- இந்திய நாடாளுமன்றத்தின் புதிய கட்டிடத்தின் திறப்பு விழாவைப் புறக்கணிப்பதாக, நாடாளுமன்றத்தின் முதன்மை எதிர்க்கட்சியான காங்கிரஸ் உள்ளிட்ட 20 கட்சிகள் அறிவித்திருப்பது வருத்தத்துக்குரியது. டெல்லியில் அமைந்திருக்கும் நாடாளுமன்றக் கட்டிடம் கிட்டத்தட்ட நூறாண்டுகள் பழமையானது. இடநெருக்கடி, பாதுகாப்பு உள்ளிட்ட காரணங்களுக்காகப் புதிய கட்டிடம் அமைக்க வேண்டும் என்பதற்கான யோசனை 2010இல் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சிக் காலத்திலேயே தோன்றிவிட்டது.
- 2012இல் அன்றைய மக்களவைத் தலைவர் மீரா குமார், நாடாளுமன்றக் கட்டிடத்துக்கான மாற்று ஏற்பாடுகளைப் பரிசீலிப்பதற்கான குழுவை அமைத்தார். 2019இல் மத்திய நிர்வாகப் பகுதியை முழுமையாக மறுவடிவமைப்பு செய்வதற்கான ‘சென்ட்ரல் விஸ்டா’ திட்டத்தை பாஜக அரசு தொடங்கியது; நாடாளுமன்றத்துக்காகப் புதிய கட்டிடம் கட்டுவது இத்திட்டத்தின் ஒரு பகுதியாகும். இதன்படி புதிய நாடாளுமன்றக் கட்டிடத்துக்கான அடிக்கல் நாட்டும் விழா 2020 டிசம்பர் 10 அன்று நடைபெற்றது.
- புதிய நாடாளுமன்ற வளாகத்தில் பழைய கட்டிடமும் அப்படியே பராமரிக்கப்பட உள்ளது. அதிக இடம், கூடுதல் இருக்கைகள், மேம்படுத்தப்பட்ட நூலகம் உள்ளிட்ட அதிநவீன வசதிகளுடன் கூடிய புதிய கட்டிடம், கரோனா பெருந்தொற்றுக் காலத்தில் ஏற்பட்ட நெருக்கடிகளையும் தாண்டி மூன்று ஆண்டுகளுக்குள் கட்டி முடிக்கப்பட்டிருப்பது பாராட்டுக்குரியது. மே 28 அன்று நடைபெறவிருக்கும் விழாவில் புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தைப் பிரதமர் நரேந்திர மோடி திறந்துவைக்கிறார்.
- ஆனால், அரசமைப்புச் சட்டத்தின்படி அரசின் தலைவரும் நாடாளுமன்ற அவைகளைக் கூட்டுவதற்கான அதிகாரம் பெற்றவருமான குடியரசுத் தலைவர்தான் நாடாளுமன்றக் கட்டிடத்தைத் திறந்துவைக்க வேண்டும் என்பதைச் சுட்டிக்காட்டி, திறப்பு விழாவைப் புறக்கணிப்பதாக எதிர்க்கட்சிகள் அறிவித்துள்ளன.
- இதற்குப் பதிலளிக்கும் விதமாக மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி, காங்கிரஸ் ஆட்சிக் காலங்களில் 1975இல் அன்றைய பிரதமர் இந்திரா காந்தி நாடாளுமன்ற இணைப்புக் கட்டிடத்தையும், 1987இல் பிரதமர் ராஜீவ் காந்தி நாடளுமன்ற நூலகத்தையும் திறந்து வைத்ததைச் சுட்டிக்காட்டியிருப்பது கவனிக்கத்தக்கது.
- விழாவுக்கான அழைப்பிதழில் குடியரசுத் தலைவர் பெயர்கூடக் குறிப்பிடப் படவில்லை என்பதையும் எதிர்கட்சிகள் சுட்டிக்காட்டியிருக்கின்றன. நாடாளுமன்றக் கூட்டங்களை, ஜனநாயக விரோதமாக பாஜக அரசு நடத்திவருவதாகக் குற்றம்சாட்டிவரும் எதிர்க்கட்சிகள், விழாவைப் புறக்கணிப்பதற்கான காரணங்களில் ஒன்றாக அந்த விமர்சனத்தையும் முன்வைத்திருக்கின்றன.
- குடியரசுத் தலைவருக்கு இந்த விழாவில் உரிய முக்கியத்துவமும் மரியாதையும் அளிக்கப்பட்டிருக்க வேண்டும் என்கிற எதிர்க்கட்சிகளின் விமர்சனத்தில் நியாயம் இருக்கிறது. அரசை விமர்சிக்கவும் எதிர் அரசியல் செய்வதற்கும் எதிர்க்கட்சிகளுக்கு உரிமை உள்ளது.
- அதேநேரம், இதுபோன்ற காரணங்களை முன்வைத்து, மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதிகளின் அவைகளுக்கான புதிய கட்டிடத்தின் திறப்பு விழாவைப் புறக்கணிப்பது ஏற்கத்தக்கதல்ல. எதிர்க்கட்சிகளும் நாடாளுமன்றத்தின் தவிர்க்க முடியாத அங்கம். நாடாளு மன்றத்தின் மாண்பைக் காக்க வேண்டிய பொறுப்பு ஒவ்வொரு உறுப்பினருக்கும் உள்ளது.
- இதை உணர்ந்து நாடாளுமன்றக் கட்டிடத் திறப்பு விழாவில் அனைத்து எதிர்க்கட்சிகளும் பங்கேற்க வேண்டும். ஆளும்கட்சியும் நாடாளுமன்ற அவைக் கூட்டங்களில் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் குரலுக்கு உரிய இடமளித்து, நியாயமான விமர்சனங்களுக்குக் காதுகொடுத்துச் செயல்பட வேண்டும்!
நன்றி: தி இந்து (26 – 05 – 2023)