- நம் எல்லாருக்கும் தூக்கம் பிடிக்கும். நாள் முழுவதும் சந்திக்கும் நெருக்கடிகளை எல்லாம் ஓரம் கட்டிவிட்டு, நாம் அமைதியைத் தேடும் இடம் தூக்கம்தான். மனிதர்கள் சராசரியாக வாழ்நாளில் மூன்றில் ஒரு பகுதியைத் தூங்கியே கழிக்கிறார்கள். ஆனால், நாம் ஏன் இரவில் மட்டும் தூங்குகிறோம்? ஆரம்பத்தில் மனிதர்கள் சூரிய வெளிச்சத்தில் மட்டும்தான் மூளை வேலை செய்யும் என்று நம்பிக்கொண்டிருந்தார்கள். வெளிச்சம் குறையும்போது மூளை தானாக அணைந்துவிடுகிறது என்று நினைத்தார்கள். ஆனால், அறிவியல் வளர்ச்சி ஏற்படத் தொடங்கியவுடன்தான் தூக்கத்திற்கான காரணம் கண்டறியப்பட்டது. தூக்கம் நம் மூளையில் சுரக்கும் வேதிப்பொருள்களாலும், அவற்றால் உருவாகும் மின் சமிக்ஞைகளாலும் ஏற்படுகிறது.
- நாம் சாப்பிடும் உணவு ஏடிபி (Adenosine Triphosphate) எனும் மூலக்கூறாக மாற்றப்பட்டு உடலில் சேமிக்கப்படும். இந்த ஏடிபிதான் உடலுக்குத் தேவையான ஆற்றலைத் தருகிறது. பகல் முழுவதும் நாம் இயங்குவதற்காக ஆற்றல் வேண்டி மூளையில் உள்ள நியூரான்கள் ஏடிபியை உடைக்கின்றன. இதன் விளைவாக ஏடிபியில் உள்ள Adenosine எனும் வேதிப்பொருள் மட்டும் தனியாகப் பிரிந்து ஹைபோதலாமஸின் அருகே உள்ள தூக்கத்தைக் கட்டுப்படுத்தும் நியூரான்களைத் தூண்டிவிடுகிறது. இந்தத் தூண்டல் இரவில் நடைபெறுவதால்தான் அது தூக்கத்தை வரவழைக்கிறது.
- இதுமட்டுமல்லாமல் நமது மூளையில் நியூரான்களின் தொகுப்பு ( Suprachiasmatic Nucleus) இருக்கிறது. நமது கண்களில் உள்ள விழித்திரை ஒளியைப் பெற்று அதனை மின் சமிக்ஞைகளாக மாற்றி மூளைக்கு அனுப்புவதன் மூலம் அந்த நியூரான்களைப் பூமியின் 24 மணி நேர இரவு, பகல் சுழற்சியுடன் ஒருங்கிணைக்கிறது. இதனால் நம் மூளைக்கு எது இரவு, எது பகல் என்று தெரியும்.
- அந்த நியூரான்கள்தாம் உடல் கடிகாரம்போலச் செயல்பட்டு, நாம் எப்போது தூக்கத்தை உணர வேண்டும், எப்போது விழித்திருக்க வேண்டும் என்பதைக் கட்டுப்படுத்துகின்றன. சூரியன் மறையத் தொடங்கியவுடன் அந்த நியூரான்கள் நமது மூளையில் உள்ள பினியல் சுரப்பியைத் தூண்டிவிட்டு மெலட்டோனின் எனும் ஹார்மோனை ரத்தத்தில் சுரக்க வைக்கிறது. உடனே நமக்கு உடல் சோர்வடைய ஆரம்பிக்கும். உடல் வெப்பம் குறைந்து தூக்கத்துக்குள் சென்றுவிடுகிறோம். இந்த இரண்டு வேதிச் செயல்பாடுகளும்தாம் இரவு வந்தால் நாம் தூங்க வேண்டும் என்கிற உணர்வை ஏற்படுத்துகின்றன. நமது உடலில் உள்ள மரபணுக்களில் 15 சதவீதம் உடல் கடிகார வேலையைச் செய்வதற்காகவே உருவாக்கப்பட்டுள்ளன.
