- அது 1929 அக்டோபர் 18 அன்று, இந்திய வைஸ்ராய் இர்வின், பிரிட்டிஷ் இந்தியாவின் தலைமைச் செயலாளருக்கு எழுதிய அரச ரகசியக் கடிதம்: ‘குற்றங்கள் எது நடந்தாலும், கம்யூனிஸ்ட்டுகள் மீது சுமத்தி, அவர்களைக் கடுமையாகத் தண்டித்தால் மட்டுமே கம்யூனிஸ்ட் இயக்கத்தை இந்தியாவில் அழிக்க முடியும்’ (கடித எண். F.18-10-1929 KW).
- இந்தப் பின்னணியில், 1949இல் கம்யூனிஸ்ட்டுகள் மீது தயாரிக்கப்பட்டதுதான் நெல்லை சதி வழக்கு. கொலை, கொள்ளை, ரயில் கவிழ்ப்பு, வெடிகுண்டு தயாரித்தல் போன்ற கூட்டுச் சதியில் கம்யூனிஸ்ட்டுகள் ஈடுபட்டிருந்தார்கள் என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டிருந்தது. இதில் முக்கியக் குற்றவாளி ஆர்.நல்லகண்ணு.
- அவரைக் கைதுசெய்ய காவல் துறை பெருமுயற்சி எடுத்தும் அது சாத்தியமாகவில்லை. அவர் பொதிகைமலையின் ஆழ்நிலைக் காடுகளில் பதுங்கியிருந்து தாக்குதலுக்கான தயாரிப்பில் இருந்ததாகக் காவல் துறைக்குத் தகவல் வந்துகொண்டே இருந்தது. ஆனால், அவர் களக்காடு பகுதியில் விவசாயத் தொழிலாளர்கள் நிறைந்த தலித் குடியிருப்பில் தங்கி, உரிமைக்காக அவர்களை ஒருங்கிணைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார்.
- நெல்லை சதி வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட99 பேரையும் காவல் துறையால் கைதுசெய்ய முடியவில்லை. நல்லகண்ணு கைது செய்யப்பட்டவுடன், அந்தக் கோபம் அனைத்தும் அவர் மீது பாய்ந்தது. மற்றவர்களைக் காட்டிக்கொடுக்குமாறு அவர் கட்டாயப்படுத்தப்பட்டார். அவரது முறுக்கு மீசையின் ஒவ்வொரு முடியையும் காவல் துறை பிடுங்கியது.
- மயிர்க் கால்களில் ரத்தம் கசிந்து நின்றது. தலைகீழாக அவரைக் கட்டித் தொங்கவிட்டார்கள். தலைக்குக் கீழே தரையில் தீ மூட்டி, அதில் புகையிலையைக் கொட்டி மூச்சுத் திணற வைத்தார்கள். ஆனால், குற்றம்சாட்டப்பட்ட எவருடைய பெயரையும் அவர் சொல்லவில்லை. இருப்பிடத்தையும் காட்டிக் கொடுக்கவில்லை. அவரது அச்சமற்ற மன உறுதிக்கு இதுவே முதல் சாட்சி.
- தூக்குத் தண்டனையிலிருந்து தப்பிய நல்லகண்ணு, மதுரைச் சிறையில் ஆயுள் தண்டனையை அனுபவித்தார். தூக்குமேடைக்கு அழைத்துச் செல்லப்பட்ட பாலு, ‘புரட்சி வாழ்க’ என்று முழங்க, அவரும் சிறைக் கம்பிகளுக்குப் பின்னிருந்து ‘வாழ்க’ என்று குரல் கொடுத்தார்.
- நல்லகண்ணுவின் சிறை வாழ்க்கையும் ஒரு காவியம்தான். சிறைச்சாலையில் கூடுதல் மனஇறுக்கம் வருவது தவிர்க்க முடியாதது. துயரத்தை மறந்து அறிவுலகத்தை நோக்கிப் பயணிக்கத் தேவை நூல்கள் மட்டும்தான் என்பதை உணர்ந்து, நூலகப் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். அவர் தொகுத்திருந்த நோட்டுப்புத்தகம் ஒன்றைப் பார்த்து நான் ஆச்சரியத்தில் ஆழ்ந்துவிட்டேன்.
- ஒரு மனிதரால் இவ்வளவு படிக்க முடியுமா, சிறை நிகழ்வுகளை இவ்வாறு குறிப்பெடுத்து வைக்க முடியுமா என்று அசந்து நின்றேன். அதை இலக்கியமாகப் படைத்திருந்தால் சிறை இலக்கியங்களிலேயே ஆகச்சிறந்த ஒன்றாக நமக்குக் கிடைத்திருக்கும்.
