- படைப்பிலக்கியத்திற்கான கருவி நூலாக வெளிவந்திருக்கும் நூல், சுப்பிரமணி இரமேஷின் ‘படைப்பிலக்கியம்’. கல்விப்புலத்தில் பணிபுரியும் பேராசிரியர்களுள் பலர் சிற்றிதழ்களைக் கவனிப்பதில்லை. சிற்றிதழ்களில் எழுதும் எழுத்தாளர்கள் பலருக்கு மரபிலக்கியத்தில் பரிச்சயமோ பயிற்சியோ இல்லை. கல்விப் புலத்திற்கும் சிற்றிதழுக்கும் இடையில் பாலமாகச் செயல்படும் திறனாய்வாளர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். சுப்பிரமணி இரமேஷ் அப்படிப்பட்ட அரிய திறனாய்வாளர்.
- இருபது நூற்றாண்டுகளாகத் தமிழ்மொழி கடந்து வந்த இலக்கியப் பாதைகளை அடையாளம் காட்டும் வண்ணம், இந்த நூலைப் படைத்திருக்கிறார் அவர். சங்க இலக்கியம், அற இலக்கியம், பக்தி இலக்கியம், சிற்றிலக்கியம், நவீன இலக்கியம் முதலியவற்றில் ஆழ்ந்த அறிவும், நுட்பமும் இருந்தாலன்றி, இந்த நூல் சாத்தியமல்ல.
- கல்விப்புலத்தைச் சார்ந்தவராதலால் சுப்பிரமணி இரமேஷுக்குத் தமிழ் இலக்கிய வரலாறு குறித்த பரிச்சயமும் இருக்கிறது. நவீன இலக்கியத்தைப் புரிந்துகொள்ள அனுபவமும், உணர்வும், பயிற்சியும், மொழி குறித்த அறிவும் தேவை என்பதை உணர்ந்து, நூல் முழுவதும் இவற்றை வலியுறுத்தியுள்ளார்.
- தொல்காப்பியர், வள்ளுவர், இளங்கோவடிகள், கம்பர், காளமேகப் புலவர், பாரதி, பாரதிதாசன், மு.மேத்தா, சுகுமாரன், மீரா, பசுவய்யா, ஞானக்கூத்தன், பாஸோ, பூஸன், ஈரோடு தமிழன்பன், இன்குலாப், கனிமொழி, மனுஷ்யபுத்திரன் என்று தமிழின் முக்கியமான கவிஞர்களைச் சான்று காட்டி இந்நூலில் எழுதியுள்ளார்.
- கைலாசபதி, கா.சிவத்தம்பி, ஜெயமோகன், வல்லிக்கண்ணன், ராஜமார்த்தாண்டன், ஆ.இரா.வேங்கடாசலபதி, க.பூரணச்சந்திரன், தி.வே.கோபாலையர் போன்றவர்களையும் ஆழமாகக் கற்று, தகுந்த இடங்களில் அவர்களது கருத்துகளை மேற்கோள் காட்டியுள்ளார்.
- இதனைக் குறிப்பிடுவதற்குக் காரணம், எந்தவிதமான சார்பும் இல்லாமல் இலக்கியம் குறித்து நேர்மையாக எழுதப்பட்ட நூல் இது என்பதை வலியுறுத்தத்தான். ‘படைப்பிலக்கியம்’, ‘மரபுக் கவிதை’, ‘புதுக்கவிதை’, ‘நாடகம்’, ‘சிறுகதை’ ஆகிய ஐந்து தலைப்புகளில் எழுதப்பட்டுள்ள இந்த நூல், படைப்பிலக்கியத்தின் பல்வேறு தன்மைகளையும் நுட்பங்களையும் ஆழமாக விவரிக்கிறது.
- முதல் இயலில், படைப்பின் பல்வேறு தன்மைகள், அதன் வரையறை, அவை உருவாகும் முறைகள், மொழிநடை, அதன் வடிவங்கள் யாவற்றையும் விளக்கியுள்ளார். கபிலரில் தொடங்கி சுரேஷ்குமார இந்திரஜித் வரை, தமிழின் அனைத்துப் பரப்பையும் ஆழமாக வாசித்துள்ளார் என்பதை உணர முடிகிறது. படைப்பிலக்கியத்தில் காலடி எடுத்துவைப்பவர்களும் சரி, தீவிர வாசகர்களும் சரி, படைப்பை எப்படி அணுக வேண்டும் என்பதை உணர அவசியம் இப்பகுதியை வாசிக்க வேண்டும்.
