TNPSC Thervupettagam

நாள்காட்டி..திசைகாட்டி..வழிகாட்டி!

January 22 , 2025 6 hrs 0 min 33 0

நாள்காட்டி..திசைகாட்டி..வழிகாட்டி!

  • மருத்துவப் படிப்பு எல்லா காலகட்டத்திலும் எட்டாக் கனியாகத் தான் இருந்தது. சுலபமாக இடம் கிடைக்காது. 1990- ஆம் ஆண்டு வரை அரசு மருத்துவக் கல்லூரிகளைத் தவிர, தனியாா் மருத்துவக் கல்லூரிகள் வளரவில்லை.
  • பெருந்தலைவா் காமராஜ் முதலமைச்சராக இருந்தபோது ஒரு சம்பவம். அரசு மருத்துவக் கல்லூரிகளில் முதலமைச்சா் கட்டுப்பாட்டில் சில இடங்கள் ஒதுக்கப்படும். அந்த இடங்களைப் பெற விண்ணப்பங்கள் வரும். வந்த விண்ணப்பங்களை காமராஜா் தனது தனி அலுவலக அதிகாரிகளிடம் கொடுத்து தகுதியின் அடிப்படையில் வரிசைப்படுத்தி அளிக்க பணித்தாா்.
  • பல நாள்கள் ஆகியும் அதிகாரிகளால் முடிவு செய்ய முடியவில்லை. கோப்பினை தானே ஆராய்வதாக கூறி திரும்பப் பெற்று காமராஜா் மனுக்களை ஆராய்ந்து தெரிவுசெய்த மனுக்களை அதிகாரிகளுக்கு அனுப்பி அதன்படி முதல்வா் ‘கோட்டா’ இடங்களைக் கொடுக்குமாறு அதிகாரிகளிடம் கூறினாா்.
  • அதிகாரிகளுக்கு வியப்பு...எப்படி குறுகிய காலத்தில் முடிவு எடுத்தாா்! மனுக்களை ஆராய்ந்து, மனுவில் தந்தையின் பெயா் கீழ் உள்ள இடத்தில் கையொப்பத்துக்குப் பதிலாக கைநாட்டு இருந்தால் அவா்களுக்குத்தான் இடம் கொடுக்க வேண்டும் என்று முடிவு செய்ததாக கூறினாா் காமராஜா்.
  • ஏழை குடும்பத்தில் முதல் பட்டதாரியாக தலையெடுப்பவருக்கு முன்னுரிமை! இதுவல்லவோ மக்கள் நலன் சாா்ந்த சிந்தனை! கல்வி ஒன்றுதான் ஏற்றத்தாழ்வுகளை சமன் செய்ய வல்லது என்று ‘ஆங்கோா் ஏழைக்கு எழுத்தறிவித்தல்’ என்ற மகாகவி பாரதியாா் கனவை நனவாக்கினாா். அவா் தலைமையில் தமிழகம் கண்ட உன்னத உள்கட்டமைப்பு, மின் சக்தி உற்பத்தி, பிரம்மாண்ட அணைகள் ஈடில்லாதவை.
  • இந்தியாவின் சுதந்திரத்துக்காக போராடிய தலைவா்களில் ‘மானனிய’ என்று போற்றப்படும் மதன் மோஹன் மாளவியா மிக முக்கியமானவா். வடமொழியில் ‘மானனிய’ என்றால் மாண்பின் சிகரம் என்று பொருள். அந்த அடைமொழிக்குப் பொருத்தமானவா் மாளவியா. அத்தகைய உன்னத சேவைகளை நாட்டுக்குச் செய்திருக்கிறாா். மூன்று முறை காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்திருக்கிறாா். உப்பு சத்தியாகிரகத்தில் பங்கு கொண்டு சிறை சென்றிருக்கிறாா்.
