- முனைவர் பட்டம் பெற்றதுமே ஆய்வுப் பணிக்கு முற்றுப்புள்ளி வைத்துவிடுகிற கல்விப்புலச் சூழலில், இந்த ஆய்வுக்களத்தையே தன் அடுத்தடுத்த தேடலுக்கான திறப்பாக்கிக் கொண்டவர் கோ.சீனிவாச வர்மா. 1962இல் தன் முனைவர் பட்டத்திற்காக நரிக்குறவர் மக்கள் மொழியை ஆய்வுசெய்த அவர் அதை விரிவுபடுத்தி நூலாக வெளியிட்டதுடன், தொடர்ந்து வாகிரிபோலி மொழியில் அடிப்படைச் சொற்கோவை நூலையும் இலக்கண நூலையும் எழுதினார்.
- இதன் தொடர்ச்சியாக, நரிக்குறவர் மக்களைச் சந்தித்துக் களஆய்வு நிகழ்த்தி, அவர்கள் வாழ்க்கைமுறை, வழக்காறுகளை விளக்கும் ‘நரிக்குறவப் பழங்குடி மக்கள்’ என்ற நூலையும் 1978இல் எழுதி வெளியிட்டுள்ளார்.
- நரிக்குறவர்கள் பற்றிய முதல் நூல் என்பதோடு 50 ஆண்டுகளுக்கு முந்தைய நரிக்குறவர்களின் வாழ்க்கையைத் தெரிவிக்கும் ஒரே ஆவணம் என்னும் சிறப்பையும் பெற்றுள்ள இந்நூலின் இன்றைய தேவை உணர்ந்து இதனை மீள்பதிப்பு செய்து வெளியிட்டிருக்கிறார் சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் மொழித் துறை உதவிப் பேராசிரியர் வே.நிர்மலர்செல்வி.
- பழங்குடி மக்களின் மொழியையும் மரபுகளையும் பாதுகாக்கும் வகையில் ஆண்டுதோறும் ஆகஸ்ட் 9ஐப் பன்னாட்டு உலகப் பழங்குடிகள் நாளாக ஐ.நா. கடைப்பிடித்துவருகிறது. நரிக்குறவர்களைப் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கும் சட்ட முன்வரைவு 2022ஆம் ஆண்டு மக்களவையில் நிறைவேறியது.
- பழங்குடிகளின் மொழிகளைக் கற்கும் வகையில் அடிப்படை நூல்கள் அண்மையில் வெளியிடப்பட்டுள்ளன. பழங்குடிச் சமூகங்கள் மீது கவனம் குவிந்துவரும் இக்காலக்கட்டத்தில், அவர்களின் சமூகப் பண்பாட்டு ஆய்வு நூல்களின் வரிசையில் குறிப்பிடத்தக்கதாகவும் நரிக்குறவச் சமூகத்தின் இனவரைவியல் ஆய்வுக்கான ஆதார நூலாகவும் அமைந்துள்ள இந்நூல், மறுபதிப்பு கண்டிருப்பது வரவேற்கத்தக்கது.
- நரிக்குறவர்களின் கால்வழிப் பிரிவு தொடங்கி ஈமச் சடங்குகள் வரையிலான எட்டுத் தலைப்புகளில் விரியும் இந்நூல் மகாராஷ்டிரம், குஜராத் பகுதியிலிருந்து இவர்கள் தென்னகம் நோக்கிப் புலம்பெயர்ந்ததற்கான காரணம், நரிக்குறவர், குருவிக்காரர்கள் என்று அழைக்கப்படுவதற்கான பெயர்க்காரணம், ஒருவன் ஒருத்தி என்கிற வாழ்க்கை முறை, நான்கு விதமான திருமண முறைகள், தந்தைவழிக் குடும்ப அமைப்பு இருந்த போதிலும் தாய்தெய்வ வழிபாட்டினை அடிப்படையாகக் கொண்டு கால்வழிப் பிரிவுகளை அமைத்துக்கொண்டுள்ளமை, ஒரே குலதெய்வத்தை வணங்கக்கூடியவர்கள் பங்காளிகள் முறையாக வருவதால் அவர்களுக்கிடையே திருமண உறவு இல்லாத நிலை, விதவை மறுமணம், பிறந்த ஒவ்வொரு குழந்தைக்கும் இரண்டு பெயர்கள் வைக்கும் முறை, மொழியில் ஆண்பால், பெண்பால் என்பவற்றுடன் மூன்றாம் பாலாக இடம்பெறும் பிரிவு, சடலத்தைப் புதைக்கின்ற பழக்கம், முதியவர்களைப் பாதுகாத்தல் போன்று நரிக்குறவச் சமூகத்தின் மிக நுட்பமான பண்பாட்டு அசைவுகளைப் பதிவுசெய்துள்ள அரிய நூலாக இந்நூல் இருக்கிறது.
