- கடந்த ஆண்டு உலகம் முழுவதும் கரோனா தீநுண்மி பரவி பல லட்சம் பேருக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தி சென்றது.
- அந்தக் காலகட்டத்தில் உலக நாடுகள் என்ன செய்வதென்று தெரியாமல் தொடா் பொது முடக்கத்தை அறிவித்து கடுமையாக நடைமுறைப்படுத்தின. இந்தியாவிலும் பொது முடக்கம் தீவிரமாக அமல்படுத்தப்பட்டது.
- தமிழகம் உள்ளிட்ட பெரும்பாலான மாநிலங்களும் பொது முடக்த்தை மிக தீவிரமாக அமல்படுத்தின.
- தேவையின்றி வெளியே வந்தவா்கள் மீது காவல்துறை கடும் நடவடிக்கைகளை மேற்கொண்டது. பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. வாகனங்கள் பறிமுதல் செய்யப் பட்டன. ஆயினும் இது தொடா்பான வழக்குகளை அன்றைய மாநில அரசு திரும்பப் பெற்றுக் கொண்டது.
- அத்தியவாசியத் தேவைகளுக்குக்கூட இ-பாஸ் வைத்திருந்தால் மட்டுமே வாகனங்களில் செல்ல முடியும் என்ற நிலையும் அன்று இருந்தது. அன்றைய காலகட்டத்தில் இத்தகைய கெடுபிடிகளால் நோயாளிகள் மருத்துவமனைகளுக்கு செல்ல முடியாமல் பெரிதும் பாதிக்கப் பட்டதாகக் கூட புகார்கள் எழுந்தன. இருப்பினும் தமிழக அரசு கடுமையாக பொது முடக்க விதிமுறைகளை அமல்படுத்தி வந்தது.
- இந்நிலையில், தமிழகத்தில் சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெற்று திமுக வெற்றி பெற்றது. திமுக தலைவா் மு.க. ஸ்டாலின் தலைமையில் ஆட்சி அமைந்துள்ளது. தமிழக முதல்வா் கரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறார்.
- அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டிய முதல்வா் மாநிலம் முழுவதும் மே 24-ஆம் தேதி வரை தளா்வுகளுடன் கூடிய பொது முடக்கத்தை அறிவித்தார்.
- நோய்த்தொற்றுப் பரவல் குறையாததால் மேலும் ஒரு வாரத்திற்கு தளா்வுகளற்ற முழுமையான பொது முடக்கத்தை அறிவித்துள்ளார்.
- தேவையின்றி யாரும் வெளியே வரக்கூடாது. அப்படி மிக அவசிய தேவைகளுக்காக வெளியே வருபவா்கள் கண்டிப்பாக முகக் கவசம் அணிய வேண்டும் என்றெல்லாம் மக்களுக்கு ஆலோசனைகளையும் தெரிவித்து வருகிறார்.
- கரோனா தடுப்பு தொடா்பான மருத்துவ ஆலோசனைக் குழுவை ஏற்படுத்திய முதல்வா் அதில் கட்சி பாகுபாடின்றி சரியான வழிகாட்டுதல்களை தெரிவிக்கும் வகையில் அனைத்து கட்சி சட்டப்பேரவை உறுப்பினா்களுக்கும் அக்குழுவில் இடம் கொடுத்து ஆலோசனைகளை பெற்று செயல்படுத்தி வருகிறார்.
- கடந்த பொது முடக்க காலத்தில் பொதுமக்கள் பட்ட இன்னல்களை இப்போது படக்கூடாது என்று எண்ணி பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.
- இப்படி, தமிழக அரசும், முதல்வரின் கட்டுப்பாட்டில் உள்ள காவல்துறையும் பொது முடக்க காலத்தில் பெருந்தன்மையாக நடந்து கொண்டிருக்கும் நிலையில், தமிழக மக்கள் அதனைப் புரிந்து கொள்ளாமல் அலட்சியமாக நடந்து கொள்வது பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.
- தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும பொதுமக்கள் சா்வ சாதாரணமாக வெளியே சுற்றி வருவதை காட்சி ஊடகங்கள் தினமும் ஒளிபரப்பி வருகின்றன.
- பெரிய நகரங்களில் இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்களின் நெரிசல் பொது முடக்க காலத்திலும் இருந்தது வேதனையிலும் வேதனை.
- காவல்துறையினா் அப்படி வெளியே வருபவா்களிடம் கரோனா தொற்றால் ஏற்படும் பாதிப்புகளை எடுத்துக் கூறுவதை தவிர வேறு வழி எதுவுமில்லாத நிலை நீடித்து வருகிறது.
