TNPSC Thervupettagam

நவீன இந்தியாவில் அறிவியல் மற்றும் தொழில் நுட்பம் – IV

August 9 , 2019 1981 days 5842 0
விண்வெளித் திட்டங்கள்
  • செயற்கைக் கோள்களைப் பயன்படுத்தும் செயல்பாடுகள் அமெரிக்காவில் சோதனை நிலைகளில் இருந்த சமயத்திலேயே 1960களில் இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சி நடவடிக்கைகள் தொடங்கப்பட்டன.
  • அணு சக்தித் துறையானது முதல் கட்டமாக, 1962 ஆம் ஆண்டில் சாராபாய் மற்றும் இராமநாதன் ஆகியோரின் தலைமையில் விண்வெளி ஆராய்ச்சிக்கான இந்திய தேசியக் குழுவை அமைத்தது.
  • 1969 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 அன்று இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) உருவாக்கப்பட்டது.

  • இது விண்வெளித் தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதையும் அதன் பயன்பாட்டைத் தேசத்தின் பல்வேறு தேவைகளுக்குப் பயன்படுத்துவதையும் பிரதான நோக்கமாகக் கொண்டது.
  • இது உலகின் ஆறு மிகப்பெரிய விண்வெளி நிறுவனங்களில் ஒன்றாகும்.

  • விண்வெளித் துறை மற்றும் விண்வெளி ஆணையம் ஆகியவை 1972 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டன. 1972 ஆம் ஆண்டு ஜூன் முதல் இஸ்ரோவானது விண்வெளித் துறையின் கீழ் கொண்டு வரப்பட்டது.
  • இந்திய விண்வெளித் திட்டமானது ஆரம்பத்திலிருந்தே, நன்கு திட்டமிடப்பட்ட மூன்று தனித்துவமான கூறுகளைக் கொண்டுள்ளது. அவை
    • தொலைத்தொடர்பு மற்றும் தொலை நுண்ணுணர்விற்கான செயற்கைக் கோள்கள்
    • விண்வெளிப் போக்குவரத்து அமைப்பு மற்றும்
    • பயன்பாட்டுத் திட்டங்கள்
  • கீழ்க்காணும் இரண்டு பெரிய செயல்பாட்டு அமைப்புகள் நிறுவப் பட்டன.
    • தொலைத் தொடர்பு, தொலைக்காட்சி ஒளிபரப்புகள் மற்றும் வானிலை ஆய்வு சேவைகளுக்கான இந்தியத் தேசிய செயற்கைக் கோள்
    • இயற்கை வளங்களை கண்காணித்தல் மற்றும் நிர்வகித்தல், பேரிடர் மேலாண்மை உதவி ஆகியவற்றிற்கான இந்திய தொலையுணர் செயற்கைக் கோள்.

விண்வெளி ஆராய்ச்சி நிறுவனங்கள்

I.விக்ரம் சாராபாய் விண்வெளி மையம்

  • திருவனந்தபுரத்தில் அமைந்துள்ள இம்மையமானது செயற்கைக்கோள் ஏவு வாகனங்கள் மற்றும் அதனுடன் தொடர்புடைய தொழில்நுட்பத்தின் மேம்பாட்டிற்கானதாகும்.

II.இஸ்ரோ செயற்கைக்கோள் மையம்

  • பெங்களூருவில் அமைந்துள்ள இந்த மையமானது செயற்கைக் கோள் தொழில்நுட்பத்தை உருவாக்குதல், அறிவியல் தொழில்நுட்ப மற்றும் பயன்பாடுகளுக்கான செயற்கைக் கோள் அமைப்பை செயல்படுத்துதல் ஆகியவற்றுக்கான தலைமை மையமாகும்.

