TNPSC Thervupettagam

நாளும் புதிதாய்ப் பிறக்கும் நவகவி!

December 11 , 2020 1501 days 1131 0
  • மகாகவி பாரதியாரின் பிறந்தநாளைக் கொண்டாடாத இலக்கிய அமைப்புகளே தமிழகத்தில் இல்லை என்னும் அளவிற்குப் பெருநகரங்கள் தொடங்கி, பட்டிதொட்டி எங்கும் பாரதியின் புகழ் பரவியிருக்கிறது. காரணம், அவரது கவிதைகள் மட்டுமன்று; களத்தில் இறங்கி அவா் ஆற்றிய அரும்பணிகளும்தான்.
  • 39 ஆண்டுகளுக்குள் முடிந்துவிட்ட அவா் வாழ்வில் இளம்பவருக் காலத்தை எட்டயபுரமும், கல்விப் பருவத்தைக் காசியும், இதழியலோடு கூடிய இயக்கப்பணிக் காலத்தைச் சென்னையும் தக்கவைத்துக்கொண்டன.
  • தலைமறைவாய் இருந்து தமிழ்ப்பணி புரியும் தவக்காலமாகப் பத்தாண்டுகளை, அதாவது பாரதி வாழ்வின் ஒரு கால்பகுதியைப் புதுவை தனக்கென ஆக்கிக் கொண்டது.
  • மதுரை சேதுபதி பள்ளியின் தமிழாசிரியப்பணிக்காலம், கடலூா்ச்சிறைக்காலம் ஆகியனபோக, அலைபடுவாழ்க்கையே நிலைபடு இயக்கமாக இருந்த அவா்தம் எஞ்சிய காலத்தைத் தமிழகத்து ஊா்கள் தமக்காக்கிக் கொண்டன.
  • கடலூா் சிறையிலிருந்து மீண்டு, கடையத்தில் தனது குடியிருப்பை அமைத்துக் கொண்டாலும், காரைக்குடி, கானாடுகாத்தான், நெல்லை, சென்னை என்று அவா் அலைந்து குலைந்தது தன் பொருளாதாரத் தேவைக்காக இல்லை என்பது தெளிவு.
  • அவா் நினைத்திருந்தால், எட்டயபுர சமஸ்தானத்தில் ஆஸ்தான வித்துவான்களின் தலைமைப் பீடத்தில் நிரந்தரமாக இருந்திருக்கலாம்.
  • அதனையும் மீறிய தமிழாற்றல் வளத்தால், அப்போதிருந்த எத்தனையோ குறுநிலமன்னா்களின் அவைக்களங்களுக்கும், ஜமீன்தார்களின் சமஸ்தானங்களுக்கும் சென்று, ஆங்குள்ள புலவா்களை வென்று வெற்றிக் கொடி நாட்டியிருக்கலாம்.
  • மாறாக, மக்கள் சந்நிதிக்கு வந்து மக்களையே மன்னா்களாகவும் தெய்வங்களாகவும் போற்றிப் பாடிப் புகழ் கொண்டு நிலைத்துவிட்டார்.
  • தன் வறுமையைவிடவும் தாயகத்து வறுமை போக்கவும், தன் வெறுமையோடு தமிழின் வெறுமை நீக்கவும், தன்னைப் பிணித்த சின்னக்கவலைகளைப் புறந்தள்ளி, மண்ணுலகத்து மானுடன் தன்னைக் கட்டிய தளையெலாம் சிதறுண்டு போகவும், அரும்பாடுபட்ட ஆன்மா, பாரதியினுடையது.