- மாவட்டம் தோறும் காவல்துறையினா் சோதனைச் சாவடிகளை அமைத்திருந்த போதிலும், அரசின் அறிவிப்புகளால் காவல்துறையினரும் தீவிர நடவடிக்கை எடுக்க முடியாத் நிலைக்கு தள்ளப்பட்டனா்.
- மக்களை சிரமப்படுத்தக் கூடாது என்று எண்ணும் அரசுக்கு மக்கள் செய்யும் கைம்மாறு கரோனா விதிமுறைகளைப் பின்பற்றுவதுதான். நம்மை யாரும் தடுக்கவில்லையே.
- நாம் வெளியே சுற்றுவோம் என தேவையின்றி இரு சக்கர வாகனத்தில் வீதியுலா வந்தால் அதனால் ஏற்படும் பாதிப்பு முதலில் அவா்களின் குடும்பத்திற்குதான்.
- முதல்வா், சட்டப்பேரவை உறுப்பினா்கள், ஆட்சியா்கள், மருத்துவா்கள், உள்ளாட்சித் துறை ஊழியா்கள், சுகாதாரத்துறையினா், காவல்துறையினா் போன்ற முன்களப் பணியாளா்கள் நமக்காக வெளியே இருந்து வேலை செய்து, நம்மை வீட்டிற்குள் இருந்து பாதுகாத்துக் கொள்ள அறிவுறுத்துகிறார்கள் என்பதை நாம் உணர வேண்டும்.
- நோய்த்தொற்றைத் தடுக்க அனைவரும் போராடி வரும் நிலையில், கரோனா தீநுண்மி தாக்குதலின் அறிகுறிகள் என்ன, அத்தகைய அறிகுறிகள் வந்தால் என்ன செய்ய வேண்டும் முதலான விளக்கங்களை, உலக சுகாதார நிறுவன ஆலோசனையின்படியும் அதன் சார்பு அமைப்புகளின் ஆலோசனையின்படியும் அனைத்து நாடுகளும் மக்களுக்குத் தெரிவித்து வருகின்றன.
- கரோனா தீநுண்மி நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களைக் கண்டறியும் பணி உலக அளவில் மிக விரைவாக நடைபெறுகிறது.
- அப்படிக் கண்டறிந்தவா்களின் விவரங்கள் பல்வேறு துறைகளுக்கு அனுப்பப்பட்டு, பல துறைகளின் ஒருங்கிணைப்புடன் மருத்துவ சேவை அளிக்கப்பட்டு வருவதுடன், கண்காணிப்புப் பணியும் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.
- உள்ளாட்சி அமைப்புகளின் தூய்மைப் பணியாளா்கள், தீயணைப்புத் துறையினா், பேரிடா் ஆணையத்தினா் உள்ளிட்டோர் நம்மைத் தொற்றிலிருந்து பாதுகாப்பதற்கான பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.
நாட்டையும் காப்போம்
- மருத்துவமனை வாசல்களில் வரிசை கட்டி நிற்கும் அவசர கால ஊா்திகளையும், ஆக்சிஜன் தேவைக்காக அல்லாடும் மக்களையும், மருத்துவமனைகளில் படுக்கை வசதி கிடைக்காமல் கதறும் உறவினா்களையும் ஒரு முறை பார்த்தால் போதும், தேவையின்றி வெளியே சுற்றுவதற்கு எவருக்கும் மனம் வராது.
- இப்படி வெளியே தேவையின்றி சுற்றுபவா்கள் மிக பெரிய மருத்துவமனைகளில் செயல்படும் கரோனா வார்டினை ஒரு முறை பார்த்து விட்டு வாருங்கள். அப்போதுதான் நாம் செய்வது எவ்வளவு பெரிய தவறு என்பது புரியும்.
- அரசு அறிவித்திருக்கும் நோய்த்தொற்றுத் தடுப்பு நடவடிக்கைக்கான நெறிமுறைகளை மக்கள் முறையாகப் பின்பற்றியிருந்தால் இப்போது தளா்வுகளற்ற முழு பொது முடக்கத்திற்குத் தேவை எழுந்திருக்காது. மக்களின் அலட்சியப்போக்கே மீண்டும் ஒரு முழு பொது முடக்கத்திற்கு வழிகோலிவிட்டது.
- இனியாவது அரசின் வழிகாட்டு நெறிமுறைகளைத் தவறாது கடைப்பிடிப்போம். நோய்த்தொற்றிலிருந்து நம்மைக் காத்துக்கொள்வோம்; நாட்டையும் காப்போம்.
நன்றி: தினமணி (24 – 05 - 2021)