- ‘மரபுக் கவிதை’ என்னும் இயல், யாப்பிலக்கண அடிப்படையில் அனைத்துப் பாவகைகளையும் அறிமுகப்படுத்திக் கவிதையின் ஆதார சுருதி என்ன என்பதைத் தெளிவுபடுத்தியுள்ளது. குறுந்தொகை, கலிங்கத்துப் பரணி, கம்பராமாயணம், பாஞ்சாலி சபதம், நாலாயிர திவ்வியப் பிரபந்தம் போன்ற நூல்களில் உள்ள அற்புதமான பாடல்களை இன்றைய வாசகர்களும் ரசிக்கும் வண்ணம் தந்துள்ளார்.
- ‘பஞ்சியொளிர் விஞ்சு குளிர் பல்லவம் அனுங்க’ என்னும் கம்பனின் கலிவிருத்தப் பாடல், சூர்ப்பனகையின் குணத்தையும் எவ்வாறு வெளிப்படுத்துகிறது என்பதைக் கூறும் இடம் ஓர் உதாரணம். கவிதையின் உத்திகளைக் கற்றுக்கொடுப்பதுடன், புறநானூறு, தனிப்பாடல் திரட்டு, குறுந்தொகை, ஐங்குறுநூறு முதலிய நூல்களின் கவிதைகளை எவ்வாறு உணர வேண்டும் என்பதைச் சொல்லுகின்ற பகுதிகள் சுப்பிரமணி இரமேஷின் நுண்மாண் புலமையை வெளிப்படுத்துகின்றன.
- ‘புதுக்கவிதை’ என்னும் இயலில் புதுக்கவிதையின் தோற்றம், வளர்ச்சிகளை வரலாற்றுரீதியாக விளக்குவதுடன், குறியீடு, படிமம், அங்கதம் போன்ற உத்திகளை விளக்க, சுகுமாரன், மனுஷ்யபுத்திரன், மு.மேத்தா, ஞானக்கூத்தன், தமிழன்பன், மீரா போன்ற கவிஞர்களின் கவிதைகளைத் தந்துள்ளார்.
- தமிழின் முக்கியப் படைப்பாளுமைகளின் கவிதைகளும் விவாதிக்கப்பட்டுள்ளன. ஹைக்கூ, தலித்தியக் கவிதைகள், பெண்ணியக் கவிதைகள் முதலியனவற்றின் தன்மைகளும் விளக்கப்பட்டுள்ளன. ‘நாடகம்’ என்னும் தலைப்பில் அமைந்த இயல், தமிழ் நாடக முன்னோடிகளான பம்மல் சம்பந்த முதலியார், சங்கரதாஸ் சுவாமிகள், பரிதிமாற்கலைஞர், அண்ணா, கலைஞர் மு.கருணாநிதி, ‘சோ’ ராமசாமி போன்றோரின் பங்களிப்புகளை விவரிக்கிறது.
- நவீன நாடகப் பிரதிகளின் தன்மைகளை எளிமையாகவும் ஆழமாகவும் விவரித்துள்ளார். ‘பல்லக்குத் தூக்கிகள்’ என்னும் நாடகத்தின் ஒரு பகுதியை அடையாளப்படுத்தியிருப்பது நவீன நாடகப் பரிச்சயமில்லாத வாசகர்களுக்குப் பயன் அளிக்கக் கூடும்.
- ‘சிறுகதை’ என்னும் பகுதியில் சாதாரண சிறுகதைக்கும், உணர்வுபூர்வமான சிறுகதைக்கும் உள்ள வேறுபாடுகளை விளக்கி, சிறுகதையின் நடை, தொடக்கம், வளர்ச்சி, முடிவு முதலியவற்றை புதுமைப்பித்தன், கு.ப.ராஜகோபாலன் போன்ற ஆளுமைகளின் படைப்புகளைக் கொண்டு விளக்கியுள்ளார். படைப்பில் ஈடுபட வேண்டும் என்கிற உணர்வையும் தூண்டும் வகையில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. சமகால இலக்கியங்களை ஆழமாகக் கற்க விரும்புபவர்களுக்குச் சுவாரசியமானதொரு நூல் இது.
நன்றி: இந்து தமிழ் திசை (31 – 03 – 2024)