- நாடாளுமன்ற ஜனநாயகம் வெற்றிகரமாகச் செயல்படுவதற்கு முறையாகத் தேர்தல் நடத்துவதும், உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுவதும், ஆட்சி அமைப்பதும் மட்டுமே காரணமாகி விடாது.
- ஆட்சியாளர்கள் எதிர்க்கட்சியினரின் கருத்துகளுக்கு செவிசாய்த்து மதிப்பளிப்பதும், எதிர்க்கட்சி வரிசையில் இருப்பவர்கள் ஆளுங்கட்சியின் குற்றங்குறைகளை நாகரிகமான விவாதத்தின் மூலம் எடுத்தியம்புவதும்கூட மக்களாட்சித் தத்துவத்தின் அடிப்படைக் கூறுகள்.
தேர்தல்கள்
- கடந்த 20 ஆண்டுகளாக முறையாகத் தேர்தல்கள் நடந்து, ஆட்சி மாற்றங்களுடன் ஜனநாயகம் இந்தியாவில் செயல்படுகிறது என்றாலும்கூட, நமது நாடாளுமன்ற, சட்டப்பேரவைகளின் செயல்பாடுகள் மெச்சத்தகுந்த விதத்தில் இல்லை.
- நாடாளுமன்ற நடவடிக்கைகளை ஊடகங்களின் மூலம் நேரலைக் காட்சியாக மக்கள் தெரிந்துகொள்ள தொழில்நுட்ப மேம்பாடு வழிகோலியிருக்கிறது. அதனால் ஏற்பட்டிருக்கும் விழிப்புணர்வு ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்ட பலரையும் வேதனையில் ஆழ்த்துகிறது.
- அவை முடக்கப்படுவதன் காரணமும், அவையின் அன்றாடச் செயல்பாடுகளும், எந்த அளவுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் அவர்கள் மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கைக்கு உகந்தவர்களாக இருக்கிறார்கள் என்பதை நேரடி ஒளிபரப்புகள் எடுத்தியம்புகின்றன.
- நாடாளுமன்ற விவாதங்களின்போது சில மரபுகள் கடைப்பிடிக்கப்படுகின்றன. நாடாளுமன்ற அனுபவசாலியான குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு மாநிலங்களவையின் தலைவராகவும் இருப்பதால் அன்றாடம் நடைபெறும் விவாதங்களில் மரபு மீறிய சொல்லாடலோ, கருத்தோ இருந்தால் அவற்றை நாடாளுமன்றக் குறிப்பிலிருந்து அகற்றி விடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்.
- பல உறுப்பினர்களின் நாடாளுமன்ற மரபுக்கு மாறான சொற்பிரயோகங்கள் அவரால் அகற்றப்பட்டிருக்கின்றன. ஆனால், முதன்முறையாக பிரதமர் நரேந்திர மோடி உபயோகித்த சொல்லாடலை அவர் அகற்றி இருப்பது பிரதமர் மோடி வகிக்கும் பதவியைவிட நாடாளுமன்றத்தின் கெளரவத்துக்கு அவர் அளிக்கும் முன்னுரிமையை எடுத்தியம்புகிறது.
- ஆங்கிலத்திலும், இந்திய மொழிகளிலும் காணப்படும் பல வார்த்தைகளும், சொற்றொடர்களும் நாடாளுமன்ற மரபுக்கு உகந்ததல்ல என்று தவிர்க்கப்படுகின்றன. அரசமைப்புச் சட்டப்பிரிவு 105 (2), மாமன்றத்தில் உறுப்பினர் வெளியிடும் கருத்து, அவர் அளிக்கும் வாக்கு ஆகியவை நீதிமன்ற விசாரணைக்கு உட்பட்டதல்ல என்கிற பாதுகாப்பை வழங்குகிறது. ஆனாலும்கூட, உறுப்பினர்கள் தங்கள் விருப்பம்போல வரைமுறையில்லாமல் அவையில் பேசிவிட முடியாது.
- அவைத் தலைவரின் கட்டுப்பாட்டுக்கும், நாடாளுமன்ற சட்டதிட்டங்களுக்கும் உட்பட்டு தரக்குறைவான, கெளரவத்துக்கு மாறான வார்த்தைகளைப் பயன்படுத்தக் கூடாது என்கிறது நாடாளுமன்ற நடைமுறை விதிகள்.
- நாடாளுமன்ற நடைமுறை விதி 380, அவைத் தலைவருக்கு சில உரிமைகளை வழங்கியிருக்கிறது. அதன்படி, உறுப்பினர்கள் நாடாளுமன்ற நடைமுறைக்கு ஒவ்வாத வார்த்தைகளைப் பயன்படுத்தினால் அவைக் குறிப்பிலிருந்து அவற்றை அகற்றிவிடும் உரிமை அவைத் தலைவருக்கு வழங்கப்பட்டிருக்கிறது.
- மக்களவைத் தலைவரும், மாநிலங்களவைத் தலைவரும், நாடாளுமன்ற ஆவணங்களில் ஆங்கிலத்திலோ, இந்திய மொழிகளிலோ உள்ள அனுமதிக்கப்படாத வார்த்தைகளைக் குறிப்பிலிருந்து அகற்றுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள்.
- இதற்காக 2004-இல் நாடாளுமன்ற நடைமுறைக்கு ஒவ்வாத சொற்பிரயோகங்கள் (அன்பார்லிமென்டரி எக்ஸ்பிரஷன்ஸ்) என்கிற 900 பக்கங்கள் அடங்கிய புத்தகம் வெளியிடப்பட்டிருக்கிறது. மாநில சட்டப்பேரவைகளும் இந்தப் புத்தகத்தின் அடிப்படையில்தான் வார்த்தைப் பிரயோகங்களைத் தவிர்க்கின்றன.
- 1998 முதல்தான் நாடாளுமன்றத்தின் செயல்பாடு தரம் தாழத் தொடங்கியது. அதுவரை இல்லாத, கூச்சலெழுப்பி நாடாளுமன்றத்தை முடக்கும் வழிமுறையை காங்கிரஸ் கட்சி உருவாக்கியது.
- "கூச்சல் கும்பல்' (ஷவுட்டிங் பிரிகேட்) என்று தங்களை அழைத்துக் கொண்ட எதிர்க்கட்சி காங்கிரஸ் உறுப்பினர்கள் சிலர் தொடங்கிவைத்த மரபை பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் அமைந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் எதிர்க்கட்சியான பாஜக தொடர்ந்தது. இன்று வரை நாடாளுமன்றத்தில் கூச்சலிடுவதும், நடவடிக்கைகளை முடக்குவதுமான செயல்பாடுகள் தொடர்கின்றன என்பது இந்திய ஜனநாயகத்துக்குப் பெருமை சேர்ப்பதாக இல்லை.
நன்றி: இந்து தமிழ் திசை (08-02-2020)