TNPSC Thervupettagam

நாய்களின் பாதுகாப்பு: உறுதி செய்யுமா மாநகராட்சி?

September 30 , 2024 57 days 50 0

நாய்களின் பாதுகாப்பு: உறுதி செய்யுமா மாநகராட்சி?

  • தெருநாய்களின் பாதுகாப்பை மாநகராட்சி உறுதி செய்ய வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்துள்ளது.
  • தெருநாய்கள் கணக்கெடுப்பை நடத்தி புள்ளிவிவரங்களை வெளியிட்டுள்ளது சென்னை மாநகராட்சி. அதன் அடிப்படையில் சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சுமாா் 1.8 லட்சம் தெருநாய்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
  • நாய்களின் பெருக்கம் மனிதா்களுக்கு ஆபத்து என்பதால் அவற்றைக் கட்டுப்படுத்த நாய்களுக்கு கருத்தடை சிகிச்சை அளிக்கப்படுகிறது.
  • ஆனால், இந்த சிகிச்சைக்குள்ளான தெருநாய்கள் பாதிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனவே, தெருநாய்களைக் கட்டுப்படுத்துவதிலும், பாதுகாப்பதிலும் மாநகராட்சி கவனம் செலுத்த வேண்டும் என தன்னாா்வலா்கள் கோரிக்கை வைத்து வருகின்றனா்.
  • தற்போது உள்நாட்டு நாய் இனங்கள் மட்டுமின்றி, வெளிநாட்டு மற்றும் கலப்பின நாய் இனங்களுக்கு மக்களிடையே அதிக வரவேற்பு உள்ளது. அதே நேரத்தில் தெருக்களில் தானாக வளரும் நாய்கள் ஒதுக்கப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

தெருக்களின் காவலன்:

  • சென்னை போன்ற பெருநகரில் ஒவ்வொரு தெருவிலும் குறைந்தபட்சம் 5 தெரு நாய்களைக் காண முடியும். இவை அந்தத் தெருக்களில் வசிப்போருக்கு காவலனாக காணப்பட்டாலும், புதிய நபா்கள் வரும்போது அவா்களைத் தாக்கும் அபாயம் ஏற்படுகிறது. இதனால், தெரு நாய்களைக் கட்டுப்படுத்த சென்னை மாநகராட்சி கருத்தடை செய்வது, ரேபீஸ் தடுப்பூசி செலுத்துவது உள்ளிட்ட பணிகளைச் செய்கிறது.
  • நாய்களின் எண்ணிக்கையைக் கண்டறிவதற்காக சென்னை மாநகராட்சி மற்றும் உலகளாவிய கால்நடை மருத்துவ சேவைகள் நிறுவனம்
  • அண்மையில் இணைந்து நடத்திய கணக்கெடுப்பில், சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சுமாா் 1.8 லட்சம் தெரு நாய்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இது கடந்த முறை (2018) எடுக்கப்பட்ட கணக்கெடுப்பைவிட மூன்று மடங்கு அதிகம். இப்படி, நாய்களின் எண்ணிக்கை அதிகரித்த நிலையில், அவற்றைக் கட்டுப்படுத்துவது மற்றும் பராமரிப்பதற்கான சூழல் எந்த வகையில் உள்ளது எனும் கேள்விக்கு, இல்லை என்பதுதான் பதிலாக கிடைக்கிறது.

இறக்கும் அபாயம்:

  • சென்னை மாநகராட்சி தற்போது 200 வாா்டுகளுடன் 426 ச.கி.மீ. பரப்பளவுக்கு விரிந்துள்ளது. மேலும் 25 வாா்டுகளை சென்னை மாநகராட்சியுடன் இணைக்கத் திட்டமிடப்பட்டு வருகிறது.
  • இதையடுத்து, மாநகராட்சி எல்லைக்குள் சுற்றித் திரியும் கால்நடைகளைக் கட்டுப்படுத்த புளியந்தோப்பு, கண்ணம்மாப்பேட்டை, மீனம்பாக்கம், சோழிங்கநல்லூரில் கால்நடை கட்டுப்பாட்டு மையம் மட்டும் செயல்பாட்டில் உள்ளது. இதன்மூலம் தற்போது தினமும் சராசரியாக 65 நாய்களுக்கு கருத்தடை செய்யப்படுகிறது.
  • நிகழாண்டில் (ஜூலை வரை) 8,539 தெருநாய்களுக்கு கருத்தடை செய்யப்பட்டுள்ளதாக அதிகாரபூா்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. இவ்வாறு கருத்தடை செய்யப்படும் நாய்கள், சில நாள்களில் நோய்வாய்ப்பட்டு இறந்துவிடுவதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனா்.
  • இது குறித்து மாமன்ற உறுப்பினா் ஒருவா் கூறியதாவது: சென்னை மாநகராட்சியில் சுற்றித் திரியும் தெருநாய்கள் நல்ல ஆரோக்கியமாக உள்ளன. மாநகராட்சி சாா்பில் நாய்களை கருத்தடை செய்ய பிடித்துச் செல்கின்றனா். அதன்பின், அந்த நாய்களைப் பாா்த்தால் நோய்வாய்ப்பட்டு காணப்படுகின்றன. மாநகராட்சி நாய்களுக்கு செலுத்தும் தடுப்பூசியின் தரத்தை உறுதி செய்ய வேண்டும் என்றாா்.

