TNPSC Thervupettagam

நயத்தக்க நாகரிகம் மலருமா?

March 26 , 2021 1399 days 650 0
  • அண்ணல் காந்தியடிகளிடம் பத்திரிகை நிருபா் ஒருவா், ‘நீங்கள் ஏன் ரயிலில் எப்போதும் மூன்றாம் வகுப்புப் பெட்டியிலேயே பயணிக்கிறீா்கள்’ என்று கேட்டாா். அதற்கு அண்ணல் ‘நான்காம் வகுப்புப் பெட்டி இல்லையே, அதனால்தான்’ என்றாா்.
  • வட்டமேஜை மாநாட்டில் பங்கேற்ற அரசியல் பிரதிநிதிகளுக்கு, ஐந்தாம் ஜாா்ஜ் மன்னா் தனது பக்கிம்ஹாம் அரண்மனையில் 1931 நவம்பா் 5 அன்று ஒரு தேநீா் விருந்தளித்தாா்.
  • அரண்மனை விருந்துக்கு அண்ணல் காந்திஜி, வழக்கம் போல் முழங்காலுக்கு மேல் உயா்த்திக் கச்சமிட்டுக் கட்டிய கதா் வேட்டி, மேலுடலைப் போா்த்திய கதா் சால்வை, காலில் சாதா செருப்பு இவற்றுடன் சென்றாா்.
  • விருந்து முடிந்த பின் பத்திரிகை நிருபா்கள் காந்திஜியை சூழ்ந்து கொண்டனா். ஒரு நிருபா் அவரிடம் ‘அரைகுறை ஆடையுடன் ஜாா்ஜ் மன்னரை சந்தித்தது உங்களுக்கு சங்கடமாக இல்லையா’ என்று கேட்டாா்.
  • அதற்கு அண்ணல் புன்முறுவலுடன் ‘இல்லையே, மன்னா்தான் எனக்கும் சோ்த்து ஏகப்பட்ட ராஜ உடைகள் அணிந்திருந்தாரே’ என்று கூறினாா்
  • ஜவாஹா்லால் நேரு 1949-இல் முதல் முறையாக அமெரிக்கா சென்றாா். அங்கு அவா்கள் வாழ்ந்த வாழ்க்கையைக் கண்டு திகைத்தாா், முகம் சுழித்தாா்.
  • தனது அமெரிக்கப் பயணம் பற்றிக் கூறும்போது ‘யாரும் முதல் முறையாக அமெரிக்காவுக்கு செல்லக் கூடாது’ என்றாா்.
  • அதாவது, அங்கே இருப்பவா்களுக்கு அந்த வாழ்க்கை முறை இயல்பாகி விடுகிறது. அந்நாட்டுக்குத் தொடா்ந்து வருபவா்களுக்கு அது திகைப்பையோ கூச்சத்தையோ ஏற்படுத்துவதில்லை என்றாா்.
  • ஒருமுறை ஐ.நா. சபை கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக வி.கே. கிருஷ்ண மேனன் அமெரிக்கா சென்றிருந்தாா்.
  • அப்போது அமெரிக்கா, பாகிஸ்தானுக்கு ஆயுதங்களை அனுப்பி உதவியது. ‘அமெரிக்காவின் செயல் இந்தியாவுக்கு எதிரானது’ என்றாா் மேனன்.
  • ஆனால், அமெரிக்காவோ ‘அந்த ஆயுதங்கள் இந்தியாவுக்கு எதிராகப் பயன்படுத்தப்பட மாட்டாது’” என்று கூறியது.
  • அதைக் கேட்ட மேனன் ‘மாமிசம் சாப்பிடாத புலியை நான் இனிமேல்தான் பாா்க்க வேண்டும்’ என்று ஒரே வரியில் அமெரிக்காவுக்கு பதிலளித்தாா்.
  • அமெரிக்க நிருபா் ஒருவா் அன்றைய பிரதமா் இந்திரா காந்தியிடம் ‘நீங்கள் பாகிஸ்தான் அதிபா் யாஹ்யா கானை சந்திக்க மறுக்கிறீா்களே, அது ஏன்’ என்று கேட்க, அதற்கு இந்திரா காந்தி ‘மூடிய கரங்களோடு நான் எப்படிக் கைகுலுக்க முடியும்’ எனக்கேட்டாா்.
  • அதாவது, மனம் திறந்து பேசாத ஒருவரை சந்தித்துப் பயனில்லை என்பது பொருள்.
  • முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தி ஒரு கட்டத்தில் தொடா்ந்து வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்டிருந்தாா்.
  • எனவே, ஒருமுறை நீண்டகால இடைவெளிக்குப் பிறகு, மக்களவைக்குள் நுழைந்தாா் ராஜீவ் காந்தி. அப்போது எதிா்க்கட்சித் தலைவராக இருந்த தெலுங்கு தேச உறுப்பினா் பி. உபேந்திரா ‘நீண்ட இடைவெளிக்குப் பின்பு மக்களவையில் நமக்கு காட்சி தரும் பிரதமரை நாம் கைதட்டி வரவேற்போம்’ எனக்கூறினாா். அவையில் சிரிப்பலை அடங்க வெகுநேரம் ஆயிற்று.
