TNPSC Thervupettagam

நல்லது நடந்தால் சரி!

March 25 , 2021 1400 days 663 0
  • தனியார்மயம் தேவைதானா என்கிற கேள்வியை இனிமேலும் எழுப்பிக் கொண்டிருப்பதில் அர்த்தமில்லை.
  • கம்யூனிஸ நாடுகள் உள்பட உலகம் முழுவதும் தனியார்மயத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும்போது, இந்தியா மாறுபட்ட பொருளாதார கண்ணோட்டத்துடன் இயங்க முடியாது.
  • வங்கித் துறையிலும், காப்பீட்டுத் துறையிலும் தனியார் நிறுவனங்களை அனுமதித்துவிட்ட பிறகு, அந்நிய முதலீட்டின் வரம்பை உயர்த்துவதில் தவறில்லை.
  • முந்தைய மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு, அந்நிய நிறுவனங்களுக்கு கதவைத் திறந்துவிட்டது. இப்போதைய நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு அவற்றுக்கு சிவப்புக் கம்பளம் விரிக்கிறது.
  • நாடாளுமன்றத்தில் காப்பீட்டுத் திருத்த சட்ட மசோதா 2021 நிறைவேற்றப்பட்டு குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டிருக்கிறது.
  • விரைவிலேயே சட்டவடிவம் பெறும் என்பது உறுதியாகிவிட்டது. கடந்த மாதம் நிதிநிலை அறிக்கையிலேயே தெரிவிக்கப்பட்டிருந்ததால் இது வியப்பை ஏற்படுத்தவில்லை.
  • ஏற்கெனவே காப்பீட்டுச் சட்டம் 1938 திருத்தப்பட்டு காப்பீட்டுத் துறையில் 49% அந்நிய நேரடி முதலீட்டுக்கு வழிகோலப்பட்டிருந்தது.
  • இப்போதைய புதிய திருத்தத்தின் மூலம் நேரடி முதலீட்டின் அளவு 74% ஆக அதிகரிக்கப்பட்டிருக்கிறது.
  • காப்பீட்டு நிறுவனங்கள், குறிப்பாக தனியார் காப்பீட்டு நிறுவனங்கள், இதன் மூலம் மூலதன நிதியை அந்நிய முதலீட்டாளர்களிடமிருந்து கூடுதலாகப் பெற முடியும்.
  • பொதுத்துறை காப்பீட்டு நிறுவனங்களுக்கு மத்திய அரசு மூலதன நிதியை வழங்கும் நிலையில், சமவாய்ப்பு தனியார் நிறுவனங்களுக்கும் வழங்கப்பட வேண்டும் என்பதற்காக இந்தத் திருத்தம் கொண்டுவரப்படுகிறது என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்திருக்கிறார்.
  • ஏனைய ஆசிய பொருளாதாரங்களுடன் ஒப்பிடும்போது இந்தியாவில் காப்பீட்டுத் துறையின் வளர்ச்சி குறிப்பிடும்படியாக இல்லை.
  • இப்போதைய நிலையில், 24 ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களும், 34 பொதுக் காப்பீட்டு நிறுவனங்களும் இந்தியாவில் செயல்படுகின்றன.
  • இவ்வளவு அதிகமான காப்பீட்டு நிறுவனங்கள் இருந்தும்கூட, காப்பீடு குறித்த விழிப்புணர்வும், காப்பீடு செய்துகொள்ளும் மனநிலையும் மக்களுக்கு ஏற்படவில்லை என்பதை புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
  • காப்பீட்டுத் துறை போதுமான வளர்ச்சியை எட்டவில்லை என்பதை 2020 – 21க்கான பொருளாதார ஆய்வு உணர்த்துகிறது.
  • 2001இல் 2.71%ஆக இருந்த காப்பீட்டுத் துறை வளர்ச்சி, 2019இல் 3.76%ஆக அதிகரித்திருக்கிறது என்றாலும், மலேசியா (4.72%), தாய்லாந்து (4.99%), சீனா (4.3%) ஆகிய நாடுகளுடன் ஒப்பிடும்போது மிகவும் குறைவு.
  • ஆயுள் காப்பீட்டின் வளர்ச்சி குறைந்திருக்கிறது என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
  • 2013இல் 3.1%ஆக இருந்தது, 2019இல் 2.82%ஆகக் குறைந்திருக்கிறது. ஆயுள் காப்பீடு அல்லாத பொதுக் காப்பீடும் போதுமான வளர்ச்சியைப் பெறவில்லை.

