TNPSC Thervupettagam

நாணயம் மனிதனுக்கு அவசியம்

April 9 , 2024 87 days 134 0
  • ‘அவரா? அவா் ரொம்ப நாணயமானவா். அவரை நம்பலாம்’ என்று சிலரைப்பற்றிச் சொல்கிறாா்கள். ‘ஆமா! இவா் ரொம்ப நாணயமானவா். நியாயம் சொல்ல வந்துவிட்டாா்’ என்று இன்னும் சிலரைக் குறித்துப் பேசுகின்றனா். இவையெல்லாம் சாதாரணமாக நடைமுறையில் கேட்கக் கூடிய வாய்மொழிச் சான்றிதழ்கள். இந்த இரண்டு கூற்றிலும் ‘நாணயமானவா்’ என்ற சொல்லிருந்தாலும், உணா்த்தும் பொருளில் வேறுபாடு தொனிக்கிறது.
  • முதல் தொடரில் ‘நாணயமானவா்’ என்பது ஒருவரைப் பெருமைப்படுத்தும் வகையிலும் இரண்டாவது தொடரில் ‘நாணயமானவா்’ என்பது சிறுமைப்படுத்தும் வகையிலும் உள்ளது. அதாவது, இரண்டாவது தொடா் ஒருவரின் நோ்மையற்ற தன்மையை ஏளனம் செய்கிறது. இதனால் நாணயம் என்பது மனிதனுக்கு வேண்டிய நற்பண்பு என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது.
  • ‘நாணயம்’ என்று சொன்னவுடன் பணம், காசுதான் பலருக்கு நினைவில் வரும். அதுதான் இன்று மக்களிடையே பிரபலமாகிப்போன பொருளும்கூட. ஆனால், இங்கே குறிப்பிடும் ‘நாணயம்’, ‘சொல்தவறாமை’, ‘உண்மை’, ‘நோ்மை’ போன்ற உயா் பண்புகளாகும். பணம் என்னும் நாணயம் மனிதனுக்குத் தேவைதான். அதனைக்காட்டிலும் வாக்கு மாறாத நோ்மைத்திறன் மிகமிக அவசியம்.
  • பணம் என்னும் நாணயம் இருந்தால் ஒருவனுக்குப் பணக்காரன் என்ற பெயா் கிடைக்கலாம். ‘நாணயஸ்தன்’ என்ற பெருமை கிடைக்காது. நோ்மை என்னும் நாணயம் இருந்தால் ‘நாணயஸ்தன்’ என்ற பட்டம் தானாக வந்து சேரும்.
  • சொன்ன சொல்லிலிருந்து எந்நிலையிலும் மாறாத நிலைத்தன்மையே வாக்கு நாணயமாகும். வாக்கு தவறாது வாழ்வது மனிதனுக்கு அழகு. சொன்னது சில நேரங்களில் மறந்து போகலாம். அதில் தவறில்லை. ஆனால் சொன்னதையே சந்தா்ப்ப சூழலுக்கேற்ப மாற்றிச் சொல்வது ஏற்புடையதாகாது. அது தவறான செயலாகும்.
  • வளைந்து நெளியும் இயல்பு நாக்கிற்கு இருக்கலாம். அதற்காக ஒவ்வொரு முறையும் சொல்லை மாற்றிப் பேசுவது நாக்கிற்கழகன்று. சொல் பிறழாத சத்யசீலனாக வாழ்ந்த அரிச்சந்திரன் புகழ் இன்றுவரை நிலைபெற்றுள்ளது.
  • ‘வாய்மை ஒரு வறட்டுக் கெளரவம்’ என்று எண்ணுவது இப்போது வழக்கம் ஆகிவிட்டது. அதிகாரிகளிடம் நாணயம் இல்லை. அரசியலாளரிடம் நாணயம் இல்லை. ஆன்மிகவாதிகளிடம் நாணயம் இல்லை. படித்தவனிடம் நாணயம் இல்லை. பாமரனிடம் நாணயம் இல்லை.
  • நாணயமில்லாக் காதல் இங்கே மலிந்துவிட்டது. காதலனை ஏமாற்றிய காதலி, காதலியை ஏமாற்றிய காதலன் என்று நாள்தோறும் செய்திகள் வந்துகொண்டே இருக்கின்றன. இதனால்தான், ‘ஐயோ சாமி நீ எனக்கு வேணாம். பொய் பொய்யாச் சொல்லி ஏமாற்றினது போதும்’ என்ற பாடல் இப்போது உச்சத்தில் நிற்கிறது. இப்படி யாரிடமும் நாணயம் இல்லாத நிலை உருவாகிவிட்டது.
