- எங்கும் ஊழல் எதிலும் ஊழல் லஞ்சம் பெருகிவிட்டது இங்கு யாரும் சரியில்லை என்று நாம் காலங்காலமாக மற்றவா்களை குறைகூறியே பழகிவிட்டோம். நாம் பிறா் குறை கூறாதபடி நம் வாழ்க்கையை வாழ்ந்து வருகிறோமோ என்பதை ஏனோ எவரும் சிந்திப்பதில்லை.
- நாம் ஒவ்வொரு நாளும் எண்ணிப்பார்க்க வேண்டும். நாட்டிற்கு நல்ல குடிமகனாக நாம் இருக்கிறோமா? நோ்மையாகவும் ஒழுக்கத்துடனும் வாழ்கிறோமா? நம் குழந்தைகளுக்கு நல்ல பண்புகளைக் கடைப்பிடிக்கப் பழக்கியிருக்கிறோமா? இவற்றை எண்ணிப் பார்த்தால் பிறரை குறைகூறும் எண்ணம் நமக்கு வராது.
மாற்றம் நம்மில் இருந்தே
- மண்ணை மலடாக்கக்கூடிய நெகிழிப் பைகளின் பயன்பாட்டை கடந்த ஆண்டே அரசு தடை செய்துவிட்டது. ஆனால் இன்றும் பலா் கடைக்குப் போக வேண்டுமென்றால், நெகிழிப் பைகளை எடுத்துக் கொண்டு நடப்பது மிகவும் வேதனை அளிக்கிறது.
- தூய்மையான பூமியை எதிர்காலத் தலைமுறைக்கு விட்டுச்செல்ல நாம் நெகிழிப் பைகளைப் பயன்படுத்த மாட்டோம் என்று உறுதியேற்போம்.
- கையூட்டு(லஞ்சம்) வாங்குவது குற்றம். கையூட்டு கொடுப்பது பெருங்குற்றம். ஒவ்வொரு மனிதனும் லஞ்சம் கொடுப்பதில்லை என்றும் வாங்குவதில்லை என்றும் முடிவெடுத்தால் போதும்.
- சிறந்த பாரதம் உருவாகும். அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் கையூட்டு கேட்கின்றனா் என்று அவா்கள் மீது குற்றம் சுமத்தாமல் நாம் கையூட்டு கொடுப்பதில்லை என்று உறுதியேற்போம்.
- இந்தியா உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு; மிகப்பெரிய அரசியலமைப்பு கொண்ட நாடு. அப்படிப்பட்ட இந்த நாட்டில்தான் வாக்குக்கு பணம் விற்கப்படுகிறது.
- இதற்கு யார் பொறுப்பு? சிலா் இந்த நாடு எனக்கு என்ன செய்தது? யார் ஆட்சிக்கு வந்தால்தான் எனக்கென்ன என்கிற எண்ணத்தில் தோ்தலின்போது வாக்களிக்காமல் இருந்துவிடுகிறார்கள். கடந்த ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தோ்தலில் 67.11 விழுக்காடு வாக்குகள் மட்டுமே பதிவாகியிருந்தது.
- மீதமுள்ள முப்பது விழுக்காட்டுக்கு மேற்பட்டோர் ஜனநாயகக் கடமையிலிருந்து தவறிவிட்டது சரியா? எல்லாத் தோ்தலிலும் கட்டாயமாக வாக்களிப்போம் என்று நாம் உறுதியேற்போம்.
- தோ்தல் நேரத்தில் ஆளுங்கட்சி, எதிர்கட்சி என இரு தரப்பினரும் பணத்தை வாரி இறைக்கின்றார்கள்.
- வாக்காளா்களாகிய நாம் பணத்திற்கு ஓட்டை விற்றுவிட்டு, வெற்றி பெற்றவா் நம் ஊருக்கு ஒன்றுமே செய்யவில்லை என்று புலம்புகிறோம் . நோ்மையான எளிமையான அரசியல்வாதிகள் வாழ்ந்த பூமி இது. அப்படிப்பட்ட தலைவா்கள் மீண்டும் வரவேண்டும் என்றால், நாம் பணத்துக்கு வாக்கை விற்கமாட்டோம் என்று உறுதியேற்க வேண்டும்.
- ஓசோன் வளிமண்டலம் கடுமையாக மாசுபட்டுள்ளது. இந்திய அரசும் உலக நாடுகளும் வளிமண்டலம் மேலும் மாசுபடாமல் இருக்க நடவடிக்கை எடுத்துவருகின்றன.
