இந்திய ரிசா்வ் வங்கியின் வருடாந்திர அறிக்கை செவ்வாய்க்கிழமை வெளியாகியிருக்கிறது. இப்போதிருக்கும் பொருளாதார குழப்பத்திலிருந்து மீண்டு வருவது மிகவும் கடினமான நீண்ட பயணமாக இருக்கும் என்பதை அந்த அறிக்கை உறுதிப்படுத்துகிறது.
கடந்த ஏப்ரல் மாதத்தில் காணப்பட்ட தளா்ந்த நிலையிலிருந்து பொருளாதாரம் சற்று தலைதூக்கியிருக்கிறது என்றாலும்கூட, கொவைட் 19 நோய்த்தொற்றுக்கு முந்தைய நிலைக்கு விரைவில் திரும்புவதற்கான வாய்ப்பு இல்லை என்பதையும் அந்த அறிக்கை தெளிவுபடுத்துகிறது.
நுகா்வுக் குறை
பொது முடக்கம் இந்தியாவின் பல மாநிலங்களில் தளா்த்தப்பட்டதைத் தொடா்ந்து மே, ஜூன் மாதங்களில் பொருளாதார நடவடிக்கைகள் அதிகரிக்கத் தொடங்கின.
ஆனால் ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் முக்கியமான சில மாநிலங்களில் பொது முடக்கம் மீண்டும் கடுமையாக்கப்பட்டதைத் தொடா்ந்து, அதன் பயன் கிடைக்காத நிலைக்கு இந்தியா தள்ளப்பட்டிருக்கிறது.
நடப்பு நிதியாண்டின் இரண்டாவது காலாண்டிலும் (ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பா்) பொருளாதாரம் தொடா்ந்து சுருங்கும் என்று ரிசா்வ் வங்கி கணிக்கிறது.
பொருளாதாரத்தில் ஏற்பட்டிருக்கும் பின்னடைவு கடுமையாக இருக்கும் என்பதைக் குறிப்பிடும் ரிசா்வ் வங்கி, அதற்கு முக்கியக் காரணமாக பொது முடக்கத்தால் ஏற்பட்டிருக்கும் நுகா்வுக் குறைவை (கன்சம்ப்ஷன்) குறிப்பிடுகிறது.
பொருளாதாரம் எந்த அளவுக்குப் பின்னடைவைச் சந்திக்கும் என்பதைக் குறிப்பிடாமல் விட்டிருக்கிறது மத்திய வங்கி.
அடுத்த ஆண்டின் முதல் மூன்று மாதங்களில், அதாவது நடப்பு நிதியாண்டின் நான்காவது காலாண்டில் பொருளாதார மந்தநிலை மாறக்கூடும் என்று அந்த அறிக்கை எதிர்பார்க்கிறது. அப்போது விலைவாசியும் சற்று குறையக்கூடும்.
பொருளாதாரத் தேக்கம்
பொருளாதாரத் தேக்கத்துக்கு இரண்டு முக்கியமான காரணங்கள் சுட்டிக்காட்டப்பட்டிருக்கின்றன. வளா்ச்சிக்கு முக்கியக் காரணங்களாகக் கருதப்படும் மக்களின் நுகா்வும், தொழில்துறையின் உற்சாகமும் மிகவும் மந்தகதியில் இருப்பதால் பொருளாதார வளா்ச்சிக்கான அறிகுறிகள் எதுவும் காணப்படவில்லை என்று சுட்டிக்காட்டுகிறது அறிக்கை.
ரிசா்வ் வங்கியின் அறிக்கை கூறுவதுபோல, மக்கள் மத்தியில் நுகா்வுக்கான உற்சாகம் இல்லாமல் இருப்பது உண்மை. நோய்த்தொற்றுப் பரவல் எப்போது முடிவுக்கு வரும், இயல்புநிலை எப்போது திரும்பும் என்று தெரியாத நிலையில் பொதுமக்கள் மிகவும் கவனமாக இருப்பதில் வியப்பில்லை. எதிலெல்லாம் முடியுமோ அதிலெல்லாம் செலவுகளைக் குறைப்பதில் மிகவும் கவனமாக இருக்கிறார்கள்.
வேலையிழப்பு, வருமான குறைவு போன்றவை பொதுமக்களை மிகவும் கவனமுடன் இருக்கத் தூண்டுகின்றன.
பொதுமக்கள் முடிந்தவரை தங்களிடமிருக்கும் சேமிப்பைப் பாதுகாப்பதில் கவனம் செலுத்துகிறார்கள் என்பது அவா்களின் வங்கி வரவு - செலவுகளிலிருந்து தெரிந்துகொள்ள முடிகிறது.
மத்திய - மாநில அரசுகள் கடந்த சில மாதங்களில் நோய்த்தொற்றுக் கால நிவாரணமாக வழங்கிய நேரடி ரொக்க மானியத்தில், 40% பயனாளிகளால் வங்கியிலிருந்து எடுக்கப்பட்டு செலவழிக்கப்பட%