III.சதீஷ் தவான் விண்வெளி மையம் - ஸ்ரீஹரிகோட்டா

  • இது இஸ்ரோவின் முக்கிய ஏவுதளமாகும். மேலும் திட உந்து வார்ப்புக்கலன், திட இயந்திர்களுக்கான நிலைத் தன்மை சோதனை, ஏவு வாகனங்களைக் கட்டமைத்தல் மற்றும் அதனை விண்ணில் செலுத்தும் நடவடிக்கைகள், தொலை அளவியல் கண்காணிப்பு மற்றும் கட்டளை அமைப்பு, திட்ட கட்டுப்பாட்டு மையம் ஆகியவற்றை உள்ளடக்கிய எல்லை வரம்பு செயல்பாடு ஆகியவற்றிற்கான வசதிகளையும் இது கொண்டுள்ளது.

IV.திரவ உந்து அமைப்பு மையம்

  • இது ஏவு வாகனங்கள் மற்றும் செயற்கைக் கோள்களுக்கான திரவ மற்றும் கிரையோஜெனிக் உந்து வடிவமைப்பு மற்றும் மேம்பாட்டிற்கான முன்னணி மையமாகும்.
  • இது திருவனந்தபுரம் மற்றும் பெங்களூரில் அமைந்துள்ளது.
  • இந்த மையமானது தமிழ்நாட்டின் மகேந்திரகிரியில் உள்ள உந்து வடிவமைப்பு வளாகத்தால் மேம்படுத்தப் படுகின்றது.

V.விண்வெளிப் பயன்பாட்டு மையம்

  • அகமதாபாத்தில் அமைந்துள்ள இந்த மையமானது தகவல் தொடர்பு, வானிலை மற்றும் தொலையுணர் செயற்கைக் கோள்களுக்கான உள்ளக கருவிகளை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது.

VI.மேம்பாடு மற்றும் கல்வித் தொடர்பு பிரிவு

  • அகமதாபாத்தில் அமைந்துள்ள இந்தப் பிரிவானது விண்வெளியியல் பயன்பாடுகளுக்கான புத்தாக்க வடிவமைப்பின் கருத்தாக்கம், வரையறை, திட்டமிடல், செயலாக்கம் மற்றும் சமூகப் பொருளாதார மதிப்பீடு ஆகியவற்றில் ஈடுபட்டுள்ளது.

 

 

VII.இஸ்ரோ தொலை அளவியல், கண்காணிப்பு மற்றும் கட்டளையிடும் அமைப்பு

  • இது தாழ் புவி சுற்றுவட்டப் பாதை செயற்கைக் கோள்களுக்கும் ஏவு வாகனப் பயணங்களுக்கும் திட்ட ஆதரவை வழங்குகிறது.
  • மேலும் இது தனது கண்காணிப்பு நிலையங்களை இந்தியா முழுவதிலும் மொரீஷியஸின் போர்ட் லூயிஸ், ரஷ்யாவின் பியர்ஸ்லேக், இந்தோனேசியாவின் பியாக் மற்றும் புருனே உள்ளிட்ட உலகின் பல்வேறு நாடுகளிலும் கொண்டுள்ளது.

VIII.முதன்மை கட்டுப்பாட்டு வசதி

  • கர்நாடகாவின் ஹாசன் மற்றும் மத்தியப் பிரதேசத்தின் போபால் ஆகிய இடங்களில் உள்ள இந்த மையமானது இஸ்ரோவின் புவிநிலை சுற்றுப் பாதையில் உள்ள அனைத்து செயற்கைக் கோள்களையும் கண்காணித்துக் கட்டுப்படுத்துகின்றன.

IX. இஸ்ரோ நிலைத்தன்மை அமைப்புப் பிரிவு

  • திருவனந்தபுரத்தில் உள்ள இந்த மையமானது நிலைமாற்ற உணர்விகள் மற்றும் அமைப்புகளில் ஆய்வுகள் மற்றும் மேம்பாட்டை மேற்கொள்கின்றது.

X.தேசிய தொலையுணர் நிறுவனம்

  • ஹைதராபாத்தில் உள்ள இந்த அமைப்பானது விண்வெளித் துறையின் கீழ் அமைந்துள்ள ஒரு தன்னாட்சி பெற்ற நிறுவனமாகும்.
  • இந்த நிறுவனமானது செயற்கைக் கோள் தரவுகளை கையகப் படுத்துதல் மற்றும் செயலாக்கத் தரவைப் பரப்புதல், வான்வழி தொலையுணர்தல் மற்றும் பேரிடர் மேலாண்மையில் முடிவுகள் எடுக்க ஆதரவு அளித்தல் ஆகியவற்றிற்குப் பொறுப்புடையதாகும்.

