TNPSC Thervupettagam

நாட்டை எப்படி பாதுகாப்பது?

June 2 , 2024 223 days 208 0
  • இந்த மக்களவைத் தேர்தல் (2024) பல வாரங்களாகத் தொடர்ந்து, அனைவருக்கும் அதிக சலிப்பையும் களைப்பையும் ஏற்படுத்தியிருக்கிறது, இதன் முடிவுகள் இன்னும் சில நாள்களில் தெரிந்துவிடும். அடுத்து எந்தக் கட்சி அல்லது கூட்டணி - அரசு அமைத்தாலும் மிகவும் கடுமையான சவால்கள் காத்திருக்கின்றன. ஆனால் அவற்றையெல்லாம் இந்தப் பிரச்சாரம் பெரிதாகப் பேசாமல் பின்னுக்குத் தள்ளிவிட்டது.
  • இந்தியாவைப் பிளக்கும் சாத்தியக்கூறுள்ள பல பிரச்சினைகள் உள்ளன, அவற்றின் மீது உரிய கவனம் செலுத்திச் சீர்செய்யாவிட்டால் நம்முடைய குடியரசின் எதிர்காலத்தையே கேள்விக்குள்ளாக்கிவிடும் தன்மை அவற்றுக்கு உள்ளது.

உள்கட்சி ஜனநாயகம்

  • முதலாவது பிளவு அம்சம், கட்சிகளின் அமைப்பிலேயே காணப்படும் ஊழல்தன்மையாகும்.
  • அரசியல் கட்சிகளில் உள்கட்சி ஜனநாயகம் நிலவ வேண்டும், அதன் தலைவர்கள் தொண்டர்கள் – நிர்வாகிகளால் முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும், அவர்கள் கட்சியின் சக தோழர்களுக்குப் பதில் சொல்லக் கடமைப்பட்டவர்களாக இருக்க வேண்டும். இந்திய அரசியல் இன்றைக்கு இந்த அடிப்படை அம்சங்களிலிருந்து பெரிதும் மாறுபடும் தன்மையுடன் திகழ்கிறது.
  • இங்கு அரசியல் கட்சிகள் தலைவரை வழிபாட்டுக்குரிய தெய்வமாக மாற்றி, கட்சியையே அவருடைய கைக்கு அடக்கமான பொம்மையாக மாற்றிவிடுகின்றன அல்லது கட்சிகள், தலைவரின் குடும்பத்தவருக்குக் கட்டுப்பட்ட தனியார் நிறுவனங்களாகிவிடுகின்றன.
  • தலைவரை வழிபடும் தெய்வமாக மாற்றுவதற்குச் சிறந்த உதாரணமாக பாஜக திகழ்கிறது. கடந்த பத்தாண்டுகளில் கட்சியின் அனைத்து அமைப்புகளுமே – அரசின் பெரும்பாலான அங்கங்கள்கூட – நரேந்திர மோடியை அசாதாரணமான மக்கள் தலைவராக, பெருமளவு தெய்வீகத்தன்மை மிக்கவராக, கேள்விக் கேட்காமல் பின்பற்றப்பட வேண்டியவராக மாற்றும் பணியில் தங்களை ஈடுபடுத்திக்கொண்டன.
  • வங்காளத்தில் மம்தா பானர்ஜி, கேரளத்தில் பினராயி விஜயன், டெல்லியில் அர்விந்த் கேஜ்ரிவால், ஆந்திரத்தில் ஜகன்மோகன் ரெட்டி, ஒடிஷாவில் நவீன் பட்நாயக் ஆகியோரும் அவரவர் மாநிலங்களில் தங்களுடைய மாநிலத்தின் கடந்த காலம், நிகழ் காலம், எதிர்காலம் ஆகியவற்றுக்குத் தனிப்பட்ட முறையில் தாங்கள்தான் பொறுப்பு என்ற வகையில் செயல்படுகின்றனர்.
  • குடும்பங்களால் மட்டுமே நிர்வகிக்கப்படும் அரசியல் கட்சிகள், தங்களை ஜனநாயகப்பூர்வமான அமைப்புகளாக பாவனை செய்வது அருவருப்பில் கொஞ்சமும் குறைவானதல்ல. இந்த விஷயத்தில் காங்கிரஸ்தான் பெரிய குற்றவாளி. கட்சியை உருவாக்க பல்லாண்டுகளாக பாடுபட்ட தலைவர்கள் பலர் இருக்க, கட்சியின் பொதுச் செயலாளர் பதவியைப் பெற்றுவிட்டார் பிரியங்கா காந்தி.
  • இந்த விஷயத்தில் காந்திகளை மிஞ்சும் வகையில் கட்சியின் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, தான் தொடர்ந்து போட்டியிட்ட குல்பர்கா மக்களவைத் தொகுதியில் தன்னுடைய மாப்பிள்ளையையே இந்த முறை வேட்பாளராக்கிவிட்டார், ஏற்கெனவே அவருடைய மகன் கர்நாடக மாநில காபினெட் அமைச்சராக இருக்கிறார்.
  • பிஹாரில் ராஷ்ட்ரீய ஜனதா தளம் (ஆர்ஜேடி), உத்தர பிரதேசத்தில் சமாஜ்வாதி (எஸ்பி), தமிழ்நாட்டில் திமுக (டிஎம்கே) ஆகிய கட்சிகளும், ஒற்றைக் குடும்பத்தின் முழுக் கட்டுப்பாட்டிலேயே காலம் முழுக்க கட்சி இருப்பதை உறுதிசெய்துகொண்டுவிட்டன.

