TNPSC Thervupettagam

நாம் போகிறோம் மேலே... மேலே...

July 19 , 2023 547 days 317 0
  • நிலவின் தென்துருவத்தில் ஆய்வு மேற்கொள்வதற்காக சந்திரயான்-3 விண்கலம் தனது பயணத்தை வெற்றிகரமாகத் தொடங்கியிருப்பது உலக அரங்கில் இந்தியாவுக்கு பெருமிதம் அளிக்கும் செய்தி. சந்திரயான்-3 தனது இலக்கை அடைவதற்கு பல்வேறுகட்ட சவால்களைச் சந்திக்க வேண்டியிருக்கிறது.
  • இந்தியாவின் இளைய சமுதாயத்தை விண்வெளித் துறையில் உள்ள வாய்ப்புகளை நோக்கி ஈர்க்கும் உந்துசக்தியாகவும் இது அமையும்.
  • இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் (இஸ்ரோ) முதல் நிலவு ஆய்வுத் திட்டம் 2008-ஆம் ஆண்டு அக்டோபர் 22-ஆம் தேதி சந்திரயான்-1 விண்கலம் மூலம் தொடங்கியது. அந்த விண்கலம் நிலவின் தரைப்பரப்பிலிருந்து 100 கி.மீ. உயரத்தில், நிலவின் சுற்றுப் பாதையில் 3,400 முறை சுற்றி வந்தது. நிலவில் தண்ணீர் இருப்பதற்கான ஆதாரங்கள் அதன் ஆய்வில் உறுதி செய்யப்பட்டன. 2 ஆண்டுகள் ஆயுள்காலம் கொண்ட சந்திரயான்-1 விண்கலத்துடனான தகவல் தொடர்பு 2009, ஆக. 29-ஆம் தேதி துண்டிக்கப்பட்டதையடுத்து அத்திட்டம் முடிவுக்கு வந்தது.
  • நிலவின் தென்துருவத்தில் தரையிறங்கி ஆய்வு செய்வதற்காக சந்திரயான் -2 விண்கலமானது எல்விஎம்-3 (ஜிஎஸ்எல்வி மார்க்-3) ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து கடந்த 2019-ஆம் ஆண்டு ஜூலை 22-ஆம் தேதி விண்ணில் ஏவப்பட்டது. அதே ஆண்டு செப்டம்பர் மாதம் நிலவின் சுற்றுப் பாதையைச் சென்றடைந்தது. எனினும், திட்டமிட்டதற்கு முன்பாகவே அதன் லேண்டர் தரையிறங்காமல் செயலிழந்தது.
  • சந்திரயான்-2 விண்கலம் எதிர்பார்த்த வெற்றியைத் தராதது இஸ்ரோவுக்கு பின்னடைவை ஏற்படுத்தினாலும், அந்தத் திட்டத்தில் கிடைத்த அனுபவத்திலிருந்து சில குறைபாடுகளைச் சரி செய்து புதிய தொழில்நுட்பத்தில் ரூ.615 கோடி செலவில் சந்திரயான்-3 திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
  • எல்விஎம்-3 ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவன் விண்வெளி ஏவுதளத்திலிருந்து செலுத்தப்பட்ட சந்திரயான்-3 விண்கலம் புவி வட்டப் பாதையிலிருந்து விலகி நிலவின் சுற்றுப் பாதைக்குள் ஆகஸ்ட் 1-ஆம் தேதி நுழையும் எனவும், நிலவிலிருந்து 100 கி.மீ. தொலைவை அடைந்த பிறகு உந்துகலனிலிருந்து ஆகஸ்ட் 17-ஆம் தேதி லேண்டர் கலன் விடுவிக்கப்படும் எனவும் இஸ்ரோ தெரிவித்துள்ளது.
  • நிர்ணயிக்கப்பட்ட இலக்கில் லேண்டர் ஆகஸ்ட் 23-ஆம் தேதி தரையிறங்கி திட்டம் வெற்றி பெறும் நிலையில், நிலவின் தென்துருவத்தில் ஆய்வைத் தொடங்கிய உலகின் முதல் நாடு என்கிற சாதனையையும், நிலவில் ஆய்வுக்கலத்தை தரையிறக்கிய ரஷியா, அமெரிக்கா, சீனா ஆகிய நாடுகளின் வரிசையில் 4-ஆவது இடத்தையும் இந்தியா பெறும். நிலவின் பரப்பில் வெப்பக் கடத்தல் பண்பு, நிலவில் அலுமினியம், சிலிகான் உள்ளிட்ட கனிமங்கள் உள்ளனவா, நிலவில் உயிரினங்கள் வாழ்வதற்கேற்ற தகுதிகள் உள்ளனவா என்பதை சந்திரயான்-3 விண்கலத்தின் லேண்டர், ரோவர், புரபல்சன் ஆகியவை ஆய்வு செய்யும்.