XI.இயற்பியல் ஆராய்ச்சியகம்

  • அகமதாபாத்தில் உள்ள இந்த தன்னாட்சிப் பெற்ற ஆய்வகமானது விண்வெளித் துறையால் முக்கியமாக ஆதரிக்கப் படுகின்ற ஒரு மையமாகும்.
  • இது வானியில், வான் இயற்பியல், புவி அறிவியல், கோள் அறிவியல், விண்வெளி அறிவியல் மற்றும் அடிப்படை அறிவியல் ஆகியவற்றில் பல்துறை ஆய்வு மேற்கொள்ளும்.

XII.தேசிய வளிமண்டல ஆராய்ச்சி மையம்

  • திருப்பதிக்கு அருகில் அமைந்துள்ள தன்னாட்சிப் பெற்ற இந்த மையமானது விண்வெளித் துறையால் ஆதரிக்கப் படுகின்றது.
  • இது இடை மண்டலம், படை மண்டலம், அடிவளி மண்டலம், ரேடார், லைடார் போன்றவற்றிற்கான வளிமண்டல ஆராய்ச்சி வசதிகளைக் கொண்ட முதன்மை ஆய்வு மையமாகும்.

XIII. பிராந்திய தொலையுணர் சேவை மையங்கள்

  • பெங்களூரு, ஜோத்பூர், கரக்பூர், டேராடூன் மற்றும் நாக்பூர் ஆகிய ஐந்து இடங்களில் இந்த மையமானது விண்வெளித் துறையால் நிறுவப்பட்டுள்ளது.
  • இம்மையமானது பல்வேறு குறிப்பிட்ட தொலையுணர் சம்பந்தப்பட்ட   பணிகளில் தங்கள் பிராந்தியங்களுக்கும் தேசிய அளவிற்கும் உதவுகின்றது.

XIV. வடகிழக்கு - விண்வெளிப் பயன்பாட்டு மையம்

  • விண்வெளித் துறை மற்றும் வடகிழக்கு குழு ஆகியவற்றின் கூட்டு முயற்சியால் உருவான இம்மையம் ஷில்லாங்கில் அமைந்துள்ளது.
  • இது விண்வெளி அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வடகிழக்குப் பிராந்தியத்தின் மேம்பாட்டிற்கான ஆதரவை அளிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

XV. ஆந்த்ரிக்ஸ் நிறுவனம்

  • இது இஸ்ரோவின் வணிகப் பிரிவாகும்.
  • இஸ்ரோவின் தயாரிப்புகள், சேவைகள் மற்றும் தொழில்நுட்பங்களை ஊக்குவிப்பதே இதன் நோக்கமாகும்.
  • இந்திய அரசுக்குச் சொந்தமான இந்த நிறுவனமானது செப்டம்பர் 28, 1992 ஆம் ஆண்டு ஒரு வரையறுக்கப்பட்ட தனியார் நிறுவனமாக ஆரம்பிக்கப் பட்டது.
  • இது விண்வெளித் துறையால் நிர்வகிக்கப் படுகின்றது.

XVI. குறைமின் கடத்தி ஆய்வகம், சண்டிகார்

  • இது மிகப்பெரிய அளவிலான ஒருங்கிணைப்புக் கருவிகளை வடிவமைத்து மேம்படுத்துவதற்காகவும் தொலைத்தொடர்பு மற்றும் விண்வெளித் துறை ஆகியவற்றிற்கான சாதனங்களை உருவாக்குவதற்காகவும் நிறுவப் பட்டதாகும்.

