TNPSC Thervupettagam

நவிர மலை என்று அழைப்போமே

August 1 , 2023 342 days 388 0
  • கிழக்கு மலைத் தொடர் இந்தியாவில் உள்ள மிகவும் பழமையான மலைத் தொடர். மேற்கு மலைத் தொடரைப் போல உயரமானதும் தொடர்ச்சியானதும் அல்ல என்றாலும் வளமையானது. இதன் ஒரு கூறே ஜவ்வாது மலை. இம்மலை வடக்கே வேலூரில் (அமிர்தி) தொடங்கி, தென்மேற்கே சிங்காரப்பேட்டையில் முடிவடைகிறது.

வளமான மலை:

  •  இது 400க்கும் மேற்பட்ட மலைகளையும் மலைச்சாரல் ஊர்களையும் 2,00,000க்கும் மேற்பட்ட மக்களையும் கொண்ட வளமான மலைப் பகுதி. ஏறத்தாழ 250 கி.மீ. சுற்றளவு கொண்ட இம்மலையில் வாழும் மக்கள் பெரும்பாலும் அருகில் உள்ள மற்ற ஊர்களோடு தொடர்பில்லாமல் இருக்கிறார்கள். ஆனால், அனைவரும் ஜவ்வாது மலைவாழ் மக்களே. இம்மலை முழுவதும் எண்ணற்ற ஓடைகள், அருவிகள், சுனைகள் உள்ளன. இவை அனைத்தும் பல்வேறு இடங்களில் ஆறுகளாக மாறுகின்றன.
  • வேளாண்மை, ஆடு மாடு வளர்த்தல், புளி சேகரித்தல், கடுக்காய் சேகரித்தல், தேனெடுத்தல், பலா, சீத்தா, கொய்யா உள்ளிட்ட பொருள்களைக் கீழ் நாடுகளுக்கு விற்றல் உள்ளிட்ட தொழில்கள் இம்மலைப் பகுதியில் சிறப்பாக நடைபெறுகின்றன. இம்மலையில் வாழக்கூடிய மக்கள் மலையாளிப் பழங்குடி மக்களாவர்.

ஆறுகள், அணைகள்:

  • ஜவ்வாது மலையின் கிழக்குப் புறமான கண்ணமங்கலம், போளூர், கலசபாக்கம், செங்கம் உள்ளிட்ட பகுதிகளில் செண்பகத் தோப்பு அணை, மிருகண்டா அணை, குப்ப நத்தம் அணை உள்ளிட்ட பெரிய அணைகள் செய்யாறு, கமண்டல நாகநதி உள்ளிட்ட ஆறுகளுக்கு நடுவே கட்டப்பட்டுள்ளன.
  • வளமான நீரோட்டம் உள்ளதால் இம்மலை வேளாண்மையில் செழித்தோங்கி உள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்துக்கு உள்பட்ட ஜவ்வாது மலையில் உள்ள மேல்பட்டுக் கிராமத்தில், வேளாண் பொருள்களை ஏற்றுமதி செய்யும் வணிகக் குழுவான சித்திரமேழிப் பெரிய நாட்டார் வணிகக் குழுவினர் வந்து சென்றுள்ளதைச் சித்திரமேழிக் கல்வெட்டு ஒன்று வெளிப்படுத்துகிறது.

நவிர மலை:

