TNPSC Thervupettagam

நலிவடையலாகாது நான்காம் தூண்!

February 3 , 2021 1449 days 662 0
  • காட்சி ஊடகங்கள் பல்கிப் பெருகிக் கிளைவிரித்துச் செழிக்கத் தொடங்கிய உடனேயே அச்சு ஊடகங்களைப் பற்றிய இரக்கம் தோய்ந்த கருத்துகளும் முளைவிட்டு வளர தொடங்கின.
  • அச்சு ஊடகம்தான் மனிதகுலம் தனக்கெனக் கண்டடைந்த முதல் ஊடகமாகும். பாறைகளில் கரிக்கோடுகளாகத் தொடங்கி, பின்னர் பனையோலைகளிலும் கல்வெட்டுகளிலும் எழுத்துருக்களாகி, இன்றைக்குக் கண்களைக் கவருகின்ற வண்ண வண்ண எழுத்துகளாக வசீகரமான காகிதங்களில் மின்னுகின்ற அதன் பயணம் மிகவும் நெடியது, அதன் கிளைவழித் தோன்றல்களான எத்தகைய ஊடகங்களாலும் தடுக்கப்பட முடியாதது.
  • மனிதகுலத்தின் அறிவு மேம்பாட்டிற்கான தேவைகளின் பொருட்டு நெடுங்காலத்துக்கு முன்பாகவே ஒரு தாய் ஊடகமாகத் தோற்றுவிக்கப்பட்ட அச்சு ஊடகங்கள், இன்றளவும் அப்பணியைப் உலக அளவில் மிகச் சிறப்பாகச் செய்து வருகின்றன, மனித குல அறவாழ்வுப் பயணத்திற்கு உரிய ஆவணங்களைப் பல லட்சக்கணக்கில் தயாரித்துக் கொடுத்துள்ளன, இன்றளவும் கொடுத்துக் கொண்டேயிருக்கின்றன.
  • அடிக்கடி தனக்கு நேருகின்ற பேரிடர்களிலிருந்து மீண்டெழுந்து ஒரு புதிய பெரும்பாய்ச்சலை நிகழ்த்திக் காட்டுகின்ற வல்லமை பொதுவாகவே மனிதகுலத்துக்கு உண்டு. அவ்வகையில் அச்சு ஊடகத் தொழில் துறையும் தற்போது தனக்கு நேர்ந்துள்ள இடர்ப்பாடுகளில் இருந்து நிமிர்ந்தெழுந்து புத்தம் புதிய வலிமைகளோடு இயங்குவதற்கான சாத்தியக் கூறுகளும், மனிதகுலத்திற்கான அதன் தேவைகளும் நிறையவே உள்ளன.
  • இயற்கை வழி வேளாண்மையில் நெற்பயிர்களின் அடி-மண்ணுக்கு, நடு-மாட்டுக்கு, நுனி-மனிதனுக்கு என்று இயற்கைவேளாண் அறிஞர் கோ. நம்மாழ்வார் வரையறை செய்ததுபோல, அச்சு ஊடகங்களின் அன்றாட, பருவ விளைச்சல்களின் ஒரு பகுதிக் கருத்தோவியங்கள் இடம் பெயர்ந்து நூல் வடிவங்களில் ஆவணங்களாக மாறுகின்றன.
  • பிற பகுதிகள் அவரவர் துறைகளுக்கும் பொதுவான வாசகர்கள் அனைவருக்குமான அன்றாடத் தகவல் தேவைகளை நிறைவு செய்கின்றன.
  • பின்னர் தேனெடுக்கப்பட்ட சக்கை போலான அதன் காகிதங்கள் மறு சுழற்சியின் பொருட்டு மீண்டும் வாகனமேறுகின்றன. எஞ்சியவை பொட்டலக் காகிதங்களாக விரிந்தும் ஏதேனும் சில செய்திகளைச் சிலருக்குத் தெரிவித்துவிட்டு மண்ணில் புதைந்து இயற்கை எய்துகின்றன.