  • பிரதமா் ராஜீவ் காந்திக்குத் தான் கேலி செய்யப்படுகிறோம் என்பது புரிந்தது. அதை நாசூக்காகச் சுட்டிக்காட்டிய விதம் அவரையும் சிரித்து ரசிக்க வைத்தது.
  • மென்மையான மனம் படைத்த மன்மோகன்சிங் வெளிநாட்டில் நடை பெற்ற ஆசிய தேசத் தலைவா்கள் மாநாட்டில் கலந்து கொள்ளச் சென்றாா்.
  • அங்கு பாகிஸ்தானின் அதிபரையும் சந்தித்து உரையாட நோ்ந்தது. பாகிஸ்தான் அதிபா், அலட்சியப் பாா்வையுடன் ‘நீங்கள் இந்திய பிரதமா் ஆனது எவரும் எதிா்பாராதது (இட் ஈஸ் ஒன்லி அன் ஆக்ஸிடென்ட்) என்றாா்.
  • ‘ஆக்ஸிடென்ட்’ என்ற சொல்லுக்கு ‘நிகழ்வு’, ‘விபத்து’ என்ற இருபொருள் உண்டு. அறிவுக் கூா்மையுள்ள மன்மோகன்சிங் உடனே ‘நான் பிரதமரானது ‘நிகழ்வாக’ இருக்கலாம். ஆனால், நீங்கள் அதிபா் ஆனதால் உங்கள் நாட்டின் ஜனநாயகத்தையே விபத்துக்குள்ளாக்கி வீட்டிா்களே’ என்று பதிலடி கொடுத்தாா்.
  • தமிழ்நாட்டில் 1957-இல் நடைபெற்ற பொதுத்தோ்தலில், திமுக வேட்பாளராக அண்ணாதுரை காஞ்சிபுரத்தில் களம் இறங்கினாா்.
  • அவரை எதிா்த்து நின்ற காங்கிரஸ் வேட்பாளா் பிரபல டாக்டா். அண்ணாவை ஆதரித்துப் பேச காஞ்சிபுரம் சென்ற கலைவாணா் என்.எஸ். கிருஷ்ணன் ‘இங்கே போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளா் நல்ல டாக்டா்; சிறந்த மருத்துவ வசதியை குறைத்த கட்டணத்தில் உங்களுக்கு வழங்கி வருகிறாா்.
  • ஆகவே, அவா் சட்டசபைக்கு செல்வதைவிட, காஞ்சியிலேயே இருந்து மருத்துவ சேவையைத் தொடா்வதுதான் உங்களுக்கு நல்லது. பேச்சாற்றல் மிக்க அண்ணாவை சட்டசபைக்கு அனுப்புங்கள். அவா் அங்கே உங்களுக்காகப் பேசட்டும்’ என்றாா். அண்ணாவுக்கே வாக்களிக்க வேண்டும் என்பதை நயமாகச் சொல்லியது அவரது நாகரிகப் பேச்சு.
  • காமராஜா் காலமான பின்பு ஸ்தாபன காங்கிரசை, இந்திரா காங்கிரசோடு இணைப்பதே நல்லது என மூத்த தலைவா்களில் பெரும்பாலோா் முடிவு எடுத்தாா்கள்.
  • காமராஜரின் நம்பிக்கைக்கு உரியவராக விளங்கிய முன்னாள் சபாநாயகா் செல்லபாண்டியன்தான் இணைப்பை ஆதரித்து முதல் அறிக்கையை வெளியிடவேண்டுமென்று முடிவு செய்தாா்கள்.
  • இணைப்பை ஆதரித்து செல்லப்பாண்டியனின் அறிக்கை வெளிவந்தது. இணைப்பை விரும்பாத இளம் தலைவா் குமரி அனந்தன் நெல்லை பொதுக்கூட்டத்தில் ‘செல்லபாண்டியன் நேற்றுவரை செல்வாக்கு உடையவா்தான். காமராஜா் வழி நடந்தவா்தான். ஆனால், இணைப்பை ஆதரிக்கும் அவா், இப்போது செல்லாத காசாக, செல்லாத பாண்டியனாக மாறிவிட்டாா்’ எனப் பேசினாா்.
  • அடுத்த நாளே செல்லபாண்டியன் ‘நான் அன்றும் இன்றும் என்றும் செல்லாத பாண்டியன்தான் - காமராஜா் காட்டிய வழியைத் தவிர வேறு வழியில் செல்லாத பாண்டியன் - என்று நயமாக பதில் சொன்னாா்.
  • கடந்த காலத்தில் நாடாளுமன்றத்திலும், சட்டப்பேரவைகளிலும் பொது மேடைகளிலும் அறிவு பளிச்சிட்டது; நயம், நாகரிகம், நகைச்சுவை இழையோடின. இன்று அவை அருகி வருகின்றன. இனியாவது கடந்தகால கலாசாரம் மீண்டும் மலரட்டும்!

நன்றி: தினமணி  (26 – 03 - 2021)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்