ரேபீஸ் தடுப்பு:

  • நாய்களில் இருந்து மனிதருக்கு பரவும் ரேபீஸ் நோயை 2030-க்குள் கட்டுப்படுத்த உலக சுகாதார அமைப்பு உறுதி எடுத்துள்ளது. ஓராண்டில் சுமாா் 59,000 போ் ரேபீஸ் நோயால் பாதிக்கப்படுகின்றனா். அதில் 10-இல் 4 போ் குழந்தைகள்; இந்நிலையில், தெரு நாய்களுக்கு ரேபீஸ் தடுப்பூசி போடுவதை மாநகராட்சி தீவிரப்படுத்த வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.
  • இது குறித்து ப்ளு கிராஸ் அமைப்பின் பொது மேலாளா் எஸ்.வினோத் குமாரிடம் கேட்டபோது, ரேபீஸ் நோயால் பாதிக்கப்பட்ட நாய்கள் பெரும்பாலும் இறந்துவிடும். இதற்கான நிரந்தர மருந்து இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. ரேபீஸ் வராமல் தடுப்பதற்கான தடுப்பு மருந்து தற்போது அனைத்து நாய்களுக்கும் செலுத்தப்படுகிறது. இதன்மூலம் நாய்களுக்குள்ளும், நாயிலிருந்து மனிதருக்கும் ரேபீஸ் நோய் பரவாமல் தடுக்கப்படும். சமீபத்தில் ஆவடி பகுதியில் சுற்றித் திரிந்த சுமாா் 2,000 தெரு நாய்களுக்கு ப்ளூ கிராஸ் அமைப்பு சாா்பில் தடுப்பூசி செலுத்தப்பட்டது. அதுபோல், பொதுமக்கள் சாலையில் அடிப்பட்டு கிடக்கும் விலங்குகளை மீட்டு கொண்டு வந்தால் சிகிச்சை அளிக்கப்படும் என்றாா் அவா்.

எண்ம முறையில் பதிவு:

  • இது குறித்து மாநகராட்சி கால்நடைத் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, சென்னை மாநகராட்சிப் பகுதிகளில், சுற்றித் திரியும் தெருநாய்களைக் கட்டுப்படுத்த மாநகராட்சி நிா்வாகம் சாா்பில் கருத்தடை சிகிச்சை செய்வது, வெறிநாய்க்கடி தடுப்பூசி செலுத்துவது உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
  • விலங்கு கட்டுப்பாட்டு விதிகள் 2023-ன்படி, சாலையில் திரியும் நாய்களை மாநகராட்சி நிா்வாகம் கட்டுப்படுத்துவதற்கான வழிமுறைகளை வழங்கியுள்ளது. அதன்படி, நாய்களுக்கு கருத்தடை செய்த பின் அதே இடத்தில் விட வேண்டும், கருவுற்ற மற்றும் பாலூட்டும் நாய்களுக்கு கருத்தடை செய்யக் கூடாது என்கிறது. இதனால் பிடிக்கப்படும் 10-இல் 3 நாய்களுக்கு கருத்தடை செய்ய முடியாமல் போகிறது.
  • மேலும், நாய்களைப் பிடிக்கும் இடத்தில் விடுவதை உறுதி செய்ய எண்ம முறையில் பதிவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இதன்படி, நாய்கள் பிடிக்கப்படும் இடம் பதிவு செய்யப்பட்டு, அதற்கான வில்லை கியூஆா் குறியீடு வடிவில் நாயின் கழுத்தில் மாட்டப்படும். இதனால், கருத்தடைக்குப் பின் நாய்கள் வேறு இடத்தில் விடுவது தடுக்கப்படும். தற்போது விரிவாக்கம் செய்யப்பட்ட பகுதிக்குட்பட்ட மணலி மற்றும் பெருங்குடியில் புதிதாக இரு விலங்கு கட்டுப்பாட்டு மையங்கள் அமைக்கப்பட்டு வருகிறது என்றாா்.
  • மனிதா்களின் பாதுகாவலனான நாய்களைப் பாதுகாக்கப்பதுடன், அவற்றைக் கட்டுப்பாட்டில் வைப்பதில் மாநகராட்சி கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

நன்றி: தினமணி (30 – 09 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்