எனும் மர்மம் இன்னும் விலகாத நிலையில், தமிழகத்தின் பல இடங்களில் மாணவ - மாணவிகள் தற்கொலை செய்து கொள்வதும் அதற்கு முயற்சி செய்வதுமான செயல்கள் தொடர்வது கவலையளிக்கிறது. மரண தண்டனையை ஆதரிப்பவர்கள் கூட தற்கொலையை ஆதரிப்பதில்லை. ஏனெனில் மரண தண்டனையை விட தற்கொலை கொடியது.
  • செய்தித்தாள்களில் தினசரி ஒரு தற்கொலை செய்தியாவது இடம்பெற்று விடுகிறது. நாளிதழைத் திருப்பி அடுத்த பக்கச் செய்திக்கு தாவுவது போல் இந்த பள்ளி, கல்லூரி மாணவர்களின் தற்கொலை செய்தியை கடந்து போக முடியவில்லை. ஏனெனில் பாதிக்கும் மேற்பட்டோர் கல்வி பயிலும் இளம் குருத்துகள்.
  • இளவயது தற்கொலைகள் இந்தியாவில்தான் அதிகம் ஏற்படுவதாக தகவல் கிடைக்கப்பெறுவது மற்றொரு அதிர்ச்சி. தற்கொலை கூட ஒரு தொற்று போல ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு எளிதில் தொற்றிக்கொள்வதாக நம்பப்படுகிறது. இது உளவியல் உண்மையும் கூட. சமீப காலங்களில் மாணவ-மாணவியரிடையே காணப்படுகின்ற இந்த எண்ணத்தை களைய வேண்டிய முக்கிய பொறுப்பு பெற்றோர்களையே சாரும்.
  • ஒரு குழந்தையை நன்முறையில் வளர்ப்பதோடு மட்டுமன்றி அந்த குழந்தை எப்படி வளர்கிறது, என்ன செய்கிறது, அதன் நட்பு வட்டத்தில் யார் யார் இருக்கிறார்கள், அவர்களின் பழக்க வழக்கங்கள் எப்படி இருக்கின்றன என்று அவ்வப்போது சரிபார்க்க வேண்டியது ஒவ்வொரு பெற்றோரின் கடமை. பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை - அவர்களுக்கு வயது ஏறினாலும் - குழந்தைகளைப் போலவே எண்ணுவார்கள். அவர்களின் கண்களுக்கு பிள்ளைகளின் வயது தெரிவதில்லை.
  • பிள்ளைகளின் பழக்கவழக்கங்கள், நட்பு வட்டத்தை கவனிக்க வேண்டிய பெற்றோர்களே பொறுப்பில் முதன்மையானவர்கள். தாய், தந்தைக்கு பிறகே குருவாகிய ஆசிரியர் வருகிறார். அவரும் முக்கியமானவர். ஆனால், ஒரே ஆசிரியர் பல வருடங்களுக்குத் தொடர்ந்து வருவதில்லை. அதனால் ஆசிரியர்களிடம் அவ்வப்போது பிள்ளைகளின் இயல்பு குறித்து கேட்டறிவது முக்கியம்.
  • தாய், தந்தை, ஆசிரியர் ஆகிய இம்மூவரும் ஒன்றிணையும் போது மட்டுமே அவர்களின் தேவைகளைத் தீர்த்து வைக்க இயலும், குறைகள் நிவர்த்தி செய்யப்பட இயலும். ஆக அவர்களுக்கு ஏற்படும் தற்கொலை எண்ணத்தை முளையிலேயே கிள்ளி எறியும் ஆற்றல் பெற்றவர்கள் இவர்களே.
  • பிள்ளைகளுக்கு, தாம் வகுத்த இலக்கு தவறும்போது தற்கொலை எண்ணம் தோன்றுவதாக உளவியலாளர்கள் தெரிவிக்கிறார்கள். சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் பெரும்பாலும் எல்லா மாணவர்களுக்கும் இருப்பது இயல்புதான். அதற்கான உழைப்பைக் கொடுக்க, திட்டம் வகுக்க தவறும்போது தோல்வியோ, ஏமாற்றமோ ஏற்படுகிறது.
  • பள்ளிக்கல்வி பொதுத்தேர்விலும் நீட் தேர்விலும் தேர்ச்சி பெற்றுவிட்டால் சாதனை என்றும் அவற்றில் தேர்ச்சி பெறாவிட்டால் வேதனை என்றும் பெருவாரியான மாணவர்கள் எண்ணுகிறார்கள். தேர்வு முடிவுகளில் தோல்வி குறித்தும் மதிப்பெண் குறைவு குறித்துமே அதிக கவலை கொள்கிறார்கள்.
