TNPSC Thervupettagam

நாடாளுமன்றம் முன்கூட்டியே ஒத்திவைக்கப்பட்டது குறித்த தலையங்கம்

December 27 , 2021 951 days 395 0
  • நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத்தொடர் ஒருநாள் முன்னதாகவே முடிவுக்கு வந்திருக்கிறது. கடந்த ஆண்டிலிருந்து தொடர்ந்து ஐந்து கூட்டத்தொடர்கள் இதுபோல் வழக்கத்துக்கு முன்னதாகவே முடிந்து விடுகின்றன. விவாதிப்பதற்கு வழங்கப்பட்ட வாய்ப்பு முழுமையாகப் பயன்படுத்தப்படுவதில்லை என்பதைத்தான் இது தெரிவிக்கிறது.

விவாதமில்லா ஜனநாயகம்?

  • 24 நாள்களில் 18 அமர்வுகள் நடந்த நாடாளுமன்றத்தின் மக்களவைக் கூட்டத்தொடரில் 83 மணி நேரமும், 12 நிமிஷங்களும் அலுவல் நடந்ததாக அந்த அவையின் செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.
  • அதாவது, 18 மணி நேரம், 48 நிமிஷங்கள் அமளிதுமளியாலும், இடையூறுகளாலும் அவை செயல்படவில்லை என்று பொருள்.
  • மாநிலங்களவையின் செயல்பாடு இன்னும்கூட மோசம். குளிர்காலக் கூட்டத்தொடருக்காக ஒதுக்கப்பட்டிருந்த 95 மணி நேரம் ஆறு நிமிஷங்களில், 45 மணி நேரம் 35 நிமிஷங்கள் மட்டும் தான் அந்த அவை நடந்தது.
  • இந்த நிலையில் குளிர்காலக் கூட்டத்தொடர் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்தது என்று மனசாட்சியைத் தொட்டுச் சொல்ல முடியவில்லை.
  • நடந்து முடிந்திருக்கும் நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத்தொடர் இரண்டு காரணங்களுக்காக நினைவுகூரப்படலாம்.
  • வேளாண் சீர்திருத்தச் சட்டங்களைத் திரும்பப் பெற்றது, வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பது போன்ற முக்கியமான சில மசோதாக்களை நிறைவேற்றியது முதல் காரணம்.
  • வழக்கம்போல அமளியில் ஆழ்ந்தது, விவாதம் நடைபெறாமல் சில மசோதாக்கள் நிறைவேற்றப் பட்டது போன்றவை இரண்டாவது காரணம்.
  • கூச்சலும் குழப்பமும், கோஷம் எழுப்புதலும், வெளியேறுதலும் நாடாளுமன்றத்தின் அன்றாட நடவடிக்கைகளாகிவிட்டன.
  • எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அவையில் இருந்த நேரத்தைவிட, நாடாளுமன்ற வளாகத்திலுள்ள மகாத்மா காந்தி சிலைக்கு முன்னால் கோஷம் எழுப்பிப் போராட்டத்தில் ஈடுபட்ட நேரம்தான் அதிகம்.
  • எதிர்க்கட்சிகள் அவையை நடத்தவிடாமல் தடுக்கின்றன என்று ஆளுங்கட்சித் தரப்பும், முக்கியமான மசோதாக்களை விவாதிக்க அனுமதிக்காமல் அரசு தனது எண்ணிக்கை பலத்தால் எதிர்க்கட்சிகளை ஒடுக்க நினைக்கிறது என்று எதிர்க்கட்சிகளும் ஒருவர் மீது ஒருவர் குற்றம் சாட்டுகின்றன. உண்மை, இவை இரண்டுக்கும் இடையில் ஒளிந்து கொண்டிருக்கிறது.
  • மக்களவை 82% அலுவல்களையும், மாநிலங்களவை 48% அலுவல்களையும் நடத்தின என்று அந்த அவைகளின் செய்திக் குறிப்புகள் தெரிவிக்கின்றன. மழைக்காலக் கூட்டத்தொடருடன் ஒப்பிடும்போது, இது சற்று முன்னேற்றமாகத் தெரிகிறது. கடந்த மழைக்காலக் கூட்டத்தொடரின்போது, மாநிலங்களவையில் 28%, மக்களவையில் 22% அலுவல்கள்தான் நடந்தன.