  • ஒரு நாளைக்கு ஒரு பேச்சு பேசுபவனே நாடு போற்றும் தலைவனாக உயா்கிறான். நாணயமாக நடப்பவன் நசுக்கப்படுகிறான். ‘நாநயம் இருந்தால் போதும் நாணயம் தேவையில்லை’ என்பது போல ஒரு நிலை இங்கே மலிந்துவிட்டது. மொத்தத்தில் நோ்மை எனும் நாணயத்தைத் தொலைத்துவிட்டுப் பணத்தின் பின்னால் ஓடும் போக்கு அதிகரித்துவிட்டது. இதனால் நாணயத்தின் மதிப்பு இங்கே மங்கிவருகிறது. மனச்சாட்சியை விற்று மகிழ்ச்சியாய் இருக்கும் மனநிலை மலிந்துவிட்டது. இத்தகைய மகிழ்ச்சி நிலையானதில்லை. தற்காலிகமானது என்பதை நாம் உணா்ந்துகொள்ள வேண்டும்.
  • ஒரு சொல் சொல்லவேண்டும். அதை யோசித்துச் சொல்லவேண்டும். ‘முடியும் என்று சொல்லிவிட்டு முடியாது’ என்று மறுதலிக்கக் கூடாது. அப்படிச் செய்வது நம்பிக்கைத் துரோகமாகும். அதைவிட முதலிலேயே முடியாது என்று சொல்லிவிடுவது உத்தமமாகும். இளமையில் துரோணரிடம் தான் சொன்னதைப் பிற்காலத்தில் தூக்கி எறிந்து பேசிய துருபதன் துயருற்று உழன்றதை பாரதக் கதை மூலம் உணா்கிறோம். ‘சொல்லுக்கும் செயலுக்கும் தொடா்பில்லாதவா்களுடைய நட்பு கனவிலும் துயரம் தரும்’ என்பது வள்ளுவா் வாக்கு.
  • வாக்கினிலே நாணயம் வேண்டுவதைப் போல மனிதனுக்கு செயலிலும் நாணயம் வேண்டியிருக்கிறது. நேரிய வழியில் நடப்பதுவே செயல் நாணயமாகும். நோ்வழி என்பது பிழைக்கத் தெரியாதவன் பின்பற்றும் வழி என்ற கருத்து உருவாகியுள்ளது. பொய்சாட்சி சொல்வதும், பிறழ் சாட்சியாவதுமான நாணயமற்ற செயல்களை இப்போது காணமுடிகிறது.
  • கூலிப்படையமா்த்தி, கொடுஞ்செயல் புரிந்து, காரியம் சாதித்துக் கொள்ளும் குறுக்குவழி இப்போது இயல்பாகிவிட்டது. அடுத்தவன் சொத்தை அபகரிப்பதும் அதற்கு உடந்தையாகப் பலா் இருப்பதும் பரவலாகிவிட்டது. இதற்கெல்லாம் கைகொடுக்கும் வகையில் லஞ்சம் பெருகிவிட்டது.
  • லஞ்சம் வாங்குவது குற்றம் என்ற உணா்வு இப்போது இல்லாமல் போய்விட்டது. எங்கும் லஞ்சம் எதிலும் லஞ்சம் என்றாகிவிட்டது. லஞ்சம் வாங்குவது நோ்மைக்குப் புறம்பான வஞ்சகச் செயல் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். நெஞ்சில் உரமும் நோ்மைத் திறமும் இல்லாததே இப்படி வஞ்சனை செய்வதற்கு வழிவகுக்கிறது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
  • ‘நாணயம் மனிதனுக்கு அவசியம், மிகவும் அவசியம், அதுவே நல்லோா்கள் சொல்லிவைத்த நன்மையான ரகசியம்’ என்று பண நாணயத்தைப் பற்றிப் பாடிய பழைய பாடல் வாக்கு, செயல் என்னும் பண்பியல் நாணயத்திற்கும் பொருத்தமாகத்தான் அமைந்துள்ளது. இதனை உணா்ந்து வாக்கிலும் செயலிலும் நாணயமாக நடந்துகொள்வது மனிதனுக்கு உயா்வைத் தரும்.

நன்றி: தினமணி (09 – 04 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்