- ஆனால், இன்றைய காலகட்டத்தில் இருளை நாம் பெரும்பாலும் குறைத்துவிட்டோம். மின்விளக்குகள் பயன்பாடு அதிகரிக்கத் தொடங்கியவுடன் இரவிலும் விழித்திருந்து வேலை பார்க்கிறோம். இது நம் தூக்கத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. நாம் இரவு நேரத்தில் தொடர்ந்து அதிக வெளிச்சத்தில் இருக்கும்போது நமது மூளை அதைச் சூரிய ஒளி என்றே கருதிக்கொண்டு குழம்பிவிடுகிறது. இதனால் மெலட்டோனின் ஹார்மோனைச் சுரக்க விடாமல் தடுத்து, தூக்கம் வரவிடாமல் செய்துவிடுகிறது. செயற்கை ஒளியால் ஏற்படும் தூக்கப் பற்றாக்குறை மனித உடலில் மன அழுத்தம், இதயநோய், புற்றுநோய், நீரிழிவு போன்றவற்றுக்குக் காரணமாக அமைகிறது என்கிறார்கள் விஞ்ஞானிகள்.
- தூக்கம் பல்வேறு விதங்களில் மனிதர்களுக்கு உதவுகிறது. நமது பழுதடைந்த செல்கள் நாம் தூங்கும்போது சரிசெய்துகொள்கின்றன. உடல் இயக்கத்திற்கு வேண்டிய புரதங்களைத் தூங்கும்போதுதான் உடல் அதிகம் உருவாக்குகிறது. நமது நியூரான்களில் சேர்ந்திருக்கும் கழிவுகளும் தூக்கத்தின்போது வெளியேறுகின்றன. நம் சிந்தனைகளையும் எண்ணங்களையும் உருவாக்கும் மூளையின் முன்பகுதி இடைவிடாமல் இயங்கிக்கொண்டே இருக்கும். நீங்கள் எதையும் நினைக்காமல் இருக்க முயற்சி செய்தாலும் முடியாது அல்லவா? ஆனால், தூக்கம்தான் மூளைக்கு ஓய்வு அளிக்கும் ஒரே செயல்பாடு. அதற்காக அப்போது மூளை சுத்தமாக வேலை செய்யாது என்பது பொருள் அல்ல. பல்வேறு கட்டங்களாகத் தூக்கம் ஏற்படும்போது மூளையின் வெவ்வேறு பகுதிகள் ஓய்வெடுத்துக்கொள்ளும்.
- ஆனால், உயிரினங்களுக்கு முதன் முதலில் தூக்கம் எப்போது கிடைத்தது? இதற்கான பதில் கடல் புழு (Platynereis Dumerilii) ஒன்றின் மூலம் விஞ்ஞானிகளுக்குக் கிடைத்தது. அந்தப் புழுக்கள் ஒவ்வோர் இரவும் உணவுக்காகக் கடலின் மேற்பரப்புக்கு வருகின்றன. ஆனால், பகலில் வெளிச்சம் வந்ததும் ஆழத்திற்குச் சென்று மறைந்துவிடுகின்றன. அந்த விலங்குகள் வெளிச்சத்தை எப்படி அறிகின்றன என ஆராய்ந்தபோது, அவற்றின் உடலில் உள்ள சில செல்கள் நம் கண்களைப்போலச் செயல்பட்டு, சூரிய ஒளியை உள்வாங்கி மெலட்டோனினைச் சுரப்பது தெரியவந்தது.
- ஆனால், அந்த மெலட்டோனின் தூக்கத்திற்குப் பதிலாக, அவை இரவில் மேற்பரப்பில் நீந்தவும், பகலில் நீந்த விடாமல் தடுக்கவும் அதன் உடல் இயக்கத்தைக் கட்டுப்படுத்தின. அப்படி என்றால் அந்தக் கடல் புழுக்களுடன் பொது மூதாதையரை நாம் பகிர்ந்துகொண்டிருந்த காலத்தில்தான் தூக்கம் உருவாகியுள்ளது என்று விஞ்ஞானிகள் கணிக்கின்றனர். இதன்படி சுமார் 70 கோடி ஆண்டுகளுக்கு முன் உயிரினங்களுக்குத் தூக்கம் கிடைத்தது.
- பரிணாமக் கண்ணோட்டத்தில் பார்த்தால் தூக்கம் என்பது ஆபத்தை ஏற்படுத்தும் பண்பு. ஏனென்றால் தூங்கும்போதுதான் எந்த விலங்கானாலும் பலவீனமாக இருக்கும். எதிரிகள் தாக்குதலுக்கு எளிதில் உள்ளாகும். அப்படியிருந்தும் தூக்கம் நிலைத்திருக்கிறது என்றால், உடல் இயக்கத்துக்கு அதன் அவசியம் என்ன என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். இனிமேலாவது இரவில் சரியான நேரத்துக்குத் தூங்குங்கள்.
நன்றி: இந்து தமிழ் திசை (27 – 12 – 2023)