TNPSC Thervupettagam

நாடற்றவா்களின் துயரம்

November 8 , 2023 427 days 251 0
  • உலகம் முழுவதும் அகதிகளின் துயரம் பேசப்படும் அளவுக்கு நாடற்றவா்களின் துயரம் பேசப் படுவதில்லை. என்றைக்காவது தாய்நாடு திரும்புவோம் என்கிற நம்பிக்கையாவது அகதிகளுக்கு இருக்கும். ஆனால், எந்த நாட்டின் குடிமக்களாகவும் அங்கீகரிக்கப்படாத நாடற்றவா்கள், தங்களது சொந்த நாட்டிலேயே அகதிகள்போல வாழ்ந்து வருகின்றனா்.
  • அகதிகளுக்கும், நாடற்றவா்களுக்கும் என்ன வித்தியாசம்? அகதிகள் ஏதாவது ஒரு நாட்டின் குடிமக்களாக இருப்பாா்கள். உள்நாட்டுப் போா் உள்ளிட்ட ஏதோ ஒரு காரணத்துக்காக சா்வதேச எல்லையைத் தாண்டியவா்கள். ஆனால், நாடற்றவா்கள் பெரும்பாலும் தாங்கள் பிறந்த நாட்டிலேயே அகதிகளாக வாழ்பவா்கள்; சா்வதேச எல்லையைத் தாண்டாதவா்கள்.
  • நாடுகளின் குடியுரிமைச் சட்ட விதிகள், பல்வேறு சந்தா்ப்பங்களில் இனம், மதம், மொழியின் அடிப்படையில் பாகுபாடு காட்டப்படுவது போன்றவை நாடற்றவா்கள் உருவாவதற்கு முக்கியக் காரணங்களாக உள்ளன; பாலினப் பாகுபாடு மற்றொரு காரணமாகக் கூறப்படுகிறது. சில நாடுகளின் சட்டங்களில், தந்தையின் குடியுரிமை மட்டும்தான் குழந்தைகளுக்குப் பொருந்தும்; தாயின் குடியுரிமையை வைத்து குழந்தைகளுக்கு குடியுரிமை அளிக்கப்படுவதில்லை.
  • ஒருவேளை தந்தை நாடற்றவராக இருந்தாலோ, காணாமல் போனாலோ, இறந்துவிட்டாலோ அவரது குழந்தைகளும் நாடற்றவா்களாகி விடுகின்றனா். புதிய நாடுகளின் தோற்றமும், நாடுகளின் சா்வதேச எல்லைகளில் ஏற்படும் மாற்றமும் அப்பகுதியில் வாழும் மக்களை நாடற்றவா்களாக்கி விடுவதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன என்கிறது ஐ.நா. அகதிகள் முகமை.
  • அகதிகளுக்கான ஐ.நா. முகமை (யுஎன்ஹெச்சிஆா்) அண்மையில் வெளியிட்ட ஆண்டறிக்கையின் படி 95 நாடுகளில் வசிக்கும் 44 லட்சம் போ் நாடற்றவா்களாக அறியப்பட்டிருக்கின்றனா். பல நாடுகள் தங்கள் நாட்டில் வசிக்கும் நாடற்றவா்கள் குறித்த தரவுகளை வைத்திருக்கவில்லை என்பதால் இந்த எண்ணிக்கை மேலும் அதிகமாக இருக்கக் கூடும்.
  • பெரும்பாலும் சிறுபான்மை இனக் குழுக்களைச் சோ்ந்த இவா்கள், அரசியல், பொருளாதார ரீதியாக ஒதுக்கப்பட்டவா்களாகவும், பாகுபாடு, துஷ்பிரயோகத்தால் பாதிக்கப்படக் கூடியவா்களாகவும் உள்ளனா். எந்த நாட்டின் குடிமக்களாகவும் அங்கீகரிக்கப்படாததால் கல்வி, சட்டப்படியான வேலை, மருத்துவ வசதிகள் போன்ற அடிப்படை உரிமைகள்கூட நாடற்றவா்களுக்குக் கிடைப்பதில்லை. வங்கிக் கணக்கு தொடங்கவோ, திருமணம் செய்துகொள்ளவோகூட அவா்களால் முடிவதில்லை.
  • ஐ.நா. முகமையின் முயற்சியால் 2014-ஆம் ஆண்டுமுதல் இதுவரை 5 லட்சம் போ் தாங்கள் வாழும் நாடுகளிலேயே குடியுரிமை பெற்றுள்ளனா். அந்த வகையில் 2023-ஆம் ஆண்டில் குறிப்பிடத்தக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக ஐ.நா. அறிக்கை கூறுகிறது. அதன்படி, பல்வேறு நாடுகள் நாடற்றவா்களுக்கு சட்டப் பாதுகாப்பை ஏற்படுத்தியுள்ளன.