நமக்கும் பிரிட்டனுக்குமான வேறுபாடு

  • பிரிட்டனின் ஜனநாயக ஆட்சிமுறையைத்தான் நாம் நமக்கும் வேண்டும் என்று தேர்ந்தெடுத்தோம், அந்த நாட்டில் கடைப்பிடிப்பதற்கும் நமக்கும்தான் இதில் எவ்வளவு பெரிய வேறுபாடு?
  • பிரிட்டனில் பிரதமர் ரிஷி சுனக்கை யாரும் வழிபாட்டுக்குரியவராகப் பின்பற்றுவதில்லை; பிரிட்டனின் பிரதான எதர்க்கட்சியான தொழிலாளர் (லேபர்) கட்சித் தலைவர் கியர் ஸ்டார்மர், எந்த அரசியல் குடும்பத்தின் வாரிசுமல்ல.
  • இருவருமே தாங்கள் வகிக்கும் இப்பதவிகளுக்குக் கடுமையாக உழைத்தும், கட்சித் தோழர்களின் ஆதரவுடனும் வந்தவர்கள். தோழர்களின் நம்பிக்கையையும் மரியாதையையும் இழந்த உடனேயே தாங்கள் வகிக்கும் பதவியிலிருந்து இறங்கிவிடுவார்கள், அவர்களைப் போலவே, சுயமாகக் கட்சியின் செயல்பாடுகளில் ஈடுபாடு கொண்டு முன்னுக்கு வந்தவர்கள் – அரசியல் குடும்ப வாரிசுகள் அல்ல - அந்தப் பதவிகளைப் பெறுவார்கள், அத்துடன் அவர்கள் நாடு முழுவதற்கும் ஏகபோகப் பிரதிநிதிகளைப் போல, பேசவும் மாட்டார்கள்.
  • இந்தியாவில் கட்சி அரசியல் என்பது ஊழல் மிகுந்ததாகவும், தவறான நடவடிக்கைகளால் அரிக்கப்பட்டு தேய்ந்தும் வருகிறது. இந்திய அரசுமே, தான்தோன்றித்தனமாகவும், நிலையான சிந்தனையற்றதாகவும் செயல்படுகிறது.
  • அரசமைப்புச் சட்டப்படி பதவிப் பிரமாணம் செய்துகொள்ளும் இந்திய ஆட்சிப் பணி குடிமைப்பணி அதிகாரிகளும் காவல் துறை அதிகாரிகளும் சுதந்திரமாகவும், யாருடைய தனிப்பட்ட ஆணைகளுக்கும் கட்டுப்படாமலும் நடுநிலையுடன் செயல்பட வேண்டியவர்கள். ஆனால், அவர்களே இந்த நெறிகளையெல்லாம் முழுதாகக் கடைப்பிடிக்காமல் தாங்கள் பணிபுரியும் ஒன்றிய அரசு அல்லது மாநில அரசுகளின் ஆட்சியாளர்களுடைய உத்தரவுகளின்படி நடப்பவர்களாக, தங்களுடைய பணியில் சமரசம் செய்துகொண்டுவிட்டனர்.
  • அவரவர் துறையில் காட்டும் செயல்திறனைவிட - ஒன்றிய, மாநில ஆட்சியாளர்களுக்கு எந்த அளவுக்கு நெருக்கமாக இருக்கிறார்களோ அதற்கேற்ப ‘நல்ல துறை’யில் நியமனம், பதவி உயர்வு ஆகியவற்றைப் பெறுகின்றனர். சுதந்திரமாகச் செயல்பட்டுக்கொண்டிருந்த தேர்தல் ஆணையம் போன்ற சுயேச்சையான அமைப்புகள்கூட, சுதந்திரமாகச் செயல்படாமல் ஆளுங்கட்சியின் அழுத்தங்களுக்கேற்ப செயல்படும் கைப்பாவைகளாகி வருகின்றன.

