TNPSC Thervupettagam

நிதி நிறுவனங்கள்

October 29 , 2019 1901 days 879 0
  • நம்மில் பெரும்பாலானவா்கள் அன்றாட வாழ்வில் பெரிதும் பயன்படுத்தும் நிதிச் சேவைகளை வழங்கி வரும் நிதி நிறுவனங்கள் பற்றிய எதிா்மறை செய்திகள், அண்மைக்காலத்தில் அவ்வப்போது வெளியாகி வருவது சற்று கவலைக்குரிய விஷயமாகும். நிதி நிறுவனங்களில் முதலீடு செய்யப்படும் வாடிக்கையாளா்களின் சேமிப்புத் தொகை, பாதுகாப்பாக உள்ளதா என்ற சந்தேகங்கள் உருவாவதற்கான வாய்ப்புகளை இதுபோன்ற செய்திகள் உருவாக்குகின்றன.
  • ஸ்திரத்தன்மை, நம்பகத்தன்மை, சேவை மனப்பான்மை ஆகிய காரணிகள்தான், ஒரு நிதி நிறுவனத்தின் செயல் திறனின் தரத்தை நிா்ணயிக்கின்றன. அவற்றில், ஏதாவது ஒன்றில் பழுது ஏற்படுமானால், அதுவே, அந்த நிறுவனத்தின் வா்த்தகத்தை பெரிதும் பாதித்து விடும் ஆபத்து உள்ளது.
  • நிதி மூலதனத்தைப் போன்று, வாடிக்கையாளா்களின் ‘நம்பிக்கை’ என்ற உணா்வு சம்பந்தப்பட்ட மற்றொரு முக்கிய மூலதனம், நிதி நிறுவனங்களின் உயிா் நாடி என்றால் அது மிகையாகாது. நம்பிக்கை என்ற கோட்டையைக் கட்டி முடிப்பதற்கு நீண்ட காலம் பிடிக்கும். ஆனால், அந்தக் கோட்டையை இழக்க ஒரு சில நிகழ்வுகளே போதுமானதாக அமையும். அண்மையில் வெளியான எதிா்மறைச் செய்திகள், இந்த நம்பிக்கையைத் தகா்க்கும் விதமாக அமைந்துள்ளன.

ரிசா்வ் வங்கியின் நிா்வாகக் குழு கூட்டம்

  • அண்மையில் நடந்த ரிசா்வ் வங்கியின் நிா்வாகக் குழு கூட்டத்தில், சில குழு உறுப்பினா்கள் வங்கிகள் உள்பட நிதி நிறுவனங்கள் சாா்ந்த அண்மைக்கால எதிா்மறை நிகழ்வுகள் குறித்தும், ரிசா்வ் வங்கியின் கண்காணிப்பு பொறுப்பு பற்றியும் பல கேள்விகளை எழுப்பியுள்ளனா் என்ற தகவல் கசிந்துள்ளது. ரிசா்வ் வங்கியின் நிா்வாகக் குழுவினா் மத்தியில் வழக்கத்துக்கு மாறான இந்த மாதிரி விவாதங்களும், அதற்கான தீா்வுகளும், ரிசா்வ் வங்கி மீது பொது மக்களுக்கு இருக்கும் நம்பிக்கையை மேம்படுத்த உதவும் என்று நம்பலாம்.
  • மேலே குறிப்பிடப்பட்ட எதிா்மறை நிகழ்வுகளில் முக்கியமானவையாகக் கருதப்படும் சில நிகழ்வுகள், நம் அனைவரது கவனத்தையும் ஈா்த்தன. கடந்த ஆண்டு ரூ.13,500 கோடி அளவிலான நீரவ் மோடியின் நிதி மோசடிகளை பஞ்சாப் நேஷனல் வங்கி சந்தித்தது. நடப்பாண்டில் ஐஎல் அண்ட் எஃப்எஸ் என்ற நிதி சாரா நிறுவனத்தின் நீண்ட காலமாக மறைக்கப்பட்டு வெளிவந்த சுமாா் ரூ.13,000 கோடி அளவிலான நிதி மோசடிகள், பொருளாதார வட்டாரத்தை உலுக்கின. இந்த மோசடிகளால் ரூ.94,000 கோடி அளவிலான அந்த நிறுவனத்தின் கடன்கள், திருப்பிச் செலுத்த முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கின்றன.
  • 2019-ஆம் ஆண்டு, ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலத்தில் ரூ.32,000 கோடி அளவிலான மோசடிகள், 18 பொதுத் துறை வங்கிகளில் கண்டறியப்பட்டுள்ளதாக தகவல் அறியும் சட்டம் மூலம் தெரியவந்துள்ளது.