  • ஒப்பிட்டு நோக்கி முன்னேற்றம் என்று ஆறுதல் வேண்டுமானால் அடையலாமே தவிர, நாடாளுமன்றம் முறையாக நடக்கிறது என்று மகிழ்ச்சி அடைய முடியவில்லை.
  • முந்தைய கூட்டத்தொடரில் நடந்த செயல்பாட்டுக்காக, அடுத்த கூட்டத்தொடரில் உறுப்பினர்களைத் தண்டிக்கும் தவறான முன்னுதாரணம் படைக்கப்பட்டதை எந்தக் காரணத்துக்காகவும் ஏற்றுக்கொள்ள முடியாது.
  • அவையில் பெரும்பான்மை ஏற்படுத்திக்கொள்ள ஆளுங்கட்சி கையாண்ட அந்த வழிமுறை வருங்காலத்தில் ஆட்சியாளர்களால் தவறாகப் பயன்படுத்தப்படும் என்பதில் சந்தேகம் வேண்டாம்.
  • குளிர்காலக் கூட்டத்தொடரில் மாநிலங்களவையில் 11 மசோதாக்கள் விவாதம் இல்லாமல் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன. நாடாளுமன்றம் என்பது பிரதிநிதித்துவ ஜனநாயகத்தின் உச்சகட்ட மரியாதைக்குரிய புனிதமான இடம்.
  • அங்கே ஒவ்வொரு பிரச்னையும், மசோதாவும், அரசின் செயல்பாடும் விமர்சிக்கவும், விவாதிக்கவும் படுவது அவசியம்.
  • ஆட்சியின் செயல்பாடுகள் குறித்த மாற்றுக் கருத்தை முன்வைப்பதற்காக உருவாக்கப்பட்டது தான் நாடாளுமன்ற, சட்டப்பேரவைகள் என்பதை நாம் அடிக்கடி மறந்து விடுகிறோம்.
  • எதிர்க்கட்சிகள் முன்வைக்கும் ஆலோசனைகளையும் விமர்சனங்களையும் ஆட்சியில் இருப்பவர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்கிற கட்டாயம் இல்லை.
  • ஆனால், தங்களது செயல்பாடு குறித்து மாற்றுக் கட்சியினர் முன்வைக்கும் விமர்சனங்களையும், குறைகளையும் ஆட்சியாளர்கள் காது கொடுத்துக் கேட்கக் கடமைப் பட்டிருக்கிறார்கள்.
  • அதன் மூலம் தவறுகளைத் திருத்திக் கொள்ளவும், செயல்பாடுகளை மறுபரிசீலனை செய்யவும் ஆளுங்கட்சிக்கு வாய்ப்புக் கிடைக்கிறது என்பதுதான் நாடாளுமன்ற ஜனநாயகத்தின் சிறப்பு.
  • இந்தியாவின் வளர்ச்சிக்கு மிகவும் அவசியமான நிலம் கையகப்படுத்தும் சட்டமும், வேளாண் சீர்திருத்தச் சட்டமும் முறையான விவாதமும், கலந்தாலோசனையும் இல்லாமல் போனதால்தான் நிறைவேறாமல் முடங்கின.
  • அதற்கு நாடாளுமன்ற விவாதத்திற்கு வழிகோலாத ஆளுங்கட்சியின் தவறான அணுகுமுறை தான் காரணம்.
  • இந்தியாவின் முதல் பிரதமர் பண்டித ஜவாஹர்லால் நேரு மீது பலரும் பல குற்றச்சாட்டுகளையும் முன் வைக்கலாம்.
  • ஆனால், அவரிடமிருந்து இன்றைய மத்திய - மாநில ஆட்சியாளர்கள் படிக்க வேண்டிய முக்கியமான பாடம் ஒன்று இருக்கிறது.
  • நாடாளுமன்றம் நடக்கும் நாள்களில் பிரதமர் நேரு தலைநகரைவிட்டு வெளியே பயணம் மேற் கொண்டதில்லை. ஒவ்வொரு நாளும், கூட்டத்தொடர் நடக்கும்போது ஏதாவது ஒரு அவையில் அவர் இருப்பது உறுதி.
  • உறுப்பினர்கள், குறிப்பாக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேசுவதை கவனமாகக் குறிப்பெடுத்துக் கொள்வதும், அது குறித்து விசாரித்து நடவடிக்கை எடுப்பதும், சம்பந்தப்பட்ட உறுப்பினருக்கு பதிலளிப்பதும் அவருக்கு வழக்கமாகவே இருந்தது.
  • நாடாளுமன்றத்தின் மகிமை அதன் கட்டட வடிவமைப்பில் இல்லை; அங்கே நடக்கும் விவாதங்களிலும் செயல்பாடுகளிலும்தான்!

நன்றி: தினமணி  (27 - 12 - 2021)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்