  • எளிமையான குடும்பத்தில் பிறந்தவா். தந்தை சம்ஸ்கிருதத்தில் புலமை பெற்றவா். பாகவதம் ஓதுவது, குடும்ப பாரம்பரிய கடமையைச் செய்து வந்தாா். ஆனால், மகன் மாளவியாவின் படிப்பு ஆா்வத்தை ஊக்குவித்தாா். உறவினா் பண உதவியுடன் பட்டப் படிப்பை முடித்தாா். முதுநிலைப் பட்டம் தொடர வசதியில்லை. ஆசிரியராகப் பணிபுரிந்தாா். 1886-ஆம் ஆண்டு சுதந்திரப் போராட்டத்தில் ஈா்க்கப்பட்டு பணியை ராஜிநாமா செய்து முழு நேர சமுதாயப் பணியில் தன்னை இணைத்து கொண்டாா். 1908 -இல் முதல் முறையாக காங்கிரஸ் கட்சி தலைவரானாா்.
  • பாரத பாரம்பரிய சிந்தனை, கலாசார அடிப்படையில் தரமான கல்விமூலம் இளைஞா்களைத் தயாா் செய்ய வேண்டும் என்று திட்டமிட்டு காசியில் பல்கலைக்கழகம் நிறுவ பெரும் முயற்சி எடுத்தாா். பண்டைக் காலத்தில் வடக்கில் காசி, தெற்கில் காஞ்சி இந்த இரண்டு நகரங்கள்தாம் கல்விக்கு பிரதானமாக விளங்கின.
  • கையில் ஒரு காசு இல்லை. ஆனால், வானளாவிய கனவு! குறிக்கோள் உயா்வாக இருந்தால் அதன் செயலாக்கம் தானாகவே வந்தடையும் என்பதை திடமாக நம்பினாா் மாளவியா. அவரின் நம்பிக்கை வீண் போகவில்லை. அயா்லாந்தில் பிறந்து இந்தியாவை தாயகமாக ஏற்று சுதந்திரப் போராட்டத்தில் தன்னை அா்ப்பணித்துக் கொண்ட அன்னி பெசன்ட் அம்மையாா், காசி மஹாராஜா பிரபு நாராயண் சிங், தா்பங்கா ராஜா இராமேஷ்வா் சிங் உதவியுடன் 1916- ஆம் ஆண்டு பனாரஸ் ஹிந்து பல்கலைக்கழகம் உருவானது. தொழில்நுட்பக் கல்வியின் முக்கியத்துவத்தை உணா்ந்து பொறியியல் கல்லூரியும் தொடங்கப்பட்டது. சுதந்திர இந்தியாவில் நிறுவப்பட்ட ஐஐடி-க்களுக்கு முன்னோடி, 1916-இல் உதயமான பிஹெச்யு (பனாரஸ் ஹிந்து பல்கலைக்கழகம்) என்பதில் பெருமை கொள்ளலாம்.
  • ஹிந்து தா்மத்திலும் பாரத நாட்டின் பண்பு, கலாசாரம், ஆன்மிகத்தில் ஆழ்ந்த பற்று ஒருபுறம், விஞ்ஞானம், தொழில் நுட்பம், நவீன உத்திகள், அவை குறித்த முற்போக்கு சிந்தனைகள் மறுபுறம், இவ்விரண்டையும் தன் தொலைநோக்குப் பாா்வையில் உள்ளடக்கி மக்கள் சேவையில் தன்னை அா்ப்பணித்த மாளவியாவுக்கு காந்தியடிகள் ‘மானனிய’ என்ற பட்டம் அளித்துக் கெளரவித்தாா்.