XVII. நியூஸ்பேஸ் இந்தியா நிறுவனம்

  • இஸ்ரோவின் புதிய வணிகப் பிரிவான நியூஸ்பேஸ் இந்தியா நிறுவனமானது 2019 ஆம் ஆண்டில் பெங்களூரில் அதிகாரப் பூர்வமாக நிறுவப்பட்டது.
  • இது தொழில்துறையில் விண்வெளி தொடர்பான அனைத்து நடவடிக்கைகளுக்கும் ஒருங்கிணைப்பாளராகச் செயல்படும்.
  • மேலும் இது, விண்வெளி தொடர்பான தொழில்நுட்பங்களில் தனியார் தொழில் முனைவோரை வளர்க்கும்.

 

செலுத்து வாகனங்களின் வகைகள்

I.செயற்கைக்கோள் செலுத்து வாகனம்

  • செயற்கைக்கோள் செலுத்து வாகனம் என்பது நான்கு நிலைகளிலும் திட எரிபொருளைக் கொண்ட இந்தியாவின் முதல் செயற்கைக்கோள் சோதனை செலுத்து வாகனமாகும்.
  • செயற்கைக்கோள் செலுத்து வாகனம்-3 (SLV-3/Satellite Launch Vehicle) ஆனது 1980 ஆம் ஆண்டு ஜூலை 18 அன்று ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து விண்ணிற்குச் செலுத்தப்பட்டு RS-1 என்ற ரோஹிணி செயற்கைக்கோள்  ஆனது சுற்றுப் பாதையில் நிலை நிறுத்தப்பட்டது.
  • இதன் வெற்றி விண்வெளிப் பயணம் மேற்கொள்ளும் நாடுகளின் பிரத்தியேக குழுவில் இந்தியாவை ஆறாவது உறுப்பினராக்கியது.

II.மேம்படுத்தப்பட்ட செயற்கைக்கோள் செலுத்து வாகனம் - ASLV

  • மேம்படுத்தப் பட்ட செயற்கைக்கோள் செலுத்து வாகனத்  திட்டமானது SLV-3ன் திறனைவிட 3 மடங்கு அதிக அளவு எடை கொண்ட 150 கிலோ அளவிலான செயற்கைக்கோளை தாழ் புவி சுற்றுவட்டப் பாதையில் நிலைநிறுத்தும் திறனுடையதாக உருவாக்கும் பொருட்டு வடிவமைக்கப்பட்ட திட்டமாகும்.
  • இது 5 கட்ட திட உந்து எரிபொருளைக் கொண்டது.

  • இது முக்கியமான தொழில்நுட்பங்களை சரி பார்ப்பதற்கும்  நிரூபிப்பதற்கும்  ஏற்ற வகையில் குறைந்த செலவுடைய இடைநிலை செலுத்து வாகனம் என நிரூபிக்கப்பட்டது.
  1. துருவ செயற்கைக்கோள் செலுத்து வாகனம் - PSLV
  • துருவ செயற்கைக்கோள் செலுத்து வாகனமானது இந்தியாவின் மூன்றாம் தலைமுறை செலுத்து வாகனமாகும்.
  • திரவ எரிபொருள் நிலைகளைக் கொண்ட முதல் இந்திய செலுத்து வாகனம் இதுவேயாகும்.
  • அக்டோபர் 1994ல் தனது  வெற்றிகரமான முதல் ஏவுதலை மேற்கொண்ட இந்த வாகனமானது ஜுன் 2017க்குள் தொடர்ச்சியாக 39 வெற்றிகரமான பயணங்களை மேற்கொண்டு இந்தியாவின் நம்பகமான மற்றும் பல்திறன் வாய்ந்த செலுத்து வாகனமாக உருவானது.

 

  • இந்த வாகனம் 2008 ஆம் ஆண்டில் சந்திரயான் – 1 மற்றும் 2013 ஆம் ஆண்டில் செவ்வாய்க்கான சுற்றுப்பாதை விண்கலன் ஆகியவற்றை விண்ணுக்கு வெற்றிகரமாக அனுப்பியது. அவை முறையே சந்திரன் மற்றும் செவ்வாய் கோள்களுக்குப் பயணம் மேற்கொண்டன.

