TNPSC Thervupettagam

நாவன்மைத் திலகம் நானி பல்கிவாலா!

February 18 , 2020 1805 days 856 0
  • நானி ஆர்த்தீர்ஸ் பல்கிவாலா, ஜனவரி 16, 1920 - இல் மும்பையில் ஓர் எளிய பார்சி குடும்பத்தில் பிறந்தார்.  பல்கி என்றால் பல்லக்கு என்ற பொருள்படும், வண்ணமயமான பெட்டிகளைக் குதிரைகள் இழுத்துச் செல்லும் வகையில் அமைக்கும் தொழில் சார்ந்தவர்கள் என்ற வகையில் பல்கிவாலா எனப்பட்டார். அவரின் பெற்றோர்  "நானாபாய் ' என்று அவரை அழைத்தனர். மற்றவர்கள் அவரை "நானி பல்கிவாலா' என அழைத்தனர்.
  • ஆங்கிலப் பெரும் பேராசிரியராகத் திகழ வேண்டிய பல்கிவாலா, பின்னர் அரசியல் சட்ட நீதிக் கோமானாக நிகரற்று விளங்கினார். பள்ளியில் படிக்கும்போது, திக்குவாய்க் குறைபாடு இருந்தும், தனது விடாமுயற்சியால் நாடு புகழும் நாவேந்தராக மாறினார். கையால் விரல் பிடித்து எழுதுவதற்கு முடக்கம் இருந்தாலும் வாயுரையாகக் கூறியவை சீரிய நூல்களாக வெளிவந்தன.

பல்கிவாலா

  • வாய் திறந்து பேசினால், முத்துப் போலச் சொற்றொடர்களை - வைர வார்த்தைகளை - மாணிக்க மேற்கோள்களைக் கொட்டியவர் பல்கிவாலா. ஒருமுறை அவர் சொன்ன மேற்கோள், நாடு போற்றும் அளவுக்கு மின்னியது. "அழகின்பால் நான் கொண்ட அளப்பரிய ஆவலை, உண்மையின்பால் எனக்குரிய வேட்கையை, எளியோரை வலியோர்  புரட்டிப் போடும் விதியின் விளையாட்டோ, இளமைக் களிப்புகளை திசைதிருப்பித் தண்டிக்கும் கால மாறாட்டமோ என்னைத் தொடுவதற்கு நான் எப்போதும் இடம் தந்ததில்லை'  என்று குறிப்பிட்டது பல்கிவாலாவின் உயரிய நோக்கத்தைப் புலப்படுத்துவதாகும்.
  • நாடறிந்த சட்ட மேதையாகத் திகழ்ந்து அரசியலமைப்புச் சட்டத்தின் நிபுணராக விளங்கியதுடன், அரசியலமைப்புச் சட்டத்தைத் தொடுகிறபோதே புனித நூலைத் தொடுகிற மனம் அமையவேண்டும், அரசியலமைப்பை எழுத்துக்கு எழுத்து எண்ணிப் படித்து உள்வாங்கியவர்களாக நம் நாட்டு மக்கள் தலைநிமிர்ந்து நிற்க வேண்டும். அரசியல் என்பது, பண்பாளர்களின் கரங்களை அலங்கரிக்கும் கங்கணமாகும்; கை விலங்காக மாறிவிடக்கூடாது. தனி மனித உரிமைதான் இந்திய நாட்டுக்குப் பெருமை தருவது.
  • நெருக்கடி நிலை வந்தபோது நெருப்புப் பொறிகளைக் கக்கி வாதிட்டார். வெப்பமும் - விவேகமும் கலந்த அந்த வழக்குரைகள் ஒப்பற்றவை. பல்கிவாலாவை எங்கே, எப்போது பார்க்கலாம் என்று மக்கள் விரும்பினால் மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை வெளிவந்த பிறகு மும்பையிலும் - தில்லியிலும் - சென்னையிலும் தேன்மழையாக அவர் பேசும் ஆய்வுரைக்கு பல்லாயிரக்கணக்கான மக்கள்  காத்திருந்தனர். 
  • தாம் தொடங்கிய சுதந்திரா கட்சிக்கு பல்கிவாலா தலைமை தாங்க வேண்டும் என்று மூதறிஞர் ராஜாஜி விரும்பினார். கட்சி சார்ந்த பதவிகள் எனக்கு வேண்டாம் என்ற பக்கச் சார்பில்லாத மனத்தை அவர் வளர்த்திருந்தார்.  எனினும், பிரதமர் மொரார்ஜி தேசாய் அவருடைய பன்முகப் புலமையைப் பாராட்டும் விதத்தில், அமெரிக்க நாட்டின் தூதுவராக நியமித்தார். அமெரிக்கப் பல்கலைக்கழகங்களில் அவர் ஆற்றிய உரைகள் அவருடைய மேதைமையை வெளிப்படுத்தின.