- பதிப்பாசிரியர் நிர்மலர்செல்வி இந்நூலுக்கு எழுதியிருக்கும் என்னுரைப் பகுதி நரிக்குறவர்கள் பற்றிய மற்றுமொரு ஆய்வுநூல் போன்று துணைநூல் பட்டியலுடன் 40 பக்க அளவில் அமைந்திருப்பது கூடுதல் சிறப்பு.
- விஞ்ஞான வளர்ச்சி, தகவல் தொழில்நுட்பப் பயன்பாடு காரணமாக ஒட்டுமொத்த மனித இனமும் பெரும் மாற்றங்களுக்கு ஆட்பட்டுவரும் சூழலில், ஒரு தொன்மையான இனம் தன்னுடைய பண்பாட்டுக் கூறுகளை எவ்விதம் தக்கவைத்துக் கொண்டிருக்கிறது அல்லது இழந்துவருகிறது என்பதை அரை நூற்றாண்டுக்கு முந்தைய வாழ்க்கைமுறையோடு அவர்தம் தற்கால வாழ்க்கைமுறையை ஒப்பிட்டு அறிவதற்கும் ஆய்வதற்கும் இந்நூலைப் பயன்கொள்ள முடியும்.
- இன்றும் கோயிலில் அன்னதானத்தின்போது விரட்டப்படுகிற, திரையரங்குகளில் அனுமதி மறுக்கப்படுகின்ற, கல்வி நிலையங்களில் ஏளனத்திற்கு ஆளாக்கப்படுகின்ற இச்சமூகத்தினரின் அவலநிலை அண்மையில் தமிழ்நாடு அரசு எடுத்த முயற்சியால் எதிர்காலத்தில் நீங்கிப் பெரும் மாற்றத்தைக் காணும் என நம்பலாம். ஆனால், இந்நூலின் முடிவுரையில் தமிழ்நாடு அரசின் பார்வைக்கு ஆசிரியர் சில பரிந்துரைகளையும் முன்வைத்திருக்கிறார்.
- சரியான மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அவர்களின் தனித்தன்மை மாறாமல் பொருளாதாரத்தில் முன்னேற்றுவது, அவர்களின் தாய்மொழியிலேயே ஆரம்பக் கல்வியைத் தருதல், நாட்டைப் பாதுகாக்கும் பணியில் ஈடுபடுத்துதல், பரம்பரைத் தொழிலான பாசிமணி விற்றல், கோணி ஊசி செய்தல் போன்ற சில தொழில்களுக்கான மூலப்பொருள்களைக் கூட்டுறவுச் சங்கங்கள் மூலம் வழங்கியும் தயாரான பொருட்களை விற்பனை செய்தும் உதவுதல் போன்றவை. ஆசிரியர் குறிப்பிட்டுள்ள இப்பரிந்துரைகள் சார்ந்து இன்றைய தேவைகள் நிறைவேற்றப்படுமானால், நரிக்குறவர்களும் எல்லா நிலைகளிலும் தன்னிறைவுபெறுவர். இவ்வகையிலும் இம்மீள்பதிப்பு கவனம்பெற வேண்டுவது அவசியமாகிறது.
நன்றி: இந்து தமிழ் திசை (10 – 08 – 2024)