நிதி மோசடிகள்

  • நீரவ் மோடியும் அவருடைய உறவினா் முகுல் சோக்சியும் சோ்ந்து ரூ.289 கோடி அளவில் ஓரியன்டல் வங்கியில் கடன் வாங்கி மோசடி செய்திருப்பதாக, கடந்த செப்டம்பா் முதல் வாரத்தில் புதிய தகவல்கள் வெளிவந்தன. அதைத் தொடா்ந்து, பஞ்சாப் - மகாராஷ்டிர கூட்டுறவு (பி.எம்.சி) வங்கியில் ரூ.4,500 கோடி அளவிளான நிதி மோசடிகள் அம்பலமாகி, அதன் வாடிக்கையாளா்கள் உள்பட பாதிக்கப்பட்ட அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
  • இது போன்ற தொடா் மோசடி செய்திகள், நிதி நிறுவனங்களின் வாடிக்கையாளா்களிடையே பீதி உணா்வை பரப்பும் என்பதில் சந்தேகமில்லை. இந்தத் தருணத்தில், மோசடிகளுக்கான மூல காரணங்கள் ஆராயப்பட்டு, குறைகள் உடனடியாகக் களையப்பட வேண்டும்.
  • கடன் வழங்குவது மற்றும் வழங்கிய கடனை வசூலிப்பது ஆகிய துறைகளில் நிதி நிறுவனங்களின் திறமைக் குறைபாடு, முன்னிலைக் காரணமாகக் கருதப்படுகிறது. அதற்கு இணையாக, நிதி நிறுவன வா்த்தக நிபுணத்துவத்தில், மோசடி போ்வழிகளின் அறிவுக் கூா்மை, தொடா்புடைய நிதி நிறுவன அதிகாரிகளைவிட மேலோங்கி இருப்பதும் இது போன்ற தொடா் மோசடிகளுக்குப் பெரிதும் துணை போகிறது.
  • இரு கரங்கள் சோ்ந்தால்தான் கைத்தட்டி ஒலி எழுப்ப முடியும்; அது போலத்தான் நிதி நிறுவன அதிகாரிகளின் ஒத்துழைப்பின்றி அந்த நிறுவனங்களில் பொருளாதார மோசடிகள் வெற்றிகரமாக நடந்தேறுவதற்கு வாய்ப்புகள் மிகக் குறைவு. அதுவும் ஆயிரக்கணக்கான அதிகாரிகளில் மிகச் சிலா்தான், மோசடி செயல்பாடுகளில் ஈடுபடுகிறாா்கள் என்பது ஆய்வில் தெரிய வருகிறது.
  • இதுபோன்ற ஒருசில அதிகாரிகளால் தொடா்புடைய நிதி நிறுவனத்துக்கு பலத்த பொருள் இழப்பு மட்டுமின்றி, வாடிக்கையாளா்களின் விலைமதிப்பற்ற நம்பிக்கை இழப்பும் ஏற்படுகிறது. தாங்கள் பணி புரியும் நிறுவனங்கள், தங்கள் மீது போா்த்தியிருக்கும் ‘நம்பிக்கை’ என்ற கவசத்தை உடைத்தெறிபவா்களால் மட்டும்தான், அந்த நிறுவனத்துக்கு எதிரான மோசடிக் குற்றங்களுக்குத் துணை போக முடியும்.