சட்ட அறிவு

  • வங்கிகள் தேசியமயமாக்கல், கல்வி நிறுவனங்களை நடத்த சிறுபான்மையினர் உரிமைகள், மன்னர் மானிய ஒழிப்பு, ஊடகங்களின் உரிமை , மண்டல்குழு ஆகிய சிக்கல்கள் தொடர்பான வழக்குகளில் தம் சட்ட அறிவு, வாதத் திறமையை நிலைநாட்டியவர் பல்கிவாலா.
  • தனது 82-ஆம் வயதில் 2002 டிசம்பர் 11 அன்று மும்பையில் நானி பல்கிவாலா மறைந்தார்.  இந்தியா ஒரு சிறந்த சட்ட அமைச்சரை, நிதியமைச்சரைப் பெறத் தவறி விட்டது. நாடறிந்த நாவேந்தராகவும், நல்லறிஞராகவும் திகழ்ந்த பல்கிவாலாவின் பன்முக ஆளுமையும் அவர் படைப்புகளில் ஒளிவீசிய ஆங்கில மேற்கோள்களும் எவராலும் என்றும் மறக்க முடியாதவை.
  • சங்கர நேத்ராலயாவுக்கு அளித்த மிகப் பெரிய நன்கொடையின் காரணமாக அவரை இன்றும் அந்த நிறுவனம் வணங்குகிறது. "பாரதிய வித்யா பவன்' அவரை முன்னாள் துணைத் தலைவராகப் போற்றி வருகிறது. அமெரிக்க நாட்டிலுள்ள பிரின்ஸ்டன், லாரன்ஸ்  பல்கலைக்கழகங்களும் பல்வேறு இந்தியப் பல்கலைக்கழகங்களும் அவருக்கு மதிப்புறு முனைவர் பட்டம் அளித்து தலைசிறந்த அறிஞராக மதித்தன.
  • இந்திய அரசியலமைப்பைச் சிதைவுறாமல் பேணிக் காத்ததில் இவருக்குப் பெரும் பங்குண்டு.  "இந்தியாவுக்கு இறைவன் அளித்த அருட்கொடை' என மூதறிஞர் ராஜாஜியால் போற்றப்பட்ட இந்த மாமேதையை இன்றும் தமிழகப் பட்டிமன்ற மேடைகளில் சிறப்பாகப் பேசும் உரையாளர்களைப் " பட்டிமன்றப் பல்கிவாலா'  என்று தமிழறிஞர் ஒளவை நடராசன் பரிவோடு விளிப்பதை பலர் நினைவுகூரலாம்.

மணியாரம்

  • "நெஞ்சையள்ளும் சிலப்பதிகாரத்தை ஒருமணியாரம்' என்று மகாகவி பாரதியார் பாடினார். மணியாரம் பல்வேறு மணிகளைக் கொண்டது. நான்மணிமாலை, நவரத்தினமாலை என்று குறிப்பிடுவதுபோல  நானி பல்கிவாலாவின் நல்லுரைகளையெல்லாம் "மணிமாலைகள்' என்று குறிக்கலாம்.
  • சென்னையில் அந்நாளைய ஆபட்ஸ்பரி அரங்கில் பேசுவது அவருக்குப் பிடித்தமான நிகழ்வென்றும், சென்னை மாநகரமே சிந்தனையாளர்களைக் கொண்ட அறிவுத் தலைநகரம் என்றும் புகழ்ந்து குறிப்பிட்டார்.  
    பல்கிவாலாவின் மீது மாறாத பரிவு கொண்ட உயரிய நண்பர்கள், உருக்கமான  சீடர் பலர் நாடெங்கும் உள்ளனர். புகழ் பெற்ற  தணிக்கையாளர் ஸ்ரீவத்சன், ஸ்ரீ ஹரி இருவருமாக அமைத்த குழுவினர் நானியின் வாழ்வை "தரணியின்  பெருமை' என்ற பெயரில் நாடகமாக நடித்து அவர் வரலாற்றுக்கு மேலும் பெருமை சேர்த்தனர்.

நன்றி: தினமணி (18-02-2020)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்

PrevNext
SuMoTuWeThFrSa
   1234
567891011
12131415161718
19202122232425
262728293031 
Top