  • மண்ணிலிருந்து காகிதங்களுக்கான மரங்கள் மீண்டும் தோன்றுகின்றன, தேவைக்கேற்பத் தோற்றுவிக்கவும் படுகின்றன.
  •  இயற்கைச் சூழலுக்கு எத்தகைய கேடுகளையும் விளைவிக்காத இத்தகைய மறு சுழற்சி முறையானது, பல்கிப் பெருகியிருக்கிற வேறுவகை ஊடகங்கள் எதுவொன்றிலும் காணப்படவில்லை.
  • அச்சு ஊடகமல்லாத பிற ஊடகங்கள் மிக மிகக் குறைந்த காலகட்டத்திலேயே அதிக அளவிலான மின்னணுக் கழிவுகளாகிப் பெருகிப் பெருகிப் பிரபஞ்சத்தின் ஐம்பெரும் பூதங்களிலும் கலந்து உலகம் முழுவதையும் மிக மிகக் கொடூரமான முறையில் அச்சுறுத்திக் கொண்டிருக்கின்றன.
  • ஆண்டுதோறும் இந்தியாவில் மட்டும் முப்பது லட்சம் டன் அளவிற்கு மின்னணுக் கழிவு சேருகின்றன. இதில் வெறும் எட்டு லட்சம் டன் அளவுக்கு மட்டுமே மறு சுழற்சிக்கு வந்து சேருகின்றன என்கிறது ஒரு புள்ளிவிவரம்.
  •  அப்படியானால் மீதமுள்ள இருபத்து இரண்டு லட்சம் மின்னணுக் கழிவுகள் நமது பஞ்சபூதங்களையும் நாசப்படுத்திக் கொண்டிருக்கின்றன என்பதுதான் உண்மையாகும். இந்தக் கணக்கு நமது இந்தியாவுக்கான கணக்கு மட்டும்தான்.
  • உலகின் சுற்றுச்சூழல் நலன்களுக்கு எதிராகக் கடந்த ஐந்நூறு ஆண்டுகளில் அச்சு ஊடகங்கள் ஏற்படுத்தாத பின்னடைவுகளையும் சீர்கேடுகளையும் கடந்த ஐம்பதே ஆண்டுகளில் மின்னணு ஊடகங்கள் ஏற்படுத்தியுள்ளன.
  •  அச்சு ஊடகங்களின் அறிவியல்பூர்வமான அடிப்படைச் சிறப்பு என்னவெனில், அவை எண்ணிக்கையில் எவ்வளவு வளர்ந்தாலும் அவற்றின் வளர்ச்சி இயற்கையோடு இயைந்தே பயணிக்கும் என்பதுதான்.
  • மின்னணு ஊடகங்களின் அறிவியல் அடிப்படை அப்படியானது அல்ல. மின்னணு ஊடகங்களில் இருந்து எல்லாவற்றையும் தெரிந்துகொள்ள முடிவதாகப் பெருமையுறும் மனிதகுலம், மின்னணுக் கழிவுகளில் இருந்து பூமியை எப்படிக் காப்பாற்றுவது என்பதை மட்டும் இன்று வரை தெரிந்துகொள்ள முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறது என்பதே நிகழ்காலத்தின் நிதர்சனமும் துயரமும் ஆகும்.
  • 2006-ஆம் ஆண்டின் கணக்கின்படி அமெரிக்கா முழுவதும் 30,700 மாபெரும் அச்சு ஊடக நிறுவனங்கள் இருந்துள்ளன. இவற்றில் சற்றேறக் குறைய 4,000 நிறுவனங்கள் அப்போது இணையவழி ஊடகங்களாக மாற்றப்பட்டதாகத் தெரிகிறது.
  • இது மின்னணு ஊடகங்கள் தோன்றிப் பரவத் தொடங்கிய புதிதில் ஏற்பட்ட ஒரு மாற்றமாகும். அதற்குப்பிறகு அங்கு அந்த நிலையில் பெரிய மாற்றங்கள் எதுவும் நடக்கவில்லை எனத் தெரிகிறது.
