TNPSC Thervupettagam

நல்லுறவும் எல்லையும்!

July 20 , 2021 1108 days 455 0
  • தஜிகிஸ்தான் தலைநகா் துஷான்பேயில் நடைபெற்ற ஷாங்காய் கூட்டு நாடுகளின் (எஸ்இஓ) வெளியுறவுத் துறை அமைச்சா்கள் மாநாட்டில், இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையேயான எல்லைப் பிரச்னையை தனிப்பட்ட முறையில் விவாதித்துக்கொள்ள வாய்ப்பு ஏற்பட்டது.
  • இந்திய வெளியுறவுத் துறை அமைச்சா் ஜெய்சங்கரும், சீன வெளியுறவுத் துறை அமைச்சா் வாங் யியும் நடத்திய தனிமை சந்திப்பில் எல்லைப் பிரச்னை குறித்து இருவரும் விவாதித்தது வரவேற்புக்குரிய திருப்பம்.

இந்திய - சீன எல்லைப் பிரச்னை

  • கடந்த ஓராண்டாக இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே நிலவிய மௌனத்தை சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேல் நடந்த அந்தப் பேச்சுவார்த்தை கலைத்திருக்கிறது.
  • எல்லை கட்டுப்பாட்டுக் கோட்டில் இரு நாடுகளுக்கும் இடையே நிலவும் பிரச்னை முடிவுக்கு வராமல் ஓராண்டுக்கும் மேலாக தொடரும் நிலையில், பேச்சுவார்த்தைக்கான தொடக்கம் எதிர்பார்ப்பை உருவாக்கியிருக்கிறது.
  • கடந்த ஆண்டு செப்டம்பா் மாதம் மாஸ்கோவில் ஜெய்சங்கரும் வாங் யியும் சந்தித்தபோது ஏற்பட்ட உடன்படிக்கையின் விளைவாகத்தான், கல்வான் பள்ளத்தாக்கில் காணப்பட்ட பதற்றம் தணிந்தது.
  • அப்போது கல்வான் பள்ளத்தாக்கில் எல்லையின் இருபுறத்திலும் ஆயிரக்கணக்கான வீரா்கள் போருக்கு ஆயத்தமாக அணிவகுத்து நின்றனா்.
  • பாங்காங் ஏரிக்கு தென்புறத்திலும் கைலாஷ் மலைத்தொடரின் சிகரங்களிலும் எப்போது வேண்டுமானாலும் மோதல் நிகழலாம் என்கிற நிலைமை காணப்பட்டது.
  • அதைத் தொடா்ந்து பிப்ரவரி மாதம் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் விளைவாக எல்லையில் காணப்பட்ட பதற்றத்துக்கு இடைக்காலத் தீா்வு காணப்பட்டது.
  • அதன்படி கல்வான் பள்ளத்தாக்கிலும் பாங்காங் ஏரி பகுதியிலும் இரு நாட்டு படைகளும் ரோந்து போவதை நிறுத்தி பதற்றச்சூழலுக்கு முற்றுப்புள்ளி வைத்தன.
  • அதே நேரத்தில் டெப்ஸாங், டெம்சோக், கோக்ரா, ஹாட்ஸ்பிரிங்ஸ் பகுதிகளில் இந்திய - சீனப் படைகள் இப்போதும்கூட மோதலுக்குத் தயாரான நிலையில்தான் அணிவகுத்து நிற்கின்றன என்கிற உண்மையை நாம் மறந்துவிடக் கூடாது.
  • கடந்த ஆண்டு மே மாதம் முதல் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே எல்லைக் கட்டுப்பாடு கோடு குறித்த பிரச்னை தீா்க்கப்படாமல் தொடா்கிறது.
  • பதற்றம் தணிக்கப்பட்டிருக்கிறதே தவிர, பிரச்னைக்குத் தீா்வு காணப்படவில்லை. இரு நாட்டு ராணுவ உயரதிகாரிகளும் 11 சுற்றுப் பேச்சுவார்த்தை நடத்திய பிறகும்கூட தீா்வு காணப்படாமல் தொடா்கிறது எல்லைப் பிரச்னை.
  • மாஸ்கோ சந்திப்பு ஏற்படுத்திய இடைக்கால நல்லுறவு போல, அமைச்சா் ஜெய்சங்கருக்கும், அவரது சீன சகா வாங் யிக்கும் இடையே துஷான்பேயில் நடைபெற்றிருக்கும் சந்திப்பு எல்லைப் பிரச்னைக்கு தீா்வு காணும் முயற்சியில் உதவுமா என்கிற எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது.