ஜனநாயகம் பின்பற்றப்படுகிறதா?

  • நாம் ஜனநாயக நாடுதான் என்பதை மேலும் ‘களங்கப்படுத்தும்’ வகையில், நீதிமன்ற விசாரணையே இன்றி ஆண்டுக் கணக்கில் சிறையில் அடைத்துவைக்க உதவியாக கொடூரமான சட்டங்கள் அமலில் இருக்கின்றன. அரசியல் எதிரிகளையும், அரசுக்கு எதிராகச் செயல்படும் பிறவகைச் செயல்பாட்டாளர்களையும் அச்சுறுத்தவும் குரலை ஒடுக்கவும் இந்தச் சட்டங்கள் பயன்படுத்தப்படுகின்றன.
  • முறைகேடாக இப்படிச் சட்டத்தைப் பயன்படுத்த நீதித் துறையும் ஒரு வகையில் உடந்தையாக இருக்கிறது. பிணையில் வெளிவருவதற்கு ஆணை பிறப்பிக்க, நீதிபதிகள் மிகுந்த அவகாசம் எடுத்துக்கொள்கின்றனர். நாகரிக சமூகத்தில் இருக்கவே கூடாத, ‘சட்டவிரோத நடவடிக்கைகள் தடைச் சட்டம்’ (யுஏபிஏ) போன்றவை, சட்டப் புத்தகத்தில் இடம்பெற்றுவிட்டன.
  • ‘உலகிலேயே மிகப் பெரிய ஜனநாயக நாடு’, ‘ஜனநாயகத்தின் தாய்’ என்றெல்லாம் நம்மைப் பற்றி டாம்பீகமாக பீற்றிக்கொள்வதற்குப் பின்னால், இத்தகைய அரசியல் குறைபாடுகள் தொடர்கின்றன; ‘உலகிலேயே வேகமாக வளரும் பொருளாதாரத்தைப் பெற்ற நாடு’ என்ற இன்னொரு பெருமிதம், பலதரப்பட்ட பாவங்களை வெளியே தெரியாமல் மூடிமறைத்துவிடுகிறது.
  • பொருளாதார தாராளமயம் ஏழ்மையை ஒழிப்பதில் ஓரளவுக்கு உதவியிருந்தாலும், மக்களிடையே பொருளாதார ஏற்றத் தாழ்வுகளை அதிகப்படுத்திவிட்டது. தேசிய வருமானம் உயர்ந்ததற்குப் பொருத்தமாக வேலைவாய்ப்புகள் உயரவில்லை. கோடீஸ்வரர்களை உருவாக்குவதில் ‘முன்னணி நாடு’களில் ஒன்றாக இந்தியா திகழ்ந்தாலும், படித்த இளைஞர்களிடையே வேலையில்லாத் திண்டாட்டம் உயர் அளவில் இருக்கிறது. வேலை செய்யும் தொழிலாளர்களில் பெண்களின் எண்ணிக்கை படுமோசமான வகையில் மிகவும் குறைவாகவே இருக்கிறது.