  • 1969-ஆம் ஆண்டு நிலவுக்கு மனிதர்களை ஏற்றிச் சென்ற அமெரிக்காவின் அப்பல்லோ-11 விண்கலமானது தரையிலிருந்து புறப்பட்ட நான்கு நாள்களில் நிலவைச் சென்றடைந்தது. சக்திவாய்ந்த சாட்டர்ன்-5 ராக்கெட் மூலம் அந்த விண்கலம் செலுத்தப்பட்டது. இப்போது சந்திரயான்-3 நிலவைச் சென்றடைய ஏன் 40 நாள்களுக்கும் மேல் ஆகிறது என்பதற்கு காரணங்கள் உள்ளன.
  • புவி வட்டப் பாதையில் சுற்றி சுற்றிப் பயணித்து அதன் பின்னர், நிலவின் வட்டப் பாதைக்குள் புகுந்து அதற்குள்ளும் சுற்றிப் பயணித்து நிலவில் தரையிறங்கும் "ஸ்லிங் ஷாட்' தொழில்நுட்பம் சந்திரயான்-3 திட்டத்தில் பயன்படுத்தப்படுகிறது. அதனால்தான் இந்த நீண்ட நாள்கள். 2014-ஆம் ஆண்டு செவ்வாய் கிரகத்துக்கு மங்கள்யான் விண்கலம் செலுத்தப்பட்டபோதும் இந்த "ஸ்லிங் ஷாட்' தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டது.
  • நிலவின் மற்ற பகுதிகளில் ஆய்வு செய்வதற்கும், தென் துருவத்தில் ஆய்வு செய்வதற்கும் அதிக வேறுபாடுகள் உள்ளன. தென் துருவத்தின் பல பகுதிகளில் சூரிய ஒளி விழுவதில்லை. அதன் காரணமாக, அங்கு குளிர் நிலையும், உறை நிலையும் இருக்கும். நிழல் பகுதியான தென் துருவத்தில் ஹைட்ரஜன், நீர்மம், பனி நிறைந்திருக்கும். அதைத் தவிர, ஹீலியம்-3 போன்ற கனிமங்களும் அதிகமாக இருக்க வாய்ப்புள்ளது. ஆச்சரியங்கள் நிறைந்த நிலவின் தென் துருவத்தில் ஆய்வு செய்ய உலக நாடுகள் ஆர்வம் காட்டுகின்றன.
  • முந்தைய இரு சந்திரயான் திட்டங்களைப் போல சந்திரயான்-3 திட்டத்துக்கும் தமிழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானி திட்ட இயக்குநராக செயல்பட்டு வருவதன் மூலம் தமிழகத்துக்குத் தனிப் பட்ட முறையில் பெருமை கிட்டியுள்ளது. சந்திரயான்-1 திட்டத்துக்கு பொள்ளாச்சியைச் சேர்ந்த விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரையும், சந்திரயான்-2 திட்டத்துக்கு சென்னையைச் சேர்ந்த வனிதா முத்தையாவும் திட்ட இயக்குநர்களாக செயல்பட்டனர். சந்திரயான்-3 திட்டத்துக்கு விழுப்புரத்தைச் சேர்ந்த இஸ்ரோ விஞ்ஞானி வீரமுத்துவேல் இயக்குநராக உள்ளார்.
  • சந்திரயான்-3 விண்கலத்தை வெற்றிகரமாகச் செலுத்தியிருப்பதன் மூலம் சர்வதேச விண்வெளி அரங்கில் இந்தியா தனது முக்கியத்துவத்தை உணர்த்தியிருக்கிறது. உள்நாட்டு மாணவர்களுக்கும் இளைஞர்களுக்கும் இதில் முக்கியமான செய்தி உள்ளது. சந்திரயான் திட்ட இயக்குநர்கள் மூவருமே எளிமையான குடும்பப் பின்னணி கொண்டவர்கள். விண்வெளித் துறையில் சாதனை படைப்பதற்கு பெரிய பின்புலம் எதுவும் தேவையில்லை; அறிவியல் ஆர்வமும், கடின உழைப்பும்தான் தேவை என்பதே அந்தச் செய்தி.

நன்றி: தினமணி (19  – 07 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்