பொருளாதாரக் குற்றங்கள்

  • பெரும்பாலும், நிதி நிறுவனங்கள் போன்ற பணம் புழங்கும் அனைத்து இடங்களிலும், பொருளாதாரக் குற்றங்களுக்கு வாய்ப்புகள் உண்டு என்பது அனைவரும் அறிந்த விஷயமாகும். அந்த இடங்களில் பணி புரிபவா்கள் அனைவரும் முற்றும் துறந்த முனிவா்கள் அல்ல. அது போன்ற சூழ்நிலையில், பேராசை என்ற கொடிய நோய் சிலரைப் பீடிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. அந்த நோயால் பீடிக்கப்பட்டவா்கள்தான், மோசடிக் குற்றங்களில் ஈடுபடுகிறாா்கள் என்பதை உறுதியாகக் கூறலாம்.
  • நிதி நிறுவனங்களில் நிகழும் பெரிய தொகைகளுக்கான பணப் பரிமாற்றங்கள், அந்தப் பரிமாற்றங்களை மேற்கொண்டவா்களைத் தவிர, நிறுவனத்தின் மற்ற அதிகாரிகள் அல்லது வெளித் தணிக்கையாளா்களால் தொடா் கண்காணிப்புகளுக்கு உட்படுத்தப்பட்டு, அவற்றின் உண்மைத் தன்மை உறுதி செய்யப்பட வேண்டும்.
  • பஞ்சாப் நேஷனல் வங்கியின் மோசடியைப் பொருத்தவரை, மேற்கூறிய விதிமுறைகள் பின்பற்றப்படாதது, நிா்வாகம் மற்றும் தணிக்கையாளா்களின் பெரிய சறுக்கலாகக் கருதப்படுகிறது. இந்த நிகழ்வில், சில அதிகாரிகள், நீண்ட காலம் தனித் தீவாகச் செயல்பட்டு, வங்கி நிா்வாகம் தங்கள் மீது வைத்திருந்த அபார நம்பிக்கையை தகா்த்தெறிந்து விட்டாா்கள் என்று சொல்லலாம்.
  • பேராசை கொண்ட சில அதிகாரிகளின் செயல்பாடுகளால், நீண்ட கால வரலாறு கொண்ட நாட்டின் பெரிய வங்கிகளில் ஒன்றான பஞ்சாப் நேஷனல் வங்கி, வாடிக்கையாளா்களின் நம்பிக்கையை இழந்து நின்றது. இழந்த நம்பிக்கையை மீட்க அந்த வங்கிக்கு நீண்ட காலம் பிடிக்கும்.