சூழலியலில் சுணக்கம்!

  • இந்தியாவின் பொருளாதாரச் சாதனைகள் நன்மைகள் – தீமைகள் இரண்டும் கலந்தது, சுற்றுச்சூழலைக் காப்பதில் அதன் சாதனை பேரவலமானது.
  • இந்தியப் பொருளாதாரம் உச்சம் பெற்றதற்கு ‘அடையாளச் சின்னம்’ என்று போற்றப்படும் பெங்களூரு மாநகரில் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது; நாட்டின் தலைநகர் டெல்லியிலோ காற்று மாசின் அளவு உயிர்களைப் பலிவாங்கும் அளவுக்குக் கடுமையாக இருக்கிறது.
  • நம்முடைய வாழ்க்கையைத் தீர்மானிக்கும் மிக முக்கியமான காரணிகளான தண்ணீர், காற்று ஆகியவற்றைப் போதிய அளவிலும் - தூய்மையாகவும் தருவதில் எப்படி அக்கறையில்லாமலும், இரக்கமின்றியும் செயல்பட்டுவந்திருக்கிறோம் என்பதையே இவ்விரு நெருக்கடிகளும் உணர்த்துகின்றன.
  • எல்லா வகை அம்சங்களிலும் சுற்றுச்சூழலைப் புறக்கணிப்பதில் இந்தியா ஒரு ‘பலதரப்பட்ட முன்னுதாரண நாடு’ என்று பலமுறை கட்டுரைகளில் எழுதியிருக்கிறேன். காற்று மாசு, வேகமாக சரியும் நிலத்தடி நீர்மட்டம், நஞ்சாகிவிட்ட மண், பெரும் பரப்பில் காணாமல் போகும் பல்லுயிர்ப் பெருக்கம் ஆகியவை மனித உயிர்களைப் பலிவாங்குவதிலும், கோடிக்கணக்கான மனிதர்கள், பிராணிகள் உள்ளிட்ட உயினங்களின் வாழ்க்கையை பாதிப்பதிலும் முக்கியப் பங்கு வகிக்கின்றன, இந்த இழப்பின் பொருளாதார மதிப்பு மிக மிகப் பெரியது.
  • எதிர்காலத்தைப் பற்றி இது பல கேள்விகளை எழுப்புகிறது. பல்வேறு ஆற்றல்களையும், மூலதனங்களையும் பெருமளவில் பயன்படுத்தும் இப்போதைய தொழில் துறை உற்பத்தி முறையை நீண்ட காலத்துக்கு இப்படியே தொடர முடியுமா என்ற கேள்வியையும் இது எழுப்புகிறது. உலகளாவிய பருவநிலை மாறுதலுக்குச் சிறிதும் தொடர்பில்லாத வகையில் இந்தியாவில் சுற்றுச்சூழல் நெருக்கடிகள் நிலவுகின்றன என்பதை இங்கே குறிப்பிட்டே தீர வேண்டும்.
  • பருவநிலை மாறுதல் இந்தப் பிரச்சினைகளைத் தீவிரப்படுத்திவிட்டது என்பது உண்மைதான் என்றாலும், அந்தப் பிரச்சினை வராவிட்டாலும்கூட இந்தியாவில் நிலம், நீர், காற்று மாசடைவதற்கும் நிலத்தடி நீர்மட்டம் குறைவதற்கும் சுற்றுச்சூழல் சீர்கேடு அடைவதற்கும் நம்முடைய நடவடிக்கைகளே பெருமளவு காரணம்.

மோடியின் வருகைக்குப் பின்!