வேலைவாய்ப்பு அதிகரிக்குமானால், மகிழ்ச்சி!

  • சர்வதேச அளவில் பார்க்கும்போது ஆயுள் காப்பீட்டுத் துறை 3.35%ஆகவும், பொதுக் காப்பீட்டுத் துறை 3.88%ஆகவும் இருக்கும்போது இந்தியாவில் அதுவே 2.8%ஆகவும், 0.94%ஆகவும் இருப்பதை சுட்டிக்காட்டுகிறார்கள் காப்பீட்டுத் துறை நிபுணர்கள்.
  • மொத்த மக்கள்தொகைக்கும் காப்பீட்டுக் கட்டணத்துக்குமான விகிதம் 2001இல் 11.5 டாலராக இருந்தது, 2019இல் 78 டாலராக இந்தியாவில் அதிகரித்திருக்கிறது.
  • ஆனால், மலேசியா (536 டாலர்), தாய்லாந்து (389 டாலர்), சீனா (430 டாலர்) ஆசிய பொருளாதாரங்களுடன் ஒப்பிடும்போது நாம் மிகமிகக் குறைவான அளவிலேயே காப்பீடு செய்துகொள்கிறோம்.
  • காப்பீட்டுத் துறை இந்தியாவில் வளர்ச்சி அடையாமல் இருப்பதற்கும், காப்பீடு குறித்த விழிப்புணர்வு இல்லாமல் இருப்பதற்கும் காப்பீட்டு நிறுவனங்கள் பரவலாகக் கிளைகள் தொடங்கி தங்களை விரிவுபடுத்திக் கொள்ளாமல் இருப்பது முக்கியமான காரணம்.
  • தனியார் காப்பீட்டு நிறுவனங்களையும் உள்ளடக்கி மத்திய மாநில அரசுகள் மருத்துவக் காப்பீடு, பயிர்க் காப்பீடு போன்றவற்றில் பங்களிப்பதால்தான் இந்த அளவுக்காவது காப்பீட்டுத் துறை வளர்ச்சி அடைந்திருக்கிறது.
  • அந்நிய நேரடி முதலீட்டை அதிகரிப்பதன் மூலம் தனியார் காப்பீட்டு நிறுவனங்கள் தங்களது செயல்பாடுகளை விரிவுபடுத்தி காப்பீட்டுப் பரவலை அதிகரிக்க முடியும் என்பது எதிர்பார்ப்பு.
  • காப்பீட்டுத் துறையில் 74% அந்நிய நேரடி முதலீடு அனுமதிக்கப்பட்டாலும், காப்பீடு செய்பவர்களின் கட்டணம் இந்தியாவில்தான் முதலீடு செய்யப்படுமே தவிர, வெளிநாடுகளுக்கு எடுத்துச் செல்ல அனுமதி வழங்கப்படவில்லை.
  • காப்பீட்டுத் துறையில் கூடுதல் நிறுவனங்கள் பங்கு பெறுவதால் ஏற்படும் ஆரோக்கியமான போட்டியால் காப்பீட்டுக் கட்டணம் குறைந்து நுகர்வோருக்கு கூடுதல் பலன்கள் கிடைக்கும் என்பது நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் எதிர்பார்ப்பு.
  • ஏற்கெனவே அனுமதிக்கப்பட்டிருக்கும் 49% அந்நிய நேரடி முதலீடு முழுமையாக பயன்படுத்தப்படவில்லை என்பதும், ஆயுள் காப்பீட்டிலும், பொதுக் காப்பீட்டிலும் தற்போதைய அந்நிய முதலீடு குறைவாக இருப்பதும், வெளிநாட்டு முதலீட்டாளர்களின் அக்கறையின்மையை வெளிப்படுத்துகிறது.
  • 74% ஆக அந்நிய நேரடி முதலீடு அதிகரிக்கப்படுவதால், முதலீட்டாளர்களின் தயக்கம் அகலுமானால் நல்லது.
  • அரசுத் துறையோ தனியார் துறையோ, உள்ளூர் முதலீடோ அந்நிய முதலீடோ எதுவாக இருந்தாலும் காப்பீட்டுத் துறை பரவலாக விரிவடைந்து இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு அதிகரிக்குமானால், மகிழ்ச்சி!

நன்றி: தினமணி  (25 – 03 - 2021)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்