  • சங்க இலக்கிய நூல் தொகுதியான பத்துப்பாட்டின் பத்தாவது நூலான ‘மலைபடுகடாம்’ என்ற நூல், சேயாற்றங்கரையில் (செய்யாறு) பழவிறன் மூதூர் (செங்கண்மா செங்கம்) அமைந்திருந்ததாகப் பதிவுசெய்கிறது. இம்மலையை நன்னன் சேய் நன்னன் என்னும் சிற்றரசன் அரசாண்டு வந்துள்ளான்.
  • அவனுடைய மலையின் பெயர் நவிர மலை என்று இரண்டு இடங்களில் ‘மலைபடுகடாம்’ பதிவுசெய்கிறது. இன்னும் இரண்டு இடங்கள் நவிர மலையில் காரியுண்டிக் கடவுள் (சிவன்) உறைகிறார் என்றும், மழைவளம் மிக்கதும் மூங்கில்கள் செழித்து வளர்ந்திருப்பதுமான மலை நவிர மலை என்றும் பதிவிடுகின்றன.
  • திருப்பத்தூர் மாவட்டத்துக்கு உள்பட்ட புதூர்நாடு, புங்கம்பட்டு நாடு, நெல்லிவாசல் நாடுகளுக்கு உள்பட்ட ஜவ்வாது மலைப் பகுதிகளில் 12 இடங்களில் நவிர மலை என்று பொறிக்கப்பட்டுள்ள கல்வெட்டுகள், எழுத்துடை நடுகற்கள் இந்தக் கட்டுரையாளரின் ஆய்வுக் குழுவால் கண்டறியப்பட்டுள்ளன. நவிர மலை என்னும் பெயர் தாங்கிய கல்வெட்டுகளையும் காணலாம்.
  • இவை பல்லவர் காலம், சோழர் காலம், விஜயநகர காலம் என்று பொ.ஆ. (கி.பி.) 7 ஆம் நூற்றாண்டிலிருந்து பொ.ஆ. 16ஆம் நூற்றாண்டு வரையிலான கல்வெட்டுகளாகும். ‘மலைபடுகடாம்’ நூலின் காலம் பொஆ.மு. (கி.மு.) 1 ஆம் நூற்றாண்டாகும். எனவே, பொ.ஆ.மு 1 இலிருந்து பொ.ஆ. 16ஆம் நூற்றாண்டு வரை இம்மலை நவிர மலை என்றே அழைக்கப்பட்டுள்ளது.
  • பொ.ஆ. 17 ஆம் நூற்றாண்டுக்குப் பிறகே முகமதியர் அல்லது ஐரோப்பியர் காலகட்டத்தில்தான் இம்மலை ஜவ்வாது மலை எனப் பெயர் மாற்றம் பெற்றுள்ளது. சந்தனம், தேக்கு உள்ளிட்ட வாசம் மிகுந்த மரங்களும் புனுகுப் பூனை உள்ளிட்ட வாசனைப் பொருள் தரும் உயிரினங்களும் இங்கு வாழ்ந்த காரணத்தினால், இம்மலை வாசனையின் குறியீடாக உள்ள ஜவ்வாது என்னும் முன்னொட்டைப் பெற்று ஜவ்வாது மலை என மாறியிருக்கிறது.
  • இம்மலையின் பண்டைய பெயரான நவிர மலை என்னும் பெயரை மீண்டும் இம்மலைக்குச் சூட்ட வேண்டும் என்று தமிழக அரசுக்குக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எனவே, ஜவ்வாது மலையின் பண்டைய பெயரை அரசு ஆவணங்கள், பெயர்ப் பலகைகள் உள்ளிட்ட அனைத்திலும் மாற்றம் செய்து, சங்க இலக்கியப் பெயரான நவிர மலை என்னும் பெயரை மீட்டுருவாக்கம் செய்தால் தமிழின் தொன்மையும் சிறப்பும் மீட்டெடுக்கப்படும்.

நவிர மலை மாவட்டம்:

  • பரந்துபட்ட இம்மலை இன்றைக்குத் திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர் மாவட்டங்களில் இருப்பதால், மலைவாழ் மக்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகிறார்கள். எனவே, ஜமுனாமரத்தூரை மையப்படுத்தி நவிர மலை மாவட்டம் ஒன்றை நிர்வாக வசதிக்காகத் தமிழக அரசு ஏற்படுத்தும் சூழலில், நவிர மலை என்ற மாவட்டச் சொல் வழக்கு தமிழகம் முழுக்கச் சென்று சேரும்.

நன்றி: இந்து தமிழ் திசை (01 – 08 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்