  • பல கட்சி ஜனநாயக முறையைத் தவறாகச் செயல்படுத்தும் நடைமுறைகள், இந்திய அரசின் ஆழமான ஜனநாயக விரோத அணுகுமுறை, நாம் தேர்ந்தெடுத்த பொருளாதார உற்பத்தி முறையில் காணப்படும் குறைபாடுகள், நம்முடைய வாழ்வாதாரத்தின் இயல்பான அடிப்படைகளைச் சீர்குலைத்தது ஆகியவை ஆழ்ந்த அடித்தளக் கட்டமைப்பு சிக்கல்களைத் தோற்றுவித்துள்ளன. பல பத்தாண்டுகளாகத் தொடர்ந்து ஆட்சிசெய்த காங்கிரஸ் கட்சிக்கு இவற்றில் பெரும் பங்கு இருக்கிறது. இவற்றில் பல பிரச்சினைகள், நரேந்திர மோடி பிரதமரான 2014 முதல் மிகவும் தீவிரமாகிவிட்டன.
  • வகுப்புவாதமும் புதிய பிரச்சினை அல்லவே என்று நாம் கருதக்கூடும். பாகிஸ்தான் என்ற தனி நாடு உருவானது முதலே, இந்தியாவில் வாழும் முஸ்லிம்களுடைய நிலைமை முழுமையான பாதுகாப்பு நிலையில் இல்லை. பாகிஸ்தானில் சிறுபான்மை மக்களை அந்த நாட்டு அரசு எப்படி நடத்தினாலும், இந்தியாவில் முஸ்லிம்கள் சம உரிமையுள்ளவர்களாகவே நடத்தப்படுவார்கள் என்று உறுதியளித்தார் நேரு.
  • ஆயினும் தேசப் பிரிவினையின் சுமையை இந்திய முஸ்லிம்கள் அதிகமாகவே சுமக்க நேரிட்டது. அவர்கள் அடிக்கடி சந்தேகக் கண்கொண்டு பார்க்கப்பட்டனர், அவர்கள் மீது எப்போதும் விரோத பாவமே நிலவியது.
  • ராஜீவ் காந்தி பிரதமராக இருந்த காலத்தில் வெவ்வேறு மதங்களுக்கிடையிலான உறவு மேலும் சீர்குலைந்தது. அவர் இந்து, முஸ்லிம் ஆகிய இரு மதங்களின் தீவிரவாதிகளையும் திருப்திப்படுத்த, ஏற்றுக்கொள்ள முடியாத முடிவுகளை எடுத்தார்.
  • 2014க்குப் பிறகு இந்தியாவின் மிகப் பெரிய சிறுபான்மைச் சமூகத்தவரின் பாதுகாப்பின்மை, பல மடங்கு பெரிதாகிவிட்டது. சுதந்திர நாட்டின் வரலாற்றில் முதல் முறையாக இந்து பேரினவாத லட்சியங்களை ஒன்றிய அரசில் உள்ள ஆட்சியாளர்கள் வெளிப்படையாகத் தெரிவித்துள்ளனர்.
  • அரசியலும் பொது நடவடிக்கைகளும் மதம் சார்ந்தத்தன்மையை அதிகம் பெறத் தொடங்கிவிட்டன, கடவுளால் உலகுக்கு அனுப்பப்பட்ட இந்து பேரரசராக தன்னை காட்டிக்கொள்ளும் பிரதமர், காலங்காலமாக இந்து பேரினவாதிகள் கொண்டிருந்த கனவுகளையும் லட்சியங்களையும் மீட்டு, நிறைவேற்றுவதே தனது கடமை என்று கருதுகிறார்.
  • இதன் விளைவாக இந்திய முஸ்லிம்கள் அச்சத்துடனும், எளிதில் அரசின் நடவடிக்கைகளால் பாதிக்கப்படக்கூடிய நிலையிலும் இப்போதிருப்பதைப் போல எப்போதும் இருந்ததில்லை. எதிர்காலம் என்னவாகும் என்று இப்போதைக்கு எதையும் சொல்லிவிட முடியாது.