  • கல்வி என்பது ஒரு கருவி. அதைக் கொண்டு மட்டுமே சாதிக்க வேண்டும் என்றோ, அதனால் மட்டுமே உயர்நிலையை அடைய முடியும் என்றோ எண்ணுதல் பெருந்தவறு. தோல்வியோ மதிப்பெண் குறைவோ ஒருவரின் வாழ்வைத் தீர்மானித்துவிட முடியாது.
  • சில பெற்றோர்கள் மதிப்பெண் குறித்தும் பிள்ளைகள் தேர்ந்தெடுத்த படிப்பு குறித்தும் எந்நேரமும் பிறரோடு ஒப்பிட்டுப் பார்த்தபடியே இருக்கிறார்கள். இது பிள்ளைகளுக்கு தாங்கமுடியாத மன உளைச்சலை ஏற்படுத்தும் என்பதனை அவர்கள் உணர்வதே இல்லை.
  • அவர்களால் என்ன முடியும், அவர்களின் தனித்திறன் என்ன என்பதைப் பெற்றோர் நன்கு அறிவர். பிள்ளைகளைக் குறை கூறுவதையோ குத்திக்காட்டுவதையோ விட்டு விட்டு ஊக்கப்படுத்தினால் அவர்கள் நாளை நல்ல நிலைமைக்கு வருவார்கள்.
  • பெற்றோர்களில் பலர் தம் பிள்ளைகள் எந்த வகுப்பில், எந்தப் பிரிவில் பயில்கிறார்கள் என சரிவர தெரிந்து கொள்ளாது இருக்கிறார்கள். தகவல் தொழில்நுட்ப வசதிகள் பெருகிப்போயுள்ள இன்றைய காலகட்டத்தில் பிள்ளைகள் மீது கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.
  • உலகம் புகழும் இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் தம் பள்ளிப்பருவத்தில் பாடங்களில் குறைந்த மதிப்பெண்களே பெற்றார். அவரின் இந்தக் குறையை பெற்றோர் பெரிதுபடுத்தியிருந்தால், விளையாட்டில் அவர் இத்தனை சிறப்பு பெற்றவராகி இருக்க மாட்டார். அவருடைய பெற்றோர் அவரை ஊக்கப்படுத்தியதால்தான் மக்கள் கொண்டாடுமளவுக்கு அவர் உயர்ந்தார்.
  • ஒரு சிலருக்குப் படிப்பு சரியாக வரவில்லை என்றாலும் படைப்பாற்றல் திறன் இருக்கும். கல்வியறிவு இல்லாமலே திரைப்பட இயக்குநராக, பாடலாசிரியராக, இசை வல்லுநராக சாதித்தவர்கள் இருக்கிறார்கள். ஏன் ஓவியராக, நடிகராக இப்படி எதில் வேண்டுமானாலும் சிறப்பிடம் பிடிக்கலாம்.
  • வாழ்க்கையில் மிகப்பெரிய வெற்றி பெற்றவர்களைப் பொறுத்தவரை, கல்வி மட்டுமே அவர்களை அந்த நிலைக்கு அழைத்துச் சென்றதா எனக் கேட்டால் நிச்சயம் இல்லை. அவர்களுடைய தனிப்பட்ட ஆர்வம், முயற்சி, பயிற்சி, அனுபவம், மனப்பக்குவம் இவைதான் அவர்களை அந்த உயரிய இடத்திற்கு கொண்டு சேர்த்திருக்கின்றன. கல்வி கற்றாலும், பொறுமை, முயற்சி, இடைவிடாத உத்வேகம் அனைத்தும் வேண்டும். இதை பிள்ளைகள் உணர்ந்தால் வாழ்க்கையில் மேல்நிலைக்கு வருவார்கள்.
  • பொதுவாக மனிதர்களுக்கு சாக வேண்டும் என்ற ஆசை இல்லை. ஆனால் பிரச்னைகளைக் கண்டு அஞ்சி அதற்கு தீர்வு காண இயலாது தடுமாறித் தடுமாறி இறுதியில் தற்கொலை முடிவுக்கு வருகிறார்கள். வாழ்க்கையில் எதை நோக்கி நாம் பயணிக்கிறோம் என்னும் தெளிவம் அதை எவ்வாறு அடைவது என்னும் வழிமுறையும் மிகவும் முக்கியம்.
  • சிலர் அவற்றைத் தெளிவாகத் தெரிந்து கொள்ளாததனால் இவ்வாறு திடீர் முடிவை நாடுகின்றனர். சவால்களைக் கண்டு அஞ்சாமல் அவற்றை எதிர்நோக்கும் திறனை வளர்த்துக்கொள்ள பிள்ளைகளை, பெற்றோர் பயிற்றுவிக்க வேண்டும்.
  • "தற்கொலை என்பது ஒருவரின் தனிப்பட்ட செயல். அதைப் புரிந்து கொள்ள முடியாது' என்கிறார் உளவியல் மருத்துவர் கே. ரெட்பில்டு ஜேமிசன். நம் பிள்ளைகளை இறை சிந்தனையுடன் வளர்ப்பது இதுபோன்ற தற்கொலை எண்ணங்கள் அவர்களை ஆக்கிரமிக்காமல் இருக்க உதவும் என்று ஆன்மிகவாதிகள் கூறுகின்றனர்.