  • இப்போதும் புத்தகக் காட்சிகளை நடத்துவதற்குப் பல நூற்றுக்கணக்கான பதிப்பகங்களின் கூட்டமைப்பினரும், புத்தகக் காட்சிகளுக்குச் சென்று புத்தகங்களை வாங்குவதற்குப் பல லட்சக்கணக்கான வாசகர்களும் ஆவலோடு காத்திருக்கின்றனர். சிற்சில தொய்வுகளுக்கு இடையிலேயும் நாளிதழ்களும் பருவ இதழ்களும் இடையறாமல் இப்போதும் விற்பனையாகிக் கொண்டுதான் இருக்கின்றன.
  • இன்றைய நமது அச்சு ஊடகங்களுக்கு நேர்ந்துள்ள பல இடர்ப்பாடுகளை, நமது மத்திய மாநில அரசுகளும், விளம்பர நிறுவனங்களும், அச்சு ஊடகங்களின் சுவைஞர்களான கோடிக்கணக்கான வாசகர்களும் சேர்ந்து சரி செய்யவும் பொருளாதார அளவில் சமன் செய்யவும் வேண்டும். இது இன்றையக் காலகட்டத்தின் அவசரமும் அவசியமும் ஆகும்.
  • மக்களின் மேலோட்டமான நுகர்வுக் கலாசார மனப்பான்மைக்கு ஏதுவான ஒளி, ஒலி, மின்னணு ஊடகங்கள் மட்டு மீறிப் பெருகியுள்ளன. இவை போன்ற ஊடகங்கள் மிகமிக எளிதில் தங்களுக்கு வசப்பட்டு விடுவதால் பெருமளவிலான இளைய தலைமுறையினரும் பொதுவான வாசகர்களில் ஒரு பகுதியும் இத்தகைய ஊடகங்களால் ஈர்க்கப்பட்டு விடுகின்றனர்.
  • கவர்ச்சிகரமான முறையில் எளிதில் கிடைப்பது, இளைய தலைமுறையினர் இவற்றின் பயனாளிகளாக இருப்பது போன்ற பல காரணங்களால் வணிக, விளம்பர நிறுவனத்தினரும் இவ்வூடகங்களுடன் பொருளாதாரப் பிணைப்புகளை ஏற்படுத்திக் கொள்கின்றனர். இவையே நமது அச்சு ஊடகத்துறைக்குப் பின்னடைவுகளை ஏற்படுத்தியிருக்கின்ற நேரடியான காரணங்களாகும்.
  • நமது இந்திய ஜனநாயகத்தின் நான்காம் தூண் என்று புகழப்படுகின்ற அச்சு ஊடகத்துறைதான் அரசுத்துறை நிர்வாகங்களின் கண்ணாடியாக விளங்குகின்றது என்பதை நமது அரசுகள் புரிந்துகொள்ள வேண்டும்.
  • மின்னணு மற்றும் காட்சி ஊடகங்கள், நுகர்பொருள் விளம்பரங்களின் பொழுதுபோக்குக் கடை வீதிகள் தானே தவிர, எவ்வகையிலும் எந்நாளிலும் அவை அரசுகளுக்கு இடித்துரைத்து மக்களையும் நெறிப்படுத்துகின்ற அச்சு ஊடகங்களின் பெரும் பணிகளைச் செய்ய வல்லவை அல்ல.
  •  மின்னணு ஊடகங்களைப் பற்றிய இவ்வாறான நமது கருத்துகள், முற்றிலும் அவற்றுக்கு எதிரானவையோ அல்லது அவை சமூகத்திற்குத் தேவையற்றவை என்று வலியுறுத்துபவையோ அல்ல என்பதை நாம் இங்கே தெளிவுப்படுத்துகிறோம். இன்றைய நமது மக்களுக்கான பல சேவைகளை அத்தகைய ஊடகங்களும் அளித்து வருகின்றன என்பதை யாரும் மறுக்க முடியாது.