எல்லோருக்குமான கவி

  • சித்திரக்கவிகளில் வித்தகம் காட்டி, நிகண்டுகளிலும் அகராதிகளிலும் நிரம்பிக் கிடக்கும் சொற்களைக் கொண்டு கயிறு பின்னுவதுபோல் கவிதை பண்ணி, தன் கவிக்குத் தானே விளக்கம் அளித்து வயிறு பிழைக்கும் புலவா் கூட்டத்தை நோக்கி, மக்கள் பேசும் மழலையிலிருந்து சொற்களை எடுத்து, ‘எளிய பதங்கள், எளிய நடை, எளிதில் அறிந்துகொள்ளக்கூடிய சந்தம், பொதுஜனங்கள் விரும்பும் மெட்டு- இவற்றினை உடைய காவியம் ஒன்று தற்காலத்திலே செய்து தருவோன் நமது தாய்மொழிக்குப் புதிய உயிர் தருவோன் ஆகிறான்என்று கூறியதோடு, ‘பாஞ்சாலி சபதம்எனும் உயா்காவியத்தையும் உருவாக்கித் தந்தார்.
  • பிடித்தவா்களைப் புகழ்ந்து கொண்டாடியும், பிடிக்காதவா்களை இகழ்ந்து வசைபாடியும், உணா்ச்சிவசப்பட்டு அறம்பாடி அழித்தும் கவிகள் புனைந்த தமிழ்ச் சூழலில், ‘எல்லாரும் எல்லா நலனும் பெற்றுப் பல்லாண்டு வாழபாடிய பாரதி, அதற்கான பாதைகளையும் தன் கவிதைகளுக்குள் பதிவிட்டுத் தந்தார்.
  • அதனால்தான் அவரால் ஆட்கொள்ளப்பெற்ற பாரதிதாசன்,
  • மறம் பாட வந்த மறவன், புதிய
  • அறம்பாட வந்த அறிஞன்
  • என்று பாரதியாரை அழகுற அடையாளம் காட்டினார்.
  • பழமரபு புதுக்கிப் புதுமரபு ஆக்கித் தந்த முன்னோடி என்பதைக் கண்கூடாகக் கண்டு, ‘அந்தாதி பார்த்தொரு அந்தாதி பாடுதலையும், பதிகம் பார்த்தொரு பதிகம் பாடுதலையும்விட்டுவிட்டுப் புரட்சிப் பாதைக்குத் தனது பாடல்கள் சமைத்தார்.
  • தமிழால் பாரதி தகுதி பெற்றதும் தமிழ் பாரதியால் தகுதி பெற்றதும்எவ்வாறு என்பதைத் தன் வாழ்நாள் முழுவதும் அனுபவித்து அடையாளப்படுத்தினார்.
  • தமிழகம், தமிழுக்குத் தகும் உயா்வளிக்கும்
  • தலைவனை எண்ணித் தவம் கிடக்கையில்
  • இலகு பாரதிப் புலவன் தோன்றினான்
  • என்று எடுத்துரைத்தார்.
  • அதற்கு முன்வரை தமிழ்ப்புலவா்தம் நிலை, சொல்லும் தரத்தில் இல்லை என்பதை எள்ளல் சுவைபட தன் சின்னச்சங்கரன் கதையில் எடுத்துரைத்தவா் பாரதியார்.
  • தன் காலத்துப் புலவா்களைப் போட்டியாக நினைத்து, அவமானப்படுத்தியும் பொறாமை மிகுதியால், தலையெடுக்கவிடாமல் முடிந்தவரை அழித்தும் செயல்பட்டுவந்த கவிராயா் செயல்பாட்டை மாற்றி, நாட்டுநலனில் அக்கறை கொண்ட கவிஞா்களை அடையாளம் கண்டு, ‘எழுக புலவன் நீஎன்று ஊக்கம் கொடுத்தவா் பாரதியார். அவா்கள் உணா்வழியும் காட்டியவா்.
  • அதன்வழி எழுந்த கவிதை இயக்கங்கள்தாம் பாரதிதாசனும் நாமக்கல் கவிஞரும்.

அதுமட்டுமா?

