TNPSC Thervupettagam

நாம் முடங்கிவிடவில்லை!

July 23 , 2020 1639 days 731 0
  • பொது முடக்கம் மெல்ல மெல்லத் தளர்த்தப்படுவதைத் தொடர்ந்து, பொருளாதார நடவடிக்கைகள் சுறுசுறுப்பாக இல்லாவிட்டாலும், தொடங்கியிருக்கின்றன.

  • எல்லா நிறுவனங்களும் தங்களது நடவடிக்கைகளை இன்னும் முழு மூச்சில் தொடங்க முடியாத நிலையில், எதிர்பார்த்த அளவு பொருளாதாரத்தில் வேகம் இல்லாமல் இருப்பது ஆச்சரியப்படுத்தவில்லை. அதேநேரத்தில், முற்றிலுமாக முடங்கிவிடவில்லை என்பது சற்று ஆறுதல்.

  • கடந்த மாதப் பொருளாதாரப் புள்ளிவிவரங்கள் நம்பிக்கை அளிப்பவையாக இருக்கின்றன. ஏற்றுமதிகள் மெல்ல மெல்ல அதிகரிக்கத் தொடங்கியிருக்கின்றன.

  • பல இனங்களின் இறக்குமதி குறைந்திருப்பதில் குறை காண வேண்டிய அவசியமில்லை. இன்னும் முழுமையான இயல்புநிலை திரும்பாத நிலையில், அப்படி எதிர்பார்ப்பது தவறு.

ஏற்றுமதி-இறக்குமதி

  • கடந்த 18 ஆண்டுகளில், இந்தியா, முதன்முதலாக கடந்த மாதம்தான் தனது வர்த்தக வரவு அதிகரிப்பைப் பார்த்திருக்கிறது.

  • 2002 ஜனவரிக்குப் பிறகு இப்போதுதான் வர்த்தக இடைவெளியில் வரவு அதிகமாகக் காணப்படுகிறது.

  • கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது, இந்திய ஏற்றுமதி 12.4% குறைந்திருக்கிறது. இறக்குமதி கடந்த ஆண்டு ஜூன் மாதத்துடன் ஒப்பிடும்போது 47.6% குறைந்திருக்கிறது.

  • அதன் விளைவாக, ஏற்றுமதிக்கும் இறக்குமதிக்குமான இடைவெளியில், 790 மில்லியன் டாலர் (சுமார் ரூ. 5,895 கோடி) "ஏற்றுமதி மிகுதி' ("எக்ஸ்போர்ட் சர்ப்ளஸ்') காணப்படுகிறது.

  • மே 2020-இல், வர்த்தகப் பற்றாக்குறை 3.15 பில்லியன் டாலர் (சுமார் ரூ. 23,508 கோடி). மே மாதம் ஏற்றுமதியில் 36.5% வீழ்ச்சியும், இறக்குமதியில் 51% வீழ்ச்சியும் காணப்பட்டது.

  • அதன் விளைவாக, வர்த்தகப் பற்றாக்குறை 79% குறைந்தது. ஏப்ரல் 2020}இல், வர்த்தகப் பற்றாக்குறை 6.8 பில்லியன் டாலர் (சுமார் ரூ. 50,748 கோடி). அப்போது 60.3% ஏற்றுமதியும், 58.7% இறக்குமதியும் குறைவாகக் காணப்பட்டது.

  • கடந்த ஏப்ரல், மே, ஜூன் ஆகிய மூன்று மாதங்களில் பொருளாதாரம் மெல்ல மெல்ல செயல்பட ஆரம்பித்தது.

  • சர்வதேசச் சந்தையில் வர்த்தக நடவடிக்கைகள் பழையபடி தொடங்கியதால், ஏற்றுமதி, இறக்குமதிக்கான வாய்ப்பு மீண்டும் உருவாகத் தொடங்கியது.

  • ஏப்ரல், மே மாதங்களில் 60.3% காணப்பட்ட குறைவான ஏற்றுமதிகள், ஜூன் மாதம் 12.4% என்கிற அளவில் அதிகரித்தது நம்பிக்கையை ஏற்படுத்துகிறது. இறக்குமதியில் அதே அளவிலான நிலை காணப்படவில்லை. ஏப்ரலில் 58.7% இருந்த இறக்குமதிக் குறைவு, ஜூன் மாதம் 47.6% என்கிற அளவில்தான் குறைந்திருக்கிறது.

  • ஜூன் மாத வர்த்தக இடைவெளி அதிகரிப்பு இந்தியப் பொருளாதாரம் இன்னும்கூட பலவீனமாக இருப்பதையும், மக்கள் மத்தியில் "தேவை' ("டிமாண்ட்') குறைவாக இருப்பதையும் காட்டுகிறது.

