TNPSC Thervupettagam

நாடாளுமன்ற அத்துமீறல் சம்பவம் குறித்த தலையங்கம்

December 15 , 2023 218 days 162 0
  • நாடாளுமன்றம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் வேளையில் மக்களவையின் பார்வையாளர் மாடத்தில் இருந்து திடீரென இரண்டு இளைஞர்கள் குதித்து புகைக் குப்பிகளை வீசித் தாக்குதல் நடத்துகிறார்கள் என்றால், எந்த அளவுக்கு நாடாளுமன்றத்தின் பாதுகாப்பு ஏற்பாடுகள் காணப்படுகின்றன என்பது தெரிகிறது. நாடாளுமன்றத்துக்கு வெளியேயும் இதேபோன்று புகைக் குப்பிகளை வீசி அவர்களுடன் வந்த இருவர் கவனம் ஈர்த்திருக்கிறார்கள். இவை சாதாரணமாகக் கடந்து போகக்கூடிய நிகழ்வுகள் அல்ல. 
  • பாதுகாப்பு முன்னெப்போதும் இல்லாத அளவில் உறுதிப்படுத்தப்பட்டிருப்பதாக தில்லி காவல் துறை தெரிவித்திருந்தது. 2001-இல் நாடாளுமன்றத்தின் மீது நடந்த பயங்கரவாதத் தாக்குதல் நிகழ்ந்த தினத்தில் இந்த சம்பவம் நடந்திருக்கிறது. இத்தனைக்கும், இந்திய நாடாளுமன்றத்தின் மீது முந்தைய தாக்குதல் நடந்த தினத்திலோ, அதற்கு முன்போ தாக்குதல் நடத்தப்படும் என்று காலிஸ்தான் பயங்கரவாதி  குர்பத்வந்த் சிங் பன்னூ பகிரங்கமாக அறைகூவல் விடுத்தும்கூட நாடாளுமன்றத்தின் பாதுகாப்பில் குறைபாடுகள் காணப்படுகின்றன என்பதை அடிக்கோடிட்டுக் குறிப்பிடத் தோன்றுகிறது. 
  • 2001-இல் நடந்த நாடாளுமன்றத் தாக்குதலில் பாதுகாப்பு வீரர்கள் உள்பட 9 பேர் உயிரிழந்தனர். அந்த பயங்கரவாதத் தாக்குதல் காரணமாக நாடாளுமன்ற வளாகம் பன்னடுக்குப் பாதுகாப்புக்கு உட்படுத்தப்பட்டது. பாதுகாப்பை 100% உறுதிப்படுத்துவதும்கூட புதிய நாடாளுமன்றக் கட்டடம் கட்டப்பட்டதன் காரணங்களில் ஒன்று. இந்தப் பின்னணியில் இப்போது நிகழ்த்தப்பட்டிருக்கும் தாக்குதலை நாம் பார்க்க வேண்டும். 
  • நாடாளுமன்றத்தின் பாதுகாப்புக்காக நாடாளுமன்ற பாதுகாப்புப் படை ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. 1,500 மத்திய பாதுகாப்புப் படை கமாண்டோக்கள் கொண்ட நாடாளுமன்ற 'ட்யூட்டி குரூப்' உருவாக்கப்பட்டது. இது மட்டுமல்லாமல், போக்குவரத்தைக் கட்டுப்படுத்த தில்லி காவல் துறையினர் செயல்படுகிறார்கள். பார்வையாளர்கள் உள்ளிட்ட அனைவரையும் முற்றிலும் சோதனைக்கு உள்படுத்திய பிறகுதான் நாடாளுமன்ற வளாகத்துக்குள் அனுமதிப்பது என்கிற முறை, 2001 தாக்குதலுக்குப் பிறகுதான் ஏற்படுத்தப்பட்டது. 
  • நாடாளுமன்ற வளாகத்துக்குள் எளிதாக யாரும் நுழைந்துவிட முடியாது. உறுப்பினர்களின் பரிந்துரையில்தான் நுழைவு அனுமதி தரப்படுகிறது. அனுமதிக்கான விண்ணப்பத்தில் எம்.பி.யின் கையொப்பம், அடையாள அட்டை எண் உள்ளிட்டவை உறுதிப்படுத்தப்பட்டு அதற்குப் பிறகுதான் அனுமதிச் சீட்டு வழங்கப்படும். அதில் குறிப்பிட்டிருக்கும் நேரத்தில் வரவேற்பு அலுவலகத்தில் இருக்க வேண்டும். 