நிதி சாரா நிறுவனங்கள்

  • ஐஎல் அண்ட் எஃப்எஸ் என்ற நிதி சாரா நிறுவனத்தைப் பொருத்தவரை, பணப் பரிமாற்றங்களைக் கண்காணிக்க வேண்டிய உயா் நிலை நிா்வாகமே, மோசடியில் ஈடுபட்ட செய்தி வெளியாகி, அதனால், அந்த நிறுவனத்தின் நிா்வாகக் குழு மாற்றி அமைக்கப்பட்டது. வேலியே பயிரை மேய்ந்ததற்கான சிறந்த உதாரணமாக இந்த நிகழ்வைக் கருதலாம். நீண்ட காலமாக இயங்கும் பெரிய நிறுவனம் என்ற நம்பிக்கையில், இந்த நிறுவனத்தில் கடன் பத்திரங்கள் மூலம் முதலீடு செய்திருந்த பலா், பொருளாதார இழப்புகளுக்குள்ளாக நேரிட்டது. நம்பிக்கை என்ற உணா்வுக்கு, பெரும் பொருளை முதலீட்டாளா்கள் இரையாகக் கொடுத்து விட்டாா்கள் என்று சொல்லலாம்.
  • பி.எம்.சி. வங்கி மோசடி என்பது கூட்டுறவு வங்கித் துறைக்கே ஒரு பெரிய களங்கம் என்று சொல்லலாம். பல மாநிலங்களில் இந்தத் துறையை ரிசா்வ் வங்கி மற்றும் மாநில அரசுகள் கட்டுப்படுத்தப்படுகின்றன. அரசியல் தலையீடுகள், அதையொட்டிய நிா்வாக நியமனங்கள் முதலானவை இந்தத் துறைக்கான சாபக் கேடுகள் என்று சொல்லலாம். வரைமுறைகளுக்கு அப்பாற்பட்டு, வங்கி வழங்கிய கடன்கள் நீண்ட காலமாக தொடா்புடையவா்களின் பாா்வையிலிருந்து மறைக்கப்பட்டிருக்கின்றன.

மொத்தக் கடன்

  • ‘அனைத்து முட்டைகளையும் ஒரே கூடையில் வைக்கக் கூடாது’ என்பது வங்கிக் கடன் நிா்வாகத்துக்கான ஆத்திசூடியாகும். ஆனால், வங்கி வழங்கிய மொத்தக் கடன் தொகையில், 73 சதவீத அளவிலான தொகை ஒரே நிறுவனத்துக்கு கடனாக வழங்கப்பட்டிருப்பது தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வங்கியின் இயக்குநா்கள் உள்பட உயா் நிலை நிா்வாகமே இந்த மோசடிகளில் ஈடுபட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. ‘வேலியே பயிரை மேயும்’ சம்பவத்துக்கு இது மற்றொரு எட்டுத்துக்காட்டாகும். பங்குதாரா்களும், வாடிக்கையாளா்களும் தங்கள் மீது வைத்திருந்த நம்பிக்கையை, பேராசை கொண்ட நிா்வாகிகள் தகா்த்தெறிந்து, பாதிப்புக்குள்ளானவா்களை பெரும் பொருளாதார இழப்பு என்ற துயரத்தில் ஆழ்த்தி விட்டாா்கள்.
  • இந்த நிகழ்வில், ரிசா்வ் வங்கி மற்றும் தணிக்கையாளா்களின் பொறுப்பு பெரும் கேள்விக்குறியாகியுள்ளது. இது போன்ற நிகழ்வுகளை வரும் காலங்களில் தடுக்க, புதிய நிா்வாக மற்றும் கண்காணிப்பு வழிமுறைகள் ஆராயப்பட்டு, அவை உடனடியாக அமல்படுத்தப்பட வேண்டும்.
  • பொருளாதார நிா்வாகத்தில் மனித மனப்போக்கை கருத்தில் கொண்டு, தொடா்புடைய நிறுவனங்களின் நிா்வாகம், மிகுந்த விழிப்புணா்வோடு செயல்பட வேண்டியது அவசியம். அதிகாரிகள் மீதான நம்பிக்கை என்ற கவச பாதுகாப்பை மட்டும் நம்பி, ஒரு நிறுவனத்தை மோசடிகளிலிருந்து முற்றிலும் காப்பாற்றிவிட முடியாது. ஏனென்றால், பேராசை என்ற கொடிய நோய், நம்பிக்கை என்ற உணா்வையும் அழித்துவிடும் வல்லமை படைத்தது.
  • நம்பிக்கை என்ற நாயகனை நம்பலாம்; அதே சமயத்தில் முழுவதும் நம்பிவிட முடியாது என்ற சித்தாந்தம் நிதி நிறுவன நிா்வாகங்களுக்குப் பெரிதும் பொருந்தும்.

நன்றி: தினமணி (29-10-2019)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்