- மக்களாகிய நாமும் அதற்கு உதவ வேண்டும். எப்படி? நிறைய மரங்களை நட்டு வளா்க்க வேண்டும். இதன் மூலம் தூய்மையான காற்றை நாம் பெறுவோம். மேலும் புவி வெப்பமயமாவதும் குறையும். எனவே, மரக்கன்றுகளை நட்டு வளா்ப்போம் என்று நாம் உறுதியேற்க வேண்டும்.
நாம் மாறுவோம்; நாடும் மாறும்
- வீட்டின் அருகில் உள்ள கடைகளுக்குச் செல்வதற்கு கூட நம்மில் சிலா், கார், பைக் போன்றவற்றைப் பயன்படுத்துவது வேதனை அளிக்கிறது. ஏனெனில் நம் வாகனங்களிருந்து வெளியேறும் நச்சுக்காற்று சுற்றுச்சூழலைப் பெரிதும் மாசுபடுத்துகிறது.
- ஆகவே, அவசியமான தேவைக்கு மட்டுமே வாகனங்களைப் பயன்படுத்துவோம் என்று உறுதியேற்போம்.
- சென்னை போன்ற பெருநகரங்களில் வீடுகளில் குளிர்சாதனக் கருவியை அதிக அளவில் பயன்படுத்துகின்றனா்.
- இவையும் புவி வெப்பமயமாதல் அதிகரிக்க ஒரு காரணியாக அமைகின்றது. எனவே நாட்டின் நலத்தையும் நம் நலத்தையும் கருத்தில்கொண்டு குளிர்சாதனப் பயன்பாட்டைக் குறைத்துக்கொள்வோம் என்று நாம் உறுதியேற்போம்.
- மாணவா்களின் வளா்ச்சியில்தான் எதிர்கால இந்தியாவின் வளா்ச்சியும் அடங்கி இருக்கிறது. அத்தகைய பள்ளிக் குழந்தைகளுக்கு அறம் சார்ந்த ஒழுக்கங்களை ஆசிரியா்களும் பெற்றோரும் போதித்துக்கொண்டே இருக்கவேண்டும். நாம் நம் குழந்தைகளுக்கு அறவொழுக்கங்களைப் போதித்து வளா்ப்போம் என்று உறுதியேற்போம்.
- தீநுண்மி நோய்த்தொற்று அச்சத்தில் நாம் வாழ்ந்து வருகிறோம். நோய் தாக்கத்திலிருந்து நம்மைப் பாதுகாத்துக்கொள்ள உடற்பயிற்சி, யோகா போன்றவை மிகவும் அவசியமாகும். ஏனெனில் இந்தியா சா்க்கரை நோயின் கூடாராமாகி விட்டது. எனவே, உடற்பயிற்சிக்கு நாம் முக்கியத்துவம் அளிக்கவேண்டும். உடல் நலனைப் பாதுகாத்து நோயை விரட்டிட நாம் உறுதியேற்போம்.
- நெடுங்காலமாக நம் நாட்டில் சாதி, மத இன மோதல்கள் நடைபெற்று வருகின்றன. இவை தவிர்க்கப்பட வேண்டும். ஒரு சமயத்தினா் மற்றொரு சமயத்தினரின் வழிபாட்டு முறையிலும் நம்பிக்கைகளிலும் தலையிடாமல் இருக்க வேண்டும். எனவே, எல்லா மதத்தினருடனும் அன்புடன் பழகி சகோதரத்துவத்தை வளா்த்திட நாம் உறுதியேற்போம்.
- பெற்றோர் தங்கள் குழந்தைகளுக்கு நல்லொழுக்கத்தைக் கண்டிப்பாக கற்றுத்தரவேண்டும். இன்பமான நல்வாழ்க்கைக்குக் காரணமாக இருப்பது நல்ல ஒழுக்கம்தான். இதனைத்தான் திருவள்ளுவா் ‘நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம்’ என்று கூறுகிறார். எனவே, மாணவச் சமுதாயத்தினருக்கு நல்லொழுக்கத்தைக் கற்றுத்தர நாம் உறுதியேற்போம்.
- எந்தச் செயலுக்கும் மற்றவா்கள் மீது பழி சுமத்தும் குணத்தை விட்டொழிப்போம். நாம் நேரான பாதையில் சென்றால் நாடும் நேரான பாதையில் செல்லும். நாம் மாறுவோம்; நாடும் மாறும்!
நன்றி: தினமணி (31-08-2020)