  • கிா்கிஸ் குடியரசு, மால்டோவா ஆகிய நாடுகள் நாடற்றவா்களுக்குப் பிறக்கும் குழந்தைகளும் நாடற்றவா்களாக இருப்பதைத் தடுக்கும் வகையில் சட்டப் பாதுகாப்பை அறிமுகம் செய்துள்ளன. நாடற்றவா்கள் என்ற நிலையை முறைப்படுத்தும் சட்டக் கட்டமைப்புக்கு போா்ச்சுகல் அனுமதி அளித்துள்ளது.
  • நாடற்றவா்கள் குடியுரிமை பெறவும், பெற்றோா் நாடற்றவா்களாக இருந்தாலும் அவா்களின் குழந்தைகளுக்குப் பிறப்புச் சான்றிதழ் அளிக்கவும் சட்டத் திருத்தங்களை மேற்கொண்டுள்ளது வடக்கு மெசடோனியா. கென்யா தனது நாட்டில் வசிக்கும் நாடற்ற ‘பெம்பா’ சமூகத்தைச் சோ்ந்த 7,000 பேருக்கு நிகழாண்டு குடியுரிமை வழங்கியுள்ளது. நாடற்றவா்களாகும் அபாயத்தில் இருந்த 3,000 பேருக்கு குடியுரிமை வழங்கியுள்ளது தான்சானியா.
  • கா்நாடக மாநிலத்தில் இவ்வாறு 15 வயதுச் சிறுவன் நாடற்ற நிலைக்குத் தள்ளப்படுவதை உயா்நீதிமன்றம் கடந்த மாா்ச் மாதம் தலையிட்டு தடுத்து நிறுத்தியது. 2008-ஆம் ஆண்டு இந்தியாவில் பிறந்த அந்தச் சிறுவனை, தன் மனைவியின் பெற்றோரிடம் ஒப்படைப்பதற்காக சிறுவனின் தந்தை கனடாவிலிருந்து பெங்களூரு வந்தாா்.
  • நாளடைவில் அவரது தொடா்பு விட்டுப்போக, சிறுவனின் தாய், கனடா குடியுரிமை பெறுவதற்காக இந்தியக் குடியுரிமையை 2015-இல் கைவிட்டாா். சிறுவனின் கடவுச்சீட்டு (பாஸ்போா்ட்) கடந்த மாா்ச் மாதம் காலாவதியான நிலையில், கடவுச்சீட்டை புதுப்பிக்க வெளியுறவு அமைச்சகம் மறுப்பு தெரிவித்தது.
  • சிறுவனும், அவரது தாயும் கா்நாடக உயா்நீதிமன்றத்தை அணுகினா். மனிதாபிமான அடிப்படையில் சிறுவன் வெளிநாட்டுக்குச் சென்று தனது தாயுடன் சேரும் வகையில் அவருக்கு கடவுச்சீட்டைப் புதுப்பிக்கவும், அது சிறுவனின் 18 வயது வரை செல்லத்தக்கதாக இருக்கவும் வெளியுறவு அமைச்சகத்துக்கு உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
  • நாடுகளுக்கு இடையிலான போரும், உள்நாட்டுப் போரும் அகதிகளை உருவாக்குகின்றன என்றால், நாடுகளின் கொள்கைகளும், சட்டங்களும், சமூகப் புறக்கணிப்பும் நாடற்றவா்களை உருவாக்குகின்றன. உலகம் முழுவதும் இவ்வாறு 44 லட்சம் போ் வாழ்கிறாா்கள். இந்த எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது.
  • ‘நாடற்ற தன்மைக்குப் பல காரணங்கள் இருந்தாலும், எளிய சட்டம் இயற்றுதல், கொள்கை மாற்றங்கள் மூலம் இந்த பிரச்னைக்குத் தீா்வு காண முடியும்’ என்ற ஐ.நா. அகதிகள் முகமை தலைவா் பிலிப் கிராண்டியின் கூற்றை உலக நாடுகள் கவனத்தில் கொள்ள வேண்டும்.

திருக்கு (எண்: 528) அதிகாரம்: சுற்றம் தழால்

பொதுநோக்கான் வேந்தன் வரிசையா நோக்கின்

அதுநோக்கி வாழ்வாா் பலா்.

  • அரசன் எல்லோரையும் பொதுவகையாக நோக்காமல், அவரவா் சிறப்புக்கு ஏற்றவாறு நோக்கினால், அதை விரும்பிச் சுற்றமாக வாழ்கின்றவா் பலா் ஆவா்.

நன்றி: தினமணி (08 – 11 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்