ஒன்றிய - மாநில நிர்வாக உறவு

  • கடைசியாக நான் சுட்டிக்காட்ட விரும்பும் ஓர் அம்சம், ஒன்றிய அரசுக்கும் மாநில அரசுகளுக்கும் உள்ள நிர்வாக உறவு பற்றியது. கேரளத்தில் கம்யூனிஸ்டுகள் தலைமையிலான அரசை பிரதமர் ஜவஹர்லால் நேரு 1959இல் பதவியிலிருந்து அகற்றியது குறித்து பாஜக ஆதரவாளர்கள் உடனே பேசக்கூடும்; அரசியல் சட்டப் பிரிவு 356இன் கீழ் மாற்றுக்கட்சிகளின் அரசுகளை மேலதிகமாக இந்திரா காந்தி கலைத்தது குறித்தும் பேச விரும்பக்கூடும். இருப்பினும் மாற்றுக் கட்சிகளின் அரசுகளைக் கையாள்வதில், பாஜக ஒன்றிய அரசு அதிக விரோத பாவத்துடன்தான் நடந்துகொள்கிறது.
  • நரேந்திர மோடி – அமித் ஷா தலைமையிலான அரசு, மாநிலங்களின் நியாயமான விருப்பங்களைக்கூட மதிக்காமல் அலட்சியம் செய்கிறது; மாநில மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிற கட்சிகளின் முதலமைச்சர்களை பண்பற்ற மொழிகளால் ஏகடியம் செய்கிறது, அரசமைப்புச் சட்டப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளின் செயல்களைத் தொடர்ந்து தலையிட்டு தடுக்கும் ஆளுநர்களை நியமித்துள்ளது, குடியரசு தின அணிவகுப்பு போன்ற நாட்டின் அடையாளச் சின்னமான தேசிய நிகழ்ச்சிகளில்கூட எதிர்க்கட்சிகளுக்கு உரிய பிரதிநிதித்துவம் தராமல் அவமானப்படுத்துகிறது.
  • இப்படியெல்லாம் செய்து, நாட்டின் எல்லா மாநிலங்களிலும் தங்களுடைய கட்சி மட்டுமே ஆட்சி நடத்தும் நிலை ஏற்படும்வரை ஓயமாட்டோம் என்றே உணர்த்துகிறது. அவர்களுடைய நடத்தை சர்வாதிகார மனப்பான்மையையும், தாங்கள் மட்டுமே ஆளப்பிறந்தவர்கள் என்ற மமதையும் மட்டுமே வெளிப்படுத்துகிறது.
  • கோடிக்கணக்கான இந்தியர்கள் வாக்களித்த மிகப் பெரிய மக்களவைப் பொதுத் தேர்தலைப் பார்த்துவிட்டோம். மக்களுடைய முழு பிரதிநிதித்துவத்தைப் பெறாத அரசியல் கட்சிகள், கொண்ட கொள்கைகளில் நிலையாக இல்லாமல் சமரசம் செய்துகொண்டுவிட்ட பொது நிறுவன அமைப்புகள், ஜனநாயகத்துக்கு முரணான சட்டங்கள், வீழும் பொருளாதாரம், சீர்கெட்டுக்கொண்டிருக்கும் சுற்றுச்சூழல், மதச் சிறுபான்மை மக்களின் மனங்களில் ஆழ்ந்து பதிந்துவிட்ட பாதுகாப்பற்ற நிலை, குடியரசின் கூட்டாட்சி அமைப்புகள் மீது அளவுக்கதிகமான அழுத்தம் ஆகியவற்றின் பின்னணியில் இந்தத் தேர்தல் நடந்திருக்கிறது.
  • அடுத்து ஆட்சிக்கு வரும் அரசின் முதல் கடமை, இந்தப் பிளவு அம்சங்களையெல்லாம் கவனித்து அவற்றைச் சரிசெய்வதுதான். ‘அந்த அரசு’ உண்மையிலேயே அவற்றையெல்லாம் செய்யுமா என்பது அடுத்து கவனிக்கப்பட வேண்டிய விஷயம்!

நன்றி: அருஞ்சொல் (02 – 06 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்