TNPSC Thervupettagam

நாடக ராணி கையிலெடுத்த ‘டம்பாச்சாரி ’!

March 7 , 2025 5 days 43 0

நாடக ராணி கையிலெடுத்த ‘டம்பாச்சாரி ’!

  • புராணக் கதைகளை முழுவதுமாக உதறியெழுந்து வரமுடியாவிட்டாலும் தமிழ் நாடகம் சமூகக் கதைகளை நோக்கி நகரத் தொடங்கியது. அதற்கு சங்கரதாஸ் சுவாமிகள் போட்டுக் கொடுத்த அடித்தளம் தூண்டுகோலாக அமைந்தது. அதேபோல், ஆங்கிலேய ஆட்சியால் விளைந்த சமூக, அரசியல், கலாச்சார மாற்றங்களும் சமூக நாடகங்கள் எழுதப் பட முக்கியக் காரணமாக அமைந்தன. குறிப்பாக, 19ஆம் நூற்றாண்டில் தமிழ் அச்சுக்கலை மதராஸ் மாகாணத்தில் செழித்து வளர்ந்திருந்தது. புதிய எழுத்தாக்கங்கள் அச்சேறியது தமிழ் நாடகத்துக்கும் புது ரத்தம் பாய்ச்சியது.
  • கம்பெனிகள் நடத்தி வந்த நாடகங்களில் இடம்பெற்றிருந்த பாடல்கள், வசனம், கதைச்சுருக்கம் ஆகியன அடங்கிய ‘நாடக வசனப் புத்தக’ங்கள் மிகக் குறைந்த விலையில் வெளியிடப்பட்டது வாசகர்களை வெகுவாகக் கவர்ந்தது. ‘1873இல் தொடங்கி 1900 வரை சுமார் 286 கம்பெனி நாடகங்களின் நாடக, வசனப் புத்தகங்கள் அச்சாகி விற்பனைக்கு வந்தன’ என்கிற தகவலை எடுத்துக்காட்டுகிறார் ஆய்வாளர் தியடோர் பாஸ்கரன். நாடகக் கம்பெனிகள், அவற்றின் நாடகங்கள், நடிகர்கள், நாடக விமர்சனம் எனப் பலவிதமான தகவல்களைத் தாங்கி 1910இல் ‘நாடகாபிமானி’ என்கிற இதழும் வெற்றிகரமாக வெளிவந்தி ருக்கிறது.
  • அதேபோல், ஒருமுறை கூட மேடையேறாத புதிதாக எழுதப்பட்ட சமூக நாடகங்களும் அச்சில் வெளிவந்தன. அவற்றில் நாடகக் கம்பெனிகளை வெகுவாகக் கவர்ந்த ஒன்று ‘டம்பாச்சாரி விலாசம்’. திராவிடப் பகுத்தறிவு நாடகம், சினிமா இரண்டுக்கும் வலிமை சேர்த்த ‘ரத்தக் கண்ணீர்’, ‘டம்மாச்சாரி விலாசம்’ நாடகத்தின் நவீன வடிவம் என்பது மறுக்க முடியாத உண்மை.

ஊதாரிக் கணவனும் உத்தம மனைவியும்:

  • சைதாப்பேட்டையில் செல்வந்தர் குடும்பத்தில் பிறந்து வளர்ந்து, நீதித் துறையில் மொழிபெயர்ப்பாளராக வாழ்க்கையைத் தொடங்கி, மாவட்ட நீதிபதியாக உயர்ந்து ஓய்வுபெற்றவர் சைதாபுரம் காசி விஸ்வநாத முதலியார் (1806 -1871). அவர் எழுதி, 1867இல் அச்சிட்டு வெளியிட்ட ‘டம்பாச்சாரி விலாசம்’ என்கிற நாடகம் பெரும் புகழடைந்தது.
  • நீதிபதியாக இருந்த காலத்தில் தன்னிடம் விசாரணைக்கு வந்த பல வழக்குகளின் வாதி மற்றும் பிரதிவாதிகளின் வாழ்க்கைச் சம்பவங்கள் அவரைத் துணுக்குற வைத்தன. அவை தந்த தாக்கத்தின் அடிப்படையில் உண்மையான மனிதர்களின் வாழ்க்கையுடன் கற்பனை கலந்து அவர் எழுதியதே அவருடைய நாடகங்களின் புகழுக்குக் காரணம்.
  • அக்காலத்தில் பெற்றோர் சேர்த்து வைத்த செல்வத்தையெல்லாம் ‘டாம்பீக’மாகச் செலவு செய்து ஓட்டாண்டியாகி நொடித்துப் போகிறவர்களை ‘டம்பன்’, ‘டம்பாச்சாரி’ என அழைப்பது வழக்கம். அப்படியொரு டம்பனின் கதைதான் இந்த நாடகம். சிந்தாதிரிப்பேட்டையில் ஜமீன் குடும்பத்து வாரிசாக இருக்கும் நாயகன், ‘மதனசுந்தரி’ என்கிற பெண்ணின் மீது மோகமாகி செல்வம் அனைத்தையும் இழக்கிறான். ஒரு கட்டத்தில் மோகம் வடிந்து எல்லாவற்றையும் இழந்து மனம் திருந்தி நிற்கும்போது, அவனுடைய உத்தம மனைவி அவனை அரவணைத்துக் கடைத்தேற்றுகிறாள்.
  • இச்சையால் வீழும் ஒருவனை அவனது மனைவி தனது புத்திசாலித்தனத்தால் எப்படி மீட்டெடுக்கிறாள் என்கிற பெண்மையின் முக்கியத்துவம் பேசும் கதையாகவும் இந்த நாடகம் அமைந்து போனதால், கும்பகோணம் பாலாமணி அம்மாளை இந்த நாடகம் வெகுவாகக் கவர்ந்தது. பல நாடகக் கம்பெனிகள் இந்த நாடகத்துக்கு மேடை வடிவம் கொடுத்து அரங்கேற்றின. ஆனால், பாலாமணி கம்பெனியின் ‘டம்பாச்சாரி விலாசம்’ நாடகமே மதராஸ் மாகாணமெங்கும் பெரும் புகழ்பெற்றது.

யார் இந்த பாலாமணி?

  • ஒருபக்கம் சிறுவர்களை நடிகர்களாகக் கொண்ட பாய்ஸ் நாடகக் கம்பெனிகள் பெருகிப் புகழ்பெற்ற 19ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் சங்கரதாஸ் சுவாமிகளின் குழுவிலிருந்து கிளை பிரிந்தவர்கள் தவிர, நவாப் ராஜமாணிக்கத்தின் தேவி பால வினோத சங்கீத சபா, சுப்பா ரெட்டியின் புளியம்பட்டி சுப்பு பாலர் நாடக சபா, அருணாசலம் செட்டியாரின் ராம பால கான சபா, பக்கிரி ராஜா பிள்ளையின் மதுரை பால வினோத சங்கீத சபா, தெ.பொ.கிருஷ்ணசாமி பாவலரின் பால மனோகர சபா ஆகிய ‘பாய்ஸ் கம்பெனி’கள் புகழ்பெற்று விளங்கின.
  • பாய்ஸ் கம்பெனிகள் பெருகிச் செல்வாக்குப் பெற்றாலும் 18 வயதைக் கடந்த பெரிய நடிகர்களை அதிகமாகக் கொண்ட நாடக சபாக்களும் புகழோடு விளங்கவே செய்தன. அவற்றில். மணச்சநல்லூர் நவரச அலங்கார நாடக சபா, ரசிக ரஞ்சனி நாடக சபா, பி.எஸ் வேலு நாயரின் சண்முகானந்தா சபா, பாலாமணி கம்பெனி ஆகியவை சிறந்து விளங்கின. கும்பகோணத்தில் இசைவேளாளர் குடியில் பிறந்த பாலாமணி, சிறு வயதிலேயே பரதம், இசை, நாடகம் கற்றார். சமஸ்கிருதத்தில் நல்ல புலமை இருந்தது. குடும்ப வழக்கப்படி திருமணம் செய்து கொள்ளாமல், தனது ஆர்வம் முழுவதையும் நாடகக் கலை மீது திருப்பினார்.
  • 1920கள் வரை பாய்ஸ் கம்பெனிகள், 18 வயதைக் கடந்த நடிகர்களைக் கொண்ட கம்பெனிகள் என எதுவாக இருந்தாலும் பெண் வேடங்கள் அனைத்தையும் ஆண்கள் மட்டுமே நடித்து வந்தனர். அப்படிப்பட்ட நிலையைத் தலைகீழாகப் புரட்டினார் பாலாமணி. முழுவதும் பெண்களை மட்டுமே வைத்து தனது கம்பெனியை உருவாக்கினார். இவரது குழுவில் 70 பெண்கள் நடிகர்களாக இருந்தனர். பெட்ரோமாக்ஸ் விளக்கொளியில் நாடகம் நடத்தத் தொடங்கிய ஆடம்பரமான கம்பெனி என்கிற பெயரை மட்டுமல்ல, ‘டம்பாச்சாரி விலாசம்’ என்கிற முதல் சமூக நாடகத்தை அரங்கேற்றிய கம்பெனி என்கிற பெருமையையும் பாலாமணி கம்பெனி பெற்றது.
  • தனிப்பட்ட வாழ்க்கையின் மனக்காயங் களுக்கு நாடகக் கலை மருந்தாக அமையும் என்று நம்பிய அவர், தன்னைப் போன்ற பெண்களைத் தன்னுடைய குழுவில் சேர்த்துக்கொண்டு, அவர்களுக்கு நடனத்தி லும் நாடகத்திலும் பயிற்சி அளித்தார். இவரது கம்பெனியில் பெண்களுக்கு நாடகம் பயிற்றுவிக்கும் ஆசிரியராக எம்.கந்தசாமி முதலியார் (ஜெமினியின் ‘அபூர்வ சகோதரர்கள்’ புகழ் எம்.கே.ராதாவின் தந்தை) இருந்தார். நாடக வசூலில் கிடைத்த பொருளின் பெரும்பகுதியை ஆதரவற்ற பெண்களுக்கும் கோயில் திருப்பணி களுக்கும் அன்னதானங்களுக்கும் செலவழித்தார்.
  • ‘கும்பகோணத்தில் சோலை வனத்துடன் கூடிய அரண்மனையைப் போன்ற பெரிய மாளிகை வீடு இருந்தது. ‘பாலாமணி பங்களா’ என்று அழைக்கப்பட்ட அந்த வீட்டில் நீச்சல் குளம், செயற்கை நீரூற்றுகள் இருக்கும். தோட்டத்தில் மயில்களும் மான்களும் மேய்ந்துகொண்டிருக்கும். 40க்கும் அதிகமான பணியாள்கள் அந்த பங்களாவில் இருந்தனர். அவரது வீட்டில் ஏழைகளுக்கு எல்லா நாள்களும் உணவு வழங்கப்பட்டது’ என்று ‘மறக்கப்பட்ட நாடக ராணிகள்’ என்கிற ஆங்கில நூலில் அதன் ஆசிரியர் விஜேசாய் குறிப்பிட்டுள்ளார்.