  • கைப்பேசி உள்பட எந்தப் பொருளையும் எடுத்துச் செல்ல முடியாது. 'மெட்டல் டிடெக்டர்' மூலம் உடல் பரிசோதனை செய்த பிறகுதான் வரவேற்புப் பகுதியிலிருந்து வளாகத்துக்குள் நுழைய முடியும். நாடாளுமன்றக் கட்டடத்தில் மீண்டும் உடல் பரிசோதனை செய்த பிறகு உள்ளே அனுமதிப்பார்கள். மூன்றாவது உடல் பரிசோதனைக்குப் பிறகுதான், பார்வையாளர்கள் மாடத்துக்குள் அனுமதிக்கப்படுவார்கள். 
  • அந்த மாடத்திலும், குறிப்பிட்ட நேரம்தான் நாடாளுமன்ற நடவடிக்கைகளைப் பார்க்க அனுமதிப்பார்கள்.  அந்த மாடத்தில் நான்கைந்து பாதுகாப்பு அதிகாரிகள் கண்காணிப்பார்கள். அவைத் தலைவரின் விருந்தினர்கள், வெளிநாட்டுப் பிரதிநிதிகள், ஊடகவியலாளர்கள் ஆகியோருக்கும் மேலே குறிப்பிட்ட எல்லா சோதனைகளும் அவசியம். 
  • பார்வையாளர்கள் மாடத்தில் எழுந்து நிற்பதற்குக்கூட அனுமதி கிடையாது. பாதுகாப்பு அதிகாரிகள் உட்காரச் சொல்லிவிடுவார்கள். அப்படியிருந்தும் இரண்டு பேர் அத்தனை பாதுகாப்பு வளையங்களையும் கடந்து, நாடாளுமன்றத்தின் மக்களவை பார்வையாளர் மாடத்தில் நுழைந்து, எழுந்து அங்கிருந்து அவைக்குள் குதித்திருக்கிறார்கள் என்றால், பாதுகாப்பு குறைபாடு ஏற்பட்டிருப்பது ஏதோ ஓர் இடத்தில் மட்டும் அல்ல, ஒட்டுமொத்தமாகவே மெத்தனம் காணப்பட்டது அல்லது எல்லாமே திட்டமிடப்பட்டிருந்தது என்றுதான் பொருள் கொள்ள வேண்டும்.
  • 2001-இல் நிகழ்ந்த தாக்குதலில் பயங்கரவாதிகளால் நாடாளுமன்ற வளாகத்துக்குள் நுழைய முடியவில்லை. அதற்கு முன்பே பாதுகாப்புப் படையினர்  அவர்களை அடையாளம் கண்டு தடுத்தனர். இந்தமுறை எல்லாவிதப் பாதுகாப்பையும் கடந்து இரண்டு பேர் அவைக்குள் குதித்து புகைக் குப்பியை வீசி தாக்குதல் நடத்த முடிந்திருக்கிறது. அந்தக் காட்சி நாடாளுமன்றத் தொலைக்காட்சியில் நேரலையில் வெளியானபோது ஒட்டுமொத்த தேசமும் அதிர்ச்சியில் சமைந்தது. புகைக் குப்பிக்குப் பதிலாக அதுவே விஷப் புகைக் குப்பியாக இருந்திருந்தால்...?
  • ''2001-இல் நிகழ்ந்த தாக்குதல் நாடாளுமன்றக் கட்டடத்தின் மீது நடத்தப்பட்டதல்ல; ஜனநாயகத்தின் மீதும், இந்தியாவின் ஆன்மாவின் மீதும் நடத்தப்பட்ட தாக்குதல்'' என்று, அன்று காலைதான் தாக்குதல் நினைவு தினத்தையொட்டி பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்திருந்தார். சில மணி நேரங்களில் மீண்டும் ஒரு தாக்குதல்; அதுவும் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்ட புதிய நாடாளுமன்றத்தின் மக்களவையில் நிகழ்ந்திருக்கிறது என்பது எந்த வகையிலும் மன்னிக்கவே முடியாத குறைபாடு. 
  • தாக்குதல்காரர்களுக்கு அனுமதிச் சீட்டு வழங்கிய பாஜக எம்பி பிரதாப் சிம்ஹாவின் பொறுப்பின்மை விசாரணைக்கு உரியது.  தாக்குதல் நடத்திய இளைஞர்கள் சமூக ஊடகங்களின் மூலம் ஒருங்கிணைக்கப்பட்டனர் என்பதையும் வேலைவாய்ப்பின்மை, அடக்குமுறை போன்றவைதான் காரணங்கள் என்பதையும் நம்ப முடியவில்லை. திட்டமிடப்படும் மிகப் பெரிய சதிக்கு இது ஒத்திகையாகக்கூட இருக்கக்கூடும்!

நன்றி: தினமணி (15 – 12 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்