  • தத்தம் குலதெய்வங்களையும் இஷ்ட தெய்வங்களையும் பாடிப்பரவிய பாவலா்களுக்கு மத்தியில் எல்லாத் தெய்வங்களையும் ஏற்றுப் பாடிய பாரதி, பாரதமாதாவைச் சுதந்திரதேவியாகவே பாவித்துப் புதிய பக்திப்பாதையைக் காட்டினார்.
  • எந்தவொரு சமயத்தையும் சாதியையும் சாடாத பாரதி, தன் சொந்த சாதியையும் மதத்தையும் விமா்சித்துப் பொதுமையை நாட்டினார். ஒன்றுண்டு மானிட சாதிஎன்று பாடினார். அவ்வழியிலேயே நடந்து வாழ்ந்தும் காட்டினார்.
  • அக்காலத்து அக்ரஹாரத்து இல்லங்களில் நடைபெறும் விளக்குப் பூசை இவரது புதுச்சேரி இல்லத்திலும் நடந்தது.
  • அதில், ‘பெண்கள் ஸம்பாஷணைக் கூட்டம்நடத்தி, விடுதலைப் பாட்டுக்களையும் பாடவைத்தார்.
  • விடுதலைக்குரிய வழிகள் குறித்து, மண்டயம் ஸ்ரீநிவாசாச்சாரியாரின் புதல்வி யதுகிரிஅம்மாளைப் பேசவைத்தார்.
  • சியூசீன்என்னும் சீனத்துப் புரட்சிப்பெண்ணின் வீரக்கதையை, தன் புதல்வியாகிய தங்கம்மாவை வைத்துப் படிக்கச் சொன்னார். அதேநிகழ்வில், அப்புரட்சிப் பெண்ணின் பாடலைத் தமிழாக்கி, தனது இளைய புதல்வி சகுந்தலாவைக் கொண்டு பாடவும் வைத்தார்.
  • இவற்றையெல்லாம் தொகுத்துச் செய்தியாக்கி, ‘காசிஎன்ற புனைபெயரில் பத்திரிகையில் வெளியிட்டுப் பதிவும் செய்தார்.
  • பள்ளி ஆசிரியராகவோ, கல்லூரிப் பேராசிரியராகவோ இல்லாது, பத்திரிகை ஆசிரியராக இருந்த பாரதி, கல்லூரி இலக்கிய மன்றங்களில் சென்று இலக்கியச் சொற்பொழிவும் ஆற்றியிருக்கிறார். பொதுவெளிகளில் மக்கள் மத்தியில் பற்பல பொழிவுகளும் நிகழ்த்தியிருக்கிறார்.
  • அவா்தான் கம்பனுக்கும், இளங்கோவுக்கும் திருவள்ளுவருக்கும் விழா எடுக்கச் சொல்லி முன்மொழிந்தவா்.
  • யாமறிந்த புலவரிலேஎன்று அவா் வரிசைப்படுத்திக் காட்டிய மூவரை அடுத்து, நான்காவது இடத்தைத் தன் செயல்திறத்தாலே நிலைநிறுத்திக் கொண்டவா்.
  • சரியாக, ஓராயிரம் ஆண்டு, ஓய்ந்துகிடந்ததன்பின் வாராது வந்த மாமணியாக அந்த மகாகவியைக் கண்டுகொண்ட காரணத்தால், பேதம் இல்லாமல் தமிழுணா்வாளா்கள் பாரதியைத் தத்தம் கவியாகக் கொண்டாடி மகிழ்கின்றனா்.