  • அதே வேளையில் அவற்றின் பெருவணிக முறையானது, தற்சார்பு இந்தியாவுக்கான மக்கள் சார்ந்த வணிகமாகவும், அனைத்துத் தரப்பு மக்களின் வாழ்வியலையும் எதிரொலித்து வழி நடத்தும் ஓர் அற வணிகமாகவும் விளங்குகின்ற, அச்சு ஊடகத் தொழில் வணிகத்தை முடக்கிவிடுகின்ற வகையில் "அபகரிப்பு' நடவடிக்கையாக இருந்துவிடக் கூடாது என எச்சரிக்கவும் நாம் கடமைப்பட்டிருக்கிறோம்.
  • இந்திய செய்தித்தாள் வெளியீட்டாளர் சங்கம் மத்திய அரசிடம் அண்மைக்காலமாக வலியுறுத்தி வருகின்ற பல்வேறு கோரிக்கைகளின் வாயிலாக அத்துறைக்கு நேர்ந்துள்ள நெருக்கடிகளை எளிதில் எவராலும் உணரமுடியும்.
  • இந்திய பத்திரிகை ஊடக நிறுவனங்களுக்கு மத்திய மாநில அரசுகள் 1,800 கோடி விளம்பரக் கட்டணம் தர வேண்டியிருக்கிறது. அதில் அச்சு ஊடகங்களுக்கு வரவேண்டிய நிலுவை மட்டும் ரூ. 900 கோடி என்கிறது அச்சங்கம்.
  • கடந்த ஆறு மாதங்களுக்கும் மேலாக அரசுகளிடம் தங்களுக்கான நிலுவைகளைக் கேட்கின்ற அச்சங்கத்தின் இக்கோரிக்கை இன்றுவரை வெறும் கோரிக்கையாகவே இருப்பதை அறியமுடிகிறது.
  • மனித குலத்தின் சிந்தனைகளைக் கிளைக்கவும், செழிக்கவும், மேம்படுத்தவும் செய்வது அச்சுத்துறைதான். பல ஆயிரம் ஆண்டுகளாக மனிதர்கள் தலைக்குனிந்து படித்த படிப்புதான் மனித குலத்தைத் தலைநிமிரச் செய்து வருகிறது. அச்சுத் தொழிலின் அடிநாதமாக விளங்குவது அறம். எதுவொன்றையும் மேலோட்டமாக தெரிய வைப்பதல்ல, முழுமையாக அறிய வைப்பதும் புரிய வைப்பதுமே அச்சுத் தொழிற்துறையின் நல்ல நோக்கங்களாக இருந்து வருகின்றன.
  • தற்போதைய இந்தியாவில் மின்னணு ஊடகங்களுக்குக் கிடைக்கின்ற மொத்த விளம்பரங்களில் எழுபது விழுக்காடு விளம்பரங்கள், உலகப் பெரு வணிக மின்னணு நிறுவனங்களான கூகுள், ஃபேஸ்புக் ஆகிய இரண்டு நிறுவனங்களுக்கே சென்று சேர்வதாக ஓர் ஆய்வு தெரிவித்திருக்கிறது.
  • இந்தியாவின் அச்சு ஊடகத் தொழில்துறையின் அனைத்துப் பிரிவுகளிலும் நேரடியாகவும் மறைமுகமாகவும் முப்பது லட்சம் பணியாளர்களும், அவர்களை வாழ்வாதாரமாக நம்பி அவர்களது குடும்ப உறுப்பினர்களும் உள்ளனர்.
  • உள்நாட்டுத் தயாரிப்பு, வெளிநாட்டு இறக்குமதி என்று ஓர் ஆண்டுக்கு இருபத்தைந்து லட்சம் டன் அச்சுக் காகிதம் நமது நாட்டின் அச்சு ஊடகத்துறையின் தொழிலுக்குப் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.
  • இந்நிலையில் வணிக நிறுவனங்களின் விளம்பரங்கள் காகிதங்களில் இருந்து அப்படியே மின்னணுத் திரைகளுக்கு இடம்மாறுவதை, அதுவும் ஒரு சில நிறுவனங்களுக்கே இடம் மாறுவதை இனியும் நமது அரசுகள் வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருக்கக் கூடாது.

நன்றி: தினமணி  (03-02-2021)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்