திரைக்கு வந்த ‘டம்பாச்சாரி’

  • பெண்களை உடலாகக் கண்ணுறும் ஆண்களிடம் மன மாற்றத்தை உருவாக்க ‘டம்பாச்சாரி’ நாடகம் கைகொடுக்கும் என்று கருதியே அந்த நாடகத்தைக் கையிலெடுத்தார் ‘நாடக ராணி’ என்று புகழ்பெற்ற பாலா மணி. நாடகம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. தமிழ் சினிமா பேசத் தொடங்கிய ஐந்தாம் ஆண்டில், ‘டம்பாச்சாரி விலாசம்’ அல்லது ‘உத்தம மனைவி’ என்கிற தலைப்பில் படமான இந்த நாடகம், 1935, ஜனவரி 14ஆம் தேதி பொங்கலன்று வெளியானது. ஆனால், படம் தோல்வியடைந்தது. பாலாமணி அம்மாள் நடத்தி வந்த ‘டம்பாச்சாரி விலாசம்’ நாடகத்தில் நகைச்சுவை பகுதியில் மட்டும் நடித்து வந்த ஒரே ஆண் நடிகரான சி.எஸ்.சாமண்ணா, நாடகத்தில் ஏற்ற ஏழு வேடங்களைத் திரைப்படத்திலும் ஏற்று நடித்தார்.
  • இன்றைய ஹாலிவுட் அமைந் துள்ள அமெரிக்காவின் தெற்கு கலிபோர்னியா பல்கலைக்கழகத் தில் திரைப்பட உருவாக்கம் குறித்துப் படித்துத் திரும்பிய மும்பைவாசியான எம்.எல்.டான்டன் (எல்லிஸ் ஆர்.டங்கனின் கல்லூரித் தோழர்; தமிழ் சினிமாவுக்கு டங்கனை அழைத்து வந்தவர்) இயக்கிய இதுதான் தமிழ் சினிமா வின் முதல் சமூகப் படம். கல்கத்தாவில் உருவான இந்தப் படம் வெளியாகி 3 மாதங்களுக்குப் பிறகு 1935 ஏப்ரலில் வெளியான இரண்டாவது சமூகப் படமே ‘மேனகா’.

நன்றி: இந்து தமிழ் திசை (07 – 03 – 2025)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்