IV. புவி ஒத்திசைவு சுற்றுப் பாதை செயற்கைக்கோள் செலுத்து வாகனம் - GSLV

  • புவி ஒத்திசைவு சுற்றுப் பாதை செயற்கைக்கோள் செலுத்து வாகனம்-மார்க் என்பது இந்தியாவால் உருவாக்கப்பட்டு தற்போது செயல்பாட்டில் உள்ள மிகப்பெரிய செலுத்து வாகனமாக உள்ளது.

  • இந்த நான்காம் தலைமுறை செலுத்து வாகனமானது 4 திரவ உந்து கலன்களுடன் 3 நிலை எரிபொருள்களைக் கொண்டதாகும்.
  • உள்நாட்டிலேயேத் தயாரிக்கப்பட்டு வான்வழிச் சோதனை மூலம் நிரூபிக்கப்பட்ட கிரையோஜெனிக் உயர் கட்ட நிலையானது GSLV மார்க் II வாகனத்தின் மூன்றாவது நிலையில் உள்ளது.
  • 2014 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் இந்த வாகனமானது 4 அடுத்தடுத்த வெற்றிகளைப் பெற்றுள்ளது.
  1. ஜிஎஸ்எல்வி மார்க் III
  • ஜிஎஸ்எல்வி மார்க்-III ஆனது சந்திரயான்-II விண்கலத்தைச் செலுத்துவதற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட 3 நிலைகளைக் கொண்டதாக  இஸ்ரோவால் உருவாக்கப்பட்ட அதிக எடையைச் செலுத்தும் வாகனமாகும்.
  • இந்த வாகனமானது இரண்டு திட எரிபொருள் பட்டை உந்து கலனுடன் ஒரு மைய திரவ உந்து கலன் மற்றும் கிரையோஜெனிக் மேல்நிலை என 3 நிலைகளைக் கொண்டுள்ளது.
  • இந்த வாகனமானது புவி ஒத்திசைவு இடமாற்று சுற்றுப் பாதையில் 4 டன் எடை கொண்ட செயற்கைக் கோள்களையும் தாழ்புவி சுற்றுவட்டப்பாதையில் 10 டன் எடையுள்ள செயற்கைக் கோள்களையும் நிலை நிறுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
  • இது GSLV MKII-ஐ விட இரு மடங்கு திறனுடையது.
  • GSLVMKIII – M1 செலுத்து வாகனமானது 2019 ஆம் ஆண்டு ஜூலை 22 அன்று இந்தியாவின் சந்திரயானுக்கான இரண்டாவது விண்கலனை விண்ணில் செலுத்தியது.
  • மேலும் இது விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் இந்தியாவின் முதல் திட்டமான ககன்யானில் பயன்படுத்தப்பட இருக்கின்றது.

VI. மீண்டும் பயன்படுத்தக்கூடிய செலுத்து வாகனம்

  • மீண்டும் பயன்படுத்தக்கூடிய செலுத்து வாகன தொழில்நுட்ப செயல்நிலை விளக்க வாகனமானது இஸ்ரோவின் தொழில்நுட்ப ரீதியான சவாலான முயற்சிகளில் ஒன்றாகும்.
  • விண்வெளியை குறைந்த கட்டணத்தில் அணுகுதலைச் செயல்படுத்த முழுமையாக மீண்டும் பயன்படுத்தக்கூடிய செலுத்து வாகனத்திற்கான அத்தியாவசிய தொழில்நுட்பங்களை உருவாக்குவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இந்த வாகனத்தின் உள்ளமைவானது, செலுத்து வாகனம் மற்றும் விமானம் ஆகியவற்றின் சிக்கலான தொழில்நுட்பத்தை உள்ளடக்கிய ஒரு விமானத்தை ஒத்ததாகும்.
  • இறக்கைகளைக் கொண்டதாக இருக்கும் இந்த வாகனமானது மீயொலி வேக விமானம், தன்னியக்க தரையிறக்கம் மற்றும் ஆற்றல்மிகு பயண விமானம் என பல்வேறு தொழில்நுட்பங்களை மதிப்பிடுவதற்காக ஒரு பறக்கும் சோதனை தளமாகச் செயல்படுமாறு கட்டமைக்கப்பட்டுள்ளது.

 

- - - - - - - - - - - - - - -

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்