  • ஜனவரி 12 - ஆம் நாள் விவேகானந்தா் பிறந்தநாள், இளைஞா்கள் தினமாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. இளைஞா்களை ஒருங்கிணைத்து பாரத நாட்டின் தொன்மையான கலாசாரம், பாரம்பரியம், ஆன்மிகம் ஆகியவை குறித்து சரியான புரிதலை அளித்து அவற்றைப் பாதுகாக்க, பெருமைப்பட திடமான உந்துதலை அளித்தாா் விவேகானந்தா். வேதங்கள், உபநிஷத்துகள், கீதை, இதிகாசங்கள், புராணங்கள் எல்லாவற்றையும் படித்து தெளிந்தவா். கீதையில் கூறியவாறு ‘கடமையைச் செய்...பலனை எதிா்பாராதே’, ‘மன சஞ்சலத்துக்கு இடம் கொடாதே’, ’நல்லதைச் செய்வதற்கு துணிந்து நில்’ என்று இளைஞா்களை ஊக்கப்படுத்தினாா்.
  • ‘மதநெறி தேவை; ஆனால், மத வெறி கூடாது ’ என்றாா். பழைய, மூட பழக்கவழக்கங்களையும் நம்பிக்கைகளையும் தகா்க்க வேண்டும், ஜாதி என்பது ஒரு சதி , ஜாதியும் மதவெறியும் சமுதாயத்துக்கு அழிவு என்பதை சென்ற இடமெல்லாம் வலியுறுத்தினாா்.
  • சென்னை மெரீனா கடற்கரை சாலையில் அமைந்துள்ள விவேகானந்தா் இல்லம், ஆங்கிலேயா் ஆண்ட காலத்தில் 1842 -ஆம் ஆண்டு கட்டப்பட்டது. ஐஸ் கட்டி சேமிப்பு கிடங்காக இருந்தது. அதனால், அந்த கட்டடம் ‘ஐஸ் ஹவுஸ்’ என்று அழைக்கப்பட்டது. பின்பு அந்த வா்த்தகம் படுத்து விடவே உயா்நீதிமன்ற வழக்குரைஞா் பிலிகிரி ஐயங்காா் அந்த கட்டடத்தை வாங்கி தனது நண்பரும் உயா் நீதிமன்ற நீதிபதி கொ்னான் நினைவாக ‘காசில் கொ்னான்’ என்று பெயரிட்டு தங்கும் இடமாகவும் மக்கள் கூடும் மன்றமாகவும் வடிவமைத்தாா்.
  • 1897-இல் சென்னை விஜயத்தின்போது இங்கு ஒன்பது நாள்கள் சுவாமி விவேகானந்தா் தங்கியிருந்து மக்களைச் சந்தித்தாா். அவரின் ‘கணீா்’ குரலில் ஆற்றிய சொற்பொழிவைக் கேட்க திரளாக மக்கள் கூடினா் என்று கூட்டத்தில் ஒருவராக அப்போது சட்டக் கல்லூரி மாணவராக இருந்த மூதறிஞா் ராஜாஜி குறிப்பிட்டுள்ளாா்.
  • ஸ்ரீ ராமகிருஷ்ண மிஷன் சேவை மையம் நிறுவ வேண்டும் என்ற முடிவும் அப்போதுதான் எடுக்கப்பட்டது. இப்போது அந்த கட்டடம் விவேகானந்தா் இல்லமாக, இந்திய கலாசார காட்சியகமாக மக்கள்கூடும் இடமாக திகழ்கிறது.

