- நவீன இந்திய அரசியல் ஆளுமைகளில் குறிப்பிடத்தக்க ஒருவரான ராஜாஜியின் எழுத்துகள் நாட்டுடைமை ஆக்கப்பட வேண்டும்.
- காந்தி, நேரு, அம்பேத்கர் ஆகியோரின் எழுத்துகள் ஆங்கிலத்திலும் இந்திய மொழிகளிலும் பெருந்தொகுப்புகளாக வாசிக்கக் கிடைக்கும் நிலையில், ராஜாஜியின் எழுத்துகள் இன்னும் முழுமையாகத் தொகுக்கப்படாத நிலையில் உள்ளது துரதிர்ஷ்டவசமானது.
- இதுவரை ஆங்கிலத்தில், தமிழில் என்று தனித்தனியே மேற்கொள்ளப்பட்ட அவ்வாறான பகுதியளவிலான ஒருசில புத்தக முயற்சிகளும்கூட வாசகப் பரப்பை உரிய வகையில் சென்று சேரவில்லை.
- ஆக, ராஜாஜியின் இலக்கியப் படைப்புகளும் அரசியல் கட்டுரைகளும் தமிழ், ஆங்கிலம் ஆகியவற்றில் தொகுக்கப்படுவதுடன் இந்தியாவின் மற்ற மொழிகளிலும் அவற்றை வெளியிடுவதற்கான முயற்சிகளை ஒன்றிய, மாநில அரசுகள் மேற்கொள்ள வேண்டும்.
- தமிழிலும் ஆங்கிலத்திலுமாகப் பல்லாயிரக்கணக்கான பக்கங்களுக்கு எழுதித் தீர்த்தவர் ராஜாஜி.
- இந்தியாவின் இரு பெரும் இதிகாசங்கள் வலியுறுத்தும் அறக் கருத்துகளை இளைய தலைமுறையினருக்கு விளக்கிச்சொல்லும் வகையில் அவர் தமிழில் எழுதிய ‘வியாசர் விருந்து’, ‘சக்ரவர்த்தித் திருமகன்’ இரு நூல்களும் வெளிவந்த காலத்திலேயே லட்சத்துக்கும் மேற்பட்ட பிரதிகள் விற்பனையாகின.
- கீதையின் சாரத்தை, உபநிடதங்களின் தத்துவ விசாரணைகளை, திருமூலரின் மெய்யியலை அவர் கற்றுணர்ந்து மற்றவர்களுக்கும் புத்தக வடிவில் பகிர்ந்துகொண்டார்.
- குறிப்பிடத்தக்க சிறுகதைகளையும் அவர் எழுதியிருக்கிறார். தவிர, ஒத்துழையாமை இயக்கக் காலகட்டத்திலிருந்து நேரு-இந்திரா ஆட்சிக் காலம் வரையிலும் ஏறக்குறைய அரை நூற்றாண்டு கால இந்திய அரசியல் வரலாற்றில் சுதந்திரப் போராட்ட வீரராகவும், அரசின் கட்டற்ற அதிகாரங்களுக்கு எதிரான பொருளியராகவும் அவர் இருந்திருக்கிறார். அந்தந்தக் காலத்தில் அவரது அரசியல் கருத்துகளை விளக்கிக் கடிதங்களாகவும் கட்டுரைகளாகவும் பத்திரிகைகளில் அவர் எழுதியிருக்கிறார்.
- அவருடைய எழுத்துகள் தேசிய அரசியலில் ஒரு முக்கியமான தரப்பு என்பதைத் தாண்டி, சர்வதேச உறவுகள், அணுசக்தி எதிர்ப்பு என்று சர்வதேச அளவிலான முக்கிய விஷயங்களையும் பேசுபவை. இன்றும் பல விஷயங்களில் பொருத்தப்பாடு உடையவை.
- தன்னுடைய எழுத்துகள் பரவலாகச் சென்றடைய வேண்டும் என்பதைப் பெரிதும் விரும்பிய ராஜாஜி தன் எழுத்துகளுக்காகப் பதிப்பகம் வழங்கும் தொகையைக்கூடப் பெற மறுத்து, வாசகர்களுக்குப் புத்தகங்கள் மலிவான விலையில் சென்றடைய அந்தத் தொகையையும் பயன்படுத்திக்கொள்ளக் கேட்டுக்கொண்ட வரலாறும் உண்டு.
- எழுத்துகளைப் பொருளீட்டும் ஒரு விஷயமாகக் கருதாத ராஜாஜியின் மரபையே அவருடைய வழியினரும் பின்பற்றினார்கள். ஆனால், அவருடைய எழுத்துகளைப் பிரசுரிப்பதற்காக வழங்கப்பட்ட உரிமைகள் நாலாபுறமும் சிதறிக்கிடப்பது, அவர் எழுத்துகளை மொத்தமாகத் தொகுக்கும் முயற்சிகளுக்குப் பெருந்தடையாக இருந்துவருகிறது.
- இந்த நிலைக்கு முடிவுகட்டும் வகையில் அவரது எழுத்துகள் அனைத்தையும் நாட்டுடைமையாக்கும் பணியைத் தமிழக அரசு முன்னெடுக்க வேண்டும்.
- ராஜாஜியின் வாரிசுகளுக்குக் கண்ணியமான மதிப்புத்தொகை ஒன்றை வழங்கி, அவரது மொத்தப் படைப்புகளையும் நாட்டுடைமையாக்குவதே அவரது சிந்தனைகள் அடுத்தடுத்த தலைமுறையினரைச் சென்றடைய வழிவகுக்கும்.
நன்றி: தி இந்து (25-09-2020)