  • பல மாநிலங்களில் உள்ளூர் அளவில் நடைமுறைப்படுத்தப்படும் பொது முடக்கங்கள் அதற்கொரு முக்கியமான காரணம். தேசிய அளவில் ஜூன் ஆரம்பத்திலிருந்து பொருளாதார நடவடிக்கைகள் அதிகரித்திருக்கின்றன என்றாலும்கூட, மாநில அளவில் அதன் தாக்கம் எதிர்பார்த்த அளவு காணப்படவில்லை.

  • பொதுவாக ஏற்றுமதிகள், பெட்ரோலியம் சார்ந்த பொருள்கள், பெட்ரோலியம் சாராதப் பொருள்கள் என்கிற இரண்டு முக்கியமான பிரிவுகளின் கீழ் பிரிக்கப்படும். ஜூன் மாதம் பெட்ரோலியம் சார்ந்த ஏற்றுமதிகள் 31.6% குறைந்திருந்தது. பெட்ரோலியம் சாராதப் பொருள்களின் ஏற்றுமதி 10.1% வழக்கத்தைவிடக் குறைவாகக் காணப்பட்டது.

  • இந்தியாவைப்போலவே, சர்வதேச அளவிலும் கொவைட் -19 கொள்ளை நோய் பாதிப்பால், பெட்ரோலியம் சார்ந்த பொருள்களுக்கான "தேவை' குறைவாக இருப்பது எதிர்பார்க்கக்கூடியதுதான்.

  • கச்சா எண்ணெய் விலை குறையத் தொடங்கியதில் இருந்தே பெட்ரோலிய பொருள்களுக்கான ஏற்றுமதி மதிப்பில் குறைவு ஏற்படத் தொடங்கியிருந்ததால், இந்தப் பாதிப்பு பெரிதாகத் தெரியவில்லை.

  • ஜூன் மாத ஏற்றுமதியில் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால், பெட்ரோலியம் சாராத பொருள்களுக்கான ஏற்றுமதி கடந்த ஆண்டு நிலவரத்துடன் ஒப்பிடும்போது வெறும் 10.1% மட்டுமே குறைந்திருக்கிறது என்பதுதான்.

  • கடந்த ஏப்ரல் 2019 நிலவரத்துடன் ஒப்பிடும்போது, ஏப்ரல் 2020}இல் பெட்ரோலியம் சாராத பொருள்களின் ஏற்றுமதி சற்றுதான் குறைந்திருக்கிறது. இது விரைவிலேயே ஏற்றுமதி அதிகரிப்பதற்கான அடையாளமாகத் தெரிகிறது.

  • சர்வதேச அளவில் பொருளாதாரம் நிலையில்லாமல் இருக்கும் வேளையில், இந்தியா ஏற்றுமதியை மீண்டும் தொடங்கியிருப்பதும் வெளிநாட்டுத் தேவைகளுக்கு ஏற்ப உற்பத்தியை அதிகரித்திருப்பதும் நல்ல அறிகுறிகள்.

  • இந்தியாவைப் பொருத்தவரை, கச்சா எண்ணெய்க்கு அடுத்தபடியாக மிக அதிகமான இறக்குமதி, தங்கமும் வெள்ளியும்தான். இவை இரண்டுமே 76% குறைந்திருக்கின்றன.

  • பொது முடக்கத்தால் தேவை குறைவாக இருப்பதும், பண்டிகைகளும் ஆடம்பரத் திருமணங்களும் இல்லாமலிருப்பதும் அதற்கு முக்கியமான காரணிகள். குடும்பங்களும் சேமிப்பில் கவனம் செலுத்துகின்றன. நிரந்தர வருவாய் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், தங்கத்திலும் வெள்ளியிலும் முதலீடு செய்யப் பலரும் தயாராக இல்லை. ஒருவகையில், தங்கம், வெள்ளி இறக்குமதி குறைந்திருப்பதும் அவற்றை சேமிப்புக்காக அதிக அளவில் பதுக்கி வைப்பதும் குறைந்திருப்பது இந்தியப் பொருளாதாரத்துக்கு நல்லதுதான்.

  • இறக்குமதி குறைவாக இருக்கிறது என்று ஆறுதல் அடைந்துவிட முடியாது. கூடுதல் கச்சாப் பொருள் இறக்குமதியும் அதன் மூலம் உற்பத்தியை அதிகரித்து, கூடுதல் ஏற்றுமதியும்தான் நமது இலக்காக இருக்க வேண்டும்.

  • நிலைமை கட்டுக்கடங்காமல் போய்விடவில்லை என்கிற ஆறுதலைத் தருகிறது ஜூன் மாத ஏற்றுமதி -இறக்குமதி குறித்த புள்ளிவிவரங்கள்.

நன்றி: தினமணி (23-07-2020)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்