  • "அரிது அரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது' என்கிறார் ஒளவையார். அப்படி அரிதாய் பிறந்த நாம் அற்பத்தனமாய் விபரீதமான முடிவுகளை எடுப்பது எவ்வகையிலும் நியாயமில்லை. பிள்ளைகள் தற்கொலை செய்து கொள்வது என்பது, தம் கையால் தாமே பெற்றோருக்கு விஷம் அளிப்பதற்கு ஒப்பானது என்பதை அவர்கள் உணர வேண்டும்.
  • மன இறுக்கம், மனப்புழுக்கம், மனஉளைச்சல் என விதவிதமான அவதிகள் அனைவருக்கும் வெவ்வேறு தருணங்களில் ஏற்படவே செய்கின்றன. இவை அனைத்தையும் கடந்துதான் முன்னேறிச் செல்ல வேண்டியுள்ளது. தற்கொலை செய்து கொண்டால் பிரச்னை முடிந்து போகும் என்ற எண்ணம் பலருக்கும் பல நேரங்களில் ஏற்படத்தான் செய்யும். இதை பல பிரபலங்களும், சக்திவாய்ந்த மனிதர்களும் பதிவு செய்திருக்கிறார்கள்.
  • வாழ்க்கையில் தனக்கு ஏற்பட்ட மிகப்பெரிய இழப்பால் தற்கொலை செய்து கொள்ளலாம் என முடிவு செய்த தருணத்தில், "மரத்த வச்சவன் தண்ணி ஊத்துவான் மனச பாத்துதான் வாழ்வ மாத்துவான்' என்று தொடங்கும் திரைப்படப் பாடலைக் கேட்டு தன் முடிவை மாற்றிக் கொண்டதாக, பெரிய நிறுவனம் ஒன்றின் உரிமையாளர் அண்மையில் தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் கூறினார்.
  • தற்கொலை என்பது அந்த நேரத்தில் எடுத்துவிடும் திடீர் முடிவுதான். உயிரின் மதிப்பு தெரியாமல் ஆடும் விபரீத விளையாட்டு. அதனால், நம் அருகில், நமக்குத் தெரிந்தவர்கள் மன இறுக்கத்துடன், விரக்தியான மனநிலையில் உழல்வது தெரிந்தால் அவர்களிடம் அன்பான, ஆறுதலான, தைரியமூட்டும் வார்த்தைகளைக் கூறுவோம். ஏனெனில், நம்மிடமிருந்து வெளிப்படும் ஓரிரு ஆறுதலான வார்த்தைகள் கூட ஓர் உயிரைக் காப்பாற்றக்கூடும்.
  • தேர்வில் ஏற்பட்ட தோல்வியால் ஒரு மாணவன் தற்கொலை செய்துகொள்கிறான் எனும்போது அதே சூழலில் இருந்த மற்ற மாணவர்கள் ஏன் அப்படிப்பட்ட விபரீத முடிவை எடுக்கவில்லை? தற்கொலைகள் ஒரே ஒரு காரணத்தால் நிகழ்வது போலத் தோன்றும். ஆனால் உண்மை அதுவன்று.
  • ஒவ்வொரு தற்கொலை இறப்பிற்குப் பின்னும் பல்வேறு உயிரியல், உளவியல், சமூகக் காரணிகள் உண்டு. இந்த மூன்று காரணிகளும் ஒன்றோடு ஒன்று இணையும்போது ஒரு நபர் தற்கொலை முயற்சி செய்வதற்கான ஆபத்து பன்மடங்கு அதிகரிக்கிறது.
  • சில மாணவிகள் இப்படிப்பட்ட விட்டேத்தியான எண்ணத்துடன் விரக்தி மனநிலையில் உழன்றபோது நான் நம்பிக்கை தரும் வார்த்தைகளைப் பகிர்ந்து அவர்களின் மனச்சோர்வை விரட்டியிருக்கிறேன். மன அழுத்தம் நீங்கி, அவர்கள் மகிழ்ச்சியுடன் வரும்போது நமக்கு ஏற்படும் மனநிறைவை உலகின் எந்த விலையுயர்ந்த பொருளும் நமக்குப் பெற்றுத்தராது.
  • வாழ்க்கையில் நம் நிலை உயர்வதற்குப் பொறுமையும் உழைப்பும் தேவை. அவ்வளவு எளிதானது அல்ல அது. இந்த உண்மையை இளம் பிள்ளைகளின் மனதில் விதைப்போம்; அவர்களின் எதிர்காலம் குறித்த நம்பிக்கையை உறுதி செய்வோம்!*.

நன்றி: தினமணி (18 – 08 – 2022)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்