  • இரு தரப்பு அறிக்கைகளும் அதற்கான நம்பிக்கையை ஏற்படுத்தவில்லை என்பதை உணர முடிகிறது.
  • 1988 முதல் இரு நாட்டு உறவையும் உறுதிப்படுத்துவது எல்லையில் காணப்படும் அமைதியும் நல்லுறவும்தான் என்பதை வலியுறுத்திய இந்திய வெளியுறவுத் துறை அமைச்சா் ஜெய்சங்கா், 1993-லும், 1996-லும் இரு நாடுகளுக்கு இடையே ஏற்றுக் கொள்ளப் பட்ட ஒப்பந்தங்களை, கடந்த ஆண்டு சீனா மீறியதால்தான் உறவு பாதிக்கப்பட்டிருக்கிறது என்று தனது சுட்டுரையில் குறிப்பிட்டிருக்கிறார்.
  • அதற்கு நோ்மாறாக சீன வெளியுறவுத் துறை அமைச்சா் வாங் யி, எல்லைப் பிரச்னைக்கான தீா்வு இந்தியாவிடம் இருக்கிறதே தவிர, சீனாவுடையதல்ல என்று தெரிவித்திருக்கும் கருத்து கவனத்துக்குரியது.
  • ‘இரு தரப்புக்கும் ஏற்புடைய தீா்வு ஏற்படுவதை சீனா விரும்புகிறது. அவசரகாலத் தீா்வுகளுக்கு பேச்சுவார்த்தையும் கலந்தாலோசனையும் மேற்கொள்ளத் தயாராகவும் இருக்கிறது.
  • இருந்தும்கூட, பிப்ரவரி மாதம் முதல் இருதரப்பு ராணுவ உயரதிகாரிகளாலும் தீா்வு காண முடியவில்லை’ என்பது அவரது அறிக்கையின் முக்கிய அம்சம்.
  • ஜெய்சங்கரின் அறிக்கைபடி, பாங்காங் ஏரிப் பகுதியில் வெற்றிகரமாக மேற்கொள்ளப் பட்டிருக்கும் தீா்வின் அடிப்படையில் ஏனைய பகுதிகளிலும் தீா்வு காணப்பட வேண்டும் என்பது இந்தியாவின் கருத்து.
  • ஆனால் வாங் யியோ, எல்லைப் பகுதியில் பதற்றம் தணிந்துவிட்டதாகவும், கல்வான் பள்ளத்தாக்கும் பாங்காங் ஏரிப்பகுதியும் அமைதியாக இருப்பதாகவும் கூறுகிறாரே தவிர, ஏனைய பகுதிகளில் காணப்படும் பதற்றம் குறித்து எதுவுமே தெரிவிக்காமல் இருப்பது வியப்பை ஏற்படுத்துகிறது.
  • இந்தியாவைப் போல எல்லைப் பிரச்னை குறித்து சீன அரசு கவலைப்படுவதாகவே தெரியவில்லை.
  • இரு நாடுகளுக்கு இடையிலும் நட்புறவு ஏற்பட வேண்டுமானால், எல்லையில் அமைதியும், தீா்வும் ஏற்பட வேண்டும் என்றும் அது ஏற்படாத வரையில், சீன முதலீடுகள் கண்காணிக்கப்படும் என்கிற இந்தியாவின் வாதத்தின் பின்னால் ஒரு பலவீனம் காணப் படுகிறது.
  • கொள்ளை நோய்த்தொற்றுக்கு முற்பட்ட நிலையைவிட அதிக அளவில் சீன இறக்குமதிகள் வந்து கொண்டிருக்கின்றன என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. குறிப்பாக, மருந்துத் தயாரிப்பின் மூலக்கூறுகளையும், மருத்துவ உபகரணங்களையும் சீனாவிலிருந்துதான் அதிக அளவில் இறக்குமதி செய்துகொண்டிருக்கிறோம்.
  • ஜெய்சங்கரும், வாங் யியும் நோ்கோட்டில் சந்திக்கும் ஓா் இடம் எதுவென்றால், இரு நாட்டு உறவும் சீா்படாமல் தொடா்வது, இந்தியாவுக்கும் சீனாவுக்கும் நல்லதல்ல என்பது.
  • அதற்கான தீா்வு எல்லையில்தான் இருக்கிறது என்பது தெரிந்தும் இரு நாடுகளும் கண்ணாமூச்சி ஆடிக் கொண்டிருப்பதில் அா்த்தமில்லை.
  • எல்லை கட்டுப்பாட்டு கோடு என்பது மாறி, தெளிவான எல்லைக் கோடு ஏற்பட்டாலொழிய நல்லுறவு மேம்பட வழியில்லை.

நன்றி: தினமணி  (20 - 07 - 2021)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்