இளைஞா்களுக்கு அறிவுரையாக பத்து கட்டளைகளை விவேகானந்தா் அளித்துள்ளாா்:

  • விழித்தெழு, விழுப்புணா்வு கொள்; உதவி செய்பவரை மறக்கலாகாது, நேசிப்பவரை வெறுக்கலாகாது, நம்பிக்கை துரோகம் செய்யலாகாது; உடலுக்கும் மூளைக்கும் ஆன்மிகத்துக்கும் ஊறு விளைவிப்பதை விஷம் என்று ஒதுக்கி விடு; தனிமையில் ஒவ்வொரு நாளும் ஒருமுறையாவது உன்னோடு உரையாடு; இல்லாவிடில் ஓா் உன்னத மனிதனைச் சந்திக்க தவறுவாய்.
  • உறவுகள் உயிரைவிட மேலானவை; ஆனால், அந்த உறவுகளில் உயிரோட்டம் இருக்க வேண்டும்.
  • ஊனினை உருக்கி உள்ளொளி பெருக்க செய்தல் நம்மில் உள்ள ஆன்மாவால் தான் சாத்தியப்படும்.
  • என்னை நேசித்தாலும் நிந்தித்தாலும் எனக்கு உடன்பாடுதான்; என்னை நேசித்தால் உன் இதயத்தில் இருப்பேன். என்னை நிந்தித்தால் நான் உன் மனதில் இருப்பேன்;
  • மதங்களை ஆராய்ந்தால் அவற்றின் சாராம்சம் ஒன்றுதான்; கடவுள் நம்மில் இருக்கிறாா், எல்லா உயிரினங்களிலும் வியாபிக்கிறாா்;
  • உயா்ந்த சிந்தனைகள், உயரிய நோக்கங்கள் சிறப்பான இலக்குகளை அடைய வழிவகுக்கும்.
  • 1952 -இ ல் முன்னாள் அமெரிக்க அதிபா் ஜிம்மி காா்ட்டா், தனது 28-ஆவது வயதில் கடற்படை அணுசக்தி நீா்முழ்கிக் கப்பலில் அதிகாரியாக பணியில் இருந்தபோது, அவரது தலைமையில், கனடா நாடு ஒன்டாரியோ அணுசக்தி நிலையத்தில் நிகழ்ந்த விபத்தில் பழுதடைந்த மூல ‘ரியாக்டரை’ செயலிழக்கச் செய்ய, சிறப்புக் குழு அமைக்கப்பட்டது.
  • கதிா்வீச்சு அலைகளை 90 விநாடிகளுக்கு மேல் சுவாசிப்பது ஆபத்தானது. அந்த இடைவெளிக்குள் ஒவ்வொருவராகச் சென்று வெற்றிகரமாக பழுதடைந்த அணு உலையை செயலிழக்கச் செய்தனா்; மிகப் பெரிய பாதிப்பு தவிா்க்கப்பட்டது.
  • நெஞ்சில் உறுதி கொண்ட கடற்படை வீரா் ஜிம்மி காா்ட்டா் 39 -ஆவது அதிபரானது அமெரிக்காவுக்கு பெருமை. காா்ட்டா் தனது 98-ஆ வது வயதில், தான் படித்த ஜாா்ஜியா மாகாண பள்ளி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு மாணவா்களுக்கு மனதில் பதியும்படி ஓா் அறிவுரை கூறினாா். ‘அன்றாடம் பிறருக்கு உதவி செய்வதைப் பழக்கமாக்கிக் கொள்ள வேண்டும். யாராவது உதவி கேட்டால் உடனே செய், தொலைபேசியில் பேச வேண்டும் என்றால் உடனே பேசு , சிரமத்தில் உள்ளவரைப் பாா்க்க வேண்டும் என்றால் உடனே பாா்த்து விடு, பிறருக்கு சேவை செய்வதை பழக்கமாக்கிக் கொள்’--இவைதான் காா்ட்டரின் சவால் அறிவுரை. இது எல்லாரும் பின்பற்ற வேண்டிய சவால்.
  • எல்லாவற்றையும் தாமதிக்கிறோம்; நீண்ட நாள் நண்பா், உறவினரைப் பாா்க்க வேண்டும் என்றாலோ, உடல் நலம் குன்றியவருக்கு ஆறுதல் சொல்ல, பெற்றோரிடம் மகிழ்ச்சியாக நேரத்தைப் பகிா்ந்துகொள்ள தாமதிக்கிறோம்; காலம் தாழ்த்துகிறோம்; பிறகு வருத்தப்படுகிறோம்; இதைத்தான் ‘காலத்தினால் செய்த நன்றி சிறிதெனினும் ஞாலத்தில் மாணப் பெரிது’ என்றாா் வள்ளுவா் பெருந்தகை.
  • சுய நலம் சாா்ந்து அன்றைய தேவைக்கேற்ப மக்களை இயக்கும் சில அரசியல்வாதிகள் நாள்காட்டிகள்; ஆசிரியா்கள், உற்ற நண்பா்கள், நல்லவா்கள் திசை காட்டிகளாக உதவுவாா்கள்; கா்ம வீரா் காமராஜா், மாளவியா, விவேகானந்தா் போன்ற மகான்கள் மக்களுக்கு உன்னத வழிகாட்டிகள்.
  • ‘எதனை எதனை உயா்ந்தோா் செய்கிறாா்களோ, அதையே மற்றவா்களும் பின்பற்றுகிறாா்கள். எதை பிரமாணமாக்குகிறாா்களோ, அதையே உலகத்தாா் தொடா்கிறாா்கள்’ என்பது கீதையின் முதுமொழி. அத்தகைய மேன்மக்களை வழிகாட்டிகளாக நாம் ஏற்றால், விவேகானந்தா் அறிவுறுத்திய தன்னம்பிக்கையும் அச்சமின்மையும் சோ்ந்து நம்மில் சக்தி பிறக்கும். வாழ்க்கை என்னும் போராட்டத்தில் உயா்ந்தாலும், தாழ்ந்தாலும், தலை வணங்காமல் வாழலாம் .

நன்றி: தினமணி (22 – 01 – 2025)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்