- செப்டம்பர் 18 முதல் 22 வரை நடைபெறவிருக்கும் நாடாளுமன்றச்சிறப்புக் கூட்டத்தொடர், பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி யிருக்கிறது. இக்கூட்டத்தொடரின் நோக்கம் குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பிய நிலையில், மத்திய அரசு அதற்கு விளக்கம் அளித்துள்ளது. ஆனால், பல கேள்விகளும் சந்தேகங்களும் தொக்கி நிற்கின்றன.
- இக்கூட்டத்தொடர் குறித்த அறிவிப்பு வெளியானதிலிருந்தே காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து சந்தேகங்களை எழுப்பி வந்தன. ‘ஒரே நாடு.. ஒரே தேர்தல்’ தொடர்பான மசோதா தாக்கல் செய்யப்படும் எனப் பேச்சுக்கள் எழுந்ததால், அது தொடர்பான சர்ச்சைகள் எழுந்தன. இந்தியா என்கிற பெயரை ‘பாரத்’ என மாற்ற அரசு திட்டமிடுவதாகவும் பரபரப்பு நிலவியது.
- காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, இது குறித்துப் பிரதமர் மோடிக்குக் கடிதம் எழுதியிருந்தார். அத்தியாவசியப் பொருள்களின் விலை உயர்வு, அதிகரிக்கும் வேலை வாய்ப்பின்மை, அதானி குழுமத்தின் பரிவர்த்தனைகள் குறித்த நாடாளுமன்றக் கூட்டுக்குழு விசாரணை அமைப்பது என்பன உள்ளிட்ட ஒன்பது கோரிக்கைகளையும் அதில் அவர் முன் வைத்திருந்தார்.
- இந்நிலையில், அரசமைப்புச் சட்ட நிர்ணய அவை தொடங்கப்பட்டது தொடங்கி 75 ஆண்டு கால நாடாளுமன்றப் பயணம் குறித்து விவாதம் நடைபெறும்; நாடாளுமன்றச் சாதனைகள், அனுபவங்கள், நினைவுகள், படிப்பினைகள் குறித்து விரிவாக விவாதிக்கப்படும் என நாடாளுமன்ற அலுவலக அறிக்கையில் விளக்கம் அளிக்கப்பட்டது.
- மழைக்காலக் கூட்டத்தொடரின்போது, மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்ட வழக்கறிஞர்கள் (திருத்த) மசோதா, நாளிதழ்கள், பருவ இதழ்கள் பதிவு மசோதா உள்ளிட்டவை இந்த முறை மக்களவையில் தாக்கல் செய்யப்படவிருக்கின்றன. தலைமைத் தேர்தல் ஆணையர், தேர்தல் ஆணையர்கள் நியமன மசோதாவும் தாக்கல் செய்யப்படவிருக்கிறது. தேர்தல் ஆணையரை நியமிக்கும் குழுவில் தலைமை நீதிபதிக்குப் பதிலாக, மத்திய அமைச்சர் இடம்பெறுவார் என இம்மசோதாவில் தெரிவிக்கப்பட்டிருப்பதாகச் சர்ச்சை எழுந்திருக்கிறது.
- அரசின் அறிக்கையில், ‘தற்காலிகம்’ என்னும் வார்த்தை இடம்பெற்றிருப்பதால், சர்ச்சைக்குரிய வேறு சில மசோதாக்களையும் அரசு கொண்டுவரக்கூடும் என்னும்சந்தேகம் எதிர்க்கட்சிகளிடம் நிலவுகிறது. பாஜக அரசு தந்திரத்தைப் பிரயோகிக்கக்கூடும் என திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. டெரெக் ஓபிரையன் கூறியிருப்பது கவனிக்கத்தக்கது.
- ஜூலை 20 முதல் ஆகஸ்ட் 11 வரை நடைபெற்ற மழைக்காலக் கூட்டத்தொடரின்போது, மணிப்பூர் விவகாரம் தொடர்பாகப் பெரும் அமளி ஏற்பட்டது. இது குறித்துப் பிரதமர் மோடி விளக்கம் அளிக்க வேண்டும் என்பதற்காகவே மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை எதிர்க்கட்சிகள் கொண்டுவந்தன.
- கூட்டத்தொடரின் பெரும்பாலான நாள்களில் எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தன. நம்பிக்கையில்லாத் தீர்மானம் தோற்கடிக்கப்பட்டது, மக்களவை காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் செளத்ரி இடைநீக்கம் செய்யப்பட்டது எனப் பல நிகழ்வுகள் அரங்கேறின. எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அவையில் இல்லாத சூழலில்கூடச் சில மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டது குறித்தும் விமர்சனங்கள் எழுந்தன.
- ஐந்து மாநிலத் தேர்தல்கள், 2024 மக்களவைத் தேர்தல் எனப் பரபரப்பாகியிருக்கும் அரசியல் சூழலில், ஆளுங்கட்சியும் எதிர்க்கட்சிகளும் அரசியல் கணக்குகளுடன் வியூகம் வகுக்கும் என்பதில் சந்தேகமில்லை. இந்நிலையில், இந்தக் கூட்டத்தொடரில் அரசு போதிய வெளிப்படைத்தன்மையுடன் நடந்துகொள்ள வேண்டும். எதிர்க்கட்சிகளும் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும். ஜனநாயகத்தின் அடிப்படைக் கூறே மக்கள்தான். அரசியல் தந்திரங்களால் அவர்களை ஏமாற்ற எந்தத் தரப்பும் முயற்சிக்கக் கூடாது!
நன்றி: இந்து தமிழ் திசை (18 – 09 – 2023)