- ‘மலையை மறவு வைச்சு மல்லிய பூ சாட்சி வைத்து, உன்ன நா தொட்டதற்கு’ என்ற உருவகமான பாடல் ஓர் இரவில் சிறையில் கேட்டது. நீண்ட நாள் சிறைத்தண்டனை பெற்ற ‘கன்விக்ட் வார்டர்’ ஒருவர், இரவு நேரப் பாதுகாப்புப் பணியின்போது அதைப் பாடினார். அதற்குள் உயரதிகாரிகள் வந்துவிட்டதால் பாட்டை நிறுத்திக்கொண்டார். அடுத்த வரி என்னவாக இருக்கும் என்று யோசித்து யோசித்துத் தூக்கமிழந்து போனார் நல்லகண்ணு.
- இப்படியாக மூன்று நாட்கள் விடுபட்ட பாடல் வரிகளின் தொடர்ச்சியை அவரால் பெற முடியவில்லை. கடைசியாக, ‘உங்க அப்பன் சாட்சி சொன்னதற்கு மதுர ஜெயிலிலே மாடா உழைக்கிறேண்டி’ என்று வரிகள் முடிவடைந்தன. இத்தகைய தேடல் ரசனைதான், நல்லகண்ணுவின் இலக்கிய மனம் எது என்பதை நமக்கு உணர்த்துகிறது.
- நல்லகண்ணு, அவர் மனைவி ரஞ்சிதம் அம்மா இருவரும் அறிவுபூர்வமான லட்சியத் தம்பதி. ஆசிரியர் தொழில் செய்து, பொருளாதாரச் சுமைகள் அனைத்தையும் ரஞ்சிதம் அம்மாதான் சுமந்துகொண்டிருந்தார். ஆசிரியர் பணியில் அடிக்கடி ஊர்விட்டு ஊர் மாற்றிவிடுவார்கள். புதிய ஊர் ஒன்றில், புதிய வீடொன்றில் குடியேறியிருந்த நேரம். அந்த வீட்டில் கொல்லைப்புற வழியாகவும் முக்கிய சாலைக்குச் செல்ல முடியும்.
- இரவு நேரம் கழித்து வீடு வந்துசேர்ந்த நல்லகண்ணு, கட்சிப் பணிக்காக முதல் பஸ்ஸில் புறப்படுவதற்காக அவசரமாகக் கொல்லைப்புறத்தின் வழியாக வெளியேறியுள்ளார். அப்போது ரஞ்சிதம் அம்மா தன்னிடம் கேட்ட கேள்வி, பெண்களின் பிரச்சினை என்ன என்பதைத்தனக்குப் புரியவைத்ததாகச் சொல்கிறார் நல்லகண்ணு: ‘காலை இருள் அகல்வதற்கு முன் நீங்கள் கொல்லைப் புறத்தின் வழியாகச் சென்றால் அக்கம்பக்கத்தில் இருப்பவர்கள் என்ன நினைப்பார்கள்?’
- நல்லகண்ணு தன் வாழ்க்கையில் சந்தித்த முக்கிய நிகழ்வுகளில் ஒன்று இது. சீர்காழிக்கு அருகில் ஒரு கம்யூனிஸ்ட் தலைவர், தன் மகள் திருமணத்தை அவரது தலைமையில் நடத்தியுள்ளார். ‘எத்தனையோ தலைவர்கள் இருக்கும்போது, என்னை நீங்கள் அழைத்ததற்குக் காரணம் என்ன?’ என்று நல்லகண்ணு கேட்டபோது, ‘ஒடுக்கப்பட்டவர்களுக்காக நீங்கள் தொடர்ந்து குரல் கொடுத்துவருபவர் என்பதால் அழைத்தேன்’ என்று அந்தத் தலைவர் பதிலளித்துள்ளார். ஒடுக்கப்பட்ட மக்களிடமிருந்து தனியாகப் பிரித்தறிய முடியாதபடி நல்லகண்ணுவின் வாழ்க்கை அமைந்திருந்தது.
- தோற்றத்தில் ஆடம்பரமற்று எளியவராகக் காட்சி தரும் நல்லகண்ணு, இன்டர்மீடியட் வரை பயின்றவர். அவரது அண்ணன் சுங்க இலாகாவில் துணை ஆட்சியராகப் பணியாற்றியவர். நல்லகண்ணுவின் எளிமை, இல்லாமையால் வந்த எளிமை அல்ல. லட்சியம் தந்த எளிமை. எளிமை சார்ந்த சித்தாந்தம் இல்லாமல் சமூக மாற்றங்கள் நிகழாது என்பதில் ஆழமான நம்பிக்கை கொண்டவர் அவர். இதனால்தான் இன்றைய கார்ப்பரேட் உலகில் ஓர் அதிசய மனிதராக நிற்கிறார்.
நன்றி: தி இந்து (01 – 01 – 2023)