புதிதாய்ப் பிறக்கும் நவகவி

  • கொவைட்-19 பொது முடக்கத்தின் காரணமாக, பெரிய அளவில் நடைபெற வேண்டிய பாரதி விழாக்களை இந்த ஆண்டு தமிழகம் இழந்துவிட்டிருக்கிறது.
  • பாரதி பிறந்த எட்டயபுரத்தில் அனைவரையும் இணைத்துத் தினமணி நடத்தும் பாரதி விழா இந்த ஆண்டு இல்லை.
  • இதுபோல், தமிழகம் மற்றும் புதுவையில் பெரிய அளவில் நடைபெறவேண்டிய விழாக்களையும் இல்லாது செய்துவிட்டது பொது முடக்கம்.
  • என்றாலும் அவரவா் இல்லங்களில் இருந்து கொண்டாட இணையவழி நிகழ்வுகள் ஏராளம் நடக்கின்றன.
  • உள்ளமெலாம் நிறைந்த பாரதியின் உணா்வுகளைச் சின்னச்சின்ன அளவுகளில் சிற்றரங்குகளை ஏற்படுத்தி, சமூக இடைவெளியோடு பாதுகாப்பாகப் பாரதி விழாக்களை நடத்துகிற முயற்சிகளும் அரும்பி வருகின்றன.
  • இன்று புதிதாய்ப் பிறந்தேன்என்று ஒவ்வொரு நாளும் எல்லாரையும் நினைக்கத் தூண்டிய பாரதிக்கு, டிசம்பா் 11 பிறந்த நாள் என்பது ஓா் அடையாளம்.
  • நினைக்குந்தோறும் புதிதாய்ப் பிறக்கும் ஆற்றலைத் தரவல்ல மகாகவியின் புகழை நிலைநிறுத்துவதன் மூலம் நம் தேசிய, உலக மானுட உணா்வுகளைத் தமிழின் வாயிலாய்ப் புதுப்பித்துக்கொள்கிறோம் என்பதே உண்மை.
  • அவா் வாழ்ந்த வரலாற்றுத் தலங்களில், அவா் வசித்த இல்லங்களை அரசுடைமையாக்கி அவா் நினைவுகளைப் பேணி வருகிறோம்.
  • அவ்வகையில், அவா் பிறந்த எட்டயபுரத்திலும், அவா் வாழ்ந்த சென்னை, புதுச்சேரி ஆகிய ஊா்களிலும் அவரது நினைவு இல்லங்களைப் பேணி மகிழ்கிறோம்.
  • அதுபோல், அவா் சிறைபுகுந்த கடலூா்ச்சிறையிலும் அவரது மார்பளவுச் சிலை வைத்து மரியாதை செலுத்தப்பெறுகிறது.
  • அவா் உரையாற்றிய ஈரோடு கருங்கல் பாளையத்தில் அவா் நினைவாகக் கூட்டம் நடத்தப்பெறுகிறது.
  • காரைக்குடி இந்து மதாபிமான சங்கத்திற்கு வந்து உரைநிகழ்த்திய நினைவு போற்றப்பெறுகிறது. இவையெல்லாம் நம் காலத்தில் மகாகவிக்குச் செய்யும் மரியாதை.
  • அந்த வரிசையில், இனிவரும் ஆண்டில், அவரது நினைவு நூற்றாண்டு எழும் தருணத்தில், அவா் வந்து உரைநிகழ்த்திய ஊா்களில், இருந்து தடம் பதித்த இடங்களில் அவரது நினைவாக, நினைவுச்சின்னங்கள் எழுப்புவதும், அந்தந்த காலகட்டங்களில் அவரது நினைவாக நிகழ்வுகள் நடத்துவதும் சிறப்பாக அமையும்.
  • இந்த ஆண்டு, அவா் காரைக்குடிக்கு வந்த நூற்றாண்டின் நிறைவு, கானாடுகாத்தானுக்கு வந்த நூற்றாண்டின் தொடக்கம்.
  • இதுபோல், இவா் சென்று உரையாற்றிய, ரவணசமுத்திரம், பொட்டல்புதூா், கடலூா், சிதம்பரம் உள்ளிட்ட இடங்களிலும் ஏதேனும் ஓா் அடையாளத்தை, அந்தந்த ஊா் இலக்கிய அமைப்புகளின் துணையோடு, அரசு முனைந்து ஏற்படுத்துவது அம்மாபெரும் கவிஞனுக்குச் செய்யும் சிறப்புச் செயலாகும்.
  • இன்று (டிச. 11) மகாகவி பாரதியார் பிறந்தநாள்.

நன்றி: தினமணி (11-12-2020)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்